ஏ.வின்சென்ட் ஒளியில் கலந்த கலைஞன்!

.

‘வின்சென்ட் மாஸ்டர்’ என்று தமிழ் சினிமா உலகினரால் அன்புடன் அழைக்கப்படும் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் காலமாகிவிட்டார். 1928-ம் ஆண்டு கோழிக்கோட்டில் பிறந்த வின்சென்டின் தாய்மொழி கொங்கணி. தந்தையின் புகைப்பட ஸ்டுடியோவில் கிடைத்த அனுபவத்தால் புகைப்படக் கலையில் சிறுவயதிலேயே வின்சென்ட்டுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
1947-ம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர் ஜெமினி ஸ்டுடியோவில் பணியில் சேர்ந்தார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் கே.ராம்நாத் மற்றும் கமால் கோஷிடம் அனுபவம் பெற்றார். அதற்குமுன்பு அவர் முதலில் ஒளிப்பதிவு செய்த படம் ‘ப்ரதுகு தெருவு’ என்ற தெலுங்குப் படம். இளைஞராக இருந்த வின்சென்டை இப்படத்தின் ஒளிப்பதிவுக்காகப் பரிந்துரைத்தவர் பழம்பெரும் நடிகை பானுமதி.
தமிழில் ‘அமரதீபம்’ வாயிலாக வின்சென்ட் தனது சகாப்தத்தைத் தொடங்கினார். அமரதீபம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் பிரபல இயக்குநர் மணி ரத்னத்தின் தந்தை ரத்னம். அமரதீபத்தின் கதை, வசனம் ஸ்ரீதர். அப்போதுதான் ஸ்ரீதர்-வின்சென்ட் என்ற காவியக் கூட்டணி தொடங்கியிருக்க வேண்டும்.
கேமரா வின்சென்ட்
தமிழ் சினிமாவைக் காட்சிசார்ந்த கலையாக மாற்றியதில் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்டுக்குப் பெரிய பங்குண்டு. கேமரா வின்சென்ட் என்று அக்காலத்திலேயே ஒளிப்பதிவாளரைச் சுட்டி வெகுஜனங்கள் பேசும் முதல் கௌரவம் இவருக்குத்தான் கிடைத்தது. இயக்குநர் ஸ்ரீதருடன் இவர் சேர்ந்து பணியாற்றிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவை.
ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ அக்காலத்தில் தொழில்நுட்ப ரீதியில் சோதனை முயற்சியாகப் பேசப்பட்டது. அந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து முடிக்க எடுத்துக்கொண்ட நாட்கள் 28. நான்கே பேர்தான் நடிகர்கள். ‘சொன்னது நீ தானா’ என்ற இறவாப் புகழ்பெற்ற அந்தப் பாடல் ஒரு சின்ன அறையில் எடுக்கப்பட்டது. வின்சென்ட்டின் வருகைக்கு முன்பு ஃப்ளாட் லைட்டிங் என்று சொல்லப்படும் முறையே ஒளியமைப்பில் இருந்தது.


கதை நடக்கும் பொழுதுகளுக்கேற்ப இயற்கையான ஒளி மற்றும் நிழல்களைக் கொண்டுவந்தவர் வின்சென்ட்தான். ஜூம் லென்ஸ் இல்லாத காலத்திலேயே ஜூம் ஷாட்கள் தரும் அனுபவத்தைத் தன் திரைப்படங்களில் உருவாக்கியவர். இது லண்டனைச் சேர்ந்த கோடாக் நிறுவனத் தொழில்நுட்பக் கலைஞர்களையே திகைக்கச் செய்தது.
ஜூம் காட்சி
டி. பிரகாஷ் ராவ் இயக்கிய ‘உத்தம புத்திரன்’ படத்தின் படப்பிடிப்பு மைசூரில் உள்ள பிருந்தாவனில் நடந்துகொண்டிருந்தபோது ஜூம் ஷாட்டுக்கான தனது முதல் பரிசோதனையை வின்சென்ட் செய்தார். அதற்கு அங்கே சுற்றுலாவுக்கு வந்திருந்த பிரெஞ்சுப் பயணி ஒருவரின் கேமரா லென்சைக் கடன் வாங்கி அந்த ஜூம் ஷாட்டை எடுத்ததாக ஒரு நேர்காணலில் நினைவுகூர்ந்துள்ளார்.
“பில்லியர்ட் போலக்ஸ் 16 எம்.எம் காமிராவை என்னோடு அந்தப் படப்பிடிப்புக்குக் கொண்டு சென்றிருந்தேன். கடன்வாங்கிய லென்சால் ஜூம் விளைவைத் தரமுடியும். ஒரே ஷாட்டில் சிவாஜியையும் பத்மினியையும் படம்பிடித்தபடி கட் செய்யாமல் பத்மினியின் க்ளோசப்பையும் எடுக்க முடிந்தது.
இந்தப் பகுதியை மட்டும் 16 எம்.எம்-ல் படம்பிடித்ததால் அதை 35 எம்.எம்-க்கு ப்ளோ அப் செய்ய லண்டனுக்கு அனுப்பினோம். அவர்கள் அசந்துபோனார்கள்” என்கிறார். வின்சென்ட் இந்திய சினிமா ஒளிப்பதிவு துறையில் செய்த பங்களிப்பை பாலு மகேந்திரா முதல் பி.சி.ஸ்ரீராம் வரை பதிவுசெய்துள்ளனர்.
மரபை உடைத்தவர்
வின்சென்ட் திரைப்பட இயக்குநராக, மலையாளத்தில் உருவான யதார்த்தத் திரைப்பட அலை உருவானதன் முன்னோடியாகவும் இருந்தவர். இவர் மலையாளத்தில் இயக்கிய முதல் திரைப்படமான ‘நீலக்குயில்’ படத்தில் ஒரு பரிசோதனையைச் செய்தார். வசனம் பேசப்படும்போது பேசும் நடிகர்களின் மேல்தான் கேமரா அதுவரை கவனம் குவித்து வந்தது. நீலக்குயில் திரைப்படத்தில் வசனத்தைக் கேட்கும் கதாபாத்திரங்களின் முகங்கள் மற்றும் அவர்களது வெளிப்பாட்டைத் தனது காமிராவில் காட்டினார்.
இயற்கையான நிறங்களில் உள்ள செட்களை முதலில் வலியுறுத்தியவர் வின்சென்ட்தான். கறுப்பு-வெள்ளைப் படமாக இருந்தாலும் இயற்கையான நிறங்களுடன் பின்னணி இருக்க வேண்டும் என்பார் வின்சென்ட். அவர் முதல் திரைப்படமாக இயக்கிய நீலக்குயில் பெரும் வெற்றிபெற்றதோடு சினிமா தொழில்நுட்பத்திலும் மிகப்பெரிய மாற்றத்துக்குக் காரணமானது. சாரதா நடித்து இவர் இயக்கிய ‘துலாபாரம்’ மிகப் பெரிய வெற்றியையும் தேசிய விருதுகளையும் பெற்றது.
பாதை அமைத்த பங்களிப்பு
ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் லியான் ஷாம்ராய் (Leon Shamroy) மீது பெரும் ஈடுபாடு கொண்டவர் வின்சென்ட். அவர் ஞாபகமாகத் தன் பேரனுக்கு ஷாம்ராய் என்று பெயர் வைத்திருந்தார். மெட்ராஸை மையமாகக் கொண்டு ஸ்டுடியோக்களில் வளர்ந்த தென்னிந்திய சினிமா மற்றும் அதன் தொழில்நுட்ப வரலாற்றில் முக்கியமான பெயர்களில் ஒன்று ஏ.வின்சென்ட்.
45 ஆண்டுகள். ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு. மலையாளம் மற்றும் தமிழில் இயக்கிய படங்கள் 30 இருக்கும். கையில்படும் ஒளிவை வைத்தே அதன் அளவை அறியும் அனுபவத்திறன் கொண்ட இவரிடம், நவீன ஒளிப்பதிவு தொழில்நுட்பம் பற்றி அவரிடம் ஒருமுறை கேட்கப்பட்டது,
“நான் அனைத்து நவீன ஒளிப்பதிவுக் கருவிகளையும் பயன்படுத்தியிருக்கிறேன். நான் அவற்றைவிட முந்தி இருந்ததால், எந்தத் தொழில்நுட்பமும் எனது வேலையைப் பாதித்ததில்லை.” என்று கூறியிருக்கிறார். ஒளிப்பதிவுத் துறையில் பாதை அமைத்துக் கொடுத்த இந்த மாபெரும் கலைஞன் ஒளியில் கலந்துவிட்டார்.

No comments: