" தமிழ்த்திரையுலக வில்லன் நடிகர்கள் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் நல்லவர்கள் " சிட்னியில் நடந்த சுந்தரதாஸ் எழுதிய மறக்க முடியாத வில்லன்கள் நூல் வெளியீட்டில் கருத்துரைகள்"



  

இலங்கையில்  நீண்டகாலம்  தமிழ்ப் பத்திரிகைத்துறையில் ஊடகவியலாளராக  இயங்கிய  சுந்தரதாஸ்  அவர்கள்,   மின்னஞ்சல் இல்லாத  அக்காலப்பகுதியில்  நம்நாட்டின்  தமிழ்  சினிமா ரசிகர்களின்   தேவைகளை   தமது  பணியின்  ஊடாக நிறைவேற்றிவந்தவர்.     கொழும்பிலிருந்து  வெளியான  தினகரன், வீரகேசரி,    சிந்தாமணி    முதலான  இதழ்களின்  ஞாயிறு  பதிப்பிற்கு சினிமா    நிருபராகவிருந்த  சுந்தரதாஸ்,    தமிழ்  சினிமாவில்  அன்று பிரபலமாகவிருந்த    வில்லன்  நடிகர்கள்  பலருடன்  தொழில்  ரீதியான    நட்புறவையும்  வளர்த்துக்கொண்டிருந்தமையினால்,   இன்று   அவர்  எழுதிய  மறக்க  முடியாத  வில்லன்கள்  நூலை   நாம் படிக்கமுடிகிறது "  என்று   மூத்த  எழுத்தாளரும்,   சிட்னியிலிருந்து வெளியாகும்  தமிழ் ஓசை   இதழின்  ஆசிரியருமான  திரு. மாத்தளை சோமு  குறிப்பிட்டார்.
சுந்தரதாஸ்  முன்னர்  சில  இதழ்களில்  எழுதிய  தொடர் மறக்கமுடியாத    வில்லன்கள்.   அதனை   தமிழ்நாட்டின்  கலைஞன் பதிப்பகம்   வெளியிட்டுள்ளது.

 

இதன்    வெளியீட்டு  அரங்கு  கடந்த  31  ஆம்    திகதி ஞாயிற்றுக்கிழமை    மாலை   அவுஸ்திரேலியா,  சிட்னி  Pendle hill, Yaarl Function Centre   இல்  திரு. மாத்தளை சோமுவின் தலைமையில் நடைபெற்றது.
மங்கள   விளக்கேற்றலுடன்  தொடங்கி,   தமிழ்  வாழ்த்துடனும் அவுஸ்திரேலியா   தேசிய  கீதத்துடனும்  ஆரம்பமான  இந்நிகழ்வில் போர்  அநர்த்தங்களினால்  இறந்த  இன்னுயிர்களின்  ஆத்ம சாந்திக்காக    மௌன    அஞ்சலியும்  இடம்பெற்றது.
சுந்தரதாஸின்  புதல்வி  செல்வி   பவிதா  சுந்தரதாஸ்  வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமை   தாங்கிய  திரு. மாத்தளை சோமு   மேலும் உரையாற்றுகையில்,
" தமிழ்த்திரையுலகில்   புகழ் பெற்று விளங்கிய  வில்லன்  நடிகர்களான நம்பியார்,    நடிகவேள்  எம். ஆர். ராதா,   அசோகன்,   ஆர். எஸ். மனோகர், ஓ..கே. தேவர்,  வி.கே. ராமசாமி,  பி.எஸ். வீரப்பா,    மேஜர்  சுந்தரராஜன், எஸ்.. நடராஜன் ,    ஸ்ரீகாந்த், பாலாஜி, உட்பட  மேலும்  சில  வில்லன்  நடிகர்கள்  பற்றிய  பல  சுவாரஸ்யமான   தகவல்கள்  அடங்கிய  நூல்  மறக்க  முடியாத   வில்லன்கள்.
இலங்கை  தினக்குரல்,  அவுஸ்திரேலியா  தமிழோசை,  கனடா  தமிழர் செந்தாமரை,   தமிழ்நாடு  கலைமகள்  முதலான  இதழ்களில் ஒரேசமயத்தில்  வெளியான  தொடர்  மறக்க  முடியாத  வில்லன்கள்.  இந்நூலுக்கு - இந்தியாவில்   புகழ்பெற்ற  .வி.எம்.  தயாரிப்பு   நிறுவனத்தின்  அதிபர்  திரு. .வி.எம்.  சரவணன்,  ஃபிலிம்  நியூஸ்  ஆனந்தன்  ஆகியோர்  வாழ்த்துரை  வழங்கியுள்ளனர். எனக்குறிப்பிட்டார்.
சிட்னியில்  உயர்தர வகுப்பில்  பயிலும்  மாணவி  செல்வி  சர்வினி சதீஸ்ராஜா  உரையாற்றுகையில்,  "  திரையில் வில்லன்களாகத் தோன்றும்  பெரும்பாலான  வில்லன்  நடிகர்கள்  தமது  தனிப்பட்ட வாழ்க்கையில்   மிகவும்  நல்லவர்களாகவும்  பரோபகார குணமுள்ளவர்களாகவும்  விளங்கியிருக்கிறார்கள்  என்பதை சுந்தரதாஸ்  பல  சான்றாதாரங்களுடன்  இந்நூலில்  விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது "   என்றார்.
அகில  இலங்கை   கம்பன்  கழகத்தின்  ஸ்தாபகர்களில்  ஒருவரும் சிட்னியில்   உயர்தர  மாணவர்களுக்கு  தமிழ்  மொழியை பயிற்றுவிப்பவருமான  திரு. திருநந்தகுமார்  உரையாற்றுகையில், "சினிமா  என்பது  வலிமையான  ஒரு  ஊடகம்.   சுந்தரதாஸ் குறிப்பிடும்   இந்த   மறக்கமுடியாத  வில்லன்கள்  ஒரு  காலகட்டத்தில்   மூத்த தலைமுறை   தமிழ்  சினிமா   ரசிகர்களிடமும் மறக்க  முடியாத  பாத்திரங்களாக  விளங்கியவர்கள்.   சிறு வயதில் இவர்கள்  நடித்த  காட்சிகளைப்பார்த்த  சமயத்தில்  அவர்கள்  மீது  நாம்    வெறுப்புக்கொள்ளுமளவுக்கு  தமது  நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர்கள்.    ஆனால்,  அவர்களின்  நிஜவாழ்வு  வேறு விதமாக  இருந்துள்ளது    என்பதை    சுந்தரதாஸ்   நிரூபிக்கின்றார்.   சிட்னியில்  அவர்  ஒரு  வங்கியில்  பணியாற்றுகின்றார். வாடிக்கையாளர்களின்  தேவைகளை    அவர்  எவ்வாறு இன்முகத்துடன்    கவனிக்கின்றார்  என்பதை    அவருடன்  பணியாற்றும்    வேளைகளில்  அருகிருந்து  பார்த்துள்ளேன்.    அந்த இயல்புதான்   தமிழ்த் திரையுலகத்தின்  வில்லன்களின்  நற்குண இயல்புகளையும்    அவரால்  இனம்  கண்டுகொள்ள  முடிந்திருக்கிறது " எனக்குறிப்பிட்டார்.
இலங்கையிலும்    அவுஸ்திரேலியாவிலும்  கடந்த  40  ஆண்டுகளுக்கும்   மேலாக  சுந்தரதாஸ_டன்    நட்புறவு  பேணிவரும் எழுத்தாளரும்  ஊடகவியலாளருமான  திரு. லெ. முருகபூபதி மெல்பனிலிருந்து    வருகை   தந்து  இந்நிகழ்வில்  உரையாற்றினார்.
அவர்   தமது  உரையில்  குறிப்பிட்டதாவது: "  திரு. சுந்தரதாஸ்  சினிமா சம்பந்தப்பட்ட    செய்தியாளராக  மாத்திரம்  செயல்படவில்லை.   ஒரே சமயத்தில்  இலக்கியம்,    அரசியல்,   சமூகம்  சார்ந்த  செய்திகளையும் தான்    பணியாற்றிய  தினகரனில்  எழுதியவர்.   ஒரு  நிருபராக  அவர் ஓடி   ஓடி   அலைந்து  செய்திகளை    திரட்டியவர்.    இன்று போல்   அன்று  மின்னஞ்சல்  வசதி   இருக்கவில்லை.   கடின  உழைப்பு தேவைப்பட்டது.    அன்றைய  கால  கட்டத்தில்  இலங்கையின்  தமிழ் சினிமா   வாசகர்கள்  ஞாயிறு தோறும்    விரும்பிப்படிக்கும்  பக்கம் சினிமா    பக்கம்.   தமிழ்  நாட்டுக்கு  அடிக்கடி  சென்று கோடம்பாக்கத்தில்    முகாமிட்டு  படங்களையும்  செய்திகளையும் திரட்டிவந்து   கொழும்பு  பத்திரிகைகளுக்கு  வழங்கித்தான்  அவர் தமது  சீவனோபாயத்தை   மேற்கொண்டார்.   எவருடனும் இன்முகத்துடன்   உறவாடும்  அவரது  இயல்பு  அவரை இந்தத்துறையில்    தொடர்ந்தும்  தக்கவைத்திருக்கிறது."
திரு. திருநந்தகுமார்  சார்பில்  மூத்த  கவிஞர்  அம்பி  அவர்கள் சுந்தரதாஸ_க்கு    பொன்னாடை  போர்த்தி  கௌரவித்தார்.
சுந்தரதாஸ்   தமது  ஏற்புரையில்,    தன்னை   பத்திரிகைத்துறையில் ஊக்குவித்த  ஆசிரியர்கள்  மற்றும்  பத்திரிகையாளர்களையும் தினகரனில்   சுந்தர்  பதில்கள்  எழுதிய  காலத்தில்  ஆர்வமுடன் கேள்விகள்    கேட்டுக்கொண்டிருந்த  வாசகர்களையும் நினைவுகூர்ந்தார்.
தாம்    சிறுகதைகள்  எழுதியிருப்பதாகவும்  முதலில்  தன்னை   கதம்பம்    என்ற  இதழின்  ஆசிரியர்  திரு. கே.வி.எஸ்.மோகன் அவர்கள்    ஊக்குவித்து  எழுதவைத்து  சினிமாத்துறை செய்திகளையும்    எழுதுவதற்கு  பாதை   காண்பித்தார்  எனவும் குறிப்பிட்டதுடன்    தமது  முதல்  நூல்  வெளியீடு  தொடர்பாக அவுஸ்திரேலியா,    கனடா,    இலங்கை  உட்பட  பல  நாடுகளில் வெளியாகும்   இதழ்கள்  இணைய    இதழ்கள்  செய்திகளை வெளியிட்டு  ஆதரவு  வழங்கியதையும்  நன்றியுடன்    தெரிவித்தார்










No comments: