இலங்கைச் செய்திகள்


ராஜபக்ஷ குடும்பத்துடன் டோனியின் உறவு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: பிரதமர்

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

தனியார் பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல்

விமலின் மனைவி கைது

உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்




ராஜபக்ஷ குடும்பத்துடன் டோனியின் உறவு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: பிரதமர்




24/02/2015 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபொட்டிற்கு உள்ள நெருக்கம் குறித்து இலங்கை மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது என்று  பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.   
இந்த விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மௌனம் அதிருப்தியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ´தி அவுஸ்ரேலியன்´ ஊடகத்திற்கு அளித்துள்ள விசேட பேட்டியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார். 
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை தடுத்து நிறுத்துவதில் ராஜபக்ஷவினரின் உதவியை பெறுவதற்காக அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து மௌனமாக இருப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்தது. 
முன்னைய அரசாங்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் தொடர்பு இருந்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு படகுகள் மூலமாக ஆட்களை கடத்திச் செல்லும் நடவடிக்கையை ராஜபக்ஷவினருக்கு தொடர்புடையவர்களே மேற்காண்டுள்ளனர். இலங்கையின் பாதுகாப்பு படையினர் அல்லது பொலிஸாரின் ஓத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை.  
எனினும் இலங்கையின் புதிய அரசாங்கம் சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்லும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் . முன்னைய  ராஜபக்ஷ அரசாங்கம் இதனை செய்யவில்லை  அவர்கள் அதன்மூலம் ஏதோ நலனைப் பெற முயன்றுள்ளனர். 
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வேளை அப்போதைய ஆஸி.  குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்ததன் மூலமாக இராஜதந்திர நடைமுறைகளை பின்பற்ற தவறினார்.   இதன் காரணமாக தற்போதைய குடிவரவுத்துறை அமைச்சருக்கு உரிய மரியாதை அந்த கட்சியிடமிருந்து கிடைக்காமல் போகலாம்.   
ஆனால் தான் அவுஸ்திரேலியாவிற்கு எதிரானவன் அல்ல.   அவுஸ்திரேலியா அனுபவங்களிலிருந்து பாடம் கற்க வேண்டும்.   வேறு சில நாடுகளும் ராஜபக்ஷ அரசாங்கம் மனித உரிமைகளை நசுக்கிய காலத்தில் மௌனமாக இருந்துள்ளன. நன்றி வீரகேசரி 










சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை





23/02/2015 இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அவரது இந்த விஜயம் அமையவுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார். 
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் ஆகியோரையும் இவர் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, இவர் தனது விஜயத்தின் போது இந்தியாவுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






தனியார் பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல்




23/02/2015 மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ்ஸின் மீது ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இக்கல்வீச்சுத் தாக்குதலில் காயமடைந்த மதவாச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 
இன்று அதிகாலை குறித்த தனியார் பயணிகள் பஸ் ஆராச்சிக்கட்டு பிரதேசத்திற்கு அருகில் வந்த போது அங்கு நின்றுள்ள சிலர் பஸ்ஸின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பஸ்ஸின் சாரதி சிலாபம் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பஸ்ஸின் முன் கண்ணாடியும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் சிலாபத்தின் ஊடான தூரப் பிரதேச பயணிகள் பஸ் மீது மாதம்பை, மஹவௌ போன்ற பிரதேசங்களில் வைத்து இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிலாபம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனனர்.   நன்றி வீரகேசரி











விமலின் மனைவி கைது





23/02/2015 முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொய்யான தகவல்களை வழங்கி பெற்றுக்கொண்ட சர்ச்சைக்குரிய இராஜதந்திர கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே, சஷி வீரவன்ச மாலபே பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சஷி வீரவன்சவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவரே தாமாக சென்று வைத்தியசாலையில் தங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.  நன்றி வீரகேசரி











உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


24/02/2015 நானுஓயா பிரதேசத்திற்கு உட்பட்ட உடரதல்ல தோட்டத்தில் உள்ள 350ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்றும் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் தோட்டத்தில் 39 ஏக்கர் தேயிலை மலை பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதனால் வாரத்தில் மூன்று அல்லது ஐந்து நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படுவதால் வருமானம் குறைந்துள்ளதாக ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர். 
தோட்டத்தில் புதிதாக தொழிலுக்கு சென்றவர்களை பதிவு செய்யப்படாமல் நாள் சம்பளம் அடிப்படையிலேயே வேலை வழங்கப்படுகின்றது. 
வைத்தியசாலை சேவைக்காக வழங்கப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டி இரண்டு வருடமாக தோட்ட தொழிற்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நோயாளர்கள் தோட்ட லொறியில் கொண்டு செல்லப்படுகின்றனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேயிலை தூள் வழங்கப்படுவதில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். 

தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரி கறுப்புக் கொடி, வெள்ளை கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு கொடும்பாவி ஒன்றும் எரிக்கப்பட்டது. 
நன்றி வீரகேசரி







No comments: