காலத்தை ஆளும் கலாம் - ம.ரமேஸ்

.


வெண்ணிலவின் ஒளி  பட்டு  தண்ணிலவின் குளிர்கண்டு  பனிபடர்ந்த புற்களில் காகங்களும்  வேறு பறவைகளும் எதை எதையோ தேடின.    அவன்  படுக்கையைச்   சுருட்டி  வைத்துவிட்டு  சோம்பல் முறித்தான்,  அசையும்   அலைகளை  உற்றுப்பார்த்தான்  யோசித்தான் 
சில பறவைகள்  கடலின் மேலே  அழகாகப் பறந்து சென்றன இவை எங்கே  எதற்காகப்  பறக்கின்றன,  ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு  .  மகனே  என்றவாறு  தேநீருடன்  வந்தார் 
தந்தை,  கையில் தேனீரைப்  பணிவுடன் வாங்கிய  மகன்  சற்றுச்   சோர்வாக  இருந்து  யோசிப்பதைக் கண்ட  தந்தை  சொன்னார் ,  மகனே  இந்த வானில் பறக்கும்  பட்சிகளைப்பார்த்தாயா  எந்தத் துணையும் இன்றி  இறக்கைகளை மட்டுமே நம்பி  முடியும் என்ற  குறிக்கோளுடன் எதற்கும்  அஞ்சாது  பறக்கின்றன.

   மேலே வானம்  கீழே  ஆழி  இடையில்  தங்க  ஒரு மரமில்லை 
கொத்தியுண்ண அவைகளுக்கு எதுவுமில்லை  முகில்களைக் கிழித்து  விரைகின்றன தங்களுக்கான எதையோ  தேடி,  தேடச் செல்பவனுக்கு மனதில் தைரியம் வேண்டும்  பயம் கூடாது   வேகம் வேண்டும் . கடந்த   இரண்டு நாட்களாக நீ எதைப்பற்றி   யோசனை செய்கின்றாய்  அது என்ன வென்று  அறிவேன் மகனே . வடக்கே தனியாகச்  சென்று  மேற்படிப்பைப்  படிக்க வேண்டியுள்ளதே  புரியாத மொழி  வித்தியாசமான  யாவும் எப்படி  சமாளிப்பேன் என்பதையிட்டே  நீ துயரப் படுகின்றாய் என்பதை அறிவேன். பயம் வேண்டாம் வருங்காலத்தில் எப்படி எவரிடத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு உனக்கு உண்டு சென்று வா மகனே வென்று வா நலமாக . 

மாமனிதர்  அமரர்  அப்துல் கலாமுக்கு தந்தை கூறிய அறிவுரைகளே  மேலே  காண்பது.

எந்த  அமெரிக்கா  பாதணிகளைக் கழட்டிப்  பரிசீலித்து  உள்ளே  நுழைய அனுமதித்ததோ  அதே 
அமெரிக்கா  நேற்று தனது தேசியக் கொடியை  அம்மனிதருக்காகத்   தாழ்த்தித்   தலை குனிந்து 
வணங்கியது.  கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும்  உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழவேண்டும்,  ஆம் உலகம்  கலாமுக்காக கண்ணீர் சிந்துகின்றது .
மாபெரும் சபைகளில் நீ நட ந்தால் உனக்கு  மாலைகள் விழவேண்டும்  ஒரு மாற்றுக்குறையாத மன்னவன்  இவனென்று  உலகம் போற்றிப் புகழ்கின்றது  மாமனிதர்  அப்துல் கலாமை.



குடும்பத்து உறவு சிறு பதவி கண்டாலே  குடும்பம் கார்வாங்கி மாளிகை கட்டி எழுப்பம் காட்டும் நாட்களில்,  நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தும்  எவ்வித ஆடம்பரங்களுக்கும் அடிபணியாது வாழ்ந்த குடும்பம்  அப்துல் கலாம் ஐயாவின்  குடும்பம்  - நேற்று  கலாமின் சகோதரர்  பேருந்தில் பயணித்திருக்கிறார்  உடன் பிறந்தானின் இறுதிச்சடங்கில்  கலந்து கொள்ள,  கலாமின் சாயல்போலவே அவரது சாயலும் இருந்ததைக்கண்ட  ஒரு  பிரமுகர்   அவரைத் தனது மகிழுந்தில் ராமேஸ்வரம்  அழைத்துச் சென்றிருக்கின்றார் .


நாலு வார்த்தை  ஆங்கிலம் படித்தால்  தாய்மொழியை  மறந்துபோகும்  தமிழினத்தில் தோன்றி மாபெரும்  சபைதனில்  கணியன் பூங்குன்றனின்  யாதும் ஊரே  யாவருங் கேளிர் என்ற  உலக ஒற்றுமையை,  உறவைத்  தமிழில்  எடுத்தியம்பி  மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ப்புலவன் இதைச்சொன்னார்  என்றபோது  உலகமாக சபை எழுந்து நின்று  கரகோஷம் எழுப்பிக்  கலாமைக்  கட்டித்தழுவிப் பாராட்டியது - எங்கு சென்றாலும்  எதை மறந்தாலும்  ஐயன்  வள்ளுவனை  மறவாது கொண்டு சென்றவர்,  இன்று ஐயன் சொன்ன  முறையில்  வாழ்ந்து  ஐயனுடன்  சங்கமித்தார். காலத்தை தனதாக்கியவர்களையே  காலமானார்கள் என்பார்கள் . ஆம்,  கலாம் காலத்தைத்  தனதாக்கிக் கொண்டார். 

வாழ்க அப்துல்கலாம் .   வாழ்க  அவர் வாழ்ந்த வாழ்வு.   வாழ்க  அவர் புகழ்.    

ஆக்கம் 
ம.ரமேஸ்   
DENMARK

No comments: