புத்தாண்டே நீ வாராய் 2016 - செ.பாஸ்கரன்

.

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
இயற்கையின் நியதி
ஒரு ஆண்டு இன்றோடு
ஒழிந்து கொள்கிறது
நாட்காட்டியின்
இறுதித் தாளும் இன்றுடன்
கிளித்தாகி  விட்டது
காகிதத்தாள்களை
தாங்கி நின்ற
கடவுள் படங்களை
குப்பைக் கூடையில்
எறிந்துவிட மனமின்றி
முன்னைய  சாமிகளோடு
சாய்த்து வைக்கிறாள்  மனைவி
"சாமிப்பட கலண்டர்கள்  வாங்காதீங்க "
சிவனுக்கு  உபதேசம்  செய்த
முருகக் கடவுள் போல்
தெரிகிறாள் என்மகள்
அந்த வார்த்தைகள்
இன்று நறுக்கென்று  தெறிக்கிறது .
தமிழ் வருடங்கள்
வந்து வந்து போனாலும்
ஆங்கிலத்  தேதியோடும்
அட்டைப்பட சாமிகளோடும்தான்
நம் நாட்காட்டிகள்
நமக்கு நேரம் குறிக்கிறது

நகர்ந்து செல்லும் புத்தாண்டில்
நடந்தவற்றை
திரும்பிப் பார்க்கிறேன்
நண்பர்களும் உறவுகளும்
பிரிவும் துயரும்
நல்லவையும் கெட்டவையும்
முகநூலின் புதுப் புது
சொந்தங்களுமாய்
கடந்துவிட்ட ஒரு வாழ்க்கை
வயதிலும் ஒன்றைத் தட்டிச் செல்கிறது

வா புத்தாண்டே
கதிரவனின் கதிர் முகங்களொடு
எட்டுத்திசையும்
வெள்ளொளி பரப்பி
துயர் நீங்கும்  நல்ல செய்தியொடு
எழுந்து வா
நாடற்றலையும் ஏதிலி வாழ்வில்
தாயென  அணைக்கும்
பண்புகள் பெருகும்
நாளென நாளை
மலர்ந்திட வேண்டும்
பொன் ஒளி வீசி
கவலைகள்  போக்கும்
புலரும் பொழுதென
விடிந்திடல்  வேண்டும்
அகமும் முகமும்  மலர்ந்திட
நமக்கோர்
அழகிய புத்தாண்டாகிடல்  வேண்டும்
வருக புத்தாண்டே
எழிலும்  நலமும் இலங்கிட வருக .