நான் ரசித்த மத்திய கல்லூரியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி - செ .பாஸ்கரன்

.

யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர்சங்கம் சிட்னி கிளையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை 19 04 2015  நடாத்திய அன்றும் இன்றும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி Riverside Theatre  Parramatta tpy;  5.15 மணிக்கு ஆரம்பமானது. திவாகர் சத்தியபிரகாஷ் , நிகில் , சோனியா , அல்கா அஜித் ஆகிய சுப்பர் சிங்கர் பாடகர்களும் சுப்பர் சிங்கர் இசைக்குழுவான மணி அவர்களின் இசைக்குழுவும் இவர்களோடு சுப்பர் சிங்கரின் செல்லப்பிள்ளை அறிவிப்பாளர் பிரியங்காவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

யாழ் மத்திய கல்லூரி சென்ற வருடமும் இப்படியான பாடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தது. குறித்த நேரத்தில் தொடங்கி நடந்ததை எல்லோரும் அறிந்திருந்தார்கள். அதனாலோ என்னவோ மக்கள் நேரத்திற்கே வந்து அமர்ந்திருந்தார்கள். நிகழ்ச்சி ஆரம்பமானபோது மண்டபம் நிறைந்திருந்தது.

யாழ் மத்திய கல்லூரி தொண்டர்கள் எங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். வாசலில் நின்று சிரித்த முகத்தோடு வரவேற்றார்கள் சசி ஜெயலிங்கம் உட்பட பலர் தென்பட்டார்கள். இன்னொருபகுதி தொண்டர்கள் மேடையின் பின்புறம் ஓடி ஓடிக்கொண்டு செயற்பட்டார்கள் பாடகர்களுக்கு உணவு கொடுப்பது. அவர்களை நேரபிரகாரம் மே டைக்கு கொண்டு செல்வதற்கான முயற்ச்சி போன்ற பல விடயங்கள் இருந்தது. இவர்களில் ராஜ்குமார் , பகிரதன் , ரேனு,  தமயந்தி போன்றவர்கள் தென்பட்டார்கள்.


 பிரியங்கா தனக்கே உரிய கலகலப்பான முறையில் நிகழ்ச்சியை ஆரம்பித்துவைத்தார். பலத்த கரகோசத்தோடு சோனியா மேடைக்கு வந்து மிக அழகாக மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலை பாடினார். மணி இசைக்குழுவினருக்கும்  சோனியாவிற்கும் பலத்த கரகோசம் கிடைத்தது.
தொடர்ந்து நிகில் எனதுயிரே பாடலை மிக அற்புதமாக பாடினார். அதைத் தொடர்ந்து அல்கா அஜித்தும் பின் செந்தமிழ் தேன்மொழியாள் என்ற பாடலை சத்தியபிரகாஸ் பாடினார் சபையோரிடம் இருந்து பலத்த கரகோசத்தைப் பெற்றுக்கொண்டார். திவாகர் பாடிய வராக நதிக்கரை ஓரம் பாடலின்போது நதிக்கரையிலே இருந்தது போல் இருந்தது அசத்திவிட்டார் மனிதர். மீண்டும் மணிகுழுவினருக்கு பாராட்டு குறிப்பாக தபேலா சாமிக்கும் பாட் விக்ரத்திற்கும் மிகப்பெரிய கரவொலி.


தொடர்ந்து இருவர் பாடல்கள் பாடப்பட்டது. சோனியாவும் நிகிலும் கூடைமேலே கூடைவைத்துக்கொண்டு வந்ததும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அல்கா அஜித் சின்னம் சிறிய வண்ணப்பறவையாக பறந்து வந்தார் ஆலாபனையே அற்புதமாக இருந்தது தொடர்ந்து ஆண்குரலோடு புகுந்தவர் சத்தியபிரகாஸ் அப்படியே சபையை கட்டிப் போட்டுவிட்டார்கள். சபை கரவொலியால் அதிர்ந்தது. மீண்டும் வாத்திய கலைஞர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து திவாகரும் சோனியாவும் மோனா மோனா கஸ்சோறினா பாடலை பாடினார்கள். நிகழ்ச்சி இசையால் நிறைந்து மனதை மகிழ்வித்தது.


உள்ளுர் சிறுவர் சிறுமிகளின் நடனம் இரண்டு பாடல்களுக்கு வந்து பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்கள்.

இடைவேளையின் போது சுவையான உணவுகளும் மசாலா தேனீரும் பெறக்கூடியதாக இருந்தது. மீண்டும் தொண்டர்களின் சுறுசுறுப்பும் உபசரிப்பும் பாராட்டப்பட வேண்டியதே.

இடைவேளையை தொடர்ந்து பல பாடல்களும் மெல்லிசைப்பாடல்களும் குத்துப்பாடல்களும் தொடர்ந்த வண்ணம் இருந்தது. எந்தவித இடையூறும் இல்லாமல் சிறப்பான நிகழ்ச்சியாக இருந்தாலும் அறிவிப்பாளர் பிரியங்கா இடையில் கொஞ்ச நேரம் 10 பேரை மேடைக்கு அழைத்து விளையாடிக்கொண்டிருந்ததை பலர் ஒரு குறையாக சொல்லிக்கொண்டதை கேட்கக்கூடியதாக இருந்தது. இந்த வேளையில் மூன்று நல்ல பாடல்களை கேட்டிருக்கலாம் என்பது உண்மையே.


அல்கா அஜித் சிங்கார வேலனே பாடுவார் என்றும் திவாகர் மாமா மாப்பிளே பாடுவார் என்றும் பலர் காத்திருந்தது மட்டுமல்ல சத்தமாக கேட்டும் அவை பாடப்படாதது வருத்தமாகவே இருந்தது. யாழ் மத்திய கல்லூரியினர் நிகழ்ச்சியினை சிறப்பாக செய்திருந்தார்கள் பாராட்டுக்கள். பாடகர்களும் அந்தப்பாடல்களையும் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சத்தியப்பிரகாசோ நிகிலோ கர்நாடக ஆலாபனையோடு ஒரு பாடல் பாடியிருக்கலாமே என்று எனக்கு ஒரு ஆதங்கம் இருந்தது. இசைக்கலைஞர்கள் மற்றும் இசைக்குழுவின் தலைவர் மணி அவர்கள்  பாராட்டுக்குரியவர்கள்.


சரி சபையோரைப்பற்றியும் ஒரு குறிப்பு சொல்லலாமே பிரியங்காவும் பாடகர்களும் சபையில் உள்ளவர்களை ஆடவைக்க படாத பாடு பட்டார்கள் கல்லில் நார்உரிப்பது போல்தான் இருந்தது. ஆடாவிட்டாலும் பறுவாயில்லை தலையையாவது ஆட்டுவார்கள் என்றால் பலர் அதைக்கூட செய்ய முடியாமல் இருந்தது ஆச்சரியம்தான் இசைக்கு ஆடாதவர் இருக்க முடியாது என்பார்கள் ஆனால் அடித்துச் சொல்லலாம் சிட்னியில் இருக்கிறார்கள் என்று.

நல்ல ஒரு அருமையான பாடல் நிகழ்ச்சியை பார்த்த திருப்தியோடு திரும்பினேன்  யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர்சங்கம் சிட்னி கிளையினருக்கு நன்றி. மீண்டும் அடுத்த வருடம்வரை காத்திருப்போம் வேறு எதுவும் இடையில் வராமல் தனித்து ஒரு இசை நிகழ்ச்சியை பார்த்து மகிழ்வதற்கு.


No comments: