பூவால் நேர்கோடு வரைந்து இறுதி அஞ்சலி செலுத்திய அப்துல் கலாமின் அண்ணன்

.


மறைந்த அப்துல் கலாமின் உதவியாளராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றிய ஸ்ரீஜன் பால் சிங் இன்று தனது பேஸ்புக்கில் கூறியுள்ளதாவது; "நான் கலாம் அவர்களிடம், எப்போது என்னை உங்கள் சொந்த ஊருக்கு கூட்டி செல்ல போறீங்க? என்று அடிக்கடி கேட்பேன். அப்படி கடைசியாக கேட்டபோது அவர், 'அடுத்த ஆண்டு கோடையில் என் அண்ணாவுக்கு 100 வயதாகிவிடும். அதை நான் சிறப்பாக கொண்டாடி அவரை சந்தோஷப்படுத்த முடிவு செய்துள்ளேன். அப்போது நீ உட்பட என் நண்பர்கள் அனைவரையும் அழைத்து போகிறேன். அப்போது அண்ணன் வீட்டில் நான் வடிவமைத்த சோலார் நிலையத்தையும் பார்க்கலாம்' என்று கூறினார்.


   
ஆனால் நான் ஒரு போதும் அவரது இறுதி சடங்கிற்கு தான் ராமேஸ்வரம் வருவேன் என்று நினைக்கவில்லை. இன்று நடந்த இறுதி சடங்கில் மிகவும் வலி நிறைந்த நிமிடம் என்றால் கலாமின் 99 வயது அண்ணன் அவருக்கு அஞ்சலி செலுத்திய விதம் தான். கலாம் கிடத்தப்பட்டிருந்த கண்ணாடி பெட்டி அருகே வந்தவர், நீண்ட நேரம் தம்பியை பார்த்துக்கொண்டிருந்தார். பின் அருகில் இருந்த வெள்ளை நிற மலர்களை எடுத்து தன் நடுங்கும் கரத்தினால் அவற்றை ஒரே நேர் கோடாக வைத்துவிட்டு மெதுவாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதை பார்த்துக்கொண்டிருந்த எங்களால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. கலாம் சாரை ஒரு தந்தையை போல் கஷ்டப்பட்டு படிக்க வைத்தவர் அவர் அண்ணன் தான். சிறுவயதில் கலாம் சாருக்கு ஒரு நேர்கோட்டை எப்படி வரைவது? என்று கற்றுக்கொடுத்தவர், மீண்டும் பூவால் ஒரு நேர்கோட்டை உருவாக்கி தனது தம்பிக்கு விடை கொடுத்துள்ளார். நான் கொஞ்சம் நேரம் கழித்து கலாமின் அண்ணனை சந்தித்து அவர் காலை தொட்டு வணங்கினேன். அவர் என் குருவின் குரு அல்லவா?"

Nantri seithy.com

No comments: