(அவுஸ்திரேலியா சிட்னியில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சுந்தரதாஸ் எழுதிய மறக்க முடியாத வில்லன்கள் நூல் வெளியீட்டில் எழுத்தாளர் முருகபூபதி நிகழ்த்திய உரையின் சாராம்சம்)
முருகபூபதி
வாழ்க்கையில் மறக்க
முடியாத சம்பவங்கள், மறக்க முடியாத காட்சிகள்,
மறக்க
முடியாத இடங்கள்,
மறக்க முடியாத நூல்கள், மறக்க முடியாத கதைகள்,
மறக்க முடியாத கலைஞர்கள், எழுத்தாளர்கள்,
மறக்க முடியாத நல்ல அல்லது கெட்ட மனிதர்கள் இருப்பார்கள்.
இவ்வளவு மறக்க முடியாத விடயங்கள் உலகில் இருக்கும்பொழுது நண்பர் சுந்தரதாஸ், மறக்க முடியாத வில்லன்களை ஏன் தேர்ந்தெடுத்தார்...? என்று, அவர் இந்தத்தொடரை இதழ்களில் எழுதத்தொடங்கியது முதலே யோசித்தேன்.
இந்த வில்லன் என்ற சொல்லுக்கு எமது தமிழில் என்ன அர்த்தமோ அதே அர்த்தம்தான் ஆங்கிலத்திலும்
Villain .
கெட்டவன், துஷ்டன், தீயவன், அயோக்கியன், துரோகி, போக்கிரி, மோசமானவன் என்றெல்லாம் வில்லனுக்கு பொருள் இருக்கிறது.
சுந்தரதாஸ் தெரிவுசெய்துள்ள
வில்லன்கள்,
தமிழ்த்திரையுலகில் வில்லன்களாக தோன்றிய முன்னாள் நடிகர்கள்.
அவர்களில் சிலர் மறைந்துவிட்டார்கள்.
நாம் சமூகத்தில்,
குடும்பத்தில், அரசியலில், வரலாற்றில், வில்லன்களை பார்த்திருப்போம். ஆனால், அவர்கள் நிஜவாழ்விலும் வில்லன்கள்தான். புராணம், இதிகாசங்களிலும் வில்லன்கள் வருகிறார்கள். ஆனால், அவர்களின் நிஜவாழ்வு நமக்குத்தெரிவதில்லை. காரணம் அவை காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும்
கதைகளின் மாந்தர்கள்.
திரையில் தோன்றிய வில்லன்கள் அப்படியல்ல.
2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் தோன்றிய தமிழ்த்திரைப்பட வில்லன்களுக்கும் இன்று தோன்றும் வில்லன்களுக்கும் நிறைய வேறுபாடுள்ளது.
வஞ்சிக்கோட்டை வாலிபனில் பி.எஸ். வீரப்பா,
பத்மினி, வைஜெயந்திமாலாவின் போட்டி நடனத்தை ரசித்து “ சபாஷ் சரியான போட்டி” எனச்சொன்னதையோ, மகாதேவி படத்தில் “ மணந்தால் மகாதேவி... இல்லையேல் மரணதேவி” என்று சொன்னதையோ மூத்த தலைமுறை ரசிகர்களினால் இன்னமும் மறக்க முடியவில்லை.
பல செய்தி ஊடகங்களிலும் அந்த வில்லன்களின் பேச்சு கேலிச்சித்திரங்களில் இடம்பெற்றுவருகின்றன.
வரகுண பாண்டிய மன்னனிடம், “ வரகுணா... உனது நாடு எனது பாட்டுக்கு அடிமை" என்று திருவிளையாடலில் ஏமநாத பாகவதராகத் தோன்றிய டி.எஸ்.பாலையா சொல்வார். இசைக்கலைஞர்களிலும் வில்லன்கள் இருப்பார்கள் என்பதற்கு அது ஒரு புராணக்கதை. அந்தப்பாத்திரத்தில் பாலையா அசத்துவார்.
பாலையா வில்லன் நடிகர் மட்டுமல்ல சிறந்த குணச்சித்திர நடிகருமாவார்.
நான் இன்றும் பழைய தமிழ்த்திரைப்படங்களைப் பார்ப்பதற்குக்காரணமே இந்த வில்லன்கள்தான்.
அவர்கள் இன்றைய சந்தானம்,
விவேக், வடிவேலு போன்று பஞ்ச் டயலக் பேசவில்லை.
சில
நாட்களுக்கு முன்னர் பாலும்
பழமும் பார்த்தேன்.
அதில் நடிகவேள் எம். ஆர். ராதாவும் பாலையாவும் நடித்த காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்கவைத்தன.
நடிகவேள் எம்.ஆர். ராதா தனித்துவமான நடிகர். ஈ.வே.ரா. பெரியாரின் திராவிடக்கழகத்தின் பாசறையில் வளர்ந்தவர்.
தாம் நடிக்கும் பெரும்பாலான படங்களில் உடனுக்குடன் தாமே வசனம் பேசி அசத்திவிடுவார்.
அவரது நடிப்பு தனித்துவமானது என்று சில மாதங்களுக்கு முன்னர் லண்டன் பி.பி.சி. தமிழ்சேவையில் ஒலிபரப்பாகிய தொடர் நிகழ்ச்சியிலும் சொல்லப்பட்டது.
வசனத்தில் ஏற்ற இறக்கம், வேகம், அமைதி, அவசரம் அவரது கரகரத்த குரலில் ஒலிக்கும்.
ஒரு நீண்ட வசனத்தை சில கணங்களில் பல்வேறு ஒலிகளுடன் பேசக்கூடிய ஆற்றல் மிக்க நடிகவேள்,
ஒரு செல்வாக்கு மிக்க நடிகரின் குரலையே மாற்றியவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
"சுட்டான் சுட்டேன்" என்பது ராதாவின் மறக்கமுடியாத வசனம். ஆனால், இது திரையில் வரவில்லை.
நிஜத்தில் நடந்தது.
பெற்றால்தான்
பிள்ளையா படத்தின் விவகாரம், எம்.ஜி.ஆரின் இராமவரம் தோட்டம் இல்லத்தில் சர்ச்சையாகியதனால் ராதா அவரைச் சுட்டார்.
நீண்ட காலம் அந்தச் சன்னம் எம்.ஜி.ஆரின் கழுத்தில் இருந்து அவரது உச்சரிப்பையே மாற்றியது.
ஆனால், அவருக்கு டப்பிங் குரல் தேவைப்படவில்லை. சொந்தக்குரலிலேயே சினிமாவிலும் நடித்து தீவிர அரசியலுக்கும் வந்து முதல்வரானார்.
பின்னர் எதிர்பாராதவிதமாக ஒருநாள் அவருக்கு வந்த இருமலில் அந்தச்சன்னம் வெளிப்பட்டது. எனினும் துப்பாக்கிச்சூட்டுக்கு முன்பிருந்த
அவரது
குரல்
மீண்டும்
வரவேயில்லை.
இராமாயணத்தை கீமாயணம்
என்ற பெயரில் பொலிஸ் தடைகளையும் மீறி கிராமங்கள்தோறும் நாடகமாக நடித்தவர் எம். ஆர். ராதா.
அவரது வசனங்களில் அரசியல் மற்றும் பகுத்தறிவு வாடை அதிகமாக வீசும்.
துக்ளக் சோ, அரசியலை நையாண்டி செய்து படங்களில் பேசுவார்.
ராதா நேரடியாகவே தாக்கிவிடுவார்.
அதில் அங்கதம் கலந்திருக்கும்.
ரத்தக்கண்ணீரில் ராதா
" வீடு தீப்பிடித்தால் அய்யோ, குய்யோ என்பான்.
திருவண்ணாமலையில் தீபம் எரிந்தால்
தெய்வமே
என்று பரவசமடைவான் " என்றும்
பாலும் பழமும் படத்தில், " எம்பெருமான் சிவபெருமான் விஷத்தை காப்பி மாதிரி சாப்பிட்டார். என்ன செத்தா போனார், கொண்டா அந்த லேகியத்தை, நான் சாப்பிடுகின்றேன் " என்றும் பகுத்தறிவுவாதம் பேசுவார்.
அவர் நடித்த இருவர் உள்ளம், பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்களில்தான் நல்லவராகத் தோன்றினார். ஏனைய படங்களில் எல்லாம் அவர் வில்லன்தான்.
சிவாஜிகணேசன் தமது
ஞானத்தந்தை என்று போற்றிப்புகழ்வது ராதாவைத்தான். நாடக உலகிலிருந்தபொழுது தன்னை ராதா எப்படியெல்லாம் வளர்த்தார் என்பதை சிவாஜிகணேசன் தமது சுயசரிதையில் எழுதியுள்ளார்.
அதுமட்டுமன்றி தனக்கு
திரையுலகில் மூன்று பேருடன் இணைந்து நடிக்கும்பொழுதுதான் சற்றுப்பயமாகவும் இருக்கும். அவர்கள் ராதா அண்ணன்,
மற்றவர்கள் சாவித்திரி, மனோரமா.
ராதா அண்ணன் காட்சிகளில் திடீரென்று வசனங்களை மாற்றிப்பேசி அசத்தி ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் இழுத்துக்கொள்பவர் என்றும் சிவாஜி கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகவேள் எம். ஆர். ராதா
தனிப்பட்ட
வாழ்வில்
மிக
நல்லவர். அவருக்கு பல மனைவிகள் இருந்தாலும், அவர்களையெல்லாம் கைவிடாமல் காப்பாற்றியவர்.
மும்தாஜூக்கு தாஜ்மஹால்
கட்டிய ஷாஜகானைப்பற்றி அறிவோம். ஆனால், ராதா - தனது
ஒரு மனைவி மீதுகொண்ட பாசத்தினால் அவள் மறைந்ததும் நினைவில்லம் அமைத்தவர்.
நாம் சின்ன வயதில் தமிழ்த்திரைப்படங்களைப் பார்த்தபொழுது எமக்கு இந்த வில்லன் நடிகர்கள் மீது வெறுப்புத்தான் வரும். கதாநாயகர்கள் சண்டையிட்டு எப்படியும் வில்லனை வீழ்த்தவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் படங்களைப்பார்ப்போம்.
ஆனால், நிஜவாழ்வில் அந்த வில்லன்கள் மிகவும் நல்லவர்கள்தான் -
அப்பழுக்கற்றவர்கள்தான்
என்பதை சுந்தரதாஸ் தமது நூலில் ஆதாரங்களுடன் நிரூபணம் செய்துள்ளார்.
ஒரு
சிறந்த உதாரணம் எம். என். நம்பியார்.
அவரை குருசாமி என்றுதான் சபரிமலை ஐய்யப்ப பக்தர்கள் அழைப்பார்கள்.
அத்துடன் அவர் திரையுலகில் பலருக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளும் சொல்லி அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்கவும் வழிசொல்பவர் என்று அறிந்திருக்கின்றோம்.
"
சினிமாவிலும் அரசியலிலும் மக்களிடத்திலும் பலமான செல்வாக்கு பெற்றிருந்த பிரபலம் தன்னை மணம் செய்ய விரும்புவதாகவும் அதற்கு தங்கள் ஆலோசனை என்ன...?" என்று அந்த பிரபல
நாயகி நடிகை நம்பியாரிடம் கேட்டபொழுது, " முன்னர் ஒரு காலத்தில் நடிகையாக இருந்து பின்னர் அந்த பிரபலத்தை மணம்முடித்த பெண்ணும் இப்படித்தானம்மா ஒருநாள் என்னிடம் கேட்டார் " எனச்சொல்லி அந்த உறவு தேவையற்றது என ஆலோசனை சொன்னவர் நம்பியார்.
ஆனால் - விதி யாரைத்தான் விட்டது.
அந்தப் பிரபலத்தின் சினிமா, அரசியல் மக்களின் வாக்கு வங்கி ஆதரவு என்பன அந்த பிரபலத்தின் வாரிசாகவே பின்னாளில் அந்த நாயகி நடிகையை அரியாசனம் ஏற்றிவிட்டது.
ஓ.ஏ.கே.தேவரும் நாடக உலகிலிருந்து வந்தவர்தான்.
அவரது கர்ஜனை தமிழ்த்திரையுலகில் பிரசித்தமானது.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஏழ்மையில் சிரமப்பட்டபொழுது சேலம் மொடர்ன் தியேட்டர்ஸ_க்கு தமது செலவில் அழைத்துச்சென்று சந்தர்ப்பங்கள்
பெற்றுக்கொடுத்த நல்ல மனிதர்.
சினிமா உலகில் நல்ல குணவியல்புகளுடன் திரையில் தோன்றும் கதாநாயகர்களை விட வில்லன்களாகத் தோன்றியவர்கள் தனிப்பட்ட வாழ்வில் மிக மிக நல்லவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
வெளிப்புறப்படப்பிடிப்புகளை காண வரும் ரசிகர்கள், முதலில் கதாநாயகர்களிடம்தான் ஓட்டோகிராப் வாங்குவார்களாம். வில்லன் நடிகர்களை ஏறெடுத்தும் பார்க்கத் தயங்குவார்களாம் என்று தமது கவலையை வெளியிட்டவர் பல படங்களில் வில்லனாகத்தோன்றிய ஆர். எஸ். மனோகர்.
அவரது இலங்கேஸ்வரன் நாடகம் தமிழகத்தில் ஆயிரம் தடவை மேடையேறியிருக்கிறது. இலங்கையிலும் மேடையேறியது. இலங்கேஸ்வரன் இராவணனை நல்லவனாக சித்திரித்து காண்பிப்பதில் அவர் முன்னின்றவர்.
மற்றும் ஒரு சிம்ம கர்ஜனை பொழியும் வில்லன் நடிகர், எஸ்.ஏ. அசோகன். ஆனால், அவர் எடுத்த நேற்று இன்று நாளை என்ற படம் அரசியலிலும் திரையுலகிலும் செல்வாக்கு மிக்க ஒரு நடிகரின் திட்டமிட்ட செயல்களினால் நட்டத்தை எதிர்நோக்கி, இறுதியில் மனம் உடைந்து கஷ்டப்பட்டு மரணமடைந்தார் அசோகன்.
வி.கே.ராமசாமி,
வில்லனாக மட்டுமன்றி சிறந்த குணச்சித்திர நடிகராகவும் விளங்கியர். வி.கே.ஆர். பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி பலருக்கு வாழ்வளித்தவர்.
இச்சந்தர்ப்பத்தில் ஒரு கசப்பான உண்மையையும் சொல்லிவிடல் வேண்டும்.
இன்றைக்கு இந்தியாவில்
அதிகமான திரைப்படங்களை தயாரிக்கும் மாநிலமாக விளங்குவது தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் சினிமா
ஊடகம் அரசியலிலும் தீவிரமான செல்வாக்கை செலுத்துகிறது.
அண்ணாத்துரை முதல்
இன்றைய ஜெயலலிதா வரையில் ஐந்து முதலமைச்சர்கள் சினிமா பின்புலம் - பின்பலம் கொண்டிருந்தவர்கள்,
அண்ணாத்துரை,
கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா.
இந்தப்பின்னணிதான் பின்னாளில்
விஜயகந்த்,
சரத்குமார், முத்துராமன் மகன் கார்த்திக்,
நடிகைகள் ரோஜா, குஷ்பு, ஜெயபிரதா முதலானோரையும் அரசியலுக்கு அழைத்து வந்திருக்கிறது.
இந்தப்பின்னணிகளுடன் இராமராகவும்
கிருஷ்ணராகவும் திரையில் தோன்றிய என்.ரி. ராமராவின் தெலுங்கு தேசம் கட்சியையும் அவர் ஆந்திராவில் வகித்த முதல்வர் பதவியையும் பார்க்கலாம்.
சிவாஜி கணேசனும்தான் அரசியலுக்கு வேகமாக வந்து வேகமாகவே திரும்பிச்சென்று மறைந்தார்.
இவர்கள்
திரையுலகத்தில் இவ்வாறு செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் , சிறந்த நடிகர்களுக்கான தேசிய விருதுகள் இவர்களை அண்டவே இல்லை.
சிவாஜியின் மடியில்
வளர்ந்த கமல் ஹாசன், மூன்று தடவைகள் தேசிய விருதுகளை வென்றார்.
மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன்.
நாடக பாணியிலேயே நடித்து வந்த பானுமதி, பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவிக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால், எண்ணிக்கையில் குறைந்த படங்களில் நடித்த ஷோபாவும் லட்சுமியும், சுகாசினியும்,
அர்ச்சனாவும் அந்தத் தேசிய விருதுகளைத் தட்டிக்கொண்டு சென்றார்கள்.
முன்னாள் வில்லன் நடிகர்களின் கதியும் இதுதான்.
ஆனால் - நேற்று வந்த பொபி சிம்ஹா என்ற
புதுமுக நடிகர் ஜிகிர்தண்டாவில் வில்லனாகத் தோன்றி தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.
முன்னாள் வில்லன் நடிகர்கள் மேடையிலிருந்து உரத்துப்பேசியவாறு திரையுலகம்
வந்தார்கள்.
இன்றைய தமிழ்த் திரையுலக வில்லன்கள் இயல்பாக நடித்தார்கள்.
சுப்பிரமணியபுரம்,
பருத்திவீரன், சுந்தரபாண்டியன்,
சூதுகவ்வும், ஜிகிர்தண்டா, சதுரங்கம்,
நான், சலீம் முதலான புதிய நடிகர்கள் நடித்த படங்களில் வரும் புதிய வில்லன்களிடம் ஆக்ரோஷமான உணர்ச்சியூட்டும் வசனங்கள் இல்லை.
அமைதியாகவோ, நகைச்சுவையாகவோ தமது வில்லத்தனத்தை இயல்பாக காண்பிக்கும் ட்ரெண்ட் (Trend) தற்பொழுது வந்துவிட்டது.
முன்னாள் வில்லன் நடிகர்கள் அனைவரும் மேடையில் பலகாலம் தோன்றி திரைக்கு வந்தவர்கள்.
நாடகத்தை மேடைக்கு முன்னால் அருகிலிருந்து பார்க்க விரும்புவோம். திரைப்படம்
அப்படியல்ல.
அந்தநாட்களில் இன்றுபோல்
F M மைக் இல்லை. அதனால் அரங்கில் தொலைவில் அமர்ந்திருப்பவரும் கேட்கக்கூடியதாக உரத்துப்பேசவேண்டும்.
ரசனையில் நேர்ந்த மாற்றம் இது.
இன்றைய திரைப்படப் பாடல்கள் எப்படி மூத்த தலைமுறையினரின் மனதில் நிற்கவில்லையோ.... அப்படியே இன்றைய வில்லன்கள் பேசும் வசனங்கள் அவர்கள் மனதில் நிற்கவில்லை.
படம் பார்க்கும் வரையில் மனதில் நிற்கும்
நண்பர் சுந்தரதாஸ் நீண்ட காலமாக நான் அறிந்த வரையில் சுமார் 40 ஆண்டு காலமாக தமிழ்த்திரைப்படங்கள் பற்றி எழுதிவருபவர். அவருக்கும் ஏராளமான திரையுலக கிசு கிசுக்கள் தெரியும். ஆனால், அவற்றை எழுத மாட்டார். அது அவரது நல்ல குணம். ஒரு வகையில் இவரும் நிஜவாழ்வில் மிகவும் நல்லவர் . அதனால் நிஜவாழ்வில் உத்தமர்களாக வாழ்ந்த பல வில்லன் நடிகர்கள் பற்றி எழுதியிருக்கிறார்.
அதனால் இவரை உத்தமவில்லன் என்றும் அழைக்கலாம்.
ஒருவகையில் இந்த
நூல் தமிழ்த்திரையுலகின் ஒரு பக்கத்தை - ஒரு காலகட்டத்தை காண்பிக்கும் ஆவண நூல்.
அதனால்தானோ என்னவோ ஒரே வேளையில் இலங்கையில் தினக்குரல், தமிழ்நாட்டில் கலைமகள்,
அவுஸ்திரேலியாவில் தமிழ் ஓசை, கனடாவில் தமிழர் செந்தாமரை என்பனவற்றிலெல்லாம் வெளியாகி தற்பொழுது நூலாக வந்துள்ளது.
இதனை வாழ்த்தியிருக்கும் ஏ.வி.எம். சரவணன், பிலிம்
நியூஸ் ஆனந்தன் ஆகியோரும் சாதனையாளர்கள்.
இன்றைக்கும் தமிழ்த்திரையுலகின் அபூர்வமான படங்கள் தேவையென்றால் பிலிம் நியூஸ் ஆனந்தனிடம்தான் செல்வார்கள். முக்கியமாக ஆனந்தவிகடனை தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும் அதில் பொக்கிஷம் என்ற பக்கங்கள் வெளியாகும்.
அதில் பல அபூர்வமான படங்கள் வெளியாகும் . பெரும்பாலும் பிலிம் நியூஸ் ஆனந்தன் வசம் இருந்த படங்கள்தான் அவை.
ஏ.வி.எம். சரவணன் நுற்றுக் கணக்கான தமிழ், உட்பட பிற இந்திய மொழிப்படங்கள் எடுத்த நிறுவனத்தின் அதிபர்.
கமல்ஹாசன் பற்றிய ஆவணப்படம் தயாரிக்கப்பட்ட பொழுது முதலில் ஏ.வி.எம். ஸ்ரூடியோவுக்குத்தான் சென்றார்களாம். அங்குதான் களத்தூர் கண்ணம்மா படம் எடுக்கப்பட்ட தளம் இருந்தது.
எனவே தமிழக சினிமா விமர்சகர்களுக்கு ஈடாக நண்பர் சுந்தரதாஸ் இந்த நூலை தொகுத்து
எழுதியிருக்கிறார்.
நூலுருவில் இது அவரது முதல் முயற்சி.
அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
letchumananm@gmail.com
No comments:
Post a Comment