தொண்டீஸ்வரத்துக்கு ஒரு யாத்திரை - பராசக்தி சுந்தரலிங்கம்

..
WHAT HAPPENED TO THE SIVAN TEMPLE AT THONDESWARAM


                                தொண்டீஸ்வரத்துக்கு ஒரு யாத்திரை    

                                             பராசக்தி சுந்தரலிங்கம் 


தொண்டீஸ்வரமா ?
அப்படி ஒரு தலம் எங்கே இருக்கிறது ?என்று பலரின் மனதில் கேள்வி எழலாம் !வரலாற்று ஆர்வலர் திரு  திருமுகம் ஆறுமுகம் அவர்கள்     எங்களை அங்கே அழைத்துச் செல்கிறார்

 வாருங்கள்  நாமும் அங்கே செல்லலாம்

சென்ற வியாழன் மே 28' , 2015 அன்று சிட்னி மூத்தபிரசைகள் சங்கத்தின் ஏற்பாட்டிலே திரு திருமுகம் ஆறுமுகம் அவர்கள் தொண்டீஸ்வரத்தின் பெருமையை  வரலாற்றுச் சான்றுகளுடன் ஆதாரபூர்வமாக விளக்கி ஓர் அரிய சொற்பொழிவை Power  Point  Presentation  மூலம்   விபரித்து எமது பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்தி  எம்மெல்லோரையும்  பரவசத்திலாழ்த்திவிட்டார். தொண்டீஸ்வரம்  இற்றைக்கு  மூவாயிரம்   ஆண்டு காலம்  முதலே இருந்திருக்கலாமோ   என்று   கருதத் தோன்றுகிறது 

இலங்கையின்  நான்கு திசைகளிலும் காவல் தெய்வமாக ஐந்து ஈஸ்வரங்கள் கரையோரங்களில் அமைந்து இருப்பதை    அறிந்திருக்கிறோம் 
வடக்கிலே நகுலேஸ்வரம் கிழக்கிலே  திருக்கோணேஸ்வரம்       மேற்கிலே  திருக்கேதீஸ்வரமும் முன்னேஸ்வரமும் தெற்கிலே தொண்டீஸ்வரமும் இருந்தன என்று வரலாற்றாசிரியரின் குறிப்புகள் கூறுகின்றன   (சில வரலாற்று நூல்களிலே முன்னேஸ்வரம் என்ற தலம் பற்றிய செய்தி காணப்படவில்லை --நான்கு திசைகளிலும்  நான்கு ஈஸ்வரங்கள் என்ற குறிப்பே உள்ளது )


தெற்கிலே இருந்த தொண்டீஸ்வரம்   அல்லது தேவன்  துறையே  இன்று Dondra -Devinuwara -என்று பெயர் மருவிட்டது -என்பது வரலாற்றாசிரியர் முடிவு    -அது  ஒரு  பெரிய துறைமுகப்  பட்டினமாக  விளங்கியுள்ளது என்பதிலும் அங்கே ஒரு பெரிய சிவன் கோயில் இருந்தது என்பதற்கும் பல சரித்திர சான்றுகள் காணப்படுகின்றன என்பதை விளக்குவதாக அமைந்திருந்தது திரு திருமுகம் ஆறுமுகம் அவர்களின் விவரணம் 


கி பி முதலாம்  நூற்றாண்டிலே உலகவரைபடத்தை முதல் முதலாக வரைந்த தொலமி (Ptolemy) என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர்  அக்காலத்திலே  வர்த்தகப் போக்குவரத்தில் இந்துசமுத்திரத்திலே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்பட்ட இலங்கைத்தீவையும் இணைத்துள்ளமை வரலாற்றிலே   முக்கியமாக  கருதப்படுகிறது -அவ்வரைபடத்திலே தென்முனையிலுள்ள கோயில் ஒன்றைப்பற்றிய   செய்தி உள்ளது -இலத்தீன் மொழியிலுள்ள  சந்திரனைக்குறிக்கும் Luna -என்னும் விபரம்  அதில் வருகிறது  
அங்கிருந்த லிங்கத்தின் முடியிலே உள்ள பிறைச் சந்திர வடிவம் ஒளிபொருந்திய கற்களால் அமைக்கப் பெற்றிருந்தது  என்ற   வரலாற்றுச் செய்தி உள்ளது - இறைவனின் திருநாமம் சந்திரசேகரர் என்று  பிற்கால வரலாறுகளிலே  வருவதால்   அங்கே இருந்தது   சந்திரசேகரர் (சந்திர மௌலீஸ்வரர்) கோயில் என்ற கருத்து  உறுதிப்படுத்தப்படுகிறது ---சந்திரசேகரர் ---சந்திர மௌலி--தலையிலே சந்திரனைச் சூடியவன் -சிவன்

அவ்வரைபடத்திலே  சிறிது  தூரத்தில்  அமைந்துள்ள  மலைக்  கோயில்  பற்றிய  விபரமும்  உள்ளது  -அதனைக்   கதிரமலையாகக்  கருதலாம்  ..கிரேக்க மாலுமிகள் , இவற்றைப் பற்றி வரலாற்றுக்கு முற்பட்ட   காலத்திலேயே  அறிந்திருக்கிறார்கள் 


14'ம்நூற்றாண்டைச் சேர்ந்த Ibn  Batuta என்னும் யாத்திரிகரும் தனது  யாத்திரை குறிப்புகளிலே  இந்தக் கோயில் பற்றிய விபரங்களை குறிப்பிடுகிறார் 
அந்தக் கோயிலின் செல்வச் செழிப்பையும் அங்கிருந்த ஆடல் பாடல் மகளிர் பற்றியும் அங்கே வாழ்ந்த செல்வந்தர்களான வணிக மக்களின் ஆதரவு பற்றியும் வர்ணிக்கிறார்

மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட   ஒரு கல்வெட்டிலே பாரசீக சீன தமிழ் மொழிகள்   பொறிக்கப்பட்டிருக்கின்றன என்ற செய்தி அன்றைய   கடல்வணிகச் செல்வாக்கை விளக்கி நிற்கின்றது .அங்கே  சைவ-தமிழ் மக்கள்  வாழ்ந்து கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளைப் பேணிவந்திருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது 

இலங்கையிலே   பிற்காலத்திலே  ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் காரணத்தால் இக்கோயில் சிங்கள மன்னர்களின் கைக்கு வந்துவிட்டதென்றும்   ஆனாலும் திராவிடக் கட்டிடக் கலை- பண்பாடே சிறப்புற்று விளங்கியதென்றும்    தெரிகிறது . இன்று அங்கே ஒரு பௌத்த கோவிலும் விஷ்ணு  கோவிலும்  பிரதானமாக உள்ளன . இவற்றைவிட வேறு சிறு தெய்வங்களுக்கும் கோவில்கள் உள்ளன அவ்விடத்திலே   உள்ள பௌத்த கோயில் அதனோடு இணைந்துள்ள  விஷ்ணு   கோயிலின்   வெளிப் பிராகாரத்திலே  சிதைந்த நிலையிலே இன்றும் காணப்படும்  சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட பாரிய கருங்கல் தூண்களையும் லிங்கம் கணேசர்  நந்தி  சிலைகளையும்  ,அலங்காரக் கோபுர வளைவையும் அகழ்வாராய்ச்சியிலே கிடைத்த கோயில் சார்ந்த பல பொருட்களையும் மற்றும் , சிங்கள பௌத்த (சந்தேச ) தூதுக் காவியங்களிலே காணப்படும் செய்திகளையும்  ஆதாரமாகக் கொண்டு    அங்கே பெரியதொரு  சிவன் கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்று    பிற்கால  இலங்கை  வரலாற்றாசிரியரும்   நிறுவியுள்ளனர்
 தொன்மையான காலம் முதல் 14'ம் 15'ம்  நூற்றாண்டுவரை மிகவும் சிறப்புற்றிருந்த இக்கோயிலுக்கு என்ன நடந்தது ?
எங்கே இந்தக் கோயில் சென்று மறைந்து விட்டது ?

    இயற்கைக் காரணிகளால் -கடல் கோள்  -போன்றவற்றால்  கோயில்                அழிந்து  விட்டதா  ?

இந்தக் கேள்விக்கான விடையை திரு திருமுகம் ஆறுமுகம் அவர்கள் போர்த்துக்கேய வரலாற்றாசிரியரின்  நூல்களிலிருந்து ஆதாரத்துடன் விபரித்தார்

16'ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே வியாபார நோக்குடன் இலங்கைக்கு    வந்த போர்த்துக்கேயர்  நில ஆக்கிரமிப்பாளர்களாக மாறிப் பின்னர் தமது மதத்தை  வாள் முனையிலே  பரப்பிய பொழுது செல்வச் செழிப்புடன் விளங்கிய  சைவக் கோவில்களை உடைத்து அழித்தனர் என்பதை De Quieroz  என்னும் போர்த்துக்கேய   வரலாற்றாசிரியரின் குறிப்புகள்  மூலம்,விளக்கிய  போது   திருக்கோணேஸ்வரம்  திருக்கேதீஸ்வரம் போன்றே தொண்டீஸ்வரமும் இவர்களால் அழிவுற்றது என்று அறிய முடிந்தது 

''நாம் செய்த பாவத்துக்குத் தண்டனையை ஒரு காலத்திலே நாங்கள்   அனுபவிக்கத்தான் வேண்டும்''என்று அந்த போர்த்துக்கேய ஆசிரியர் தனது நூலின் இறுதியிலே கூறியுள்ளார்   என்ற  செய்தி எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது !!

பெருமை  வாய்ந்த  இந்த வரலாற்றை  விபரித்த பின்னர்  அந்தக்  கோயில்   மீது  இயற்றப்பட்ட  இசை நாட்டியத்தையும் காணொளியிலே  அவர் பகிர்ந்தபோது உணர்ச்சிவசப்படாமல் இருக்கமுடியவில்லை

  நீர்ப்பாசன  இலாகாவிலே உயர் அதிகாரியாக இருந்த    அவருடைய தந்தையார்   திரு ஆறுமுகம்  அவர்கள் தமது   தள்ளாத  வயதிலும் அயராத தேடலின் பயனாக   பஞ்ச ஈஸ்வரங்களைப் பற்றிச் சேகரித்த விபரங்களை  பெற்று  V V S  என்றழைக்கப்படும் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர்   V V சுப்பிரமணியம் அவர்கள்  இயற்றிய பாடல்களுக்கு பத்மபூஷண் லால்குடி ஜெயராமன் அவர்கள் இசை அமைக்க சென்னை கலாஷேத்ராவினரின் நடன அமைப்பாண்மையிலே ''சுருதி லய சங்கத்தின் ''ஆதரவிலே லண்டனில் 1999'ம் ஆண்டு அக்டோபரில்   ''பஞ்ச ஈஸ்வரம்'' நாட்டிய நாடகம் மேடை  ஏற்றப்பட்டுப் பலரின் பாராட்டைப் பெற்றிருக்கிறது    .அவ்வேளை திரு லால்குடி ஜெயராமன் அவர்கள்  தனது தந்தையாரைக் கௌரவித்துப் பாராட்டியதை   திரு திருமுகம்    ஆறுமுகம் அவர்கள்  நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார் 


 தொண்டீஸ்வர தலம்  மீது இயற்றப்பெற்ற பாடல்வரிகளை அவர் நேயர்களோடு பகிர்ந்த பின்னரே  அந்நாட்டியத்தைத்     திரையிலே காண்பித்தமை  அவர் கூற வந்த செய்தியை நேரிலே அனுபவிப்பது  போன்ற உணர்வை அளித்தது 

சிவ  பக்தர்  ஒருவர் இடிந்த கோயிலின் இன்றைய நிலையைப் பார்த்து கண்ணீர் மல்கி வருந்துவதையும்  கோவிலுக்கு வந்திருந்த  அடியவர்  சிலர்    தாங்கள் வருந்த வேண்டாம், மீண்டும் அதன் பெருமை தோன்றும் என்று அவரை   ஆறுதல் படுத்துவது போலவும் காட்சி அமைக்கப் பெற்றிருந்தது
  
பாடலின் சிலவரிகள் 

பக்தர் 


தொண்டேஸ்வர திரிபுரசுந்தரி நாதா 
அண்டிவந்தவர்க்கெல்லாம்   அருளிய   நேசா 
கண்டிலேன் உனை

இன்னும் கருணை இலையோ 
பாவியேன் என்னுள்ளம் 
படும் பாடு அறியாயோ    

பதி நீ பசு நான் என்ற பாசம் புரியாதோ 
கூவி அழைத்தும் வாரா
 கொடு நெஞ்சம்   ஏனோ 

குறை தீராயோ 
பெருங்குற்றம் ஏதும் செய்தேனோ


அடியவர்கள்

 நம்பினோர் கெடுவதில்லை
 நான்கு மறை தீர்ப்பு 
அம்புவியில் தொண்டேஸ்வரம்
பாரும் பாரும் 
உருவாகும் 
காலம் வரும் 
 மீண்டும் எழும் 
இது நடக்கும் 
உறுதி உறுதி 
அடியவரே கொள்வீர் 
அமைதி  அமைதி  

என்பதுபோல்  அமைந்துள்ள உணர்ச்சிமிக்க   வரிகளை   S P  ராம் அவர்கள் உருக்கமாகப்  பாடிய பாங்கும்  பக்தி பூர்வமான பாவத்துடன் அமைந்திருந்த   கலாஷேத்ரா மகளிரின்  நடனமும் மனதை நெகிழ   வைத்து விட்டன  

ஆழமான ஆராய்ச்சியுடன் கூடிய   இந்த உரையை  உள்ளமுருக்கும்   இக் காணொளியோடு   நிறைவு செய்தது பொருத்தமாக இருந்தது
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

இப்புனித யாத்திரையிலே எம்மை இணைத்து எமது தொன்மைச் சிறப்பைக் காட்டி எமது கண்ணையும் கருத்தையும்  கவர்ந்ததோடு சிந்தனையையும் தூண்டும் வண்ணம்   இவ்விவரணத்தை   எம்மோடு பகிர்ந்த    திரு திருமுகம் ஆறுமுகம் அவர்களுக்கு  எமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் கூறக் கடமைப்பட்டுள்ளோம் 

3 comments:

யசோதா.பத்மநாதன் said...

ஆஹா.... அரிய வரலாற்றுத் தகவல்கள்!....

அதனைச் சொல்லிய பாங்கில் மிளிர்கிறது பராசக்தி. சுந்தரலிங்கம் அம்மையாரின் புலமை!

வரலாற்றோடு அழகியல் குழைத்து சுவையமுதமாய் தமிழில் குழைத்துத் எல்லோரும் சுவைக்கத் தந்த பரா அம்மாவுக்கு நன்றியையும் அன்பையும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.

இப்படியான மேலும் பல விடயங்களை நமக்கு அவர் கையால் தரவேண்டும் என்பது பசியோடு இருக்கும் நம்மவர் ஆசை!

சிலருக்கு மட்டும் கிடைக்கக் கூடியதாக இருக்கும் விடயங்களை தமிழ் முரசு முலம் எல்லோரும் அறியக் கிட்டும் வகையில் தரும் தமிழ் முரசு அவுஸ்திரேலியாவின் சேவையையும் நெகிழ்வோடு நினைவு கூராமல் இருக்க முடியவில்லை.

நன்றி முரசுக்கும் பரா அம்மையாருக்கும். தொடர்க உங்கள் சேவை!!

Unknown said...

ஆமாம் மணிமேகலா கூறியது போல் நாம் எல்லோரும் பசியோடு காத்திருகின்றோம் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அம்மாவின் எழுத்தாக்கங்களுக்கு. அதனை தமிழ் முரசில் பதிவிட.

அன்புடன்
மதுரா

பராசக்தி said...

இத்தணை பெருமைகள் எம்மைச் சூழ்ந்து இருந்ததை அறுயாதுருந்தோமே ஈசனே இன்னும் எத்தனை எத்தனை எம் தாயக பெருமைகளை எடுத்துரைக்க ஆய்வாளர்களையும் அதை தேன் தமிழில் உலகுக்கு அறிவிக்க அறிஞர்களையும் நாடி நிற்கிறோம்.