தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் மரணம்

.

உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படுபவரும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான கிளைவ் ரைஸ் கேப்டவுனில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. 

அவர் சிறிது காலமாக மூளைக்கட்டி நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கேப்டவுன் மருத்துவமனையில் செவ்வாயன்று அவரது உயிர் பிரிந்தது.

கடந்த மார்ச் மாதம் புற்று நோய் தொடர்பான சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வலது கை வேகப்பந்து வீச்சாளரும், பேட்ஸ்மெனும் ஆவார்.

ஆல்ரவுண்டரான கிளைவ் ரைஸ் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்தான் ஆடியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட காலத்தில் இவர் பெரும்பாலும் ஆடிவந்தார். தடை நீக்கமடைந்த பிறகு 1991-ம் ஆண்டுக்கு இந்தியாவுக்கு முதன் முதலாக வந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கிளைவ் ரைஸ் இருந்தார். ஆனால் அப்போதே அவருக்கு வயது 40-ஐ கடந்திருந்தது, இதனால் 1992 உலகக் கோப்பையை இழந்தார் இந்த அதிரடி ஆல்ரவுண்டர்.







1969-1994 வரையிலான அவரது கிரிக்கெட் வாழ்வில், முதல் தர கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவிலும் இங்கிலாந்து கவுண்டி அணியான நாட்டிங்கம் ஷயரிலும் ஆடியுள்ளார். 482 போட்டிகளில் 26,331 ரன்களை 40.95 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 930 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். லிஸ்ட் ஏ என்று அழைக்கப்படும் ஒருநாள் கவுண்டி போட்டிகளில் 479 ஆட்டங்களில் விளையாடி 13,474 ரன்களையும் 517 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 

1969-இல் இவர் தென் ஆப்பிரிக்க முதல் தர அறிமுக போட்டியில் ஆடினார். அதாவது தென் ஆப்பிரிக்க அணி தனிமைப்படுத்தப்படுவதற்கு சற்று முன்பு இவர் அறிமுக முதல் தர போட்டியில் ஆடினார். இதனையடுத்து 1975-ம் ஆண்டு அவர் இங்கிலாந்து கவுண்டி அணியான நாட்டிங்கம் ஷயருக்கு வந்தார். அந்த அணியை 1979-1987 வரை தலைமைப்பொறுப்பில் வழி நடத்தினார். 1981 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் இவரது தலைமையில் நாட்டிங்கம் ஷயர் கவுண்டி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

ஓய்வு பெற்ற பிறகும் கிரிக்கெட்டுடன் அவர் தொடர்பில் இருந்தார். 1999-2002-ல் நாட்டிங்கம் அணிக்கு பயிற்சியாளராகச் செயல் பட்டார் அப்போதுதான் கெவின் பீட்டர்சனை 2000-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார். அப்போது தென் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு நகர பீட்டர்சன் முடிவெடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஒரு சமயத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் கபில்தேவ், இயன் போத்தம், ரிச்சர்ட் ஹேட்லி, இம்ரான் கான் இருந்த போது இவர்களை விடவும் சிறந்த ஆல்ரவுண்டர் கிளைவ் ரைஸ் என்றே கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர் என்பதும் அவரது மறைவையொட்டி நினைவுகூரத் தக்கது.

No comments: