படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

.
புகலிடத்தையும்  தாயகத்தையும்  முடிச்சுப்போடும் கதைகளிலிருந்து    வெளியாகும்  செய்திகள்
கே.எஸ். சுதாகரின்    இரண்டாவது    கதைத்தொகுதி சென்றிடுவீர்    எட்டுத்திக்கும்

                                         
அண்மையில்  எனக்கு  வந்த  மின்னஞ்சலில்  தனித்தமிழியக்கம் நடத்தும்   தனித்தமிழ்ச்  சிறுகதைப்போட்டி -  பரிசு  3000.00  உருவா.  என்ற  தலைப்பில்  ஒரு  அறிவித்தல். 
எனக்கு  அதனைப்படித்ததும்  குழப்பமாக  இருந்தது.   அது  என்ன தனித்தமிழ்....? அது  என்ன  உருவா...?
ஏனைய  மொழிகளில்  இத்தகைய  திருக்கூத்துக்கள்  இல்லை  என நம்புகின்றேன்.   நான்  இலக்கியப்பிரதிகளை   எழுதவும்,  பேசவும் தொடங்கிய   காலத்தில்  மூத்த  தமிழ்  அறிஞர்  மு.வரதராசனின் நூல்களைப்படித்தேன்.   அவருடைய  சிறுகதைகள்,   நாவல்கள் படித்துவிட்டு    அந்த  வாசிப்பு  அனுபவம்  எனக்கு  எந்தப்பயனும் தராது    எனத்தீர்மானித்து  வெளியே  வந்துவிட்டேன்.
அதன்பிறகு  அவரது  எழுத்துக்களில்  எனக்கு  ஆர்வமே  இல்லாது போய்விட்டது.    மக்கள்  மொழியை   இந்த  தனித்தமிழ்  தீவிரவாதிகள் ஏனோ  மறந்துவிடுகிறார்கள்.   காலத்தையும்  வென்று  வாழ்வது இலக்கியம்.   இன்று  தமிழில்  படைப்புமொழி   எத்தனையோ கோலங்கள்    கொண்டுவிட்டன.   மண்வாசனை ,  பிரதேச  மொழிவழக்கு தலித்  இலக்கியம்,  வட்டார வழக்கு,   புகலிடத்தின்  புதிய மொழிப்பிரயோகம்  என்பனவற்றையெல்லாம்  பதிவுசெய்து,   தமிழ் தரணியெங்கும்   பரவிக்கொண்டிருக்கும்  வேளையில்,  தனித்தமிழ் இயக்கம்   அதனைப் பின்பற்றுபவர்களையே தனிமைப்படுத்திவிடலாம்.
போட்டிக்கென   கதைகள்  கேட்டு  உருவா பரிசலிக்கப்போகின்றவர்களுக்கு    சுதாகரும்  கதை   அனுப்பிவிடுவாரோ  என்றும்  அஞ்சினேன்.   ஏனென்றால்  அவரது இரண்டாவது    தொகுதிக்கதைகள்  அத்தனையும்  பரிசுபெற்ற சிறுகதைகள்.
இந்த  பின்னணியுடன்  அவுஸ்திரேலியாவில்  மெல்பனில்  வதியும் சுதாகரின்   இரண்டாவது  சிறுகதைத்தொகுதி  சென்றிடுவீர் எட்டுத்திக்கும்    பற்றிய  எனது  வாசிப்பு  அனுபவத்தை  இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.





சென்றிடுவீர்  எட்டுத்திக்கும்  கலைச்செல்வம்  கொணர்ந்து  இங்கு சேர்ப்பீர்   என்ற  வாக்கு  தீர்க்கதரிசனமானது.
 சென்ற   எட்டுத்திக்கிலும்  புலம்பெயர்  இலக்கியம்,  புகலிட  இலக்கியம்   என்பவற்றை  பேசுபொருளாக்கிய  ஈழத்தவர்கள் கொணர்ந்து   சேர்த்த  கலைச்செல்வம்  என்ன...?   இன்னமும் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும்   பாரம்பரிய  இயல்புகள்  என்ன...? தேடியது  என்ன ?  இழந்தவை   என்ன?   என்பதையெல்லாம் சிறுகதைகளில்    நாவல்களில்  பதிவுசெய்துகொண்டிருப்பவர்களின் வரிசையில்    இணைந்திருப்பவர்   சுதாகர்.
1983   இல்  இலக்கியப்பிரதிகளை   எழுதத்தொடங்கிய சுதாகர்,    2007 இல்தான்   தனது  முதலாவது  கதைத்தொகுதி  எங்கே  போகின்றோம்   நூலை,  அதுவும்  அவுஸ்திரேலியா  வந்த பின்னர்தான்  வெளியிட்டார்.
இலங்கையில்   பிறந்து , சிறிதுகாலம்  நியூசிலாந்தில்  வாழ்ந்துவிட்டு இந்தக்கண்டத்துள்  பிரவேசித்த  அவருக்கு  கைவந்த  கலையாகியது சிறுகதைத்துறை.
எங்கே போகின்றோம்   எனத்தொடங்கி  வந்தவர்   தற்பொழுது சென்றிடுவீர்  எட்டுத்திக்கும்  எனச்செல்கிறார்.   இந்த  இரண்டு தலைப்புக்குள்ளும்  மறைபொருளாக  இருப்பது  எம்மவரின் புலம்பெயர்   வாழ்க்கை.   ஈழத்தில்    இடம்பெயர்  வாழ்க்கை.
உள்ளடக்கத்திலிருப்பது,   புலம்பெயர்வாழ்வும்  தாயக  வாழ்வும்  கொண்டிருக்கும்  கோலங்கள்.
இந்தத்தொகுதியில்   முக்கிய  விசேடம்  என  நான்  கருதுவது,   இதில் இடம்பெற்றுள்ள   அனைத்துக்கதைகளுமே    ஏற்கனவே   நடந்த  பல சிறுகதைப்போட்டிகளுக்கு   அனுப்பி   பரிசுபெற்ற  கதைகள்.   எனவே தேர்வுகளுக்காக   அனுப்பி  பலரும்,  படித்து   பரிசுகளுக்கு தெரிவுசெய்த  கதைகள்.
பரிசுபெற்ற   கதைகளுக்கு  தனிமவுசு  இருக்கும்  என நம்புகின்றவர்களுக்கும்,   தமது  வாழ்நாளிலே   போட்டிகளுக்கு கதைகளை    அனுப்பாமல்,  வாசகரிடத்தில்  இடம்பிடித்துள்ளவர்களின் படைப்புகளை  வாசித்தவர்களுக்கும்  இடையே   அனுபவம் வேறுபட்டிருக்கும்.
சுதாகர்,    தமது  கதா  மாந்தர்களாக  தெரிவுசெய்திருக்கும் மனிதர்களை  நாம்  தாயகத்திலும்   புகலிட  வாழ்விலும்  அடிக்கடி சந்தித்திருக்கின்றோம்.
அதனால்   அவருடைய  சிறுகதைகள்  எமக்கு அந்நியமானதல்ல.
புகலிடத்தில்  எமது  வாழ்வு  தாவரங்களுக்கு  ஒப்பானது. தாவரங்களுக்கு  மண்ணும்  பருவகாலங்களும் முக்கியம் பெற்றிருப்பதுபோன்றே   எம்மவருக்கும்  அவை  முக்கியமானது. அத்துடன்   ஒட்டுமாங்கன்றின்  நிலைக்கும்  நாம்  வருவோம்.
புகலிடத்தில்  வாழ்வாதாரத்திற்கு  தொழில்,  வீடு,  கல்வி,  தேட்டம் தேடும்பொழுது  சில  காலத்திற்கு  யாரோ   யாரையோ   நம்பியிருக்க நேரிடும்.   எதிர்பார்த்தவை   கிடைத்ததும்  எவரிலும்  தங்கியிருக்கும் அவசியமும்   அற்றுப்போகும்.
சுதாகரின்     கதைகளில்  இழையோடியிருப்பது  இந்த  அம்சங்கள்தான்.
சொல்லப்படும்    விடயங்கள்  நியூசிலாந்து,   அவுஸ்திரேலியா  ஆகிய நாடுகளுக்கு   மாத்திரமுரியதன்று.   புகலிட  நாடுகளுக்கெல்லாம் பொதுமையானது.    சென்றிடும்  எட்டுத்திக்கிலும்  நடப்பதையே   அவர் தமது  கதைகளில்  பொதுமைப்படுத்தியிருக்கிறார்.   இடைக்கிடை தாயக  நினைவுகளும்  வந்து  வாட்டுகிறது.
புகலிடத்தில்   நாம்  தேடியதும்  அதிகம்.   இழந்ததும்  அதிகம். இரண்டு    ஆண்டுகளுக்கு  முன்னர்  எமது  அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கிய    கலைச்சங்கம்  நடத்திய  சிறுகதை  இலக்கியம் அனுபவப்பகிர்வு    நிகழ்ச்சியில்  சுதாகரின்   காட்சிப்பிழை   என்ற சிறுகதை    பற்றிய   எனது  வாசிப்பு  அனுபவத்தையே வெளியிட்டிருந்தேன்.
காட்சிப்பிழை    பொருத்தமான    தலைப்பு.    மனிதர்களின்    உள்ளத்தை உளவியல்   சார்ந்து  எழுதுகிறார்.   இதுபோன்ற  சம்பவங்கள்  எங்கும் எந்த    நாட்டிலும்  எந்த  இனத்திலும்  நடக்கலாம்.      இக்கதை இலங்கை  வாழ்வுக்கும்  புகலிட  வாழ்வுக்கும்  முடிச்சுப்போடுகிறது. வந்தவர்கள்   தமது  உடை -  உடைமைகளுடன்     மட்டும்   வரவில்லை ஈகோ   சார்ந்த  இயல்புகளுடனும்  வருகிறார்கள்  என்ற  தொனி இக்கதையில்   கேட்கிறது.
என்றுதான்  அந்த  உரையை   முடித்திருந்தேன்.


ஈழத்தமிழர்களின்  புலப்பெயர்வுக்கு  முக்கிய  காரணம்  அங்கே நீடித்திருந்த    போர்  நெருக்கடி.   புகலிட  வாழ்வுடன் போர்க்காலத்தையும்    இணைத்து  முடிச்சுப்போடும்  கதையாக  ஒரு கடிதத்தின் விலை  வந்துள்ளது.
வெளிநாட்டில்   வசிக்கும்  ஒரு  எழுத்தாளரின்  சிறுதையை   படித்த தரம்  13  இல்  படிக்கும்  ஒரு  மாணவி   வவுனியாவிலிருந்து  2008  இல்    எழுதும்  கடிதம்,   தன்னை   பேனா  நண்பியாக்கவேண்டும்  என்ற வேண்டுகோளுடன்  வருகிறது.   அதனை  வாசித்த  நேரத்திலிருந்து அந்த    எழுத்தாளருக்கு  மனம்  கிளுகிளுப்பாக  இருக்கிறது. எப்படிப்பட்ட    கிளுகிளுப்பு  என்றும்  சொல்கிறார்.   அந்த  கிளுகிளுப்பை   நான்  உணர்ந்ததில்லை.   ஒரு  பெண்வாசகியின் கடிதம்   அத்தகைய  கிளுகிளுப்பை  ஏற்படுத்துமா  என்பதும் தெரியவில்லை.
அவளுக்கு   பதில்  எழுதத்தயாராகின்றார்,   அவளது  கடித  வரிகள் கிளுகிளுப்பூட்டினாலும்   பதில்  எழுதும்பொழுது  அன்புள்ள சகோதரிக்கு  என்றுதான்   ஆரம்பிக்கின்றார்.
ஆனால் -  அவரது  மனைவியோ   அதனை  கிழித்து  எறிகிறாள். அத்துடன்   இதுவரை   காலமும்  தனக்கு  ஒரு  வேலைவாய்ப்பு பெறுவதற்கான  விண்ணப்பம்  கூட  எழுதித்தரவில்லை   என்று சரமாரியாக    பேசித்தள்ளி  தனது  கோபத்தையும்  காண்பிக்கின்றாள்.
எனினும்  மனைவியின்  அந்தக்கோபம்  இரவில்   படுக்கையில் தணிந்துவிடுகிறது.    படுக்கைதான்  எத்தனையை   தணித்துவிடுகிறது. ஆனால்    13  ஆம்  தரம்  படிக்கும்  அந்தக்  கடிதம்  எழுதிய மாணவியை  பற்றி   அறிந்துகொள்வதற்கு   அவர்  விரும்புகின்றார்.
போர்   முடிவுற்றதும்  தமது  மனைவியுடன் அவளைத்தேடிச்செல்கிறார்.   ஆனால்  அவள் தற்கொலைப்போராளியாக   சிதறிப்போனாள்    என்ற  செய்தியை   அவள்    வீட்டுக்குச்சென்றே  அறிந்துகொள்கிறார்
இக்கதை  2011  இல்  நடந்த  சிறுகதைப்போட்டியிலும் பரிசுபெற்றுள்ளது.
இதுபோன்ற    கதைகளை    வேறு  கோணங்களில்  ஏற்கனவே படித்திருக்கின்றோம்.
அவுஸ்திரேலியாவில்  Emu  என்ற  பறக்காத  பறவையினம்  பற்றிய தகவலை    தமது  மகளுக்காக  இணையத்தில்  தேடும்  தந்தை,   தனது தொழிலகத்தில்    இயந்திரமாக  உழைப்பவன்.   அவனுக்கு  வேலையே வாழ்க்கையாகிவிடுகிறது.    தனது  மகளின்  கல்வித்தேவைக்காக நேரம்    ஒதுக்கி  மகளுடன்  அமர்ந்து  ஆராய்ந்து  கண்டுபிடித்து அந்தப்பறவை    இனத்துடன்  தன்னையும் ஒப்பிட்டுச் சொல்லும்பொழுது,   மகளோ   அப்பாவுக்கு  விசர்  என்று  சொல்லியபடி    துள்ளி  ஓடுகிறாள்.
புகலிட   வாழ்வு  மூத்த  தலைமுறையினருக்கு  பதட்டம்.   இளம் தலைமுறைக்கு   பரவசம்  என்பதை   உணர்த்துகிறது  பறக்காத பறவை.
எதிர்கொள்ளல்  கதைக்குரிய  படத்தில்  நாம்   மறந்துவிட்ட  உரல், உலக்கையையும்    பார்க்கலாம்.    வெளிநாட்டில்  பிறந்த தமிழ்க்குழந்தைக்கு   அவற்றை   அறிமுகப்படுத்த  இங்குள்ள மிக்ஷியையும்   கிரைண்டரையும்   எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.
எதிர்கொள்ளல் -   பாசம்மிக்க  அக்கா  பற்றிய  கதை.   ஊரில் பெரும்பாலான    அக்காமார்,  அம்மாமாருக்குச்சமன்.  வாசகருக்கு பெயர்  தெரியாத  அக்காவின்   குணமும்  நோயும்தான்  தெரிகிறது. அவள்   புற்றுநோய்  வந்து  இறந்தபின்னர்தான்  அதுவும் போர்க்காலத்தில்   தகவல்  அறியமுடியாத  நிலையில் ஊருக்குச்சென்ற   பின்னர்தான்  தெரியவருகிறது.
அக்கா  அந்த  வீட்டில்  படமாக  காட்சியளிக்கிறாள்.   அக்காவின் மரணம்   ஒரு  செய்தியை   அழுத்தமாகச்சொல்கிறது.
புலம்பெயர்ந்து    சென்றவர்கள்  தமது  ஊரில்  ஒரு புற்றுநோய்ச்சிகிச்சைக்கான    மருத்துவமனையை   அமைக்கவேண்டும் என்பது    அச்செய்தி.    செய்திக்கான  கதையா,    கதைக்கான  செய்தியா என்பதை  வாசகர்கள்  தீர்மானிக்கலாம்.
புதியவருகை  என்ற    கதை   இத்தொகுப்பில்  ஒரு  மகுடக்கதை. இதில்    சர்வதேசப்பார்வையும்  தெரிகிறது.   நியூசிலாந்தின் பின்புலத்தில்  எழுதப்பட்டிருக்கிறது.   வீடு  அமைவது  மட்டுமல்ல அயலவர்கள்    அமைவதும்  கொடுப்பினைதான்.   அந்த  இளம் தம்பதியருக்கு    எழுபத்தியெட்டு  வயதையும்  கடந்துவிட்ட  அந்த முன்வீட்டு    மூதாட்டி   நல்ல  துணை.   அவளும் இவர்களுக்குத்துணை.    நியூசிலாந்தில்  ஆசிய நாடுகளின் குடியேற்றவாசிகளிடத்தில்   எதிர்க்கட்சித்தலைவருக்கு   ஏனோ வெறுப்பு.    வெளிநாட்டினர்  தமது  நாட்டை   கபளீகரம் செய்துவிடுவார்களோ   என்ற  அச்சத்தின்  தொனியில்  அவரது அறிக்கைகள்.   ஆனால்,  அங்குள்ள  பூர்வகுடி  மக்களான  மௌரி இனத்தவர்களுக்கு    அந்தத்தேசம்தான்  சொந்தம். அவர்களைப் பொறுத்தவரையில்    வெள்ளை   இனத்தவர்களும்  அங்கு குடியேற்றவாசிகள்தான்.
ஈழத்தம்பதிக்கு    குழந்தை  பிறக்கிறது.   அந்த  நற்செய்தியை  நனா என   அவர்களினால்  செல்லமாக  அழைக்கப்படும்  அந்த மூதாட்டிக்குச் சொல்லச்சென்றால்,    அவள்  வீடு  பூட்டியிருக்கிறது. தனிமையில்    வாழும்  அந்த  நனா,  வீட்டினுள்ளே  இறந்த  நிலையில் இருக்கையில்   இருக்கிறாள்.   இயற்கை   மரணம்தான்.   அருகில் நியுசிலாண்ட்  ஹெரால்ட்  பத்திரிகை.    புதியவர்களின்    வரவினால் நாட்டில்    ஏற்படும்  அவலத்தைக்காட்டியபடி  செய்தி.   அதன்மீது பின்னி  முடிக்கப்பட்ட  குழந்தையின்  குளிர்  தாங்கும்  உடை. அதனுடன்   குழந்தைப்படத்துடன் For new borne baby   என எழுதப்பட்ட  வாழ்த்து  மடல். 
புதிய வருகை  பொருத்தமான   தலைப்பு.
இதுபோன்ற  நம்பிக்கையூட்டும்  கதைகளை  தரவல்லவர்  சுதாகர். இத்தொகுப்பிற்கு  மூத்த  இலக்கிய  விமர்சகர்  வெங்கட்  சாமிநாதன் சிறந்த   முகவுரை  எழுதியுள்ளார்.   அக்கினிக்குஞ்சு  வெளியீடாக வந்துள்ள    இந்நூலுக்கு  யாழ். பாஸ்கர்  பதிப்புரை  எழுதியுள்ளார்.
சுதாகருக்கு  எமது  வாழ்த்துக்கள்.
letchumananm@gmail.com


No comments: