.
இந்து
சமுத்திரத்திலிருந்து பசுபிக் சமுத்திரம் வரையில்
(நீர்கொழும்பில்
அண்மையில் வெளியிடப்பட்ட நெய்தல் நூலில் இடம்பெற்ற கட்டுரை)
உலகமயமாதல் (Globalization ) என்பது இன்றைய உலகில் முக்கியமான
உரையாடல். உலகம் கைக்குள்
வந்துள்ளதற்கு இன்றைய நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்கள் பிரதான காரணம். எனினும் நாம் பிறந்த - வளர்ந்த - வாழும் நாடுகள்
தொழில் நுட்பங்களினால் இன்றைய இணைய யுகத்தில்
பதிவாகியிருந்தாலும் உணர்வுபூர்வமாக அவை எமது ஆழ் மனதில் தங்கியிருக்கிறது.
உலகத்தை சமுத்திரங்கள் பிரித்து எல்லை வகுத்தாலும் உணர்வுகளுக்கு எல்லைகள் இல்லை.
நீர்கொழும்பின் வாழ்வும் வளமும் தொடர்பான இலக்கியத்தொகுப்பிற்கு எழுத முனைந்தபொழுது
எனக்கு இன்றைய நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்திற்கு அப்பால் நான் பிறந்த
வளர்ந்த தற்பொழுது வாழும் நாடுகள்தான் உடனடி நினைவுக்கு
வந்தன.
ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் கடந்த காலம்
நிகழ்காலம் எதிர்காலம் இரண்டறக்கலந்திருக்கிறது. இலங்கையின்
வடக்கில் எனது தந்தையாரின் பூர்வீக ஊர் காங்கேசன்துறை. அம்மாவின்
ஊர் சித்தங்கேணி.
அவர்களுடனும் எனது சகோதரர்களுடனும்
இந்த ஊர்களில் பிறந்து வாழ்ந்திருந்தாலும் எமது தந்தையாரின் தொழில்சார் இடமாற்றங்களினால் இலங்கையின் வேறு பிரதேசங்களுக்கும்
செல்ல நேர்ந்திருக்கிறது.
ஒருவகையில் இது இடப்பெயர்வுதான். எமது தந்தையாருக்கு 1968
இற்குப்பின்னர் இடமாற்றம் கிடைத்தது நீர்கொழும்பில். இலங்கையின் மேற்கில் இந்து சமுத்திரத்தின் அலையோசை கேட்கும் இந்த ஊரில்
புனித செபஸ்தியார் தேவாலயத்தின் அருகே கடலின்
அலை ஓசையையும் தேவாலயத்தின்
மணியோசையையும் கேட்டவாறே விஜயரத்தினம் இந்து மத்திய
கல்லூரிக்கு படிக்கச்சென்றேன்.
தந்தையார்
நீர்கொழும்பில் கடற்றொழில் திணைக்களத்தில் பணியாற்றினார். நீர்கொழும்பு, கடலும் கடல்
சார்ந்த நகரமும் என்பது அனைவரும் அறிந்ததே.
இங்கு வாழ்ந்த
பெரும்பான்மையான கத்தோலிக்க மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியது கடல் தொழில்.
அவர்களின் பொருளாதாரம் மேம்படவேண்டும்
என்பதற்காகவே கடற்றொழில் அமைச்சும் கடல் சார்ந்த
ஊர்களில் திணைக்களங்களும் கடற்றொழில் பயிற்சி நிலையங்களும் அமைக்கின்றன.
அவ்வாறு நீர்கொழும்பிலும் திணைக்களமும் பயற்சிநிலையமும் இயங்கியது. எமது தந்தையாரின்
பணி இங்கே தொடர்ந்தது. எமது அம்மாவுக்கு இந்த ஊர்
மிகவும் பிடித்துக்கொண்டதற்கு காரணம் இங்கே
கடற்கரை வீதியில் எழுந்தருளியிருந்த மூன்று கோயில்கள்.
அப்பா -
ஒரு கரப்பந்தாட்ட பிரியர்.
அவர் தமது பாடசாலைக்காலத்திலிருந்தே இந்த விளையாட்டில் ஈடுபட்டவர். அம்மாவுக்கு கோயில்கள் என்றால் அப்பாவுக்கு இந்து இளைஞர்
மன்றம். அந்த மன்றத்தில்
விளையாட்டுத்துறையும் இருந்தது.
அங்கே மேசைப்பந்தாட்டம்; (Table Tennis ) முதல் கரப்பந்தாட்டம் (Volleyball)
வரையில் மன்றத்தின் உறுப்பினர்கள்
கலந்துகொண்டார்கள். அந்த மன்றம் இந்து சமயத்திற்காகவும்
தமிழுக்காகவும் நீண்ட காலமாக
பணியாற்றிவருவது பற்றி அறிந்தார் எமது அப்பா.
அத்துடன் அங்கே தினகரன், வீரகேசரி, சுதந்திரன் முதலான பத்திரிகைகளை படிக்கக்கூடிய ஒரு வாசிக
சாலையும் இயங்கியது. அம்மா கோயிலுக்குச்செல்வார்கள். அப்பா அம்மாவுடன்
சென்று கோயிலை தரிசித்துவிட்டு இந்து இளைஞர்
மன்றத்துக்குள் பிரவேசித்துவிடுவார். இதனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் புதிய சிநேகிதிகள் நண்பர்கள் கிடைத்தார்கள்.
வடபிரதேசத்தில் கோயில் சார்ந்த
ஊர்களில்
வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட எமது பெற்றோருக்கு
நீர்கொழும்பு வரப்பிரசாதமாக அமைந்தமைக்குக்காரணம் அவர்கள் இருவருக்கும் மிகவும்
பிடித்தமான பல விடயங்கள் இந்த ஊரில்
இருந்தன.
அப்பா இந்து இளைஞர்
மன்றத்தில் உறுப்பினரானார். அவரது விளையாட்டுத்துறை ஆர்வத்தைப்பார்த்த இதர உறுப்பினர்கள்
ஒரு ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் அவரை விளையாட்டுத்துறை
செயலாளராக்கிவிட்டார்கள்.
அப்பா கரப்பந்தாட்டம்
விளையாடச்செல்வார். அத்துடன் போட்டிகள் நடக்கும்பொழுது மத்தியஸ்தராகவும் செயல்படுவார். அம்மாவுக்கு கோயில் வட்டாரம்
பல சிநேகிதிகளை பெற்றுக்கொடுத்தது.
இந்து இளைஞர் மன்றம்
சமயப்பணி மற்றும் தமிழ்ப்பணிகளுடன் சமூகப்பணிகளும் மேற்கொண்டது. இங்கு சில
மருத்துவ முகாம்கள் நடந்தன. குறிப்பாக போலியோ தடுப்பு விழிப்புணர்வு முகாம்.
கண் பரிசோதனை முகாம் என்பன
முக்கியமானவை.
நீர்கொழும்பில் இரண்டு சிறைச்சாலைகள்
இருக்கின்றன.
கடற்கரைக்கு அருகில்
பழைய டச்சுக்கோட்டையினுள் பெரிய சிறைச்சாலையும் சிலாபம் வீதியில் தழுப்பொத்தை என்ற இடத்தில்
சீர்திருத்த நன்னடத்தை திறந்த வெளிச்சிறைச்சாலையும் அமைந்திருந்தன. இங்கு மும்மதங்களுக்கும்
வழிபாட்டிடம் இருந்தன.
இந்து இளைஞர் மன்றம் வருடாந்தம்
தைப்பொங்கல், சித்திரைப்புதுவருடப்பிறப்பு,
தீபாவளி பண்டிகை,
சிவன்ராத்திரி முதலான தினங்களில் பொங்கல்,
கடலை, வடை, மோதகம் முதலான
பலகார பட்சணங்களை உறுப்பினர்களின் ஆதரவுடன் தயாரித்து இந்த சிறைச்சாலைகளில் இருக்கும் இந்து தமிழ்
கைதிகளுக்கு வழங்குவதற்கு செல்வார்கள். இந்தப்பணிகளில் அம்மாவும் அப்பாவும் இணைந்துகொள்வார்கள்.
அம்மா குறிப்பிட்ட இந்தச்சிற்றுண்டிகளை தயாரிப்பதில் சங்க உறுப்பினர்களின் மனைவிமாருக்கு
உதவுவார். ஆனால், அந்தப்பெண்களும்
அம்மாவும் சிறைச்சாலைப்பக்கம் செல்ல மாட்டார்கள்.
ஆண்கள் மாத்திரமே செல்வார்கள். எனினும்
சிறைக்கு சென்றவர்கள் திருந்தி நல்ல பிரஜைகளாக வெளியே வரவேண்டும்
என்று அம்மாவும் அவரது சிநேகிதிகளும்
வீட்டில் பிரார்த்தனை செய்வார்கள்.
அப்பாவுடன் சிறைக்கைதிகளை பார்க்கச்செல்பவர்களின் அனுபவங்கள் வித்தியாசமானவை. 1972 இல் புதிய அரசியல்
அமைப்புச்சட்டத்தினால் தமிழ் மக்கள் இரண்டாம்
தரப்பிரஜைகளானதை கண்டித்து சாத்வீகப்போராட்டங்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நடந்தன. அதில் கலந்துகொண்ட பல தமிழ்
இளைஞர்கள் கைதாகி நீர்கொழும்பு
சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர்.
அதில் மாவை சேனாதிராஜா,
முத்துக்குமாரசாமி, மகேந்திரன்
உட்பட பல இளைஞர்கள் இருந்தனர்.
அத்துடன் அந்நியசெலவாணி மோசடிகளில் ஈடுபட்ட பெரிய வர்த்தகப்புள்ளிகளும்
தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
அப்பா அவர்களை அங்கே சந்தித்து பிரசாதங்கள் வழங்கிய கதைகளை கேட்டுத்தெரிந்துகொண்டிருந்தேன்.
நீர்கொழும்பில்
பெண்களுக்கென ஒரு அமைப்பு
இல்லாத குறையைப்போக்குவதற்காக இந்து மகளிர் மன்றம்
உருவானபொழுது அம்மாவும் அதில் இணைந்துகொண்டார். நான் அறிந்த மட்டில்
திருமதிகள் கந்தையா, நடராசா, ஜெகதீஸ்வரி
நாகரத்தினம், ஐயம்பிள்ளை, நவரத்தினம், பூபதி செல்வநாயகம், அசலாம்பிகை
கல்யாணசுந்தரம் , பாலசுப்பிரமணியம் முதலானோருடன் அம்மாவும் இணைந்துகொண்டார்கள். இவர்களின் கணவர்கள் அப்பாவின் சிநேகிதர்கள்.
நாம் எல்லோரும்
ஒரே குடும்பத்தினராக வாழ்ந்தோம்.
மகளிர் மன்றமும் பல சமூகப்பணிகளை மேற்கொண்டது. அதில் இந்து இiளைஞர் கொடி தினம் முக்கியமானது.
அகில இலங்கை இந்து
இளைஞர் பேரவையின் சார்பில் நாடெங்கும் ஒரே நாளில்
இந்தக் கொடி தினம் நடக்கும்.
இதில் சேகரிக்கப்படும் நிதி நாடெங்கும்
இயங்கும் இந்து இளைஞர் மன்றங்களின் அபிவிருத்திகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இன்று வைரவிழாவை
கொண்டாடும் விஜயரத்தினம் இந்து மத்திய
கல்லூரியின் முன்னேற்றத்திற்காக 1975 ஆம்
ஆண்டளவில் அதிபராகவிருந்த திரு. சண்முகராசா
அவர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தை உருவாக்கினார். பாடசாலையில்
கட்டிடங்களை புதிதாக உருவாக்க
வேண்டிய தேவை இருந்தது.
அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளராக
மருத்துவ கலாநிதி ஜெயமோகன் இயங்கினார். அவர் அப்பாவின்
நண்பர். நிதியுதவிக்காட்சிக்காக ரிதம் 76 என்ற ஒரு
மாபெரும் கலை நிகழ்ச்சியை
அந்தச்சங்கம் நடத்த முன்வந்தபொழுது
அம்மா அங்கம் வகித்த
மகளிர் மன்றத்தின் ஆதரவையும்
அதிபரும் செயலாளரும் கேட்டிருந்தார்கள்.
இந்த ரிதம்
76 நிகழ்ச்சி நீர்கொழும்பு
மாநகர மண்டபத்தில் மண்டபம் நிறைந்த விழாவாக
நடந்தது.
தமிழ் , சிங்கள, முஸ்லிம் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் திரைப்பட நடிகர்கள் தோன்றினார்கள். ஒரு தமிழ்ப்பாடசாலையின் முன்னேற்றத்திற்காக மூவினம் சார்ந்தவர்களும் இணைந்திருந்ததிலிருந்து மக்களின் அன்றைய உணர்வுகளை
நாம் புரிந்துகொள்ள முடியும்.
எனக்கு நீர்கொழும்பு விஜயரத்தினம் கல்லூரியில் அனுமதி கிடைத்தபொழுது பாடசாலை
மாணவர் மன்ற நிகழ்ச்சிகளிலும்
வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிகளிலும் கலந்துகொள்வேன். விநோத உடைப்போட்டியிலும் ஒரு சமயம்
கலந்துகொண்டது நினைவில்
இருக்கிறது. எனக்கு
கிடைத்த வேடம் ஐயர்.
என்னை அம்மாவே ஒரு ஐயராக்கிவிட்டார். ஐயருக்கேற்ற
உடைகளுடனும் உருத்திராட்ச மாலை பூநூல்
சகிதம் நான் மைதானத்தில்
வந்தபொழுது யார் இந்த பிராமணப்பெடியன்...? என்று அங்கு
விளையாட்டுக்களை ரசிக்கவந்தவர்கள் கேட்டதாக
அறிந்தேன். அதனால் சிறிது காலம்
எனது வகுப்பு நண்பர்கள் என்னை ஐயர் என்றும்
அழைத்தார்கள்.
நான் சிறுவயதில்
இயல்பிலேயே கூச்சமான சுபாவம் உள்ளவன். எனக்குத்தரப்பட்ட வேடத்தினால் மேலும் கூச்சமடைந்தேன்.
சிறிது காலத்தில் மேல்படிப்பிற்காக
யாழ்ப்பாணம் சென்றேன். அங்கிருந்து
இங்கிலாந்தில் படிப்பதற்காக பெற்றோர்கள் என்னை அனுப்பினார்கள்.
அங்கே திருமணமாகி பின்னர் குழந்தையுடன் அவுஸ்திரேலியா வந்தோம்.
எமது சகோதரர்கள் அனைவருக்கும் திருமணமாகி அனைவரும் குடும்ப சகிதம் அவுஸ்திரேலியாவில் குடியேறிவிட்டனர்.
இலங்கையில் தொடர்ச்சியாக போர்ச்சூழல் நிலவியது.
அதனால் எமது பெற்றோர்களை அங்கே விட்டு விட்டு கவலையுடன் இருந்தோம். பெற்றவர்களையும் எம்முடன்
அழைக்க விரும்பினோம்.
அவர்கள் 1987 ஓகஸ்டில் இங்கே வந்தார்கள்.
அப்பா 1994 ஆம் ஆண்டு இறைவனடி
சேர்ந்தார். நான் இலங்கையில் இல்லாத காலத்தில்
நடந்த பல முக்கியமான
சம்பவங்களை அப்பாவும் அம்மாவும் கதைகதையாகச்சொல்வார்கள். அந்தளவுக்கு
அவர்களின் மனதில் வாழ்ந்தது நீர்கொழும்பூர்.
இன்றும் இலங்கை செல்லநேரும்பொழுது எனது பால்யகால
நண்பர் தேவராஜா ஜெகநாதனை
சந்திப்பேன். அவருடனான நட்புறவு இன்றும் தொடருகின்றது. எனது ஆசிரியர்கள் மற்றும் உடன் படித்த
மாணவ நண்பர்கள் உலகெங்கும் பறந்து சென்றுவிட்டனர்.
அவர்களுடன் வாழ்ந்த அந்தக்காலங்களை மறக்கத்தான் முடியுமா....? குறிப்பாக நீர்கொழும்பில்
திருமதி அசலாம்பிகை கல்யாணசுந்தரம் அவர்களையும் திரு. சோமசுந்தரம்
ஆசிரியரையும் திரு, திருமதி அரியதேவா ஆசிரிய தம்பதியரையும் இன்றும் நினைவில் வைத்துள்ளேன். மேலும் பலரது பெயர்கள்
உடனடியாக நினைவுக்கு வரவில்லை.
பிறந்தது ஓரிடம், வளர்ந்தது ஓரிடம். தற்பொழுது வாழ்வது பிறிதோர் இடம்.
இவ்வாறு கடந்த காலம்
நிகழ்காலம் எதிர்காலம் என்பன இடப்பெயர்வு
புலப்பெயர்வுடன் இரண்டறக்கலந்துவிட்டாலும்
உணர்வுகளில் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை.
எனது பெற்றோர்களிடமிருந்த சமூகம் சார்ந்த
உணர்வு எனக்கும் எனது சகோதரர்களுக்கும் இருப்பதனால்தான் இந்த கடல்
சூழ்ந்த கண்டத்தில் புலம்பெயர்ந்து வாழத்தொடங்கிய பின்னரும்
அவர்கள் பெற்ற அனுபவத்திலிருந்து நாமும் சமூகப்பணிகளை
தொடருகின்றோம்.
எனது மூத்த சகோதரர்
ரஞ்சன் வைத்தியநாதன், மெல்பனில் குன்றத்துக்குமரன் ஆலயத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர். அவருக்கு பக்கபலமாக இருந்தவாறே மெல்பனில் பல சமூகப்பணிகளில்
ஈடுபடுகின்றேன். அவை கல்வி, கலாச்சாரம், சமயம் சார்ந்திருக்கிறது.
மெல்பனில்
பசுபிக் சமுத்திரத்தின் கரையிலிருந்து வீசும் காற்றை
சுவாசித்தாலும் நீர்கொழும்பில் இந்து சமுத்திரத்தின்
கரையிலிருந்து வீசிய காற்றை சுவாசித்த உணர்வு மறையவில்லை.
உணர்வுகள் சாகா வரம்
பெற்றவை.
நாம் கடல் கடந்திருந்தாலும்
எம்முள் உணர்வுகளாக வாழ்ந்துகொண்டிருப்பது நீர்கொழும்பு. எமது பெற்றோரே
நீர்கொழும்பில் கடற்கரை வீதியில் வடிவமைத்து வாழ்ந்த இல்லம் இன்றும்
நினைவுகளை சுமந்து வாழ்கிறது.
இந்த கடல்
சூழ்ந்த
கண்டத்தில் நானும் சகோதரர்களும்
பல வீடுகளை வடிவமைத்திருந்தாலும் நீர்கொழும்பின் அந்த நாற்சார்
இல்லம் இன்றும் எமது மனங்களில்
வாழ்கிறது. இலங்கையில்
வடபுலத்திலிருந்து வந்து நீர்கொழும்பில் காலூண்றிய
பெற்றோர்கள் அந்த ஊருக்கு
மிகவும் விசுவாசமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
நாம் எங்கே வாழ்கின்றோம்
என்பது அல்ல முக்கியம்
- வாழும் இடத்திற்கு விசுவாசமாக வாழ்கின்றோமா என்பதே மிகவும்
பிரதானம்.
மனித வாழ்வில்
இடப்பெயர்வு - புலப்பெயர்வு
தவிர்க்க முடியாதவை. எங்கோ பிறந்தோம் எங்கோ வாழ்ந்தோம்.
ஆனால், பிறந்த - வாழ்ந்த இடங்கள் உணர்வுகளாக
தொடர்ந்து எம்முடன்
வாழ்ந்துகொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment