அகநி வெளியீட்டிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் வெளியீட்டிற்கான பதிப்பகப் பரிசு.

.


வந்தவாசி.ஏப்.14. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு 
கிராமத்தில் இயங்கிவரும் அகநி வெளியீட்டிற்கு
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சிறந்த நூல்
வெளியீட்டிற்கான பதிப்பகப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும்
தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கும், அந்த நூலினை
வெளியிட்ட பதிப்பகத்திற்கும் பரிசும் பாராட்டும்  வழங்கி  வருகின்றது.
  
   அவ்வகையில், வந்தவாசி அகநி வெளியீடு வெளியிட்ட தமிழக 
வேளாண்மைத்துறை இயக்குநர் டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய
'பாண்டியர் காலச் செப்பேடுகள்' எனும் நூல் 2013-ஆம் ஆண்டிற்கான
நாட்டு வரலாறு, கல்வெட்டியல், தொல்லியல் பிரிவில் சிறந்த நூலாகவும்,
அந்நூலை வெளியிட்ட அகநி வெளியீடு சிறந்த பதிப்பகமாகவும் தேர்வு
செய்யப்பட்டது.   இதற்கான பரிசளிப்பு விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டுத் தின விழா நேற்று (ஏப்ரல்-14)
சென்னைப் பல்கலைக் கழக முதன்மை நிர்வாக அரங்கில் நடைபெற்றது.
நூலாசிரியர் டாக்டர் மு.ராஜேந்திரனுக்கு ரூ.30,000/- பரிசினையும்,
நூலை வெளியிட்ட அகநி வெளியீட்டின் பதிப்பாளர் மு.முருகேஷ்-க்கு
ரூ.10,000/- பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும் பள்ளிக்க்கல்வித்துறை
அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.  


  விழாவிற்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலர் மூ.இராசாராம்
தலைமையேற்றார். சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் இரா.தாண்டவன்
வாழ்த்துரை வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன்,மதுரை உலகத்
தமிழ்ச் சங்க தனி அலுவலர் க.பசும்பொன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
படக்குறிப்பு:
        
       வந்தவாசியைச் சேர்ந்த அகநி வெளியீட்டிற்கு தமிழக அரசின்
சிறந்த நூலினை வெளியிட்ட பதிப்பகத்திற்கான பரிசினை  
பதிப்பாளர் மு.முருகேஷிடம் தமிழக பள்ளிக்கல்வித் துறை  
அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கியபோது எடுத்த படம். அருகில்,
(இடமிருந்து) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலர் மூ.இராசாராம்,
சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் இரா.தாண்டவன், 
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜயராகவன், 
மதுரை உலகத் தமிழ்ச் சங்க தனி அலுவலர் க.பசும்பொன் ஆகியோர் உள்ளனர். 

No comments: