அடிலெய்டில் பன்னாட்டுத் தமிழ் மாநாடு --- அன்பு ஜெயா


மதுரையில் அமைந்துள்ள தமிழக அரசின் உலகத் தமிழ்ச் சங்மும் அடிலெய்டு தமிழ்ச் சங்கமும் இணைந்து அயலகத்தில் தமிழ் கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும்” என்ற பொருளில் நடத்திய பன்னாட்டு மாநாடு மே மாதம் 30, 31ஆம் தேதிகளில் அடிலெய்டு நகரில் சிறப்பாக நடந்தது. முதல் நாள் மாநாடு தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மேற்கு வளாகத்திலும், இரண்டாம் நாள் மாநாடு தெற்கு ஆஸ்திரேலிய தமிழ்ப் பள்ளி வளாகத்திலும் நடைபெற்றது.
முதல் நாள், பல்லினக் கலாச்சார அமைச்சர் மாண்புமிகு சோ பெட்டிசன் மாநாட்டு துவக்க உரையாற்றினார். அடிலெய்டு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் லாரண்ஸ் அண்ணாதுரை வரவேற்புரையாற்றினார். உலகத் தமிழ்ச் சங்கத் தனி அதிகாரி முனைவர் பசும்பொன் கருப்பையா அவர்களின் முயற்சியில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படிடிருந்தது. உலகத் தமிழாராய்ச்சி மையம் (சென்னை) இயக்குனர் முனைவர் விஜயராகவன் கோவிந்தசாமி அவர்களும், தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பீட்டர் கேல் தாமஸ் மிகால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மதுரைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் ரேணுகா தேவி, சிங்கப்பூரைச் சேர்ந்த பல்கிஷ் ஜெஹாங்கீர், சிட்னி சட்ட வல்லுநர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன், லாரண்ஸ் அண்ணதுரை, மெல்பர்ன் நகர் ஜெயராம சர்மா, நாகை சுகுமாரன், மாவை நித்தியனந்தம் மற்றும் பல தமிழறிஞர்கள் மாநாட்டுப் பொருள் பற்றி உரையாற்றி சிறப்பித்தனர். விழாவில் தமிழ் அவுஸ்திரேலியன் ஆசிரியர் கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன் எழுதிய தில்லை என்னும் திருத்தலம்” என்ற நூல் வெளியிடப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்வில் ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மேட் வில்லியம்ஸ் கலந்துகொண்டு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்தித்து உரையாடினார். அதன்பின், பள்ளி அரங்கத்தில் தெற்கு ஆஸ்திரேலிய தமிழ்ப் பள்ளியின் முதல்வர் ஜோசப் சேவியர் வரவேற்புரை ஆற்றினார். மாண்புமிகு மேட் வில்லியம்ஸ் அவர்கள் துவக்கவுரையாற்றினார். சிட்னி தமிழாசிரியரும் தமிழ் அவுஸ்திரேலின் துணை ஆசிரியருமான அன்பு ஜெயா தலைமை உரையாற்றினர். வெளிநாட்டு விருந்தினர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். உலகத் தமிழ்ச் சங்கம் மாநாட்டு பேராளர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தது.


மாநாட்டில் உரையாற்றிய அறிஞர்களின் கருத்துகளில் சில:
·         ஆங்கிலமல்லாத மற்ற மொழிகள் இங்கு வளர்வதற்கு ஆஸ்திரேலியாவின் மொழிக்கொள்கை ஒரு முக்கியமான காரணம்.
·         தமிழ் இலக்கணத்தில் உள்ளது போல சிக்கல்கள் ஆங்கிலத்திலும் மற்றமொழிகளிலும் கூட உள்ளன.
·         பெற்றோர்கள் தங்கள் பிள்ளகளைத் தொடர்ந்து தமிழ்ப் பள்ளிகளுக்கு அழைத்து வரவேண்டும்.
·         தமிழர்கள் வீட்டில் எப்போதும் தமிழிலேயே பேசவேண்டும்.
·         பிள்ளைகள் தங்களுக்குத் தமிழில் சொல் வளம் இல்லை என்ற பயத்தில்தான் தமிழில் பேச முன்வருவதில்லை.
·         தமிழ் வானொலி, நல்ல தமிழ்ப் பாடல்களில் வருகின்ற சொற்கள் எப்பொழுதும் குழந்தைகளின் காதில் விழுந்து கொண்டிருக்கும்படி செய்தல் வேண்டும். இது அவர்களுடைய சொல்வளத்தைத் தானாகவே அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
·         தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் நடவடிக்கைகள் சார்ந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி மாணவர்களைத் த்தமிழ் கற்பதில் ஊக்குவிக்கவேண்டும்.
மாநாட்டின் நிறைவேற்றப்பட்ட சில முக்கியத் தீர்மானங்கள்:
·         ஆஸ்திரேலியாவில் ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்விற்கென தமிழ்த் துறை அமைக்கப்பட வேண்டும். அதற்காக உலகத் தமிழ்ச் சங்கமும், தமிழக அரசும் வேண்டிய உதவிகளைச் செய்யவேண்டும்.
·         அயலகத்தில் தமிழ் கற்கும் மாணவர்கள் படிப்பதற்கு எளிய தமிழில் எழுதப்பட்ட கதைப் புத்தகங்களை உலகத் தமிழ்ச் சங்கம் தயாரித்து வழங்கவேண்டும்.
·         தமிழ் மொழிக்கும் அபாரிஜன மக்கள் பேசும் மொழிக்கும் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்யவேண்டும்.

இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் அடிலெய்டு சட்ட வல்லுநர் கயல்விழி தொகுத்து வழங்கினார். அடிலெய்டு தமிழ்ச் சங்கத்தின் செயலர் நார்ட்டன் அந்தோனி நன்றி உரை வழங்க மாநாடு இனிதே நிறைவுற்றது.

1 comment:

Indran said...

எப்போதும் போலவே தமிழ் முரசு மிக அருமையான பதிவினைத் தந்துள்ளது.நன்றி.- இந்திரன், சென்னை