திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
ஈழத்து   இலக்கிய  வளர்ச்சியில்   பிரதிபலன் எதிர்பார்க்காமல்    பங்களித்த  பரோபகாரி துரை. விஸ்வநாதன்.
   
                   
துரை  விஸ்வநாதன் 
            

கம்பனுக்கு  ஒரு  சடையப்ப  வள்ளலும்  - கார்ல் மார்க்ஸ_க்கு  ஒரு ஏங்கல்ஸ_ம்    இருந்தமையால்   காவியத்திலும்    - காலத்திலும் மானுடம்    மேன்மையுற்றது  என்பார்கள்.
இலங்கையில்   1970  இற்குப்பின்னர்    இலக்கிய  வளர்ச்சிக்கு இலக்கியம்    படைக்காமலேயே   அளப்பரிய  சேவைகள் புரிந்தவர்களாக   சிலர்  எம்மால்  இனம்  காணப்பட்டனர்.
அவர்களில்  ஓட்டப்பிடாரம்  ஆ. குருசாமி,  எம். ஏ. கிஷார்,  ரங்கநாதன் ஆகியோரின்    வரிசையில்   போற்றப்படவேண்டியவர்  துரை. விஸ்வநாதன்  அவர்கள்.    இலங்கை   முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தின்   இயங்கு  சக்திகளாகவும்  மல்லிகை   கலை  இலக்கிய மாசிகைக்கு  பக்கபலமாகவும்  இவர்கள்  திகழ்ந்தார்கள்.
1990   களில்  மல்லிகை  ஜீவா   கொழும்புக்கு  இடம்பெயர்ந்தபொழுது அவரதும்   மல்லிகையினதும்  எதிர்காலம்  கேள்விக்குறியானது. ஆனால்  -  விரைவிலேயே    ஆச்சரியக்குறியாக்கியவர்  துரைவி  என எம்மவர்களினால்   அன்புடன்  அழைக்கப்பட்ட  துரை  விஸ்வநாதன் அவர்கள்.
தமது   வாழ்நாள்  முழுவதும்   கலை,  இலக்கிய  ரசிகராகவே  இயங்கி    மறைந்த  துரைவியின்  இழப்பு  ஈழத்து  இலக்கிய வளர்ச்சிப்பாதையில்     ஈடுசெய்யப்பட  வேண்டிய  பாரிய  இழப்பாகும்.
துரைவி    அவர்கள்  தினகரன்  பத்திரிகையில்  ராஜ  ஸ்ரீகாந்தன் ஆசிரியராக    பணியாற்றிய  காலத்தில்  நடத்தப்பட்ட  சிறுகதைப்போட்டிக்கு    ஒரு   இலட்சத்து  ஒரு   ரூபாய்  வழங்கி ஊக்குவித்த   பெருந்தகை.     மலையக  இலக்கியவாதிகளுக்கும் மலையக    இலக்கிய  ஆய்வுகளுக்கும்  ஆதர்சமாகத்திகழ்ந்தவர்.
விஸ்வநாதன்   தமிழ்  நாட்டில்  துரையூரில்    28-02-1931  ஆம்  திகதி பிறந்தார்.    1945   இல்    இலங்கை  வந்தார்.    வர்த்தகத்துறையில் ஈடுபட்ட  அவர் ,   1963    இல்   கண்டியில்  திருமணம்    முடித்து  1966 இல்    மாத்தளையில்   தமது   வர்த்தகத்தை     விஸ்தரித்தார்.    1976 இல்    அவர்  இலங்கைத்தலைநகருக்கு  பிரவேசமானது இலக்கியத்துறைக்கு    கிட்டிய   பாக்கியம்  எனலாம்.வர்த்தகத்துறைகளில்   ஈடுபடும்    பெரும்பாலானோருக்கு   வாசிக்கும்    பழக்கம்    அரிதானது. ஆனால்,  துரை  விஸ்வநாதன் இதுவிடயத்தில்    ஒரு   விதிவிலக்கு.  அவர்  சிறந்த  வாசகர்.  அத்துடன் தாம்    வாசித்தவற்றிலிருந்து  குறிப்புகள்  எடுத்து  தமது  நாட்குறிப்பில்   தவறாமல்  பதிவுசெய்துவரும்  இயல்பினையும் கொண்டிருந்தவர்.
அவர்    தம்மை   கலை,  இலக்கிய  விமர்சகராகவே வளர்த்துக்கொண்டிருக்கமுடியும்.    ஆனால்,   தாம்  படித்தவற்றை  சக இலக்கிய    நண்பர்களிடம்  நயந்துகொள்ளும்  பண்பினராகவே  தம்மை இனம்  காண்பித்தார்.
எழுத்தாளர்களின்   படைப்புகளை   எழுத்தாளர்களே  படித்து கருத்துச்சொல்லும்  மரபு  குறைந்துவரும்  இக்காலத்தில்  துரை விஸ்வநாதன்   தாம்   வாழ்ந்த  காலத்தில்  எம்மவர்களுக்கு முன்னுதாரணமாகத்திகழ்ந்தவர்.
ஒரு   படைப்பாளியின்  படைப்பை  படித்துவிட்டு  அதனை எழுதியவரை    நேரில்  காணும்   சந்தர்ப்பத்தில்  நேரடியாகவே கருத்துச்சொல்லும்    அவரது  இயல்பு  எம்மைக்கவர்ந்தது.
தினகரனில்   இலட்சத்து  ஒரு  ரூபா   சிறுகதைப்போட்டியை அறிவித்தார்.    போட்டியும்  நடந்தது.  ஆனால்,  போட்டி  முடிவுகள் வெளியாகும்  முன்பே   அவர்  நிரந்தரமாக  விடைபெற்றார்.   எனினும் அவரது   அருமைப்புதல்வர்  திரு. ராஜ்  பிரசாத்  தந்தையின்  பணியை இடை  நிறுத்திவிடாமல்  தொடர்ந்தார்.

மல்லிகை ஜீவா 


1998   டிசம்பர்   மாதம்  21  ஆம்   திகதி  துரைவி  மறைந்தார்.   அவரது மறைவுக்குப்பின்னர்   தினகரன்    போட்டியில்  பரிசுபெற்றவர்களுக்கு பரிசும்    வழங்கப்பட்டு  குறித்த  பரிசுச்  சிறுகதைகளின்   தொகுப்பும் வெளியானது.
தினகரன்   வெளியாகும்  லேக்ஹவுஸ்    கட்டிடத்தின்   கேட்போர் கூடத்தில்    நடந்த  முதல்  நிகழ்வாக  அந்த  விழா   நிறைவாக நடந்தமை    முக்கியமான  தகவல்.    அப்படி  ஒரு  மண்டபம்  அங்கே இருக்கும்  தகவலே    அன்றுதான்    வெளி  உலகத்திற்கும்   தெரிந்தது.
துரைவி    பதிப்பகத்தினால்    பத்துக்கும்  மேற்பட்ட  நூல்கள் வெளியாகியிருப்பதாக    அறியக்கிடைக்கிறது.   அவர்  கொழும்பில் வாழ்ந்த    காலத்தில்  தமது  வர்த்தக  ஸ்தாபனத்தின்   மேல்  மாடியில்   பல  இலக்கியச்சந்திப்புகளை  நடத்துவதற்கு  ஏற்பாடுகளை    செய்து கொடுத்தார்.
சுமார்     11   வருட    காலத்தின்  பின்னர்  நான்  தாயகம்  திரும்பியிருந்த    1997   ஆம்  ஆண்டில்  அவரது  வர்த்தக  ஸ்தாபனத்தின்    மேல்  மாடியில்  ஒரே    சந்தர்ப்பத்தில்  மூன்று நிகழ்வுகளை   ஒழுங்கு  செய்திருந்தார்.  அன்றைய  தினம்  என்னை வரவேற்கும்   நிகழ்ச்சியும்  நண்பர்  ராஜ  ஸ்ரீகாந்தனுக்கு  தினகரன் நாளேட்டில்    ஆசிரியப்பணி  கிடைத்ததையிட்டு  பாராட்டு  நிகழ்வும் நடந்தது.   அத்துடன்  அந்த  வாரத்தின்  இறுதியில்  வெள்ளவத்தை இராமகிருஷ்ண    மண்டபத்தில்  இலங்கை    முற்போக்கு  எழுத்தாளர் சங்கம்   நடத்தவிருந்த  முழுநாள்  இலக்கிய  கருத்தரங்கு தொடர்பான  இறுதி  ஆலோசனைக்கூட்டமும்  அங்கு  நடைபெற்றது.
அன்று   இந்த    மூன்று  நிகழ்ச்சிகளுக்கும்  வந்திருந்த  அனைவருக்கும் தேநீர்  விருந்துபசாரமும்  வழங்கினார்  துரை   விஸ்வநாதன்.
மூத்த    எழுத்தாளர்  தெளிவத்தை   ஜோசப்  அவர்கள்  தொகுத்திருந்த மலையக   இலக்கிய  வாதிகளின்   சிறுகதைகள்  மற்றும் மலையகச்சிறுகதைகள்    தொகுப்பு -  தெளிவத்தையின்   மலையக இலக்கிய  வரலாறு,     சாரல்நாடன்  எழுதிய    ஆய்வு  நூல்   என்பன தமிழ்     இலக்கிய  உலகிற்கு   மிகவும்  முக்கியமான  வரவுகளாகும். நிகழ்காலத்திலும்   எதிர்காலத்திலும்    பல்கலைக்கழக  மாணவர்கள் மேற்கொள்ளும்    தமது  பட்டப்படிப்பு  ஆய்வுகளுக்கு  உசாத்துணை நூல்களாகவும்      விளங்குவது  துரைவி    பதிப்பித்த  இந்த  நூல்களே.
நான்   1997   இல்   அவரை   சந்தித்தபொழுது  அவர்  பதிப்பித்த நூல்களைத்    தந்தார்.   அதற்கு  நான்    பணம்   கொடுத்தபொழுது   வாங்க மறுத்தார்.    அவுஸ்திரேலியாவில்  அவற்றை   உரியமுறையில் மற்றவர்கள்  பயன்படுத்த  வழங்குமாறு  தமது  கையொப்பம் இட்டுத்தந்தார்.    அவர்  சொன்னவாறே  அவற்றை   மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
புகலிடத்தில்   குறிப்பிட்ட  நூல்கள்  பலருக்கும்  பயன்  தந்தது. அவுஸ்திரேலியாவில்    பல்கலைக்கழகத்திற்கு  பிரவேசிக்கும்பொழுது தமிழையும்    ஒரு  பாடமாகப்பயில  முடியும்.    அவ்வாறு  பயின்ற  பல    மாணவர்களுக்கு  அந்த  நூல்கள்  உசாத்துணையாகவும் விளங்கின.

தெளிவத்தை யோசெப் 

தெளிவத்தை    ஜோசப்  எழுதி  துரைவி    பதிப்பக  வெளியீடாக  வந்த மலையக    இலக்கிய  வரலாறு  இலங்கைக்கு  மட்டுமல்லாது தமிழகத்திற்கும்    மிகுந்த  பயன்  தரவல்லது.
நண்பர்    மேமன்  கவியின்  கவிதை    நூலையும்  துரைவி   பதிப்பகம் வெளியிட்டபொழுது    அந்நிகழ்வில்   ( 2005   இல்)   கலந்துகொள்ளும் வாய்ப்பும்    எனக்கு   கிட்டியது.
சிறந்த   கலை  -  இலக்கிய  ரசிகரான   துரைவி   அவர்களை மல்லிகையும்    அட்டைப்பட  அதிதியாக  கௌரவித்திருக்கிறது. அத்துடன்    அவர்  சமூகப்பணியாளராகவும்  இயங்கியவர்.   அதனால் அவருக்கு    சமாதான  நீதிவான்  தகுதியும்  கிட்டியது.
1997    இல்  மத்திய  மாகாண    அரசின்  சாகித்திய  விழாவில்  விருது வழங்கி   பாராட்டப்பட்டார்.    இலக்கிய  நண்பர்  இராமன் இயக்குவிக்கும்    கண்டி  மக்கள்  கலை    இலக்கிய  ஒன்றியம்    துரைவி   அவர்களுக்கு  இலக்கிய  காவலர்  என்ற    பட்டத்தை வழங்கி    தனது  இருப்பை    உறுதிசெய்திருக்கிறது.
துரைவி  இவ்வாறு  வாழும்  காலத்திலேயே    பாராட்டி கௌரவிக்கப்பட்டமை    மனதிற்கு  நிறைவானது.

மேமன் கவி 

1997    இல்  நான்  இலங்கை    வந்தபொழுது  மல்லிகைப்பந்தல் வெளியீடாக    வந்த  எனது  பாட்டி  சொன்ன  கதைகள்  நூலின் வெளியீட்டு   அரங்கையும்  எனது  இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாக்காலத்தை  நினைவுபடுத்தும்  விதமாக  என்னை இலக்கிய    உலகிற்கு  அறிமுகப்படுத்திய  மல்லிகை    ஆசிரியர்  திரு. டொமினிக்   ஜீவா   அவர்களை   கௌரவிக்கும்  நிகழ்வையும் நீர்கொழும்பு    இந்து  இளைஞர்  கலாசார  மண்டபத்தில்  நடத்தினேன்.
அந்த    விழாவுக்கு  கொழும்பிலிருந்து  தமது  வாகனத்தில்   பலரையும்   அழைத்து  வந்தவர்  துரை. விஸ்வநாதன்  அவர்கள். அன்று   அவரே  வாகனத்தின்  சாரதி.
அச்சமயம்   தினக்குரல்  பிரதம  ஆசிரியராக  பணியிலிருந்த சிவநேசச்செல்வன்,   தற்பொழுது  பிரதம  ஆசிரியராக பணியிலிருக்கும்   அன்றைய  செய்தி  ஆசிரியர்  தனபாலசிங்கம், பிரேம்ஜி   ஞானசுந்தரன்,   தெளிவத்தை    ஜோசப்,   மாணிக்ஸ் மாணிக்கவாசகர்,    மேமன்  கவி,   திக்குவல்லை   கமால், வன்னியகுலம்,   தங்கவடிவேல்  மாஸ்டர்,    வதிரி  சி. ரவீந்திரன், சூரியகுமாரி    பஞ்சநாதன்,   நவமணி    சிவலிங்கம்,  மு. பஷீர், நீர்கொழும்பூர்   முத்துலிங்கம்,   ஆப்தீன்,   கவிஞர்  நீர்கொழும்பு தருமலிங்கம்  ,  தினக்குரல்   சிரேஷ்ட   பத்திரிகையாளர்   நிலாம் உட்பட  பலரும்  திரளாக  கலந்துகொண்ட  அந்த நிகழ்வில்   துரைவி    அவர்களும்  உரையாற்றினார்.
அதுவே    நான்   கேட்ட  அவரது  இறுதி  உரையாகும்.
சுமார்   ஒரு  வருட   காலத்தில்  அவர்  எம்மையெல்லாம் விட்டுப்பிரிந்தார்.    அவர்  விட்டுச்சென்ற  பணிகளை   அவருடைய அருமைப்புதல்வர்   திரு. ராஜ்  பிரசாத்  அவர்கள்   தொடருவது துரைவி    அவர்கள்   நினைவுகளாக  எம்முடன்; வந்துகொண்டிருப்பதான   உணர்வுகளையே    தந்துகொண்டிருக்கிறது.
மீண்டும்    நான்   இலங்கை    வந்திருக்கும்   இச்சந்தர்ப்பத்தில்  துரைவி அவர்களின்   84  ஆவது    பிறந்த  தினத்தை   முன்னிட்ட நினைவுப்பேருரையும்    சில  இலக்கிய  வாதிகளுக்கு  விருது வழங்கும்    நிகழ்வும்  நடைபெறுவதையிட்டு  மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
துரைவி    அவர்கள்  அன்று  விதைத்த  இலக்கிய  நல்விதை விருட்சமாக    வளர்ந்திருக்கும்    வேளையில்  அந்த  நிழலில்  நாம் ஒதுங்கியிருப்பதும்   நற்பாக்கியம்தான்.
letchumananm@gmail.com
----0---


No comments: