ஒளியில் மலர்ந்த மொட்டுக்கள் - முருகபூபதி

 .

     

" வாருங்கள்... வாருங்கள்.... வந்து.... பாருங்கள்..... பாரதி  பள்ளியின்   20 வருட நிறைவு   விழாவை  "  
மெல்பன்  பாரதி  பள்ளியின் 20 ஆண்டு  நிறைவு  விழா   26 - 04-2015
தலைமுறைகளைக்கடந்து  வாழும்   பாப்பா பாரதி  வீடியோ   ஒளிப்பதிவு     இறுவட்டு  தொடர்பான  பார்வை.
                                             
அவுஸ்திரேலியா  மெல்பனில்  கடந்த  இருபது  வருடங்களுக்கும் மேலாக  இயங்கும்  பாரதி  பள்ளியின்  20  வருட  நிறைவு விழா எதிர்வரும்  26-04-2015   ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை   மெல்பனில் 

Dandenong  High School (Ann Street, Dandenong, Victoria 3175)      மண்டபத்திலும்   முன்றலிலும்  நடைபெற  ஏற்பாடாகியுள்ளது.
பாரதி  பள்ளியின்  உருவாக்கத்திற்கு  மூலகாரணமாக  இருந்தது நாடகக்கலைஞரும்   எழுத்தாளருமான  மாவை   நித்தியானந்தன் ஸ்தாபித்த  மெல்பன்  கலை  வட்டம்.   இந்த  அமைப்பு  1994  ஆம் ஆண்டு  தொடக்கத்தில்  மொனாஷ்   பல்கலைக்கழகத்தில்  பெற்றோர் - பிள்ளைகள்  உறவு    தொடர்பான  முழுநாள்  கருத்தரங்கை நடத்தியது.   அதன்  பெறுபேறாக  அதே   ஆண்டில்  மெல்பனில்  சில பிரதேங்களில்   பாரதி  பள்ளியின்  வளாகங்கள்  அமைக்கப்பட்டு வாராந்தம்   தமிழ்  மொழி   மற்றும்  கணிதம்,   ஆங்கிலம்,  விஞ்ஞானம் முதலான   இதர  பாடங்களும்  பயிற்றுவிக்கப்பட்டன.   

 இங்கு  தமது  பெற்றோருடன்  புகலிடம்  பெற்ற  குழந்தைகளும் மற்றும்   இங்கு  பிறந்த  தமிழ்க்குழந்தைகளும்   தமிழ்  அறிவையும் தமிழ்சார்ந்த   கலை,  இலக்கிய  ஆர்வத்தையும்  வளர்த்து, நாடகப்பயிற்சிகளையும்   பெற்றுக்கொண்டனர்.
அவர்களின்  சுயவிருத்திக்கும்  தன்னம்பிக்கைக்கும்  வளம்  சேர்த்த வகையில்  பாரதி  பள்ளியினதும்  அதன்  ஸ்தாபகர்  மாவை நித்தியானந்தன்   மற்றும்  பாரதி  பள்ளி   ஆசிரியர்களினதும் செயலூக்கமுள்ள   அர்ப்பணிப்பான  செயற்பாடுகளும்   பிரதான பங்களிப்பை   வழங்கியிருக்கிறது.

மெல்பன்  கலை  வட்டமும்  பாரதி  பள்ளியும்  இணைந்து குழந்தைகளை    பயிற்றுவித்து  அடுத்தடுத்து  மூன்று  பாகங்களில் வெளியிட்ட   பாப்பா  பாரதி  வீடியோ   ஒளிப்பதிவு  இறுவட்டில் பதிவாகி   வெளியானது.   அதன்  பயன்பாடு  இன்றும் தேவைக்குரியதாகியிருக்கிறது.

எமது  குழந்தைகளிடத்தில்  தமிழ்ச்சொற்களை   இலகுவான முறையில்   அறிமுகப்படுத்தவும்  அவர்கள்  தமது  சிந்தனையில் உள்வாங்கிக்கொள்ளத்தக்கதாகவும்  பாப்பா  பாரதியில்  இடம்பெறும் நிகழ்ச்சிகள்    அழகாக  வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாப்பா  பாரதி   பற்றி  15  ஆண்டுகளுக்கு   முன்னர்  ஒளியில்  மலர்ந்த மொட்டுக்கள்   என்ற தலைப்பில்  நான்  எழுதிய  கட்டுரையை  - பாரதி  பள்ளியின்  20  வருட   நிறைவு வேளையில் மீண்டும்   வாசகர்களுக்கும்  புகலிடத்தில்  தமது  குழந்தைகளுக்கு தமிழை   பயற்றுவிக்க  விரும்பும்  பெற்றோர்களுக்காகவும்  மீண்டும் இங்கு    பதிவுசெய்கின்றேன்.காலம்  தோறும்  நமது  குழந்தைகளுக்கு  பயன்தரக்கூடிய  பாப்பா பாரதியை   தீர்க்க  தரிசனத்துடன்  உருவாக்கும்  முயற்சியில் சம்பந்தப்பட்டிருந்த   அனைவருக்கும்  -  குறிப்பாக  பாப்பா  பாரதியின் தயாரிப்பில்   முழுமூச்சுடன்  தமது  பங்களிப்பை   ஆக்கபூர்வமாக வழங்கிய    அன்பர்  அமரர்  தங்கவேல்  ( அவர்  இன்று  எம்மிடையே இல்லை.   அவர்  சில  வருடங்களுக்கு  முன்னர்  இலங்கை  சென்ற வேளையில்    மறைந்தார்.   அவர்   நினைவாகவும் )   அவர்களுக்கும்   இந்த  ஆக்கத்தை   சமர்ப்பிக்கின்றேன்.
ஒளியில்   மலர்ந்த  மொட்டுக்கள்
" நல்லவைகள்  யாவும்  குழந்தைகளுக்கே "   என்றார்   மேதை லெனின்.
குழந்தைகளை  தெய்வத்திற்கு  சமமாக  போற்றினர்  நம்மவர்கள்.
குழந்தைகளை  தமிழ்  கிராமிய  மொழியில்  பச்சை   மண்,   எனவும் சற்று    நாகரீகமாக   பிஞ்சுமனங்கள்  எனவும்  அழைத்தனர்.
இலகுவில்   எந்தக்காட்சியையும்  மனதில்  பதிவுசெய்ய  வல்லவர்கள்  இந்தக்குழந்தைகள்.
அதனால்தான்  நல்லனவற்றை  அவர்களுக்கு  சொல்லிக்கொடுத்தல் வேண்டும்.   நல்லனவற்றையே   பார்க்கவேண்டும் -  பேச  வேண்டும் - கற்கவேண்டும்   என்ற  மனோபாவம்  எமக்கு  மேலோங்குகிறது.
தமிழர்கள்  முடிந்தவரையில்  தமது  பாரம்பரிய  பண்பாட்டு  மரபு முறைகளையே  பேணிவந்திருக்கின்றனர்.   புலம்பெயர்ந்த  பின்பும் இந்தப்பேணலில்    மேலும்  மேலும்  அழுத்தம்  பிரயோகிக்க  அந்நிய சூழலும்   சுவாத்தியமும்  கலாசார  கலப்பும்  காரணமாகிவிடுகின்றன.


வேர்   பதித்து  வேண்டியன  தேடும்  போராட்டத்துடன்  இன அடையாளம்   பேணவும்  விழிப்போடும்  வேகத்துடனும் விவேகத்துடனும்   இயங்கும்  புலம்பெயர்ந்த  தமிழ்  மக்களின் பிள்ளைகள்   தமிழ்  பேச  தமிழ்  பயில  வழிவகைகளை   தேடும் அக்கறை    மிக்கவர்களின்  கடின  உழைப்பிலே   சில  பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புலம்பெயர்ந்து  வாழும்  தமிழர்களின்  பிள்ளைகள்  வந்த வழியும் அறியாமல்,    செல்லும்  வழியும்  தெரியாமல்  இரண்டும்  கெட்டான் இனமாகிவிடலாகாது    என்ற  கரிசனையே   குறித்த  பணிகளில் துலக்கமானது.

அவுஸ்திரேலியாவில்   1987   ஆம்   ஆண்டின்  பின்னர்  குடியேறிய பலரிடம்   இந்த  கரிசனை    மேலோங்கியது.   நமது  பிள்ளைகள் வாழும்   சூழல்  கல்வி,   நாடும்  சாதனங்கள்  யாவும்  தமிழ்மொழிக்கு அப்பாற்பட்டதாக   விளங்குவதனால்  தமிழை   படிப்படியாக  மறப்பது இயல்பானது.
இந்நிலைமையை    அவதானத்தில்கொண்டு  தீர்க்கதரிசனமுடன் இயங்கியவர்களில்    நாடகக்கலைஞர்  மாவை  நித்தியானந்தன் குறிப்பிடத்தகுந்தவர்.
1988   இல்  அவுஸ்திரேலியாவில்  மெல்பனில்  குடியேறிய நித்தியானந்தன்  ஈழத்து  கலை,  இலக்கிய  உலகில் நன்கறியப்பட்டவர்.
1989   இல்   கண்டம்  மாறியவர்கள்  என்ற   நாடகத்தை   எழுதி நெறிப்படுத்தி  மேடையேற்றி  அவுஸ்திரேலியாவில்  தமிழ் நாடகக்கலை   வளர்ச்சிக்கு  புதிய  இரத்தம்  பாய்ச்சியவர்.  மெல்பன் கலை   வட்டம்,  பாரதி  பள்ளி,  மற்றும்  மெல்பனில்  ஓக்லி  பிரதேச மாநகர  நூலகத்தில்  தமிழ்ப்பிரிவு  அமைத்தல்  முதலான நற்பணிகளில்   உந்து  சக்தியாக  திகழ்ந்தவர்.


இந்த   அனுபவங்களின்  ஊடாக  நித்தியின்  தயாரிப்பு நெறியாள்கையில்   உருவானது  பாப்பா  பாரதி.  அடுத்தடுத்து  இரண்டு பாகங்களை    வெளியிட்டு  மூன்றாவது  பாகத்தையும் தயாரித்துவிட்டார்.

இப்பொழுதும்    இலங்கையிலும்  இந்திய  தமிழ்  மாநிலம்  உட்பட அனைத்து     மாநிலங்களிலும்  பிள்ளைகள் ---
Twinkle Twinkle  little star /  How I wonder what You are....
Jack and Jill went up the hill / To fetch a pail of water...
பாடிக்கொண்டிருக்கையில்   அவுஸ்திரேலியாவுக்கு  புலம்பெயர்ந்த தமிழ்ச்சிறார்களும்   இங்கு  பிறந்த  குழந்தைகளும்  வாழ்க  நிரந்தரம் வாழ்க  தமிழ்  மொழியும்,   ஓடி   விளையாடு  பாப்பாவும்,  அச்சமில்லை  அச்சமில்லையும்  பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
பாரதியின்   கனவு  மெய்ப்படல்  வேண்டுமென்பதற்காகவோ ஈழத்தமிழர்களினால்தான்  உலக  நாடுகளில்  தமிழ்க்கொடி  பட்டோளி வீசி  பறக்கும்  என்பதற்காகவோ   மாத்திரம்  இச்சிறார்கள் தமிழை    உச்சரிக்கவில்லை.
தாய்மொழிதான்   ஒருவரின்  இன  அடையாளத்தைப்பேணும்  என்பதை    இவர்கள்  உணர்ந்துகொண்டார்கள்.


ஈழத்தமிழர்கள்  புலம்பெயர்ந்துள்ள  நாடுகளை   அறிவோம்.   ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்   ஐரோப்பிய  நாடுகளுக்கும்  அமெரிக்கா, கனடா,    அவுஸ்திரேலியா  முதலான  நாடுகளுக்கும் புலம்பெயர்ந்திருப்பின்,   என்றாவது  ஒருநாள்  இவர்களின்  பிள்ளைகள் இலங்கையில்   சந்திக்கநேரும்பொழுது  எந்த  மொழியில்   பரஸ்பரம் பேசிக்கொள்வார்கள்.
எனவே  - இலகுவாகப்பேசிக்கொள்வதற்கு  சிறந்த  ஊடகமாக  தமது தாய்மொழி   தமிழே  இவர்களுக்கு  உதவும்.    இல்லையேல்--- உடலுறுப்புகள்    அசைத்து   Body language  இல்தான்  பேச  நேரிடும். இத்தகு நிலைமைகளை    புரிந்துகொண்டு  பாப்பா  பாரதியை  தயாரித்து    வெளியிட்டுள்ளனர்  மாவை  நித்தியும்  அவருடைய குழுவினரும்.
அரசியல்,   சமூக,   விஞ்ஞான,  பொருளாதார,  நாகரீக  மாற்றங்களில் பாரிய   செல்வாக்கையும்  அழுத்தமான  பாதிப்பையும்  ஏற்படுத்திய சாதனம்   தொலைக்காட்சி.
முண்டியடித்து   முதல்  காட்சி  பார்ப்பதற்காக  கியூவில்  காத்து  நின்ற  சினிமா   ரசிகர்களை   இலங்கையிலும்  இந்தியாவிலும் பார்த்திருக்கிறோம்.
அந்தளவுக்கு  மக்களை   கவர்ந்த  சாதனம்  சினிமா.   இன்று  நிலைமை   மாறியுள்ளது.
வீட்டிலேயே   அமர்ந்து  விரும்பிய  படங்களை   வீடியோவில்  பார்த்து   ரசித்து  பொழுதைப்போக்கும்  காலம்  ஓடிக்கொண்டிருக்கிறது.


( தற்பொழுது   கைத்தொலைபேசியிலும் U Tube   -  I Pad  இலும் திரைப்படங்கள்  தொலைக்காட்சி  நாடகங்கள்  பார்க்கலாம்.  ஆனால்,  இந்த  சாதனங்கள்  வருமுன்னர்  தயாரிக்கப்பட்டது  பாப்பா  பாரதி. )
புதியதொரு  வாழ்வில்  1990  இற்குப்பின்னர்  அவுஸ்திரேலியாவில் பிரவேசித்த    தமிழ்ப்பிள்ளைகளுக்காக  தயாரிக்கப்பட்ட  பாப்பா  பாரதி இன்று   அவர்களின்  பிள்ளைகளுக்கும்  பயன்படுகிறது. தலைமுறைகள்   கடந்து  வாழ்கிறது  பாப்பா பாரதி.
பாப்பா  பாரதியில்  வரும்  நிகழ்ச்சிகளில்  பிள்ளைகளே பங்கேற்றுள்ளனர்.   அந்தப்பிள்ளைகளின்  ஆற்றலை   பார்த்து  ரசிக்கும் ஏனைய   பிள்ளைகளின்  கட்புலனுக்கும்  செவிப்புலனுக்கும் ஏற்றதாகவே    ஒளி - ஒலிப்பதிவுகளும்  சிறப்பாக  அமைந்துள்ளன.


முதல்   பாகம்  வாருங்கள்  வாருங்கள்  எனத் தொடங்கும் பாடலுடன்   ஆரம்பித்து  எழும்புங்கள்  எழும்புங்கள்  என்ற   பெருத்த குரலுடன்  நிறைவுபெறுகிறது.
முதல்  பாகம்  ஏற்படுத்தும்  விழிப்புணர்வு  இங்கு  வாழும் தமிழ்ப்பெற்றோர்களுக்கு   குறித்த  சாதனம்   தொடர்பான  அறிவையும் அனுபவத்தையும்   பெற்றுக்கொடுக்கிறது.
பழமையும்   புதுமையும்  இணைந்து  வழங்கும்  நம்பிக்கை  இந்த இளம்    சிறார்களுக்கான  சாதனத்தில்  துளிர்விடுகிறது.   வாருங்கள் வாருங்கள்,    வானவில்,   அம்மம்மா,    ஒன்றிது,  அப்பா,   பண்ணை, தொக்கை   மனிதா,   அச்சமில்லை,   ஓடிவிளயாடு  பாப்பா,   முதலான பாடல்களுடன்   பாட்டும்  கதையும்  இடம்பெறுகின்றன.
நாய் குரைக்குது  நிகழ்வில்  ஓசை நயம்  தெளிவானது.  நாய்,  பூனை முதலான   மிருகங்களுடன்  மாத்திரம்  நின்றுவிடாமல்  காற்று,   இடி, மழையென   இயற்கையையும்  அழைத்திருக்கிறார்கள்.


பாப்பா   பாரதியை   உரு
வாக்கிய  மாவை   நித்தியானந்தன்,   யோகன், வீடியோ  கலைஞர்கள்  உதயன் ,  மூர்த்தி   மற்றும்  றொஹான்,   அரசு, (அமரர்)   தங்கவேல்   ஆகியோர்  அவுஸ்திரேலியாவில்  வதியும் தமிழ்ப்பிள்ளைகளுக்காக    மாத்திரம்  பாப்பா  பாரதியை தயாரிக்கவில்லை.
உலகெங்கும்   புகலிடம்  பெற்றுள்ள  தமிழர்களின் பிள்ளைகளுக்காகவுமே   பாப்பா  பாரதி  மூன்று  பாகங்களையும் தயாரித்து   வெளியிட்டனர்.   அதில்  1995  இற்குப்பின்னர்    பாப்பா பாரதியில்   பங்கேற்ற  குழந்தைகளில்  பலர்  இன்று  பெரியவர்களாகி   திருமணமும்  முடித்து  குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டனர்.   இன்று  அவர்களின்  குழந்தைகள்  பாப்பா பாரதியை   பார்த்து  ரசிக்கின்றனர்.
பாப்பா பாரதியை  உருவாக்குவதற்கு  தோன்றிய  எண்ணக்கரு தொடர்பாக  மாவை  நித்தியானந்தன்  வெளியிட்ட  தகவல் கவனத்திற்குரியது.   அவருடைய  மகள்  குழந்தைப்பருவத்தில் தொலைக்காட்சியில்   ஒளிபரப்பாகும்  Play School  நிகழ்ச்சியை  பார்த்து ரசிப்பதில்  ஆர்வம்  காண்பித்ததை  அவதானித்து -  அவ்வாறு  ஒரு தமிழ்   நிகழ்ச்சியை   ஏன்  தயாரிக்க  முடியாது...?  என  ஆழ்ந்து யோசித்திருக்கிறார்.
எனினும்  அதற்கென  நேரம்  ஒதுக்கி  அர்ப்பணிப்புடன்  இயங்கத்தக்க குழுவை   தெரிவு செய்யவேண்டும்.  எந்தவொரு  செயற்பாடும் சிந்தனையில்   ஆரம்பிக்கிறது.   தமது  எண்ணத்தை   பலருடன் பகிர்ந்துகொண்டு   அவர்களில்  சிலரை   தேர்வு  செய்து  பாப்பா பாரதி தயாரிப்பில்  ஈடுபட்டுள்ளார்.பாப்பா பாரதியின்  தயாரிப்பில்  கிடைத்த  அனுபவங்கள்  தொடர்பாக அதில்   ஈடுபட்ட  திருமதி  ஜூடி  அலோசியஸ்   எழுதிய கட்டுரையை   சமீபத்தில்  படித்தேன்.   மிகவும்  சுவாரஸ்மான  கட்டுரை.
ஒவ்வொரு    காட்சியையும்  எவ்வாறு  படமாக்கவேண்டும், வெளிப்படப்பிடிப்பில்  சூரியவெளிச்சத்திற்கு  காத்திருந்தமை,   நகர வீதிப்போக்குவரத்துக்கு   இடையூறு  ஏற்படுத்தாமல்  படப்பிடிப்பினை தொடர்ந்த   சாமர்த்தியம்  பற்றியெல்லாம்  அழகாக  அவர்  அதில் பதிவுசெய்துள்ளார்.

எதிர்வரும்  26   ஆம்   திகதி  ஞாயிற்றுக்கிழமை   மெல்பனில் நடைபெறவுள்ள   பாரதி  பள்ளியின்  20   வருட   நிறைவு  விழாவில் நடைபெறவிருக்கும்  பல்வேறு  நிகழ்ச்சிகளுடன்  வெளியிடப்படவுள்ள    சிறப்புமலரில்  குறித்த  பதிவு வெளியாகவிருப்பதாகவும்  அறிந்தோம்.
" வாருங்கள்... வாருங்கள்.... வந்து.... பாருங்கள்..... பாரதி  பள்ளியின்   20 வருட நிறைவு   விழாவை  "   என்று    அழைக்கத்தோன்றுகிறது  பல வருடங்களுக்கு  முன்னர்  வெளியாகி  இன்றளவும்  பேசப்படும் பாப்பா    பாரதியில்  ஒலித்த  இன்று  மலர்ந்திருக்கும்  அன்று  ஒளிர்ந்த   மொட்டுக்கள்.
தலைமுறைகளைக்கடந்து   பாரதி   வாழ்வது  போன்று  பாப்பா பாரதியும்    இறுவட்டில்  வாழ்ந்துகொண்டிருக்கிறது.
letchumananm@gmail.com


No comments: