முன்மாதிரியாக வாழ்ந்த படகோட்டியின் மைந்தன் - முருகபூபதி

.
" இளம்தலைமுறையினரே  கனவு  காணுங்கள் " என்று அறைகூவல்  விடுத்தவரின்  நீண்ட  கால  கனவு நனவாகவில்லை.
உலகத்தலைவர்களுக்கும்    தேசங்களுக்கும் முன்மாதிரியாக  வாழ்ந்த   படகோட்டியின்    மைந்தன்
   
                                          
கடல்  அலைகள்,  பொன்மணல்,
புனிதயாத்திரிகர்களின்  நம்பிக்கை,
இராமேஸ்வரம்   பள்ளிவாசல்  தெரு,
இவையெல்லாம்  ஒன்று  கலந்த  உருவம்  நீ...
என்  அன்னையே...
உன்  ஆதரவுக்கரங்கள்  என்  வேதனையை  மென்மையாய் அகற்றின
உன்  அன்பும்  ஆதரவும்  நம்பிக்கையும்  எனக்கு  வலிமை   தந்தன.
அதைக்கொண்டே  நான்  இந்த  உலகை
அச்சமின்றி   எதிர்கொண்டேன்
என்   அன்னையே...  நாம்  மீண்டும்  சந்திப்போம்
அந்த   மாபெரும்  நியாயத்தீர்ப்பு  நாளில்.
இவ்வாறு  தமது  அன்னையை   நினைத்து  கவிதை   எழுதிய  பாரத ரத்னா  அப்துல்கலாம்,  தமது  அன்னையிடமே   சென்றுவிட்டார்.
அவர்   மாபெரும்  நியாயத்தீர்ப்பு  நாள்  என்று  எதனைக் குறிப்பிட்டார் என்ற  விளக்கம்  இங்கு  அவசியமில்லை.
ஒரு  விறகு  வெட்டியின்  மகன்  அமெரிக்காவின்  ஜனாதிபதியானார். ஒரு    செருப்புத்தைக்கும்  தொழிலாளியின்  மகன்  ருஷ்யாவில் அதிபரானார்.
பாரத  நாட்டில்  ஒரு  படகோட்டியின்  மகன்  ஜனாதிபதியாகி  இன்று மக்களின்    மனங்களில்  வாழ்ந்துகொண்டு   விடைபெற்றார்.
இராமேஸ்வரமும்    இராமனும்  அரசியலாகிய  கதை   தெரியும். இராமர்    பாலம்  அமைத்த  இராமன்  எந்த  பொறியியல்  கல்லூரியில் படித்தான்   எனக்கேள்வி  கேட்டவரின்  தலையை   கொய்து எறியப்போனவர்களின்  செய்தியும்  தெரியும்.   இராமரா  -   பாபர் மசூதியா  என்ற  போர்க்களத்தில்   மாண்டுபோன  இன்னுயிர்கள் பற்றியும்   அறிவோம்.
இந்தப்பின்னணிகளுடன்    இலங்கையையும்  இந்தியாவையும் பிரிக்கும்   கடல்  எல்லைக்  கடலோரக்  கிராமத்தில்  ஏழ்மையான குடும்பத்தில்  பிறந்து,  இளம்தலைமுறைக்கு கலங்கரைவிளக்கமாகத்திகழ்ந்த   அப்துல்  கலாம்  என்ற  பிரம்மச்சாரி    விஞ்ஞானியாகவும்  எழுத்தாளராகவும்   திகழ்ந்தவர்.



எழுச்சித்தீபங்கள்  -   இந்திய  ஆற்றலின்  ஊற்றுக்கண்  என்ற  தமது  நூலை   ஒரு   பன்னிரண்டாம்    வகுப்பு  படிக்கும்  மாணவிக்கே சமர்ப்பணம்  செய்திருந்தார்.
அவர்   அதற்கான  காரணத்தையும்  இவ்வாறு  சொல்கிறார்.
 நான்  இந்தப்புத்தகத்தைப்   பன்னிரண்டாம்  வகுப்பில்  படிக்கும்  ஒரு குழந்தைக்குச்   சமர்ப்பிக்கின்றேன்.    அந்தச்சிறுமியின்  பெயர்  சிநேகல் தாக்கர்.    2002  ஏப்ரல்  11  ஆம்  நாள்  மாலை   நேரத்தில்  சாலை வழியாக   நான்   குஜராத்  மாநிலத்தில்  உள்ள  ஆனந்த்  என்ற  நகரை அடைந்தபோது,    வகுப்பு  மோதல்கள்  காரணமாக  அங்கு  ஊரடங்கு உத்தரவு    பிறப்பிக்கப்பட்டிருந்தது.    அடுத்த  நாள்,   ஆனந்தாலயா உயர்நிலைப்பள்ளியில்    மாணவ  மாணவியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது  ஒரு  கேள்வி   வந்தது.   '' நமது  பகைவன் யார்...?"   இதுதான்  அந்தக்கேள்வி.   பல  பதில்களைச் சொன்னார்கள். ஆனால்,  நாங்கள்  அனைவரும்  ஏற்றுக்கொண்ட  சரியான  பதில், சிநேகலிடமிருந்து  வந்தது.   ''வறுமைதான்   நமது  பகைவன்"   என்பது  அந்தச்சிறுமியின்  பதில்.
நமது   அனைத்துப் பிரச்சினைகளின்  ஆணிவேர்  அதுதான்.   நாம் போராடவேண்டியது  வறுமைக்கு  எதிராகத்தான்.   நமக்குள்ளே  அல்ல.
 இந்தச்    சமர்ப்பணக் குறிப்பின்  பின்னணியிலிருந்து,   மகாகவி பாரதியின்   தனிமனிதன்  ஒருவனுக்கு  உணவில்லை   எனில் ஜெகத்தினையே    அழித்திடுவோம்  என்ற  தர்மாவேசக்குரலையும், சமீபத்தில்    வெளியாகிய  36  வயதினிலே   என்ற   திரைப்படத்தின் கதைக்கருவையும்   பார்க்க  முடியும்.
எப்பொழுதும்    குழந்தைகள்,    மாணவர்கள்,   இளம் தலைமுறையினர் என்றே   நினவிலும்  கனவிலும்  வாழ்ந்த  இந்த  மகத்தான  ஆளுமை இறுதியில்   மாணவர்  மத்தியில்    உரையாற்றும்பொழுதே  -  அவரது பார்வையில்   அந்த  நியாயத் தீர்ப்பு  நாளிலேயே   தமது  அன்னையிடம்    சரணடைந்துவிட்டார்.
எளிமை,    தன்னடக்கம்,   விடாமுயற்சி,   பொதுநலம்,  ஆராய்ச்சி, மனிதநேயம்   முதலான  அருங்குணங்களின்  ஊற்றுக்கண்ணாக விளங்கியவர்  எழுதிய  அக்கினிச்சிறகுகள்  ( சுயசரிதை) எழுச்சித்தீபங்கள்   உட்பட  சில  நூல்கள்  எமக்கெல்லாம் வாழ்க்கைப்பாட  நூல்கள்.   அவரும்  நிறைய  எழுதினார்.   அவர் பற்றியும்   பலரும்  எழுதினார்கள்.
அப்துல்காலம்  தான்  கடந்தவந்த  பாதையை   என்றைக்கும் மறக்கவில்லை.    அதனால்  அவரது   எதிர்காலம்  சிறப்பாகவிருந்தது. பாரத   தேசத்திற்கு  மாத்திரமன்றி   உலகில்  வறியநாடுகளுக்கும் வளர்முக  நாடுகளுக்கும்    அவரது  சிந்தனைகள்  முன்னுதாரணமாகத் திகழ்ந்தன.   ஆனால்,  அவர்  இந்த  முன்னுதாரணம்   பற்றி மாற்றுக் கருத்துக்கொண்டிருந்தவர்.
அவர்   சொன்னார்:
" நம்  தேசத்திற்கான  ஒரு  தொலைநோக்குடன்  வேறு எல்லாவற்றையும் விட  அந்தக்குறிக்கோளுக்கு  மட்டுமே  அதிக முக்கியத்துவம்   கொடுத்து  பாடுபடவேண்டும்.    இந்தத் தொலைநோக்குதான்   அனைத்து  துறைகளிலும்  அரும்பெரும் பலன்களை    மலரச்செய்கிறது.
கண்ணோட்டங்கள்,    அபிப்பிராயங்களைவிட  மறுபரிசீலனைகள்தான் எங்கும்    ஏராளமாகக்  காணப்படுகின்றன.   எந்தப்பாதையை நோக்கினாலும்   ஏதாவது  ஒரு  முட்டுக்கட்டை   இருப்பது போலத்தோன்றும்.    தடுத்து  நிறுத்தப்பட்டுச்   சிக்கிக்கொண்டிருக்கும் ஆற்றல்களையும்    அடக்கி  ஒடுக்கப்பட்டிருக்கும்  முனைப்பையும் அந்தத்   தளையிலிருந்து  விடுவித்து முறையாகப் பயன்படுத்திக்கொள்ள  வேண்டும்.    எப்போது  பார்த்தாலும்  ஏதாவது ஒரு   குறிப்பிட்ட  தேவைக்காக  எங்கெங்கோ   இருந்தெல்லாம் முன்மாதிரிகளை  நாம்  பின்பற்றவேண்டும்  என்பது  தேவையற்றது.
அமெரிக்கா,  ஜப்பான்,   அல்லது  சிங்கப்பூர்  பாணித்தீர்வுகள்  நமக்கு பலன்  தரும்  என்று  நான்  நினைக்கவில்லை.    மற்றவர்களின் வாசல்கதவைத்தட்டுவதில்  எந்தப்பலனும்   இல்லை.   கோட்பாடுகளை    இறக்குமதி  செய்வதையும்,   பிறர்கருத்துகளை, சிந்தனைகளை    வேறு   இடத்தில்  முளைவிட்டு  வளர்ந்த கருத்துக்களையும்  சிந்தனைகளையும்   இங்கு கொண்டுவந்து வளர்ப்பதை   விடுத்து,   நமது  சொந்தத்  தீர்வுகளைத்தான்  நாம் உருவாக்கிக்கொண்டாக   வேண்டும்.   வெளியிலிருந்து தீர்வுகளைப்  பெறுவதற்குப்பதிலாக  அவற்றை   நமக்குள்ளேயே  நாம்  தேடிப்பார்க்க வேண்டும்.
இந்தப்பதிவு  அப்துல்  கலாமின்  எழுச்சித்தீபங்கள்  நூலின் முன்னுரையில்   கிடைக்கிறது.
எழுத்தாளராகவும்    சிறந்த  வாசகராகவும்  வாழ்ந்த  அவர்  குறித்து சில   தகவல்களை   இங்கு  பகிர்ந்துகொள்ளலாம்.


அப்துல்கலாமின்   சில  நூல்களின்  தமிழ்  மொழிபெயர்ப்புகளை  சென்னையில்   கண்ணதாசன்  பதிப்பகம்  வெளியிட்டுள்ளது. ஒருசமயம்   அதன்   அதிபர்  திரு. காந்தி  கண்ணதாசனை தொடர்புகொண்ட    ஜனாதிபதி  அப்துல்கலாம்,  தமக்குத்தேவைப்பட்ட சில   நூல்களின்  பட்டியலை    அனுப்பி வைத்துள்ளார்.   காந்தியும் தாமதிக்காமல்   அவற்றை  வாங்கிச்சேகரித்து  பொதியாக  தபாலில் ஜனாதிபதி   மாளிகைக்கு  அனுப்பியிருக்கிறார்.
அதற்குரிய    பணத்தை  தமது  சொந்தக்காசோலையில்  காந்திக்கு அனுப்பினார்   அப்துல்கலாம்.
தபாலில்   வந்து சேர்ந்த  ஜனாதிபதியின்  தனிப்பட்ட அந்தக்காசோலையை  காந்தி  வங்கியில்  செலுத்தி  மாற்றவில்லை. சில    மாதங்களின்   பின்னர்  ஒரு  நிகழ்ச்சியில்  காந்தியை   சந்தித்த ஜனாதிபதி - " அந்தக்காசோலை  கிடைத்ததா...?  கிடைத்திருந்தால்  ஏன் இன்னமும்   அதனை   வங்கியில்  சேர்த்து   மாற்றிக்கொள்ளவில்லை..? " என்று   கேட்டுள்ளார்.
'' சேர்...  உங்கள்  காசோலையை   மாற்றாமல்  அதற்கு கண்ணாடிச்சட்டமிட்டு   உங்கள்  படத்துடன்  வீட்டில் மாட்டி வைத்திருக்கின்றேன்.   உங்கள்  பணத்தைவிட  உங்கள்  கையொப்பம் மகத்தானது   அல்லவா...?"   என்றார்  காந்தி  கண்ணதாசன்.
பிறிதொரு  சமயம்  ஜெயகாந்தனுக்கு  பாரதீய  ஞானபீட  விருது கிடைக்கவிருந்த வேளையில்,  அதனை  வழங்குவதற்கு  முன்னர் தான்   படிக்கத்தவறிய  ஜெயகாந்தனின்  நூல்களையும்  காந்தி கண்ணதாசனிடமே    கேட்டுப்பெற்றுக்கொண்டவர்  அப்துல்கலாம்.
அந்த  உயர்  விருதை   வழங்குவதை   சடங்காக,  சம்பிரதாயமாக மாத்திரம்    கணக்கிலெடுக்காமல்  விருதுக்குரியவரின் படைப்புகளையும்    தேடிப்பெற்று  படிக்கும்  ஆர்வம்  அவரிடம் இருந்திருக்கிறது.
அப்துல்கலாம்  பற்றிய  மற்றும்  ஒரு  தகவலை   சுஜாதாவும்  ஒரு தடவை    பதிவு செய்துள்ளார்.
ஒருசமயம்    அப்துல்கலாமின்   உறவினர்கள்  சிலர் இராமேஸ்வரத்திலிருந்து   டில்லியை   சுற்றிப்பார்க்க வந்திருக்கிறார்கள்.    அவர்களை   வரவேற்று  அழைத்து  வருவதற்காக ஜனாதிபதி   மாளிகை  வாகனங்களை  அவர்  அனுப்பவில்லை.   தங்கிய    தினங்களில்  அவர்கள்  சாப்பிட்டதற்கு  தனிக்கணக்கு வைக்கச் சொல்லி,  தங்கிய  அறைகளுக்கான  வாடகையையும் கணக்குப்போட்டு,   முழுச்செலவுக்கும்   தமது  தொழிலில்  பெற்ற சம்பளப்பணத்தையே    (சொந்தப்பணத்தை)    கொடுத்தாராம்.
இன்று   அவரது  மறைவுக்கு  உலகெங்குமிருந்து  அஞ்சலி தெரிவித்து -  அனுதாப  உரைகளை  வெளியிடும் உலகத்தலைவர்களுக்கு  இது  சமர்ப்பணம்.
அப்துல்கலாம்   ஜனாதிபதியாக  பணியாற்றிய  காலப்பகுதியில் பெங்களுருவில்  ஒரு   விஞ்ஞானியாகவும்  விமானியாகவும் பணியாற்றியவர்  பற்றிய  ஒரு  தகவலை  இங்கு  குறிப்பிடலாம். அவர்  எங்கள்  மூத்த  படைப்பாளி   தமிழ்நாடு  நாமக்கல்லில் வசிக்கும்    சின்னப்ப  பாரதியின்  மகளை   மணந்தவர்.
ஒரு  சந்தர்ப்பத்தில்  அங்கு  நிகழ்ந்த  விமான  விபத்தில் சின்னப்பபாரதியின்  மருமகன்  இறந்துவிட்டார்.   பரிதாபத்துக்குரிய அற்பாயுள்    மரணம்.   இதனால்  சின்னப்பபாரதியின்  மகள்,  பிள்ளைகள்  உட்பட  அனைவருமே   சோகத்தில்  ஆழ்ந்திருந்தனர்.
சின்னப்பபாரதியின்  மருமகன்  பற்றி  நன்கு  அறிந்திருந்த அப்துல்கலாம்,    அவருடைய  மகளின்  குடும்பத்திற்கு உதவும்பொருட்டு  தாமதமின்றி  நட்ட ஈடும்  பெற்றுக்கொடுத்து அந்தப்பெண்ணின்  மறைந்த  கணவர்  பணியாற்றிய  விஞ்ஞான ஆய்வு    மையத்திலேயே   ஒரு  தொழில்வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்தார்.
இவ்வாறு  தேசத்தின்  நலன்  குறித்து  மட்டுமல்லாது தனக்குத்தெரிந்தவர்கள்   பற்றியெல்லாம்  துல்லியமாக  அறிந்துவைத்து,   அவர்களின்  நலன்களையும்  கவனத்தில் கொண்டிருந்தவர்  அப்துல்கலாம்.
அவருடைய   சுயசரிதையான   ( Wings of fire )  அக்கினிச்சிறகுகள் நூலின்  தமிழ்ப்பதிப்பில்  07  நவம்பர்  1999  இல்  தமிழக  மக்களுக்கு எனத்தலைப்பிட்டு  அவர்  தம்கைப்பட  எழுதிய  குறிப்புகள் எளிமையாக   அழகான  கையெழுத்தில்  அமைந்துள்ளன. அந்தச்சுயசரிதையை    அவருடைய   தலைமையில்  சுமார் பத்தாண்டுகள்    பணியாற்றிய  அருண் திவாரி    எழுதியிருக்கிறார்.
அப்துல்கலாம்  அவர்களை  முன்னுதாரணமாகக் கொள்ளுமாறு  பல இந்திய    மொழிப்படங்களிலெல்லாம்  வசனங்கள்  வந்திருக்கின்றன. அவர்  கனவுகளை  விதைத்தவர்.  தமது  கனவுகளை  விதைத்து விருட்சமாக்கியவர்.
ஏழ்மையில்  வாழும்  கோடிக்கணக்கான  மக்களின்  தேசத்திற்கு அணுவாயுத  சோதனை -  ஏவுகணை  பரிசோதனைகள்  தேவையா என்றும்    விமர்சிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு    பிச்சைக்காரன்  தனக்கு  பாதுகாப்பிற்காக  நாயை  வளர்ப்பது குற்றமா...?  என்று  எதிர்வினைகளும்  வந்துள்ளன.   இந்தியா ஆசியாவுக்கு  தலைமை   தாங்குவதையும்  வல்லரசுகள் பொறுத்துக்கொள்ளவில்லை.    இந்நிலையில்  இந்தியாவை  தமது அறிவாலும்    ஆற்றலினாலும்  உலக  நாடுகளை திரும்பிப்பார்க்கச்செய்தவர்  அப்துல்கலாம்.
எம்மையெல்லாம்   கனவு  காணச்சொன்னவருக்கும்  நிறைவேறாத கனவு   ஒன்று  நீண்ட காலமாக  இருந்துள்ளது.   தமது  மேல் கல்விக்காக    சகோதரியின்  நகைகளை  ஈடுவைத்து  அயலூர்   சென்றவர்.    தமது  இராமேஸ்வரத்தில்  சில உயர்தரப்பாடசாலைகளில்  பயிலும்    மாணவர்கள்   தமது  12  ஆம் தரத்துடன்  கல்வியை   நிறுத்திக்கொண்டு பொருளாதாரக் காரணங்களினால்   அயல்  ஊர்   சென்று படிக்க வசதியற்று உள்ளுரிலேயே  மீன்பிடித் தொழிலில்  ஈடுபட்டுள்ளனர்.   வசதி படைத்தவர்களின்   பிள்ளைகள்  அயலூர்  சென்று  மேற்கல்வியை கற்றனர்.   அப்துல்காலம்  வாழ்வும்  தந்தைக்குப்பின்னர்  படகோட்டி வாழ்வாக   மாறியிருக்கலாம்.  ஆனால்,  அவர்  படித்துக்கொண்டே இராமேஸ்வரத்தில்    பத்திரிகைகளை  விநியோகித்து  வீட்டுக்கு உதவினார்.   சகோதரியின்  நகைதான்   அவருடைய  மேற்கல்விக்கு  உதவியது. ஆனல்  - அந்த  வசதியுமற்ற  ஏராளமான  பிள்ளைகளின்  கனவை அவர்  இராமேஸ்வரத்தில்  நனவாக்க  முயன்றார்.
ஆனால்  - அவரது  காலத்தில்  அது   சாத்தியமாகவில்லை.   இன்று தமிழகத்தில்   படிக்காத  பலர்,  கல்லூரிகளை  தொடக்கி இலட்சக்கணக்கில்   சம்பாதிக்கின்றனர்.    அதற்கு  மூலதனமாக  பணம்    பின்பலமாக    இருந்தது.   ஆனால் -  படித்த  மேதையான அப்துல்கலாமிற்கு   பின்பலமாக   எளிமைதான்  இருந்தது.
அவரைக்கொண்டாடும்  தமிழகம்,  இராமேஸ்வரத்தில்  அவரது கனவை    நனவாக்க  முன்வரவேண்டும்.   அதுவே   அவருக்குச்செய்யும் சிறந்த   அஞ்சலியாகும்.
---0---
letchumananm@gmail.com




No comments: