தேர்தலில் சந்திரிகா
இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறப்பு
முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறப்பு
யாழ்ப்பாணத்தில் கஞ்சா மீட்பு
ஐ.நா.வின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் : டேவிட் கமரூன் வலியுறுத்தல்
அர்ஜுன மகேந்திரனிடம் ஆறரை மணி நேரம் விசாரணை
தேர்தலில் சந்திரிகா
15/04/2015 எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிடவுள்ளதாக அந்தக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சுதந்திர கட்சியிலிருந்து ஓரம் கட்டும் விதமாகவே கட்சிக்குள் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது. இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வருவதாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கு வாசு, தினேஷ், விமல் மற்றும் கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க உட்பட குழுவினர் கடந்த காலங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததோடு, மஹிந்தவிற்கு ஆதரவாக பொது கூட்டங்களையும் நடத்தியோடு மஹிந்தவும் ஜனாதிபதி தேர்தலின் தோல்விக்கு பின்னர் ஒதுங்கியிருக்காது விகாரைகளில் நடைபெறும் விழாக்களிலும் மற்றும் மத அனுஷ்டானங்களிலும் கலந்துகொண்டதோடு அவ்வப்போது ஊடகங்களுக்கு கருத்துக்களையும் வெளியிட்டார்.
கொழும்பு நாரன்ஹேன்பிட்டி அபயராம விகாரையில் மஹிந்தவுக்கு என தனியான அலுவலகமும் வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம் ஏ.எஸ்.பி. லியனகேவுக்கு சொந்தமான பீகொக் மாளிகையையும் மஹிந்த தங்குவதற்கு வழங்கப்பட்டுள்ளதோடு அங்கு தற்போது யாகங்களும் நடைபெற்றுள்ளன.
இவ்வாறு மீள அரசியல் பிரவேசவத்திற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் சூழ் நிலையிலேயே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19ஆவது திருத்தத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு முன்வைத்தது.
இதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக அரசின் பங்காளிக் கட்சியான ஹெல உறுமய மற்றும் சுதந்திர கட்சியின் சிலரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிலரும் முரண்பாடுகள் தலைதூக்கின.
தமிழ் தேசிய கூட்டமைப்பும்இஜே.வி.பி.யும் இதற்கு ஆதரவை வெளியிட்டன. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவு 19 க்கு ஆதரவு வழங்கா விட்டால் பாராளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
இதன் பின்னர் கலவரமடைந்த சுதந்திர கட்சியினர் ஜனாதிபதியை சந்தித்து 19 க்கு ஆதரவு தெரிவிக்கவும் அத்தோடு 20 ஆவது திருத்தமாக தேர்தல் முறைமையில் மாற்றத்தையும் கொண்டு வந்து நிறைவேற்ற இணக்கம் தெரிவித்தனர்.
ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளரும், அமைச்சருமான சம்பிக்கவும் திருத்தங்களுடனான ஆதரவுக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதோர் நிலையிலேயே மஹிந்தவை சுதந்திர கட்சியிலிருந்து ஓரம் கட்டும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதோடு பொது தேர்தலில் சுதந்திரகட்சியின் பிரதமர் வேட்பாளராக சந்திரிகா போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிய அணியொன்றை உருவாக்கி பொதுத்தேர்தலில் களமிறங்க மஹிந்த திட்டமிட்டுள்ளதாகவும் அத்தோடு பீகொக் மாளிகையை மஹிந்தவுக்கு வழங்கும் ஏ.எஸ்.பி. லியனகே தனது கட்சியான இலங்கை தொழிலாளர் கட்சியை மஹிந்தவுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 20ஆம்இ 21ஆம் திகதிகளில் 19 ஆவது 20 ஆவது திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கையின் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடுவதோடு தேர்தல் திருவிழாவும் ஆரம்பமாகி விடும். நன்றி வீரகேசரி
இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறப்பு
15/04/2015 இலங்கை வரலாற்றில் முதலாவாவது இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை இன்று காத்தான்குடி நகரில் திறந்து வைக்கப்பட்டது.
கலாசார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்சி திணைக்கள வழிகாட்டலில் பல மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினனருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார்.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் பதிவாக வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், வியபாரா முறைகள், புராதன பள்ளிவாயல்கள், முதலாவது “வுளு” செய்த இடம் உட்பட பல நூறு முஸ்லிம் கலாசாரம் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன.
காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் , நகர சபை உறுப்பினர்கள், கல்விமான்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நூதனசாலையை பெரும் எண்ணிக்கையிலான உள்ளுார் மற்றும் வெளியூர் மக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறப்பு
முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது.
பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் குறித்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை இந்த திறந்தவெளி மிருகக்காட்சாலையில் காணலாம்.
இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை 862 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் 488 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யாழ்ப்பாணத்தில் கஞ்சா மீட்பு
16/04/2015 யாழ்ப்பாணம்- பண்டத்தரிப்பு பகுதியிலிருந்து 10 கிலோகிராம் கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே பொலிஸார் குறித்த கஞ்சா தொகையை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 25 இலட்சம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நன்றி வீரகேசரி
ஐ.நா.வின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் : டேவிட் கமரூன் வலியுறுத்தல்
16/04/2015 ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை தொடர்பில் மேற்கொண்டுவருகின்ற விசாரணை செயற்பாட்டுக்கு இலங்கை முழுமை யான ஆதரவை வழங்கவேண் டும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
கடந்தகால விவகாரங்களை கையாள்வதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயேபிரிட்டன் பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் கடந்த மாதம் சந்தித்தபோது கடந்த கால செயற்பாடுகளை ஆராய்வதற்காக முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டேன்.
ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை தொடர்பில் மேற்கொண்டுவருகின்ற விசாரணைகளுக்கு இலங்கை முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்ற விடயத்திலும் நான் தெளிவாக இருந்தேன்.
இந்த புத்தாண்டானது இலங்கையின் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன் கடந்தகால காயங்களை ஆற்றும் என்று நம்புகின்றோம். இதேவேளை பிரிட்டனின் தொழில் கட்சி தலைவர் எட் மிலிபேன்ட் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் சர்வதேச விசாரணை அவசியம் என்றும் அதற்காக அழுத்தம் பிரயோகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள புத்தாண்டுக்கான வீடியோ வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.
இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்துக்கு நாங்கள் ஆதரவளிப்போம். தொழில் கட்சியானது எப்போதும் தமிழ் மக்களின் நண்பனாகவே இருந்துள்ளது.
அவ்வாறே தொடர்ந்து இருப்போம். மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் நம்பகரமான சர்வதேச விசாரணை அவசியம். அதற்காக அழுத்தம் பிரயோகிப்போம்.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது இதனை வலியுறுத்தியிருந்தேன். தமிழ் மக்களுக்கான எமது பொறுப்பு என்ன என்பது தொழில் கட்சியாகிய எங்களுக்கு தெரியும். நன்றி வீரகேசரி
அர்ஜுன மகேந்திரனிடம் ஆறரை மணி நேரம் விசாரணை
17/04/2015 மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு விஷேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்து வாக்கு மூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
நேற்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட அர்ஜுன மகேந்திரன் அங்கு வைத்து சுமார் ஆறரை மணி நேரம் விசாரிக்கப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
திறைசேரி முறிகள் மோசடி விவகாரம் தொடர்பில் நேற்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு திறைசேரி முறி மோசடி தொடர்பில் கிடைக்கப் பெற்றிருந்த முறைப்பாடொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நிலையிலேயே நேற்றைய தினம் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தனது மருமகனுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றுக்கு அர்ஜுன மகேந்திரன் சட்டவிரோதமான முறையில் திறைசேரி முறிகள் பத்திரங்களை வழங்கியுள்ளதாகவும் அதன்போது, சலுகை அடிப்படையில் சிறப்பு வட்டி வீதங்கள் அளிக்கப்பட்டமை ஒரு மோசடி நடவடிக்கை என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந் நிலையிலேயே நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் திணைக்கள தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இதனைவிட மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விடுமுறையில் உள்ள நிலையில் கடந்த இரு வாரங்களாக அவரது வெளி நாட்டு கடவுச் சீட்டும் முடக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment