திரும்பிப்பார்க்கின்றேன். - முருகபூபதி

.
 " நெஞ்சில்  நிலைத்த  நெஞ்சங்கள் "  தொடருக்கு  களம் தந்த   ஈழநாடு  குகநாதன்.

   நதி நடந்தே   சென்றிட    வழித்துணைதான்  தேவையா...? 


                                                                                             
பாடசாலையில்  உயிரியல்   படித்தபொழுது  ஒரு  தாவரம் உயிர்வாழ்வதற்கு  என்னவேண்டும்...?  என்று  ஆசிரியர் கே ட்டபோது,  மண்,  நீர்,  காற்று,  சூரியவெளிச்சம்  என்று  விளக்கினார்.
எங்கள்  வீட்டில்  ரோஜாச் செடிகளையும்  கத்தரி,   தக்காளிச் செடிகளையும்  பாட்டியும்   அம்மா,  அக்காவும்  வளர்த்தார்கள்.   தாத்தா ஒரு  மல்லிகைச் செடியை  வளர்த்து  அதற்கென  பந்தலும்  போட்டார்.   அத்துடன்  நந்தியாவட்டை   முதலான  பூங்கன்றுகளும் வளர்த்தார்.   அக்கா  வீட்டில்  பயன்படுத்தப்பட்ட  முட்டையின் கோதுகளையும்  தேயிலைச்சாயத்திலிருந்து  பெறப்பட்ட சக்கையையும்   ரோஜாச்செடிகளுக்கு  உரமாகப் போட்டபொழுது தாத்தா  ஒரு நாள்  என்னையும்   அழைத்துக்கொண்டு அடுத்ததெருவிலிருந்த   சுருட்டுக் கொட்டிலுக்குச்சென்று  அங்கு சுருட்டு  கோடாவுக்கு  அவிக்கப்பட்டு  கழிவாகக்கிடந்த புகையிலைக்காம்புகளை  ஒரு  சாக்குப்பையில்  எடுத்துவந்து  தான் வளர்த்த   செடிகளுக்கு  அருகில்  கிடங்குகள்  வெட்டித்தாட்டார்.
ஏன்...? என்று  கேட்டதற்கு,   இந்தச் செடி கொடிகள் மரங்களுக்கெல்லாம்  இதனைப்போட்டால்  நன்றாக  செழித்துவளரும் என்றார்.
அவுஸ்திரேலியாவுக்கு  வந்தபின்னர்  வீட்டின் சமையலறைக்கழிவுகளை  சேமித்து  மரம்,  செடிகளுக்கு  பசளையாக போடுவதைப்பார்த்து   நானும்  அந்தப்பழக்கத்தை  தொடர்கின்றேன். இதனை   ஆங்கிலத்தில்  கொம்பஸ்   என்பார்கள்.


உருளைக்கிழங்கு ,   வெங்காயம்  முதலான  பயிர்ச்செய்கைகளுக்கும் மனித -  விலங்கு  கழிவுகள்  தேவைப்படுவதாக  சொல்வார்கள். இதுபற்றியெல்லாம்  என்னிடம்  விரிவான  ஆராய்ச்சியோ  தேடலோ இல்லை.   ஆனால்,  கறுத்தக்கொழும்பான்  பற்றி  எழுதியிருக்கும் சிட்னி  நண்பர்  பேராசிரியர்  .சி. கந்தராஜாவுக்கு  இதுபற்றி  தேர்ந்த அறிவு  இருக்கிறது.    அவர்   தாவரவியல்  பேராசிரியர்.
எனது 15 வயதில் உயிரியல்  ஆசிரியரிடமிருந்து  நான் கற்றுக்கொண்டதைவிட   எனது  வீட்டில்  அம்மா,  பாட்டி.  தாத்தா, அக்காவிடம்   கற்றுக்கொண்டது  அநேகம்தான்.
கலை,   இலக்கியம்,   அரசியல்,  பொதுவாழ்வில்  ஈடுபடுபவர்களின் வளர்ச்சிக்கும்  பசளைகள்  தேவைதான்.  அது  கழிவுப்பொருட்களின் உருவத்தில்  அவதூறாக  பொழியப்படும்  என்ற  தெளிவு  எனக்கு எப்போதோ  வந்துவிட்டது.   அதனால்,  கருத்துக்கு  பதில் சொல்லலாம்   கற்பனைக்கு  பதில்  சொல்ல முடியாதுதானே...? என்று   அமைதிகாத்தாலும்,  தொடர்ச்சியாக  பரப்பப்படும்  அவதூறுகளுக்கு பதில்  சொல்லாதுவிட்டால்,  அந்த  அவதூறே   உண்மையாகிவிடும் என்பதையும்  புரிந்துகொண்டேன்.
ஒரு  மனிதனுக்கு  பொறாமை வருவதும்  உளவியல்  சார்ந்தது. தன்னால்  முடியாத  ஒரு  விடயத்தை  மற்றும்  ஒருவர்  செய்தால் பொறாமைத்தீ   கொழுந்துவிட்டு  எரியத்தொடங்கிவிடும்.  ஆனால் அந்தத்தீயில்  யார்  பொசுங்கப் போகிறார்கள்  என்பது  தெரியாமலேயே பொறாமைகொள்பவர்   தொடர்ந்தும்  பொறாமைத்தீயை வளர்த்துக்கொண்டிருப்பார்.
அத்தகையோரிடம்   இருப்பதெல்லாம்  முன்னே  குறிப்பிட்ட  அந்த கழிவுப்பொருட்களான  பசளைகள்தான்.   பலரை   அவர்களே பசளையிட்டு  வளர்த்து  முன்னேற்றிவிடுவார்கள்.
எனக்கு  எனது  நீண்டநாள்  நண்பர்  மூத்த  ஊடகவியலாளர் எஸ்.எஸ். குகநாதனைப்பற்றியும்  இன்னும்  பல  ஆளுமையுள்ள ஊடகவியலாளர்கள்,  கலைஞர்கள்,  படைப்பாளிகள்  பற்றியெல்லாம் நினைக்கும்தோறும்   அவர்களுக்கு  எதிராக   அவதூறு  பரப்பும் கழிவுகள்தான்   நினைவுக்கு  வருவது  தவிர்க்கமுடியாதது.
தாவரங்களின்  வளர்ச்சிக்கு  கழிவுகள்  இருப்பதுபோன்று பொதுவாழ்வில்  மனித நேயப்பணிகளில்  ஈடுபடுபவர்களும்  தமக்கு எதிராக  பரப்பப்படும்  அவதூறுகளையும்   அந்த  கழிவுகளுடன் இணைத்துவிட்டு   தம்  பணியைத்  தொடரவேண்டும்.
" யாழ்ப்பாணத்தில்   ஈழநாடு  பத்திரிகையில்  தனது  தம்பி  குகநாதன் பணியாற்றுகிறார் "  என்று  கொழும்பில்  என்னைச்சந்தித்த  நண்பரும்   எழுத்தாளருமான  காவலூர்  ஜெகநாதன்  ஒரு நாள் சொன்னார்.   அப்பொழுது  1978   ஆம்   ஆண்டு.   தமது 19 வயதில் யாழ்.ஈழநாடுவில்    இணைந்த  குகநாதனை   1984  இல்தான்  முதல் முதலில்  அந்த  அலுவலகத்தில்  சந்தித்தேன்.   அப்பொழுது  எனக்கு அவரை   அறிமுகப்படுத்தியவர்  தற்பொழுது  லண்டனில்  வதியும் மற்றும்   ஒரு  பத்திரிகையாளர்  பாமா  ராஜகோபால்.
1983 வன்செயலையடுத்து   அரியாலையில்  சிறிதுகாலம் இடம்பெயர்ந்திருந்தபோது   இடைக்கிடை   அவரை  சந்தித்து உரையாடுவேன்.   அவர்  செய்தியாளராக  இருந்தமையால் அவருடனான   உரையாடல்  இலக்கியத்தின்  பக்கம்  திரும்பாது.
அச்சமயம்  திருநெல்வேலியில்  வசித்த  காவலூர்  ஜெகநாதன் என்னை  தமது  ஊர்காவற்றுறைக்கெல்லாம்  அழைத்துச்சென்று இலக்கியக்கூட்டங்களில்   பேசவைத்திருக்கிறார்.
தமிழகத்திற்கு   அவர்  குடும்பத்துடன்  புலம்பெயர்ந்தபின்னர்,  வீரகேசரி   வாரவெளியீட்டில்  நான்  தொடர்ந்து  எழுதிவந்த இலக்கியப்பலகணி   பத்தி  எழுத்துக்கு  தமிழகத்திலிருந்து  தகவல்கள் தந்துகொண்டிருந்தார்.
1985 ஆம்  ஆண்டு  ஜெகநாதன்  தமது  இனிவரும்  நாட்கள் குறுநாவலை    சென்னையிலிருந்து  தபாலில்  அனுப்பியிருந்தார். எனது  முகவரியில்   அவருடைய  கையெழுத்துத்தான்.    ஆனால் அதற்கு   சரியாக  ஒரு  மாதம்  முன்னர்  ஐரோப்பிய நாடொன்றிலிருந்து   வந்த  தொலைபேசி  அழைப்பு  அவர் சென்னையில்   கடத்தப்பட்டு  காணாமல்  போய்விட்டதாகச் சொல்லியிருந்தது.
அந்தத்   தகவல்  கிடைத்ததும்  யாழ்ப்பாணம்  ஈழநாடுவுக்கு தொடர்புகொண்டபொழுது , தன்னாலும்  அதனை  இன்னமும்  ஊர்ஜிதம்   செய்ய முடியவில்லை  எனச்சொன்னார்  குகநாதன்.
காலத்தின்  விதி  எம்மையெல்லாம்  ஓட  ஓட  விரட்டியது. தொடர்புகள்   குறைந்தன.
 தொடர்ச்சியாக  வடக்கிலிருந்து  அதிர்ச்சிதரும்  செய்திகள்தான் வந்தவண்ணமிருந்தன.
அதில்   ஒன்று  பத்திரிகையாளர்  எஸ். திருச்செல்வத்தின்  ஏக புதல்வன்  அகிலன்  கொல்லப்பட்ட செய்தி.   அடுத்தடுத்து  எனக்கு நன்கு   தெரிந்த  பலரை   துப்பாக்கிகள்  இரையாக்கிக்கொண்டிருந்தன.
மனிதவேட்டையில்   இந்திய  இராணுவமும்  இந்தியாவுக்கு அடைக்கலம்  தேடிச்சென்ற  ஈழ  இயக்கங்களும்  தீவிரமாக இறங்கியிருந்தன.
மின்னஞ்சல்  இல்லாத  அக்காலப்பகுதியில்  1991   ஆம்   ஆண்டு  எனது  வீடு தேடி  ஓடி வந்தது  பாரிஸ் ஈழநாடு  இதழ்.  அதற்குள்  ஒரு கடிதமும்   எழுதிவைத்திருந்தார்  அதன்  ஆசிரியர்  நண்பர்  குகநாதன். இவருக்கும்  உள்ளார்ந்த  ஊடகத்துறை  ஆற்றல்  இருந்தமையால்தான்   அது  சாத்தியமாகியிருக்கிறது.
என்னையும்   தமது  பாரிஸ்   ஈழநாடுவுக்கு   எழுதச் சொன்னார். அக்காலப்பகுதியில்  நாம்  இங்கு  தொடங்கியிருந்த  இலங்கை மாணவர்  கல்வி  நிதியம்  பற்றிய  விரிவான  கட்டுரையை அனுப்பினேன்.   ஈழநாடு  இதழில்  அதனைப்பார்த்த  பல  ஐரோப்பிய வாசகர்களும்   எம்முடன்  தொடர்புகொண்டு,  இலங்கையில்  நீடித்த போரில்   பாதிக்கப்பட்ட  ஏழைத் தமிழ்  மாணவர்களுக்கு  உதவ முன்வந்தனர்.
இவ்வாறு    புலம்பெயர்  வாழ்வில்  நண்பர்  குகநாதனுடன்  எனக்கு நட்புறவு   மீண்டும்  துளிர்த்து  இன்று வரையில்  ஆழப்பதிந்துள்ளது.
இதுவரையில்  நான்  பிரான்ஸ_க்குச்  சென்றதில்லை.  ஆனால், எனது இலக்கிய  ஆக்கங்களில்  பெரும்பாலானவை   அவர்  வெளியிட்ட பாரிஸ்   ஈழநாடுவிலும்,   இதர  நண்பர்கள்  காசிலிங்கம்  வெளியிட்ட தமிழன்  இதழ்  பாமா  ராஜகோபால்  வெளியிட்ட  ஈழகேசரி ஆகியவற்றிலும்    வெளியாகியிருக்கின்றன.
பிரான்ஸிலிருந்து   நண்பர்  மனோகரன்  வெளியிட்ட  ஓசை,  அம்மா முதலான    இதழ்களிலும்  வந்திருக்கின்றன.
ஆனால்  -- இன்று  காலம்  நன்றாக  மாறிவிட்டது.   இணைய  இதழ்கள் பக்கம்   நாம் சென்றுவிட்டோம்.   உடனுக்குடன்  எமது படைப்புகளைப்பார்த்து  கருத்துச் சொல்லும்  யுகம் மின்னல்வேகத்தில்  வந்துவிட்டது.
முன்னர்   அச்சுப்பிரதியாக  பாரிஸ்  ஈழநாடுவை  வெளியிட்ட குகநாதன்  தற்பொழுது  புதிய ஈழநாடு  என்ற  இணையப்பதிப்பை வெளியிட்டுவருகிறார்.
கண்ணதாசன்   யாரை  நினைத்து "  மனைவி  அமைவதெல்லாம் இறைவன்   கொடுத்த  வரம் "  என்று  பாடினாரோ   தெரியவில்லை. ஆனால்,  அந்த  வரிகள்  ஆழமான  கருத்துச்செறிவான வைரவரிகள்தான்.   நல்ல  நட்பு  கிடைப்பது   எப்படி  ஒரு  பாக்கியமோ   அது போன்று  மனைவி   அமைவதும்  பெரும் பேறுதான்.   ஆனால்,  எத்தனை   கணவன்மார்  இதனை ஒப்புக்கொள்வார்கள்.
நண்பர்  குகநாதனுக்கு  வாய்த்த  மனைவி  றஜினி  அவர்கள்தான் அவருடைய  ஊடகத்துறையில்  என்றென்றும்  பக்கத்துணையாக இருக்கிறார்.
அவரையும்   சமீபத்தில்தான்  முதல்  முதலில்  அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்த   சமயத்தில்  சந்தித்தேன்.
பாரிஸ்  ஈழநாடுவில்  எம்மவர்களின்  கையெழுத்துக்களையெல்லாம் கணினியில்  பதிந்து  உயிரூட்டி,  அதில்  பதிவுசெய்தவர்  திருமதி றஜினி குகநாதன்.
எனக்கு   அடிக்கடி  நித்திரையில்  கனவுகள்  வரும்.   ஒருநாள்  மறைந்த   இரசிகமணி  கனகசெந்திநாதன்  வந்தார்.   என்னை   பெரிதும் கவர்ந்த   ஈழத்தின்  மூத்த  எழுத்தாளர்.   கால்,  கைவிரல்களை   நீரிழிவு உபாதையினால்   இழந்துவிட்ட பின்னரும்,  இனிமையாகப்பேசி எம்மையெல்லாம்  உற்சாகப்படுத்தியவர்.
மறுநாள்   அவர்  பற்றிய  நினைவுப்பதிவை   எழுதி  குகநாதனுக்கு அனுப்பினேன்.    அதற்கு  நான்  இட்ட  தலைப்பு  நெஞ்சில்  நிலைத்த நெஞ்சம்.    அதனைத்  தாமதியாமல்  பாரிஸ்  ஈழநாடுவில்  பிரசுரித்து பிரதியை   அனுப்பும்பொழுது,  அதுபோன்று  மறைந்த  இதர படைப்பாளிகளையும்    எழுதித்தாருங்கள்  என்று  கடிதமும் இணைத்திருந்தார்.
அவர்   தந்த  ஊக்கமும்  உற்சாகமும்தான்  அடுத்தடுத்து  சிலரைப்பற்றி  எழுதவைத்தது.
கனகசெந்திநாதனைத் தொடர்ந்து,   கே.டானியல்,   மு. தளையசிங்கம், என்.எஸ்.எம். இராமையா,    பேராசிரியர்  கைலாசபதி,   கே.ஜி. அமரதாச, எச்.எம்.எம்.பி. மொஹிதீன்,   . நவசோதி,   கவிஞர்  ஈழவாணன், நெல்லை . பேரன்,    காவலூர்  ஜெகநாதன்,   சோவியத்  எழுத்தாளர் கலாநிதி   விதாலி ஃபூர்னீக்கா   முதலானோர்  பற்றிய நினைவுப்பதிவுகளை   எழுதினேன்.   இக்கட்டுரைகள்  வெளியாகும் வேளைகளில்   அதனைப்படித்த  வாசகர்கள்  எழுதிய  கடிதங்களையும்   குகநாதன்  பாரிஸ்  ஈழநாடுவில்  வெளியிட்டார்.
இவ்வாறு  ஆரோக்கியமான  ஒரு  காலம்  ஊடகத்துறையில் இருந்தது.    என்றைக்கு  இந்த  மூஞ்சிப்புத்தகம்  அறிமுகமானதோ அன்று  முதல்  இன்று வரையில்  மூஞ்சிபுத்தக  எழுத்தாளர்கள்தான் அதிகரித்துள்ளார்கள்.    இங்குதான்  அவதூறுகளின்  ஊற்றுக்கண்ணும் திறக்கிறது.
கத்தியால்  மனித  வாழ்வுக்கு  பயன்  உண்டு.  அதேசமயம் மனித உயிரையும்  பறிக்கும்  குணம்  அதற்குண்டு.   அதனை கையாள்பவர்களின்  கையில்தான்  யாவும்  தங்கியிருக்கிறது. அதுபோன்று   இந்த  மூஞ்சிப்புத்தகங்களை  அவதானிக்கவேண்டியது காலத்தின்  சோகம்.
அதிலிருக்கும்   நன்மைகள்  அநேகம்.   ஆனால்,  அதே  பல தீமைகளுக்கும்   காரணமாகியிருக்கிறது   என்பதை  நாம்  எப்படி மறப்பது    மன்னிப்பது.    மூஞ்சிப்புத்தகத்தில்  எந்தக்குற்றமும்  இல்லை.   அதனைக்கண்டுபிடித்தவர்  வாழ்த்தப்படவேண்டியவர்.
சிட்னியில்   வதியும்  எழுத்தாளர்  மாத்தளை  சோமு  நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்   தொடரை  தமது  தமிழ்க்குரல்  பதிப்பகத்தின் சார்பில்   தமிழ்  நாட்டில்  வெளியிட  விரும்பி  பதிப்புரையும் எழுதினார்.    அத்துடன்  உடனுக்குடன்  வந்த விமர்சனக்குறிப்புகளையும்   அதில்  பதிவுசெய்யவிரும்பினார். பலருடைய   கருத்துக்களுடன்  நண்பர்  குகநாதனின்  கருத்தும்  அதில் கிட்டத்தட்ட    அணிந்துரையாகவே  வெளியானது.
" நமது  தமிழ்  மக்களிடையே   எப்போதும்  ஒருவரது  திறமையை மற்றவர்   மதிக்கின்ற  தன்மை   அதிகளவில்  இருந்ததில்லை.   ஒரு எழுத்தாளனின்   திறமையை   இன்னுமொரு  எழுத்தாளன் ஒப்புக்கொண்டதையும்   ஈழத்தில்  காண்பதரிது.   தான்  சந்தித்த பழகிய   இலக்கிய  நண்பர்களை  இன்றைய  சந்ததிக்கு  இனம்  காட்டும்   வகையில்  பாரிஸ்  ஈழநாடு  பத்திரிகையில்  தொடராக அவர்   எழுதிய  கட்டுரைத்தொடர்  அவரது  திறந்த  இலக்கிய நோக்குக்கு  ஒரு  சான்று.   ஈழத்து  இலக்கிய  வரலாறுகளை எழுதியவர்களும்  இலக்கியத் தொகுப்புகளை   வெளியிட்டவர்களும் தமது   விருப்பு  வெறுப்புகளை   வெளிப்படுத்தியதையே  ஈழத்து இலக்கிய   உலகில்  இதுவரையில்  காணமுடிந்தது.   அத்தகைய இலக்கியவாதிகளில்   முருகபூபதி  முழுமையாக  வித்தியாசமானவர்என்று  என்னை   வாழ்த்தியிருந்தார்.
அதற்குப்பதில்   தரும்விதமாக  எனது  முன்னுரையில்  இவ்வாறு குறிப்பிட்டேன்:-
" கருத்து   முரண்பாடுகள்  ஒரு  மனிதனின்  மேன்மையை    இனம் காண்பதில்  தவறிழைத்துவிடல்  தகாது.   இந்த  அடிப்படையிலேயே   இந்தத்  தொடரை   எழுதினேன். "
இந்தத்தொடரைத்   தொடர்ந்து  அவதானித்துவந்த  மற்றும்  ஒரு  மூத்த   பத்திரிகையாளர்  காசிலிங்கம்  தமது  தமிழன்  இதழுக்கும் ஒரு   தொடர் கேட்டிருந்தார்.   அதனால்  எழுதப்பட்டதுதான்  பாட்டி சொன்ன கதைகள்.
இவ்வாறு   எனக்கு  1991  இலேயே   ஊக்கமளித்த  இனிய  நண்பர் குகநாதன்  பற்றிய  ஒரு  பதிவை  நான்  எழுதுவதற்கு  ஏறக்குறைய கால்நூற்றாண்டு   ஏன்  கடந்தது  என்றும்  யோசித்துப்பார்த்தேன்.
நெஞ்சில்  நிலைத்த நெஞ்சங்கள்   தொடருக்குப்பின்னர்  காலமும் கணங்களும்,    திரும்பிப்பார்க்கின்றேன்  என்ற  அடுத்தடுத்து  வந்த தொடர்களிலும்    எம்மைவிட்டு  விடைபெற்ற -  எம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிற    நூற்றுக்கணக்கான  இலக்கிய ஆளுமைகளையும்   ஊடகம்,   கல்வி,   பதிப்புத்துறை   முதலானவற்றில்   தம்மால்  முடிந்த  சாதனைகளைப் புரிந்தவர்கள் பற்றியும்    எழுதிவருகின்றேன்.  " ஏன்  தொடர்ந்தும்  எம்மவர்கள்  பற்றி நான்   எழுதுகின்றேன்...? " என்று    ஒரு  இலக்கிய  நண்பர்  கேட்டார்.
" எனக்கு  இனி  இறைவன்  தந்துள்ள ஒவ்வொரு  நாளும்    போனஸ்தான்  என்ற  கட்டத்திற்கு  வந்துவிட்டேன்.   அதற்குள் எழுதவேண்டியவற்றை   எழுதிவிடவேண்டும்  என்ற  அசட்டு வேகத்தைதத்தவிர   வேறு   ஒன்றும்  இல்லை   பராபரமேஎன்றேன்.
நீண்ட  இடைவெளிக்குப்பின்னர்  குகநாதனை   கொழும்பில் பண்டாரநாயக்கா  ஞாபகார்த்த   சர்வதேச  மாநாட்டு    மண்டபத்தில் ஒரு    அறையில்  இயங்கிக்கொண்டிருந்த  டான்  தொலைக்காட்சி நிலையத்தில்  சந்தித்தபொழுது ---    இலங்கையில்  எமது  கல்வி  நிதியத்தின்  உதவிபெறும்  மாணவர்கள்  பற்றிய  பதிவுகள் ஒளிப்படங்கள்    செய்தி நறுக்குகள்  அடங்கிய  பெரிய  அல்பத்தை அவருக்கும்   காண்பித்தேன்.
அந்த   அல்பத்தில்  முதலாவதாக  இடம்பெற்றுள்ள  முழுப்பக்க கட்டுரை    அவருடைய   பாரிஸ்  ஈழநாடுவில்  இருந்து  எடுக்கப்பட்ட கல்வி நிதியம்  சார்ந்த  செய்தியின்  நறுக்குத்தான்.   அதனைப்பார்த்து கண்கள்   விரிய  ஆச்சரியப்பட்டார்.
கொழும்பில்   எமது  மாநாடு  2011  இல்   நடந்தபொழுது  வீரகேசரி, தினக்குரல்    முதலான  ஊடகங்களின்  அதிபர்களும்  நிதியுதவி வழங்கினார்கள்.    குகநாதன்  தமது  டான்  தொலைக்காட்சியின் சார்பிலும்    கணிசமான  நன்கொடை   வழங்கியதுடன்,  மாநாடு தொடர்பான  நேர்காணல்கள்,   நிகழ்ச்சிகளையும்  ஒளிபரப்பினார்.
2009   ஆம்  ஆண்டு  மேமாதம்  முள்ளிவாய்க்காலிலும் நந்திக்கடலருகிலும்   சங்காரம்  முடிவுற்றதும்,  சரணடைந்த முன்னாள்    போராளிகளின்  வாழ்க்கை  அகதி முகாம்களிலும் புனர்வாழ்வு   முகாம்களிலும்  முடங்கியதை   அறிவோம். வெளிநாடுகளில்  பல  கவிஞர்களின்  கவிதை   அரங்குகளில்  எல்லாம்  அந்த  நிலமும்  நீர்நிலையும்   தவறாமல்  இடம்பெறும். இன்றுவரையில்  அந்தப் பெயர்கள்  அவர்களின்  கவிதைகளில் வாழ்கிறது.   ஆனால்,  குகநாதனும்  அவரைப்போன்ற  பல மனிதநேயவாதிகளும்  என்ன  செய்தார்கள்...? என்பது  பற்றி  கவிதை பாடுவதற்குத்தான்   நாதியில்லாமல்  போனது.
குகநாதன்  தமது  தொடர்புகளையெல்லாம்  அந்த  பாதிக்கப்பட்டவர்கள்   பக்கத்திற்கு  நன்மை விளைவிப்பதற்கே உரியமுறையில்  பயன் படுத்தினார்.
ஆனால்அதனையும்  வாய்ச்சவடால்  வீரர்கள் கொச்சைப்படுத்திக்கொண்டிருந்தனர்.
இங்குதான்  இந்தப்பத்தியின்  தொடக்கத்தில்  குறிப்பிட்ட  கழிவுகளை நினைவூட்டுகின்றேன்.
குகநாதன்   பிரான்ஸில்  மேற்கொண்ட  பத்திரிகை,  வானொலி, தொலைக்காட்சி  முயற்சிகளுக்கெல்லாம்  பலதரப்பட்ட அழுத்தங்களும்    ஆக்கினைகளும்  தொடர்ச்சியாக  கொடுத்தவர்கள் மூஞ்சிப்புத்தகம்   வந்ததும்  அதிலும்  உமிழ்நீர்  உதிர்க்கிறார்கள். இவர்களுக்கெல்லாம்   காலம்  பதில்சொல்லிக்கொண்டுதானிருக்கிறது.
அவதூறுகளின்  ஊற்றுக்கண்   பொறமைதான்.
தம்மால்   முடியாததை  மற்றும்  ஒருவர்  செய்யும்பொழுது  அந்த ஊற்றுக்கண்  திறந்துகொள்கிறது.
முன்னாள்   போராளிப் பெண்களுக்கு  அடிப்படைத் தேவையான உடைகள்   மற்றும்  பொருட்களை   எடுத்துச்சென்று  கொடுத்தவர்கள் எனது  இனிய  நண்பர்கள்  அவுஸ்திரேலியாவில்  வதியும்  டொக்டர் நடேசன்,    இரஜரட்ணம்  சிவநாதன்,  லண்டனில்  வதியும்  ராஜேஸ்வரி   பாலசுப்பிரமணியம்  ஆகியோர்.
அவர்களுக்கு   பல்வேறு  வழிகளில்  அங்கு  நின்ற  நண்பர்  குகநாதன்  உதவி   செய்தார்.
அப்பெண்கள்   தங்கவைக்கப்பட்டிருந்த  புனர்வாழ்வு  முகாம்களுக்கு அவர்களை   அழைத்துச் சென்றார்.   அத்துடன்  நண்பர்  நடேசன் தனதும்   மற்றும்  தனது  நண்பர்களினதும்  உதவியுடன்  தமது  சொந்த   ஊர்  எழுவைதீவில்   அமைத்த  மருத்துவ நிலையத்தின் திறப்பு  விழாவுக்கும்  சென்றுவந்து,  லண்டன்  நாழிகை  இதழில் எழுதியிருக்கிறார்.   அந்தப்பதிவை   அண்மையில்தான்  பார்த்தேன்.
அத்துடன்    சுமார்  350 முன்னாள்    போராளி  மாணவர்களை   மீட்டெடுத்து  அவர்களை  G C E சாதாரண தரம் G C E  உயர்தரம்,  பரீட்சைகளுக்கு  தோற்றவைப்பதற்கு   எமது  இலங்கை  மாணவர் கல்வி   நிதியம்  ஊடக  நாம் உதவுவதற்கு  நடேசனுக்கு  தக்க ஆலோசனைகளையும்   வழிகாட்டலையும்  வழங்கியவர்தான்  நண்பர் குகநாதன்.
மாதம் ஒரு நாவல் என்ற திட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து ராணிமுத்து ஜெயகாந்தன் நடத்திய கல்பனா ஆகியன வெளிவந்த  காலகட்டம் பற்றி அறிவர்கள். அதுபோன்று நண்பர் குகநாதனும் யாழ்ப்பாணத்திலிருந்து றஜனி வெளியீடு என்ற பெயரில் சில ஈழத்து மூத்த எழுத்தாளர்களின் நாவல்களையும் 1980 காலப்பகுதியில் வெளியிட்டிருக்கிறார்.
அவருடைய மூச்சு, இதழியலும், ஊடகமும்தான். எத்தனையோ நட்டங்கள் வந்தபோதிலும் அவர் அதிலிருந்து விடுபடவில்லை.
இப்படி   எத்தனையோ  பக்கங்களை  இங்கு  பதிவு செய்யமுடியும்.
அவருக்கு    தெரிந்ததைத்தான்  அவர்  செய்தார்.   முள்ளிவாய்க்கால், நந்திக்கடல்  பற்றி  காற்றிலே  பேசத்தெரிந்தவர்களும் தமக்குத்தெரிந்ததைதான்   செய்வார்கள்.
எனவே   காற்றோடு  கலந்துவிடும்  அவதூறுகள்  பற்றி அலட்டிக்கொள்ளாமல்,  பகவத்கீதை  சொன்ன  பிரகாரம் கடமையைச்செய்து   பலனை   எதிர்பார்க்காமல்  இருப்பதுதான்  இந்த மூஞ்சிப்புத்தக  யுகத்தில்   சரியாக  இருக்கும்  என எண்ணத் தோன்றியுள்ளது.
ஆங்கிலத்தில்   Character  Assassination   எனச்சொல்வார்கள்.   இன்று தமிழ்த்தேசியம்   பேசுபவர்களும்,   தம்மை  படைப்பிலக்கியவாதிகள் என   அழைத்துக்கொள்பவர்களும்  படித்த  மனிதர்களும் அதனைத்தான்   அதிகமாகச்செய்கிறார்கள்.  ஆனால்... பாமரன்....?
அதனால்தான்  ஒவ்வொருவருக்கும்  இந்த  யுகத்தில்  சுயவிமர்சனம் அவசியப்பட்டுள்ளது.
எனது   நீண்டகால  இனிய  நண்பர் குகநாதன் --  தமது  ஊடகத்துறைவாழ்வில்  சந்தித்த   அனுபவங்களை,   சவால்களை,   நெருக்கடிகளை, சாதனைகளையெல்லாம்   எழுதவேண்டும்.  அதுசுயசரிதையல்ல. ஈழத்தினதும்   புலம்பெயர்  ஈழத்தமிழர்களின்  ஊடகத்துறை  பற்றிய ஆவணமாகவும்   திகழவேண்டும்.   ஓடும்  நதி  தான் செல்லும் பாதையில்   எத்தனை   இடையூறுகளைச் சந்திக்கும்.

நதிநடந்தே  சென்றிட  வழித்துணைதான்  தேவையா...?