சங்க இலக்கியக் காட்சிகள் 47- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

யாரந்தக் கடவுள்?

காதல் மனைவியோடு இல்லறத்தில் இணைந்து ஒன்றாக வாழ்ந்திருந்த கணவன்ää ஒருநாள் பரத்தையரை நாடிச்சென்று இன்ப சல்லாபத்தில் ஈடுபட்டான். அங்கேயே சிலநாட்கள் தங்கி இருந்துவிட்டு ஒருநாள்ää இரவுநேரத்தில் வீட்டுக்கு வருகிறான். இவ்வளவு நாட்களும் தான் எங்கு சென்றிருந்தேன் என்பதை மனைவி அறிந்திருப்பாளோ? அதுபற்றி கேட்டுவிடுவாளோ என்ற பயமும், குற்ற உணர்வும் அவனுக்கு எழுகிறது. அதனால், இத்தனை நாளும் கடவுளை வணங்குவதற்காகக் கோயிலுக்குச் சென்றிருந்ததாகப் பொய் சொல்கிறான்.
ஒருவர் ஒரு பொய்யைச் சொல்லும்போது பொருத்தமாகவும் சொல்ல வேண்டுமல்லவா? அத்துடன் பதற்றப்படாமலும் சொல்லவேண்டும். இல்யையென்றால் அவர் பொய்சொல்லுகின்றார் என்கின்ற உண்மை வெளிப்பட்டுவிடும். இங்கேயும் அப்படித்தான். அவனது நாக்கு வாய்க்குள்ளேயே தடம் புரள்கின்றது. பேச்சு நடுங்குகின்றது.




 தலை குனிந்தபடி இருக்கிறது. மனைவிக்கு அவன் சொல்வது பொய் என்பது தெரியும். ஏற்கனவே அவனைப்பற்றிய செய்தி வதந்தியாக அவளுக்கு எட்டியிருந்தது. எனவே, அவன் பரத்தையரிடம்தான் சென்று வந்திருக்கிறான் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அதனால்ää  எந்தக் கோயிலுக்குச் சென்றாய், எந்தக் கடவுளை வணங்கினாய் என்றெல்லாம் குதர்க்கமாகக் கேட்டு அவனைக் குடைந்து எடுக்கிறாள். இவ்வாறு இருவரும் தர்க்கப்படுவது ஒரு நாடகக்காட்சியைப்போல அமைந்து, நம்மை இரசிக்க வைக்கின்றது.
கோயிலுக்குச் சென்று கடவுளைக் கண்டு அருள்வேண்டி வணங்கி வந்ததாக அவனும் திரும்பத் திரும்ப பொய்யையே சொல்லிக்கொண்டிருக்கிறான். அவளால் தாங்க முடியவில்லை. அவனிடம் கேட்கிறாள், “ கடவுளைக் காணச்சென்றேன், கடவுளைக் காணச் சென்றேன் என்கிறாயே, நீ எந்தக் கடவுளிடம் சென்று வந்தாய் என்று நான் சொல்லவா? என் வாயாலேயே அதைக் கேட்க நீ விரும்புகிறாயா? என்று கேட்டுவிட்டு, அவன் சென்று வந்த பரத்தையரின் தன்மைகளைப் பற்றிப்; பட்டியலிடுகின்றாள்.
கண்டாலே மற்றவர்களை அழித்துவிடுகின்ற கண்களைக் கொண்ட அழகிய அந்தப் பரத்தைதான் நீ கண்ட கடவுளா? என்று கேட்கிறாள்.
அடர்த்தியான கூந்தலுக்கு அவர்கள் வாசனைத் திரவியங்களைப்  பூசியிருப்பார்கள். அவை போதாதென்று நீ தினமும் அந்தக் கூந்தலுக்குப் பூச்கூடி அர்ச்சனை செய்வாயே,  அவர்கள்தான் நீ சொல்லும் கடவுளர்களா?
கடந்த மழைக்காலம் முழுவதும் திருப்பரங்குன்றத்திலே உன்னோடு இன்புற்றிருந்தாளே ஒருத்தி, ஓ..அவள்தான் நீ சொல்லும் கடவுளா?
என்றெல்லாம் ஏழனமாகக் கேட்டு அவனை ஏசாமல் ஏசுகின்றாள். இறுதியாக இங்கே பார். நீ இங்கிருந்து போய் விடு. நீ அவர்களை விட்டுப் பிரிந்திருந்தால் நீ சொல்லுகின்ற அந்தக் கடவுள்களெல்லாம் உன் பிரிவைத் தாங்கமுடியாமல் தவித்துப் போய்விடுவார்கள். நான் அப்படியில்லை. நான் தெளிவடைந்து விட்டேன். உன்னைப் பற்றி நன்றாக உணர்ந்துகொண்டேன். அதனால்,நான் உன்னை வெறுக்கிறேன்.  நீ போய் விடு. இப்போதே போய்விடு, என்று கணவனை விரட்டாமல் விரட்டுகின்றாள். அவனோ எதுவும் பேசமுடியாமல் திகைத்தப்போய், அவமானத்தால் கூனிக்குறுகி நிற்கிறான்.
இந்தக் காட்சியைப் புலப்படுத்தும் பாடல் வருமாறு:
வண்டூது சாந்தம் வடுக்கொள நீவிய
தண்டாத் தீம்சாயல் பரத்தை, வியல் மார்ப!
பண்டு, இன்னை யல்லைமன் ஈங்கு எல்லி வந்தீயக்
கண்டது எவன்? மற்று உரை

நன்றும் தடைஇய மென்தோளாய்! கேட்டீவா யாயின்
உடனுறை வாழ்க்கைக்கு உதவிஉறையும்
கடவுளர்கண் தங்கினேன்
சோலைமலர் வேய்ந்த மான்பிணை யன்னார்பலர் நீ
கடவுண்மை கொண்டொழுகு வார்

அவருள் எக்கடவுள்? முற்றுஅக் கடவுளைச் செப்பீமன்
முத்தேர் முறுவலாய்! நாம் மணம் புக்கக்கால்
இப்போழ்து போழ்து என்று அதுவாய்ப்பக்கூறிய
அக்கடவுள், மற்று அக்கடவுள் - அது ஒக்கும்
நாவுள் அழுந்து தலைசாய்த்து நீகூறும்

மாயமோ கைப்படுக்கப் பட்டாய் நீ, கண்டாரை
வாயாக யாம்கூற வேட்டீவாய்! கேளினி
பெறல்நசை வேட்கையின் நின்குறி வாய்ப்பப்
பறிமுறை நேர்ந்த நகாராக, கண்டார்க்கு
இறுமுறை செய்யும் உருவொடு நும்இல்

செறிமுறை வந்த கடவுளைக் கண்டாயோ?
நறும்தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரற்கூந்தல் நாளணிக்கு ஒப்ப
நோக்கிற் பிணிகொள்ளும் கண்ணொடு மேனாள் நீ
பூப்பலி விட்ட கடவுளைக் கண்டாயோ?

ஈர்அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச்
சூர்கொன்ற செவ்வேலான் பாடிப் பலநாளும்
ஆராக் கனைகாமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ?
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை

வெறிகொள் வியன்மார்பு வேறாகச் செய்து
குறிகொளச் செய்தார் யார்? செப்பு, மற்று யாரும்
சிறுவரைத் தங்கின் வெகுள்வர் செறுதக்காய்!
தேறினேன், சென்றீ, நீ செல்லா விடுவாயேல்
நற்றார் அகலத்துக்கு ஓர்சார மேவிய

நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும்
முட்டுப்பாடு ஆகலும் உண்டு

(கலித்தொகை, மருதக்கலி பாடல் இல: 28 பாடியவர்: மருதன் இளநாகனார்)

இதன் நேரடிக்கருத்து:

கணவனும் மனைவியும் தர்க்கம் செய்வதுபோல இந்தப்பாடல் அமைந்தள்ளது.

மனைவி: கைகள் வலிக்கும் அளவுக்கு நறுமணம் வீசுகின்ற சாந்தினைப் பூசியிருப்பதால் வண்டுகள் வந்து மொய்த்துக்கொண்டிருப்பதும், இனிமையான பரத்தையர்கள் தழுவிமகிழ்ந்ததுமான அகன்ற மார்பை உடையவரே! முன்பெல்லாம் நீ இப்படி நடந்ததில்லையே! இப்போது இந்த இரவு நேரத்திலே வந்திருக்கிறாயே. எதைக்கண்டு கொண்டாய். அதைச் சொல்.

கணவன்: மிகவும் பருத்த அழகிய தோள்களை உடையவளே, நான் சொல்வதைக் கேட்பாயென்றால் கேள்! நாம் இருவரும் சேர்ந்து வாழுகின்ற நமது இல்வாழ்க்கைக்கு அருள்வேண்டி, கடவுள்கள் உறைந்துள்ள இடங்களில் சென்று தங்கி, வழிபாடியற்றி வந்தேன்.

மனைவி: சோலைகளிலே மலர்களைச் சூடிவருகின்ற பிணைமான்களைப் போன்ற பரத்தைப் பெண்கள்தான் நீ சொல்லும் கடவுள் தன்மையையைக் கொண்டுள்ளவர்களோ? அவர்களிலே இப்போது நீ எந்தக் கடவுளைக் கண்டுவந்தாய் என்பதைச் சொல்வாயா?

கணவன்: முத்துப்போன்று அழகாகச் சிரிப்பவளே! நாம் திருமணம் செய்தபோது, “இந்த நேரமே நல்ல நேரம்” என்று அந்த நல்ல நேரம் நமக்கு வாய்க்கப் பெருவதற்கு அருளிய அந்தக் கடவுள்தான் நான் சென்றுவந்த கடவுள்.

மனைவி: அது பொருத்தமே! நாக்கு வாயினுள்ளே அழுந்திப் பேச்சு நடுங்கித் தலை கவிழ்ந்து நீ கூறுகின்ற மாயமா இது? கையும் களவுமாகப் பிடிபட்டாய் நீ. நீ கண்ட கடவுள்கள் யாரயாரென்று என்வாயாலே சொல்லிää நீ அதைக் கேட்க விரும்புகிறாயா? இனிக் கேள். பெற்று அனுபவிக்கும் விருப்பத்தினால், நீ குறித்துரைத்த இடத்திற்குத் தவறாமல் வந்த அந்தக் கடவுள் யார்? ஒழுங்காக முளைத்திருக்கும் பல்வரிசையைக் கொண்டவரும், காண்போருக்கு அழிவை உண்டாக்கும் அழகான உடலோடு பரத்தையரின் இல்லத்திலே உன்னைச் சேர்கின்ற தன்மைகொண்டு உன்னிடம் வந்தாளே அந்தக் கடவுளைத்தான் நீ கண்டுவந்தாயோ?

தமது அடர்ந்த கூந்தலில் தினமும் நறுமணம் மிக்க சாந்தமும், கஸ்தூரியும் பூசி வாசைன தந்து அணிசெய்வதற்குச் சமமாக, நீயும் நாள் தோறும் சென்று கூந்தலில் (பூச்சூடி) பூவால் அர்ச்சனை செய்வாயே கடவுள், தனது பார்வையாலேயே மற்றவரை நோய்க்குள்ளாக்கும் கண்களைக் கொண்ட கடவுள், அந்தக் கடவுளைத்தான் கண்டு வந்தாயா?

இரண்டு வகையான அழகிற்கும் ஏற்றவனாக விளங்கிய சூரபத்மனைக் கொன்ற சிவந்தவேலனைப் பாடியதால்ää பலநாட்கள் தொடர்ந்து பெய்கின்ற மழையைப் போலää விடாது பொழிகின்ற காம வெள்ளத்தால் திருப்பரங்குன்றத்திலே மாரிக்காலம் முழுவதும் உன்னோடு களித்திருந்தாளே அந்தக் கடவுளைக் கண்டவந்தாயா?

நீ கண்டுவந்த கடவுள்களிலே, மணம்கமழுகின்ற உனது பரந்த மார்பிலே வௌ;வொறாக வகைப்படுத்தி அடையாளமிட்டவர்யார்? சொல். அவள் யாராயிருந்தாலும் நீ சற்றுநேரம் அவளைவிட்டு வேறிடத்திலே சென்று தங்கினால் கோபிப்பாள்.

வெறுக்கத்தக்கவனே! நான் எல்லாவற்றையும் தெளிவடைந்து கொண்டேன். நீ இப்போதே போய்விடு. நீ போகாமல் விட்டால்ää நல்ல மாலைகளை அணிந்த உனது மார்பிலே, ஒன்றுசேரத் தழுவியää நீண்ட கரிய கூந்தலையுடைய அந்தக் கடவுள்கள் எல்லோருக்கும் தவிப்பு எற்பட்டுவிடும் அல்லவா?

No comments: