ஒரு கண்ணாடி இரவில்.. வித்யாசாகர்

.
குருவிகள் கூடடங்கும் பொழுதில்
இருட்டோடு அப்பிக்கொள்ளும் அமைதியின் போராட்டம்,
அதை இதை என எதையெதையோ
வாரி மனதிற்குள் போட்டுக்கொண்டு தவிக்கும் வதை,
உள்ளே தூக்கிலிடும் வார்த்தைகளாய்
வாழ்வின் கணங்கள் மௌனங்களுள் சிக்கி
ஏதோ ஒன்றாக உருவெடுத்துக் கொண்டு
நீ நானெனப் பிசையும் பீதியின் கசப்பில்
நிகழ்காலம் தொலைந்தேப் போகிறது..

நீ சிரிக்கையில் நான் சிரிப்பது
சரியா என்றுகூட தெரியவில்லை,
உள்ளே ஒன்றாக வெளியில் வேறாக வாழ்வதும்
ஒரு ஒழுக்கத்தின் கற்பிதமாக கற்றதன்
பெருந்தவற்றிலிருந்து தான்
விழுந்து உடைந்து நொறுங்கி வலிக்கிறது வாழ்க்கை,
இயல்பை வளைத்து வளைந்ததை நேரென்றுக்
கற்க அடிவாங்கி அடிவாங்கி வளர்ந்ததும்
காலத்தின் எழுதாவிதிக்கு இணங்கியெனில்
என் பழிக்கூண்டில் நிற்க
யாரை நான் தேடுவது..?

இது இப்படித்தான்
இது தான்
எது நடக்கிறதோ அது மட்டும் தான் வாழ்க்கை,
எதுவாக நகர்கிறதோ
அதுவாக நகர்வதே சரியெனில்’
உடுத்தியச் சட்டையும்
நெஞ்சுக்குள் நிமிர்ந்த நாகரிகமும்
கூனி குறுகி கேள்விகளோடு அழும் அறிவும்
அர்த்தமற்று வலிப்பதைக்கூட பாரமாக்கிக்கொள்ளும்
நிரந்தரமற்றப் இப் பிறப்பை
வெறும் வெற்றிகளால் மட்டும் நிரப்பிவிட முடிவதில்லை..

ஒரு கண்ணாடி இரவுபோல பொழுதுகள் உடைகிறது
இன்றைக்கும் நாளைக்கும் வேறுவேறாகயிருக்கும்
வாழ்க்கையை ஒரு இரவு பொழுதே
கண்ணீர்பொதித்து
சில்வண்டுகளின் சப்தங்களோடு
கைநீட்டிப் பிரிக்கிறது,
பிரிந்து, கண்ணாடிச் சில்லுகளாய் இரவது
உடைந்துத் தெறிக்கையில்
தலையில் வந்துவிழும் சாபத்தின் கணப்பொழுதில்
அம்மாயில்லை
அப்பாயில்லை
அண்ணன் தம்பியில்லை
அக்கா தங்கை மகன் மகளில்லை
நண்பன் போய்விட்டான்
இனி பேச அவனில்லை பார்க்க அவனில்லை
தொட அவன் இல்லவே இல்லை என்பதெல்லாம்
மௌனத்தை சுக்குநூறாக்கும்
பெருஞ் சப்தத்தின் எத்தனைப் பெரிய ரணம் ? வலி ? கதறலில்லையா ?

பின் –
எத்தகைய தீராக் கண்ணீரின் சிலுவையைச் சுமந்து
சிரிக்க துணிகிறது இவ் வாழ்க்கை ?

இருந்தும் மரணத்தை அசைபோட்டு அசைபோட்டு
கண்முன் நின்ற மனிதர்களை யெல்லாம்
நெடியதொரு மயானத்தின் பள்ளத்துள் புதைத்துவிட்டு
அதையும் கடந்துபோய்
ஏதோ ஒரு நினைவின்
ஒரு சொட்டுக் கண்ணீரில் நனைந்து சிலிர்த்து
திரும்பிப் பார்க்கையில் தனியே நின்று
எரிதழல் இரவின் கண்ணாடியில்
கண்கள் சிவக்கத் தெரியுமெனது முகத்திற்கு முன்பாய்
என்னைக் கெஞ்சி கெஞ்சி
கொலைசெய்கிறது மனசு..

கொல் கொல்
கொன்றுவிடு
கொன்றுவிடு எனத்
துடிக்கும் மனதை விட்டு விலகி
எங்கோ ஒரு இழுக்கும் கயிற்றின் வலுவில்
அறுபடும் முனைகளாய் நீங்கி
இரகசியம் விடுபடாத மௌனத்துள் மீண்டும்
இரவொன்றைப் பிடித்துக்கொண்டு
எரிந்தப் பிணங்களின் நாற்றத்தையெல்லாம்
உறவுகளின் நிலைத்த வாசனையோடு பூசிக்கொண்டு
மீண்டுமொரு விடிகாலைப் பொழுதின்
காகத்துக் கரைசலோடு விடிந்துக்கொள்கிறது காலம்..

காலத்தில்
என் உயிரெனும் தீபம் சாய்ந்து சாய்ந்து
அணைந்து அணைந்து
மீண்டும் மீண்டும்
ஒரு நீளவெளிச்சத்திற்கு ஏங்கி
எரியத் துவங்கி விடுகிறது’
எரிந்து எரிந்து
இன்னும் வெளிச்சம் தேடி
சன்னமாகயிருந்த ஒளி பெருத்து
மிக சுடர்விட்டு எரிகிறது என் உயிர்த் தழல்..,

அணையாச் சுடர்போல்
நம்பிக்கை நெருப்பேந்தி
தீநாக்கு ஒளிர எரிகிறது என் உயிர் விளக்கு..

அதீத
வெளிச்சத்தில் ஒலியிழந்தக் குரலாயுள்ளே
உயிர் சலனமற்றிருக்க
அசரீரி ஓன்று வருகிறது
அந்த அசரீரி சொல்கிறது –
‘இங்கே எதுவும் மாயை யில்லை
‘இங்கே எதுவும் புதிது இல்லை
‘எதுவும் நீ யுள்ளே நினையாதது இல்லை
‘எல்லாம் உனது ‘இது எல்லாம் உனது..

‘எது ஆக இருக்கிறதோ; அது’ அது ஆகவே இருக்கிறது
‘எதுவாகவோ இருக்கவந்ததே
அதுவாகிப் போகிறது..

‘பிறருடுடைய எண்ணத்துள் பிறக்கிறாய்
உனது எண்ணத்தால் மட்டுமே இறக்கிறாய்;
‘உனைக் கொல்லும் நெருப்பு ‘நீதான்.. ‘நீதான்.. ‘நீதான்..’
-----------------------------------------------------------------------------------
வித்யாசாகர்

No comments: