சங்க இலக்கியக் காட்சிகள் 41- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
கட்டியணைத்தான், காதல் பிறந்தது!



காட்டாற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதனைக் கண்ணுற்ற இளம் பெண்கள் அதிலே நீராட விரும்புகிறார்கள். வெள்ளத்தினுள் இறங்கி நீந்தி விளையாடுகிறார்கள். அவர்களிலே தலைவியும் ஒருத்தி. தங்களை அறியாமல் நீண்ட நேரமமாக நீச்சலடித்து விளையாடியதால் தலைவிக்குக் களைப்பு ஏற்படுகிறது. அவளால் மேலும் நீந்த முடியவில்லை. அவளின் கைகள் சோர்வடைகின்றன. அவளை நீர் அடித்து இழுத்தச் செல்கிறது.  செய்வதறியாது ஏனைய பெண்கள் எல்லோரும் அழுது கூச்சலிடுகிறார்கள். உதவிகோரிக் கத்துகிறார்கள். அவர்களின் அவலக்குரல் கேட்டு அங்கே ஓர் இளைஞன் வருகிறான். ஆற்றிலே குதிக்கிறான். தண்ணீரில் இழுபட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் தலைவியைக் காப்பாற்றிக் கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்டுவந்து  கரை சேர்க்கிறான். தலைவிக்கு அவன் மேல் காதல் பிறக்கிறது. இருவரும் மனமொத்த காதலர்களாகின்றனர். அவன் அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். அதனால் தனது பெற்றோரை முறைப்படி பெண்கேட்டுவருமாறு அனுப்புகிறான். அவர்களும் தலைவியின் பெற்றோரின் விட்டுக்கு வருகிறார்கள். முறைப்படி தமது மகனுக்குப் பெண்கேட்கிறார்கள்.



அனால் தலைவியின் பெற்றோர் சம்மதிக்க மறுக்கிறார்கள். இதனை தலைவியின் தோழி அறிகிறாள். மிகவும் கவலைப்படுகிறாள். கவலைப்படுவதோடு மட்டுமன்றித் தலைவியின் செவிலித்தாயிடம் இதுபற்றிப் பேசுகிறாள். தலைவியின் பெற்றோர் செய்தது சரியல்ல என்று ஏசுகிறாள். தலைவியின உயிரையே காப்பாற்றிய அவனுக்குச் செய்யும் நன்றிக்கடன் இதுதானா என்று கேட்டு வாதிடுகிறாள். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கோருகின்றாள். அவளின் கோரிக்கை செவிலித்தாய்க்குச் சரியென்று தொன்றுகிறது. செவிலித்தாய் தலைவியின் தாயிடம் இதுபற்றிக் கூறுகின்றாள். அவள் தக்க தருணம் பார்த்துத் தன் கணவனிடம்



எடுத்துரைக்கிறாள். உடனே அவருக்கு - தலைவியின் தந்தைக்குக் கடும் கோபம் வருகிறது. அவரது கண்கள் சிவக்கின்றன. கண்டபடி ஏசுகிறார். தனது வில்லையும்ää அம்புகளையும் மாறிமாறி நோக்குகிறார்.  நாள்முழுக்கக் கோபத்தில் கொதித்தபடியே இருக்கிறார். மாலையாகின்றது. எப்படியோ சிறிது சிறிதாக அவரது கோபமும் தணிகிறது. தனது மகளும் அவளின் காதலனும் எதுவித குற்றமும் செய்திடவில்லை என்று சொல்கிறார். அவர்களின் திருமணத்திற்குச் சமமதிக்கிறார். தனது சம்மதத்தைத் தலைவனின் பெற்றொருக்குச் சொல்லியனுப்புகிறார்.

இதையறிந்த தலைவி மகிழ்ச்சியில் நீந்துகிறாள். அவளும் அவளது தோழிகளும்  ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். திருமணம் இனிதே நடந்தேற வேண்டும் என்று மலையிலே உறைகின்ற தெய்வத்தைப் போற்றிக் குரவையாடுகின்றார்கள்.

மணப் பெண்ணைத் தோழிப் பெண்கள் கேலிசெய்கிறார்கள்.

“திருமண மண்டபத்திலே நீயும் உன் காதலனும் ஏற்கனவே பழகியவர்கள்போலக் காட்டிக்கொள்வீர்களா? அல்லது முன்னர் அறியாதவர்கள் போல நடந்து கொள்வீர்களா? அப்படித் தெரியாதவர்கள் போல நடந்தகொண்டால் உங்களது காதல் விவகாரங்களெல்லாம் தெரிந்த நாங்களும் எதையுமே அறியாதர்கள் போலவே நடந்துகொள்ள முடியுமா? அப்போது நாணம் கொண்டு உன்கைகளால் நீ உன் கண்களை மூடிக்கொள்வாய். அப்படிக் கண்களை மூடிக்கொண்டால் மணக்கோலத்தில் இருக்கும் உன் காதலனைக் காண முடியாதே. காதலனை மணக்கோலத்தில் காணாத கண்களால் என்ன பயன்?” என்றெல்லாம் கேலியாகப் பாடுகிறார்கள். நாட்கள் சில ஓடி மறைகின்றன. அறிவார்ந்த சான்றோர்களையும். சோதிடர்களையும் அழைத்துக்கொண்டு தலைவனின் பெற்றோர் மீண்டும் பெண்கேட்க வருகிறார்கள். அவர்களைக் கண்ட தோழியொருத்தி தலைவியிடம் ஓடோடிச் சென்று, “உனது பசலைநோய் தீரும் காலம் வந்துவிட்டது. அவர்கள் வந்துவிட்டார்கள். உனது கவலைகள் மறையட்டும்ää பூப்போன்ற உனது அழகிய கண்களும் மகிழ்ச்சியால் மலரட்டும்” என்று சொல்கிறாள்.

இந்தக் காட்சியை நம் மனக் கண்முன் கொண்டுவந்த நிறுத்தகின்ற பாடல் இது:

காமர் கடும்புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரைக் கண்புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்
நீள் நாக நறும்தண்தார் தயங்கப் பாய்ந்து. அருளினால்
பூண் ஆகம் உறுத்தழீஇப் போதந்தான் அகன் அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என் தோழி
அருமழை தரல் வேண்டில் தருகிற்கும் பெருமையளே
அவனுந்தான் ஏனல் இதணத்து அகிற்புகை உண்டு இயங்கும்
வான்ஊர் மதியம் வரைசேரின் அவ்வரைத்
தேனின் இறால் ஏன ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன்
சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
வள்ளி கீழ் வீழா, வரைமிசைத் தேன்தொடா
கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ் நகர்
அல்ல புரிந்துஒழுக லான்
காந்தள் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின்
வாங்கு அமை மென்தோள் குறவர் மடமகளிர்
தாம்பிழையார் கேள்வர்த் தொழுது எழலால், தம்மையரும்
தாம்பிழையார் தாம்தொடத்த கோல்
எனவாங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்
அவரும், தெரிகணை நொக்கிச் சிலநோக்கிக் கண்சோர்ந்து
ஒருபகலெல்லாம் உரத்தெழுந்து, ஆறி
இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்ந்தார் தலை
தெரியிழாய்! நீயும் நின் கேளும் புணர
வரைஉறை தெய்வம் உவப்ப உவந்து
குரவை தழீஇ யாம்ஆடக் குரவையுள்
கொண்டு நிலைபாடிக் காண்
நல்லாய்-
நன்னாள் தலைவரும் எல்லை நமர்மலைத்
தம்நாண்தாம் தாங்குவார் என் நொற்றனர் கொல்?
புனவேங்கைத் தாது உறைக்கும் பொன்னறை முன்றில்
நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?
நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கெ
கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?
விண்தோய் கல்நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர்போல் படர்கிற்பீர் மன்கொலோ?
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழங்கேண்மை
கண்டறியாதேன்போல் கரக்கிற்பென் மன்கொலோ?
மைதவழ் வெற்பன் மணஅணிகாணாமல்
கையால்புதை பெறூஉம் கண்களும் கண்களோ?
என்னைமன் நின்கண்ணால் காண்பென்மன். யான்
நெய்தல் இதழ்உண்கண் நின்கண்ஆக என்கண்மன
எனவாங்கு,
நெறியறி செறிகுறி புரிதிரிபு அறியா அறிவனை முந்துறீஇ
தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக
வேய்புரை மென்தோள் பசலையும் அம்பலும்
மாயப் புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்கச்
சேய்உயர் வெற்பனும் வந்தனன்
பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே!

(கலித்தொகை, குறிஞ்சிக்கலி பாடல் இல: 3 பாடியவர்: கபிலர்)

இதன் நேரடிக் கருத்து:

விருப்பத்தோடு எம்மோடு நீராட வந்தாள். கால்கள் சோர்ந்து தளர்ந்ததும் அச்சத்திலே கண்களை மூடிக்கொண்டாள். தண்ணீரோட போனாள். அங்கே வந்த ஓர் இளைஞன் தனது மார்பிலணிந்திருந்த மாலை அசைய நீரிலே குதித்தான். பூண் மலர்ந்த இவளின் மார்பகங்களைத் தன் மார்போடு இறுக்கமாக அணைத்தவாற அவளைக் பற்றிக் கொண்டுவந்து கரைசேர்த்தான். அவனுடைய பரந்த மார்பை இவளின் மார்பகங்கள் தழுவிக்கொண்டன என்பதால் அவன்தான் இவளின் மணவாளனாவான். அவள் - எனது தோழி “பெய்” என்று வேண்டினால் மழையைப் பெய்யச் செய்யக்கூடிய பெருமைமிக்க கற்புள்ளவள். வேறு யாரையும் மணமுடிப்பதை அவள் நினைக்கவே மாட்டாள். அவனும் என்ன குறைந்தவனா? தினைப்புனத்திலே காவற் பரணில் இருந்து எழுகின்ற அகிற் புகை வானைநோக்கி மேலே சென்று நிலவை மறைக்கää அந்த நிலவு ஒளிமங்கி வான்வழியெசென்று மலையிடுக்கிலே தங்கியிருக்கும்போது அதைத் தேன்கூடு என்று நினைத்து அங்குசெல்ல நூலேணி இழைத்தக்கொண்டிருக்கும் நாட்டினையுடைய தலைவனின் மகனல்லவா?
சிறுகுடி மக்களே! சிறுகுடி மக்களே! நமது மலைவாழ் மக்கள் அவளின் விருப்பத்தை அறியாமல் தீமை செய்கின்றார்கள். அதனால் இனிமேல் வள்ளிக்கொடியிலே கிழங்கு விளையாது. மலைமுகட்டிலே தேன்கூடுகட்டாது. கொல்லையிலும் தினைக் கதிர்கள் செழித்து வளரமாட்டா. இதை நீங்கள் காண்பீர்கள்!

கருமையான மலையிலே விளையும் மூங்கிலைப்போல அழகிய தோள்களைக் கொண்டவர்கள் குறக்கன்னிப் பெண்கள். பார்த்தவர்கள் வைத்தகண் வாங்காமல் பார்ததக்கொண்டிருக்கக்கூடிய பேரழகைக் கொண்டவர்கள். காந்தள் மலரின் மணம் வீசுகின்ற உடலைக் கொண்டவர்கள். அவர்கள் ஒருபோதும் தவறு செய்யமாட்டார்கள். கணவரைத் தொழுது எழுகின்ற அவர்களது கற்புத் திறத்தினால்தான் அவர்களது தமையன்மார்களும் குறிதப்பாது அம்புவிடுகின்ற ஆற்றலைப் பெற்றுள்ளனர். இப்படிச் சொல்லி, நான் துணையோடு அறவழி நிற்பதைக் கண்ட என்தாய் என் தந்தையிடமும் அவருக்கு எற்றவாறு திறமையோடு எடுத்துரைத்தாள். அவர் கண்சிவந்து. வில்லையும் அம்பையும் மாறிமாறிப் பார்த்தார். ஒருநாள் முழுவதும் கோபத்தடனேயே இருந்தார். பின்னர் அவரின் கோபம் தணிந்தது. “இருவரிடமும் குற்றம் எதுவும் இல்லை” என்று சொல்லித் தனது செயலுக்காக வெட்கப்பட்டுத் தலைகவிழ்ந்தார்.

பெண்ணே! நீயும், உன்காதலனும் திருமணம் செய்வதற்காக மலையிலே உறைகின்ற தெய்வம் மகிழ்ந்து அருளவேண்டுமல்லவா? அதற்காக வேண்டி மகிழ்ச்சியோடு குரவையாடலாம் வா!

நல்லவளே! அந்த நந்நாள் வருமட்டும் நம்மவருடைய மலையிலே தமது வெட்கத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றவர் என்ன தவம் செய்தாரோ?

வளவிலே நிற்கின்ற வேங்கை மரத்திலிருந்து தாதுவிழுந்ததால் பொன்னிறமாகத் தோன்றுகின்ற முற்றத்திலே உண்மையாகவே அவரும் நானும் சேர்ந்து கூடுகின்ற நிகழ்ச்சி நடக்குமல்லவா? அவ்வாறு நனவிலே சேர்வது நடக்கின்றபோது அவரோடு கனவிலே உறவுகொள்கின்ற எண்ணத்தைக் கைவிடுவோம் அல்லவா?

வானத்தை முட்டுகின்ற மலை நாடனும் நீயும்ää திருமணத்தின்போது முன்னர் அறிந்திராதவர்கள் போல நடந்து கொள்வீர்களோ? அப்படி நடந்து கொண்டால் உங்கள் காதல் உறவகளையெல்லாம் கண்டு அறிந்த நானும் எதுவும் தெரியாதவள் போல மறைக்க மடியுமா? மேகத்தைத் தருகின்ற மலையையுடையவனடைய திருமணக்காட்சியைக் காணாமல் வெட்கப்பட்டுக் கைகளால் மூடப்படும் உன் கண்களும் கண்களா?

(என் கண்கள் இல்லாவிட்டாலென்ன) நானும் உன்கண்களால் கண்டு களிப்பேனே.

நெய்தல் மலரிதழ் மைதீட்டியதைப்போன்று விளங்கும் உனது கண்களும் என் கண்களைப் போலவே திறந்தேயிருக்கட்டும்.

இப்படியெல்லாம், தோழிப் பெண்கள் தலைவியோடு ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறாரகள். அப்போது திருமணத்திற்கு நாள் குறிப்பதில் வல்லவனான சோதிடனுடனும்,  அறிவார்ந்த சான்nறோருடனும் உயர்ந்த மலைக்குரியவன் பெண்கேட்டு வந்தான்.

அதனால் இனி, மூங்கில் போன்ற அழகிய தோளின் பசலை நோயும், ஊரவரின் வீண் பேச்சுக்களும், கனவிலே காதலனோடு சேர்தலும் நீங்கட்டும். உனது மைதீட்டிய கண்கள் அழகுடன் மலரட்டும்.

(தோழி கூற்றும், தலைவி கூற்றும் கலந்து இனியதோர் உரையாடல் போல அமைந்த பாடல் இது)
----- ----- -----

No comments: