எம்எஸ்வி – ஓர் அஞ்சலி

.

கடந்த இரு வாரங்களாகச் சற்றே எதிர்பார்த்திருந்த தவிர்க்கவியலாத அந்தச் செய்தி இன்று காலை வந்தே விட்டது. ஆம், எம்எஸ்வி மறைந்துவிட்டார். இருபதாம் நூற்றாண்டு தமிழ் வாழ்வுச் சித்தரிப்பின் இன்றியமையாத அங்கங்களான, மக்களால் மாபெரும் கலைஞர்கள் என்று கொண்டாடப்பட்ட எம்ஜிஆர், சிவாஜி, கண்ணதாசன், (விசுவநாதன்) ராமமூர்த்தி என்ற மகத்தான ஆளுமைகளின் வரிசையில் நம்மோடு எஞ்சியிருந்தவரும் இன்று விடைபெற்று விட்டார். எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கும் அவரது பாடல்கள் இன்று முழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றை உள்வாங்க முடியாமல் மரத்துக் கிடக்கிறது மனம்.
உண்மையில் சில தினங்களுக்கு முன் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும்போது  எழுபதுகளில் வந்த தமிழ் திரைப்படப் பாடல்களுக்கான ஒரு வக்காலத்து என்றுதான் எழுதினேன். ஆனால் அதை எழுதும்போதுகூட, அந்த வக்காலத்து என்பது எம்எஸ்விக்கான ஒன்றாகவே அதிகம் அமைவது குறித்து வியந்து கொண்டே இருந்தேன். இன்று வந்தச் செய்தி முழுமையாகவே கட்டுரையை அப்படி எழுதும்படி அமைத்துவிட்டது என்று சொல்லவேண்டும்.


ஏன் எழுபதுகள் என்றால், விஸ்வநாதன்- ராமமூரத்தியின் இசையில் அறுபதுகளில் வெளிவந்த பாடல்களுக்கு எந்தவொரு புதிய பாராட்டும் தேவையில்லை. அவை அவற்றுக்கான உயரங்களுக்குச் சென்று அமர்ந்துவிட்டவை. ஆனால் எழுபதுகளில் எம்எஸ்வி இசையில் வெளிவந்த பாடல்கள் அவற்றுக்குரிய இடத்தை இன்னும் பெறவில்லை என்றுதான் எண்ணுகிறேன்.
இதற்கு முக்கியமான ஒரு காரணம், விஸ்வநாதன்- ராமமூர்த்தி என்ற இரட்டையர் 1964ல் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு பிரிந்ததும் எம்எஸ்வியின் பாடல்கள் அதே உயர்ந்த தரத்தில் அமையவில்லை என்ற ஒரு தரப்பு உண்டு. அதையும் தாண்டி, குறிப்பாக எழுபதுகள் குறித்து ஏன் பேச வேண்டியிருக்கிறது என்றால், அந்தக் காலகட்ட தமிழ்நாட்டில் தமிழ்ப் பாடல்களை விட ஹிந்திப் பாடல்களே அதிகம் விரும்பப்பட்டன, பின் இளையராஜா வந்துதான் ஹிந்தி மொழிப் பாடல்களின் ஆதிக்கத்தை உடைத்தார் என்ற ஒரு வலுவான வாதமும் உண்டு. எந்தவொரு பெருங்கதையும் போல இதிலும் சரிவிகிதம் உண்மையும் அதற்கு மாறானதும் உண்டு. சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒரு பொருளின் தரவரிசையை உருவாக்குவதில் பட்டியலிடுவது என்பது முக்கியமான பங்கு வகிப்பது. இலக்கிய விமர்சகர் கநாசு இந்த முறையைப் பின்பற்றி நவீன தமிழ்ப் படைப்புகளின் தரவரிசையை உருவாக்கினார். இதனால் சிலர் அவர் ஒரு பட்டியல் விமர்சகர் என்று கிண்டலடித்தாலும் அவரது பட்டியல்கள் நிச்சயமாக ஒரு பொதுக் கருத்தை உருவாக்கி இன்று பரவலான ஓர் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டதென்றே கூறவேண்டும். ஆகவே அந்த வழியையே பின்பற்றி 70களின் மிகச் சிறந்த பாடல்கள் என்ற ஒரு பட்டியலை உருவாக்கினால் அது அதற்குப்பின் வந்த எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் மிகச்சிறந்த பாடல்களின் பட்டியலுக்கு நிகரானதாகவே உள்ளதைப் பார்க்கமுடியும்.
ஒரு வசதிக்காக எம்எஸ்வி இசையமைத்த கே.பாலசந்தர் படங்களின் பாடல்களை எடுத்துக் கொள்கிறேன் (கே. பாலச்சந்தர் மட்டும்தான் என்றில்லை, ஸ்ரீதரின் திரைப்படங்களைக் கொண்டு வேறொரு பட்டியலிட்டால், அதிலும் இதே அளவுக்குச் சிறந்த பாடல்களைப் பார்க்க முடியும்).
கே. பாலச்சந்தர் இயக்கிய சில படங்களைப் பட்டியலிட்டுப் பார்ப்போம்-
1 அபூர்வ ராகங்கள்.
2.மன்மத லீலை.
3.அவள் ஒரு தொடர்கதை.
4.அவர்கள்.
5.மூன்று முடிச்சு.
6.நினைத்தாலே இனிக்கும்.
7.நிழல் நிஜமாகிறது
8.பட்டினப்பிரவேசம்
9.சொல்லத்தான் நினைக்கிறேன்.
இது அந்தப் படங்கள் வெளிவந்த வரிசை அல்ல. சட்டென்று மனதில் தோன்றியவை. ஆனால் அற்புதமான பாடல்கள் அமைந்த படங்கள். பாலச்சந்தர் இயக்கிய அறுபதுகளின் படங்களுக்கும் எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் படங்களுக்கும் இணையான பாடல்களைக் கொண்டவை. இவை அனைத்தும் எம்எஸ்வி இசையமைப்பில் வெளிவந்தவை. பாலச்சந்தரின் படங்கள் என்றில்லை, எண்பதுகளில் இசைக்கப்பட்ட அனைத்து படங்களுக்கும் இணையான பாடல்கள் கொண்டவைதான். ஆனால் ஏனோ இது தமிழகத்தின் பொதுபுத்தியின் ஓர்மையில் இல்லை. இன்று புதிதாக அறிமுகமாகும் எந்த ஓர் இசையமைப்பாளரும் இந்த வரிசையில் உள்ள படங்களின் பாடல்களைப் போல் தன் வாழ்நாளில் இசையமைத்து விட்டால், மாபெரும் இசையமைப்பாளர் என்ற பட்டத்தைத் தூக்கிக் கொடுத்து இன்றைய தமிழகம் அவரைக் கொண்டாடிவிடும்.ஆனால் எம்எஸ்வி அவர்களது நீண்ட இசைப் பயணத்தில் சில மைல்கல்களே இவை.
அறுபதுகளிலேயே அறிமுகமாகியிருந்தாலும், யேசுதாஸ், எஸ்பிபி இருவருமே எம்எஸ்வியின் அற்புதமான இசையமைப்பில் தம் முத்திரை பதிக்கத் தொடங்கியதும் அவர்கள் டிஎம்எஸ்சைத் தாண்டிச் சென்றதும் எழுபதுகளில்தான் நிகழ்ந்தது. மேலும், அப்போதுதான் ஜெயச்சந்திரன் என்ற இன்னொரு அற்புதமான பாடகர் அறிமுகமாகி பி.பி. ஸ்ரீநிவாஸ் பின்தங்கிப் போனதை ஈடு செய்தார். பாடகிகளில் சுசீலாவுக்கும் ஜானகிக்கும் எந்த வகையிலும் குறைவில்லாத அற்புதமான பாடகி வாணி ஜெயராம் அவர்களை தமிழுக்கு அறிமுகம் செய்து பல நினைவில் நிற்கும் பாடல்களை அமைத்தார் எம்எஸ்வி. இவ்வளவு இருந்தும் எம்எஸ்வி எழுபதுகளில் இசையமைத்த பாடல்கள் அவ்வளவாகக் கொண்டாடப்படாதது ஏன் என்ற கேள்விக்கு சில விளக்கங்களை முயன்று பார்க்கிறேன்- இவற்றை என் செல்லக் கோட்பாடுகள் என்றுகூடச் சொல்லலாம்.
அன்றைய தமிழ் சினிமாவின் தேங்கிப்போன தொழில்நுட்பம் ஒரு காரணம். எழுபதுகளின் இந்தி பாடல்கள் ஒலிப்பதிவில் மிகச்சிறந்து விளங்கின. ஒப்பு நோக்க ஒலிப்பதிவு தொழில் நுட்பத்தில் தமிழ்த் திரையுலகம் பின்தங்கியே இருந்தது. எடுத்துக்காட்டாக, அலைகள் என்ற படத்தில் ஜெயச்சந்திரனின் (அவரது முதல் பாடல்) பொன்னென்ன பூவென்ன கண்ணே என்ற பாடலைச் சொல்லலாம். அருமையான மெட்டு, நல்ல பாடல் வரிகள், இளமையான, இனிமையான குரல், நல்ல காட்சியமைப்பு என்று எல்லாம் இருந்தும் ஒலிப்பதிவின் தரம் மிகச் சுமாராகவே அமைந்தது.
அடுத்து, பொதுவாக தமிழ் திரைப்படப் பாடல்களின் பிராபல்யம் அதன் இசையமைப்பாளர்களை முன்வைத்தல்லாமல் நட்சத்திர நடிகர்களையே சார்ந்திருந்தது. பாடல்கள் எப்போதுமே எம்ஜிஆர் பாட்டு, சிவாஜி பாட்டு என்றே அடையாளம் காணப்பட்டன. எம்எஸ்வி அல்லது கே.வி. மகாதேவன் பாடல்கள் என்று அறியப்படவில்லை. நேயர்கள் பெரும்பாலோனோருக்கு இசை அமைப்பாளர்கள் யார் என்பது குறித்த ஒரு ப்ரக்ஞையே இருந்ததில்லை. அதன் விளைவு என்னவென்றால், எழுபதுகளில் எம்ஜிஆர், சிவாஜி இருவருக்குமே வயதாகி, அவர்களுக்கான அசல் கதைகள் தீர்ந்துவிட்ட, அல்லது அருகிவிட்ட நிலையில், அப்போதைய இந்திப் படங்களின் மொழியாக்கத்திலேயே அவர்கள் அதிகம் நடித்தனர். அந்த மொழிமாற்றப் படங்கள் பிரபல இந்திப் படங்களாக இருந்தபடியாலும் அதன் நாயகர்களான ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, அமிதாப் போன்ற இளைஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இவர்கள் சோபை குன்றித் தெரிந்தார்கள். அதனாலேயே அந்தப் படங்களின் பாடல்கள்கூட அன்று வசீகரமிழந்தன.
ஓர் உதாரணமாக, நாளை நமதே –யாதோங்கி பாராத் எடுத்துக் கொள்ளலாம். இன்று கேட்கையில் அன்பு மலர்களேநீல நயனங்களில் மற்றும் காதல் என்பது காவியமானால் போன்ற பாடல்கள் அவற்றின் அசல் இந்திப் பாடல்களுக்கு எந்த வகையிலும் குறைவானதாகத் தோன்றவில்லை. ஆனால் தர்மேந்த்ரா, விஜய் அரோரா, இடத்தில் எம்ஜிஆர்? அதுதான் பிரச்னையே. ராஜேஷ் கன்னாவின் சச்சா ஜூட்டா படப் பாடல்களைவிட நினைத்ததை முடிப்பவன் பாடல்களே இனிமையானவை. ஆனால் ராஜெஷ்கன்னாவின் இளமைக்கு முன் எம்ஜிஆரின் தோற்றம் எடுபடவில்லை. அதனாலேயே மூலத்தைப் போல இது மக்களைக் கவரவில்லை.
சிவாஜிக்கும் மொழிமாற்றப் படங்கள் புதிதில்லை. கே.பாலாஜியின் படங்கள் எல்லாமே மொழிமாற்றப் படங்கள்தான் வெற்றி பெற்றன. தேவ் ஆனந்த், சஞ்சீவ் குமார், உத்தம் குமார் போன்றவர்கள் நடித்த இந்தி படங்களின் மொழிமாற்றப் படங்களில் நடித்த  வரை அவை வெற்றிகரமாகவே இருந்தன. ஆனால் ராஜேஷ் கன்னா, அமிதாப் படங்கள் மொழிமாற்றத்தில் அவர் நடித்தவை எல்லாமே தோல்வி அடைந்தன என்றால் மேலே சொன்ன காரணம்தான்.
இந்தப் படங்கள் மட்டுமல்ல, அவற்றின் சிறந்த பாடல்களும் படங்களுடன் சேர்ந்தே மூழ்கின. சிவாஜி, எம்ஜிஆர் படங்கள் இப்படியென்றால் இதர நாயகர்களான ஜெயசங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் ஆகியோர் படங்களும் எந்தவிதமான புதிய கதையம்சம்களும் இல்லாமல் “அரைத்த மாவையே அரைப்பது” என்ற புது விமர்சன பதத்தையே அன்று உருவாக்கின. திரைக்கதைகளின் போதாமையால் படங்களுடன் சேர்ந்து பாடல்களும் வீழ்ச்சியடைந்தன என்றுதான் சொல்ல வேண்டும். குறை இசையமைப்பாளரிடம் இல்லை. கூடவே இன்னொரு விஷயம்- அறுபதுகளின் ஒப்பற்ற பாடகரான டிஎம்எஸ்சின் குரல் வளமும் எழுபதுகளில் மங்கத் தொடங்கியது என்றும் சுசீலாவின் தேன்குரலும்கூடச் சற்றே புளிக்கத் தொடங்கியது என்றும் சொல்ல வேண்டும்.
இவை போக இன்னொரு முக்கியமான விஷயமுள்ளது. எழுபதுகளின் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் எம்எஸ்வி இசையமைப்பில் வந்த பாடல்கள் அறுபதுகளின் பாடல்களைவிடச் செவ்வியல் தன்மை அதிகமாக கொண்டிருந்தன. அறுபதுகளில் புராணப் படங்களில் மட்டுமே செவ்வியல் தன்மை கொண்ட பாடல்கள் அதிகம் இடம்பெற்றன. மற்ற சமூக படங்களில் எம்எஸ்வியும் சரி, கே.வி. மகாதேவனும் சரி, செவ்வியல் இசைத்தன்மை அதிகம் கலக்காத மெல்லிசையே அதிகம் தந்தனர். எம்ஜிஆர் நடித்த சாண்டோ சின்னப்ப தேவர் எடுத்த படவரிசையை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
ஆனால், எழுபதுகளில் நான் மேலே சொன்ன கே பாலச்சந்தர் படங்களின் பாடல்களிலும் சரி, எம்ஜிஆர், சிவாஜி படப்பாடல்களிலும் சரி, எம்எஸ்வியின் இசையமைப்பில் செவ்வியல் தன்மை அதிகரித்து செமி-கிளாசிகல் என்று சொல்லக்கூடிய பாடல்கள்தான் அதிகம் வந்தன. அபூர்வ ராகங்கள்மன்மத லீலை போன்ற படங்களின் பாடல்களும், எம்ஜிஆர் படங்களின், நீ என்னென்ன சொன்னாலும் கவிதைஇதுதான் முதல் ராத்திரிஎன்ன சுகம் என்ன சுகம்கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் போன்ற பல பாடல்களும் செமி கிளாசிகல் என்ற வகையைச் சேர்ந்தவை. சிவாஜி படங்களிலும், அன்பு நடமாடும் கலைக் கூடமே, அம்மானை அழகு மிகு கண்மானைசெந்தமிழ்ப் பாடும் சந்தனக் காற்றுகாதல் ராஜ்ஜியம்,ஆகாயப் பந்தலிலே போன்ற பல பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம்.
இந்தப் பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றாலும் நுட்பமாக விவாதிக்கப்பட்டு ரசிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கு நான் காணும் காரணம், அறுபதுகளில் தொடங்கி எழுபதுகளின் இறுதிவரை தமிழகத்தில் நிலவி வந்த கர்நாடக இசை மீதான ஒருவகை ஒவ்வாமையும் அலட்சியமும்தான். சற்றுத் துணிந்து சொல்வதானால், அறுபதுகளில் உச்சத்தை அடைந்த பார்ப்பன வெறுப்பின் ஒரு பகுதியாகவே கர்நாடக இசையும் ஒதுக்கி வைக்கப்பட்டதோ என்று எனக்குத் தோன்றுகிறது.
அபூர்வ ராகங்கள் படத்தின் பாடல்களை எடுத்துக் கொள்வோம். ஏழு ஸ்வரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, மற்றும் அதிசய ராகம் என்ற இந்த மூன்று பாடல்களுமே மிகப் பிரபலம்தான். ஆனாலும் அந்தப் பாடல்கள் அமைந்திருந்த ராகங்களையோ அந்த ராகங்கள் அமைந்த அழகான வரிசையோ அல்லது குறைந்தபட்சம் ஒரு பாடலில் இத்தனை ராகங்களை அமைத்து சிறப்பான ராகமாலிகையாகக் கோர்த்த அந்த மாமேதையான எம்எஸ்வி எனும் இசையமைப்பாளரின் திறமையோ பேசப்பட்டதேயில்லை. இது சமீபத்தில்தான் பேசப்பட்டது. அன்று அந்தப் படத்துக்கு எழுதப்பட்ட திரை விமர்சனங்களில் இந்த அம்சங்கள் கண்டு கொள்ளப்படவேயில்லை. இளையராஜா வந்தபிறகு அவரது பாடல்களில் செவ்வியல்தன்மை லேசாகத் தெரிந்தால்கூட ராஜா அந்தச் செவ்வியல் ராகத்தை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்று விதந்தோதி எழுதப்பட்டது, ஆனால் எம்எஸ்வியின் பாடல்களில் ராகங்கள் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்த ரசனை சார்ந்த விவாதங்கள் அநேகமாக இல்லவே இல்லை என்றே சொல்லலாம். இங்கு ராஜாவைப் பற்றி சொல்லும்போது அவரை குறைவாக மதிப்பிட்டுச் சொல்லப்படுவதில்லை என்பதும், அவரது மேதைமை பாராட்டப் பெற்ற அளவுக்கு எம்எஸ்வியின் மேதைமை அவரது உச்சத்தில்கூட பாராட்டப்படவில்லை எனும் ஆதங்கமுமே பதிவு செய்யப்படுகிறது என்பதும் நினைவில் கொள்ளப்படவேண்டியவை.
இதற்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு. எழுபதுகளின் இறுதிவரை அதிகம் கண்டுகொள்ளப்படாத கர்நாடக சங்கீதத்தை ரசிப்பது என்பதை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பெருமைக்குரிய விஷயமாக்கியது ஒரு தெலுங்கு படம். ஆம், சங்கராபரணம் எனும் அந்தத் தெலுங்குப் படமதான் தமிழ்நாட்டில் மீண்டும் கர்நாடக சங்கீதம் பற்றிய ஒரு சாதகமான உணர்வை கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியது. அதன்பிறகே தமிழ்ப் படங்களின் பாடல்களிலும் கர்நாடக சங்கீத ராகங்களின் சாயல்களைக் கண்டுபிடித்து பாராட்டி விவாதித்து ரசிக்கும் ஒரு போக்கு உருவானது.
அப்போது, அந்தக் காலத்துக்கு முன்னர் வெளிவந்த எழுபதுகளின் செவ்வியல் தன்மை கொண்ட செமிகிளாசிகல் பாடல்கள் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் மறக்கப்பட்டன. பாட்டும் பரதமும் படப்பாடலான நடராஜன் ஆட வந்தால் சிவகாமி என்ன செய்வாள், என்ற பாடல் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், அப்படியே அதே மெட்டில் பல்லவி அமைந்த ராஜாவின், தூங்காத விழிகள் ரெண்டு, என்ற பாடல் அமிர்தவர்ஷிணி ராகத்தை ராஜா பயன்படுத்திய விதத்துக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டது என்ன ஒரு முரண். ஆக தமிழ் சினிமாவின் பிற துறைகளின் தோல்வி அதன் ஒரே காக்கும் முகமான உயர்ந்த தரத்திலான எம்எஸ்வியின் பாடல்களையும் இருளில் ஆழ்த்தின என்றுதான் சொல்ல வேண்டும்.
வெறும் எண்ணிக்கையை எடுத்துக் கொள்வோம். ராமமூர்த்தியுடன் சேர்ந்து எழுநூறு படங்கள், பின் தனியாக ஐநூறு படங்கள். பெரிய அளவில் கொண்டாடப்படும் இந்தி இசையமைப்பாளர் நௌஷாத் இசையமைத்த படங்கள் அறுபதுதான். ரஹ்மான் அறிமுகமாகி இந்த இருபத்து மூன்று வருடங்களில் இன்னும் இருநூற்றைத் தொடவில்லை என்று நினைக்கிறேன். இன்று புதிதாக அறிமுகமாகும் இசையமைப்பாள இளைஞர்களுக்கு மூன்று அல்லது நான்கு படங்களிலேயே வாழ்நாள் சாதனையைப் பற்றி பேசும் பக்குவம் வந்துவிடுகிறது. ஆனால் எம்எஸ்வியின் எண்ணிக்கை- ராமமூர்த்தியுடன் சேர்ந்து எழுநூறு படங்கள், பின் தனியாக ஐநூறு படங்கள், மொத்தம் ஆயிரத்து இருநூறு படங்கள்.
இவ்வளவுக்குப் பின்னும் அவர் தன் இசையை விளக்கி தம்பட்டம் அடித்துக கொண்டதேயில்லை. அவரது கலையை விதந்தோதி எழுதப்பட்ட கட்டுரைகளும் தமிழகத்தில் குறைவுதான். அவரும் தன் கலையை ஒருபோதும் விளக்கிப் பேசியதில்லை. அண்மையில் மெகா டிவியில் வந்த “என்றும் எம்எஸ்வி” எனும் அந்தப் பேட்டித் தொடர்தான் அவரை அதிகம் உரையாட வைத்த ஒன்று. ஆனால் அதில்கூட அவர் தன்னை மறைத்துக் கொண்டு அதிகம் கண்ணதாசனைப் பற்றியே பேசினார். அவரது பாடல்கள் உருவான விதம், ஒவ்வொரு பாடலுக்கும் ஏன் குறிப்பிட்ட ராகங்கள், பின்னணி இசைக் கோர்ப்பு போன்ற நுட்பமான கேள்விகளையெல்லாம் அவர் நுட்பமாகத் தவிர்த்தே வந்தார்.
இதைப் பார்க்கும்போது எப்பொதும் எனக்கு, ஒரு மேதை தன் மேதைமையை ஒருபோதும் விளக்க முடியாதோ என்றே தோன்றுவதுண்டு. பிற துறைகளில் பார்த்தோமானால் ஒரு பெடெரெர் அல்லது டெண்டுல்கர் அல்லது கபில்தேவ்கூட தங்கள் ஆற்றலின் ஊற்றுகளை அறியாதது போல் பேசுவதைக் காணலாம். ஐன்ஸ்டீனிடம் ஒரு முறை அவர் தன் புதிய கண்டுபிடிப்புகளை எப்படி அடைந்தார் என்று கேட்டபோது, “It was there to see“, என்பதுதான் அவர் அளித்த பதில். ஆம், மேதைகளால் தம் மேதைமையை விளக்க முடிந்ததில்லை. எம்எஸ்வி அத்தகையோரில் ஒருவர்.
எம்எஸ்வியின் இசையமைப்பு குறித்த எதிர்மறையான இரு விமர்சனங்கள் உண்டு. அவர் பாடல் மெட்டுகளில் கவனம் செலுத்திய அளவு அவற்றின் பின்னணி இசைக் கோர்ப்புகளிலும், திரைப்படத்தின் பின்னணி இசையிலும் அவ்வளவாக கவனம் செலுத்தியதில்லை என்பதே அது. ஒரு படத்தின் பின்னணி இசை குறித்த ஒரு பிரக்ஞை அவ்வளவாக இல்லாத காலங்களில் அவர் தொழிற்பட்டார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படியிருந்தும்கூட ஒரு படம் நினைவில் தங்குகிறது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அந்த எக்ஸ்போ-70 காட்சிகளில் அவரது பின்னணி இசை மறக்க முடியாதது. என் இளவயது நண்பன் ஒருவன் அந்தப் படத்தின் எந்தப் பாடலும் அந்த இசைக்கு ஈடாகாது என்று சொல்லி அந்த இசைக் கோர்ப்பை மனப்பாடம் செய்து அதையே பாடிக்கொண்டிருந்தது இப்போதும் என் காதில் ஒலிக்கிறது.
பாடல்களின் பின்னணி இசை எனும்போது அந்த விமர்சனம் நியாயமற்றது என்றே சொல்லவேண்டும். ஒரு பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையேயும் மற்றும் இரு சரணங்களுக்கு இடையேயும் அமைக்கப்படும் இசைக் கோர்ப்பில் எம்எஸ்வி இணையற்று விளங்கினார் என்றே நான் சொல்வேன். பின்னணி இசை முடியும் இடத்தில் சரணத்தின் முதல் சொல்லை பாடகர் கையில் அள்ளித் தரும்படியாய் அமையும் இசைக் கோர்ப்பு அவருடையது. அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இசை ஞானம் மிக்க நல்ல பாடகரான என் உறவினர் ஒருவர் எம்எஸ்வி போலல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் அமைக்கும் பின்னணி இசையின் முடிவில் பாடகர்களைக் கைநீட்டி கிள்ளி விட்டுத்தான் சரணத்தைத் துவக்கச் சொல்ல முடியும் என்று சொல்வார். அதில் உண்மை இல்லாமல் இல்லை.
இசையமைப்பாளரின் மேதைமை எந்தப் பாட்டுக்கு எந்தப் பாடகர் அல்லது பாடகி என்று தேர்வு செய்வதிலும் யாருக்கு எந்த ஸ்தாயியில் பாடல் அமைத்தால் சிறக்கும் என்பதிலும் தெரிய வரும். அதில் ஈடு இணையற்று விளங்கியவர் எம்எஸ்வி. அவரது மிகப் பெரும்பாலான பாடல்களில் டிஎம்எஸ்சின் என்ட்ரி உச்ச ஸ்தாயியிலும், பி.பி. ஸ்ரீனிவாசின் என்ட்ரி கீழ் ஸ்தாயியிலும் அமைந்திருப்பதைக் கேட்கும்போது அவரது மேதைமை விளங்கும்.
பல்வேறு காரணங்களால் எம்எஸ்வியின் தமிழ் திரைப்படப் பாடல்கள் இந்திப் படப்பாடல்களைவிட குறைத்தே மதிப்பிடப்பட்டு சற்று புறக்கணிக்கப்பட்டன, அவருக்கு ஒருமுறைகூட தேசிய விருது அளிக்கப்படவில்லை என்பதெல்லாம் நாம் வருத்தம் கொள்ள வேண்டிய விஷயங்கள். ஆனால் தமிழ்நாட்டிலேயே அவரது மேதைமை அவருக்குப் பின் வந்தவர்கள் அளவுக்குக் கொண்டாடப்படவில்லை என்பதே உண்மை. அவருக்கு உரிய புகழ் மரியாதை அந்தக் காலகட்டத்தில் அவருக்குக் கிடைக்காமல் போனதற்கு இன்று யோசிக்கையில் இன்னொரு காரணமும் தோன்றுகிறது. பொதுவாக ஒரு துறையின் மேதைகள் இன்னொரு துறையில் சிறந்து விளங்குபவர்களால் பாராட்டப்பட வேண்டியது மிக முக்கியம். அந்த வகையில் இளையராஜா மிகவும் அதிர்ஷ்டக்காரர். அவரைக் கொண்டாட இன்றைய தமிழின் சிறந்த இலக்கியவாதிகளான ஜெயமோகன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இருக்கிறார்கள், நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் விஸ்வநாதனைப் பாராட்டி அன்றைய தமிழ் இலக்கியவாதிகளில் இசையார்வம் மிக்க ஜானகிராமனோ அசோகமித்திரனோ ஜெயகாந்தனோ அன்று எழுதிய ஒரு கட்டுரையைக்கூட நான் படித்ததில்லை. பொதுவாகவே தமிழின் தீவிர இலக்கியவாதிகள் தமிழ் திரை இசையை அன்று புறக்கணித்தே இருந்தார்கள்.
எப்படியிருப்பினும் இன்று பல்வேறு வழிகளிலும், குறிப்பாக, தொலைக்காட்சியின் பாடல் போட்டி நிகழ்ச்சிகள் மூலமாகவும் எம்எஸ்வியின் மேதைமை உணரப்பட்டு வருகிறது என்பது ஆறுதலளிக்கும் விஷயம். யூட்யூபில் அநேகமாக அவரது சிறந்த பாடல்கள் எல்லாமே கிடைக்கிறது என்பதும் ஓர் ஆறுதல். எம்எஸ்விக்கான அஞ்சலி கட்டுரைகளில் இது ஒரு சிறு துவக்கம் என்று நினைக்கிறேன். அவரது கலையை பற்றிப் பேசித் தீராத விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. தமிழ் உள்ளளவும் வாழப்போகும் மகாகலைஞனுக்கு சொல்லித் தீராத, துயரம் தோய்ந்த அஞ்சலிகள்.
நன்றி 
- See more at: http://solvanam.com/?p=41097#sthash.E1fXDqBl.dpuf

No comments: