‘கட்டியக்காரன்’. நாடகம் குறியீட்டுத் தளத்தில் - ந. முத்துசாமி

.


ந. முத்துசாமி எழுதி ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கிய ‘கட்டியக்காரன்’. நாடகம் குறியீட்டுத் தளத்தில் மட்டுமின்றி உண்மையிலேயே போலி முகங்களை அணிந்துகொள்ளத் தலைப்படும் சூழலின் நிர்ப்பந்தம் பற்றிப் பேசுகிறது. காட்சி ஊடகங்கள் எழுப்பும் மாயக் காம உலகம் நம் மீது தெளிக்கும் வசிய மருந்தின் விளைவாகக் கணவன் – மனைவி உறவு உள்ளிட்ட நமது அந்தரங்கம் யாவுமே பாவனைகளின் போர்வைக்குள் அடைக்கலமாகி விட்டதை நாடகம் உணர்த்துகிறது.
இன்றைய வாழ்வை நவீனத்துவ வசதிகளும் நெருக்கடிகளும் சூழ்ந்த பின்நவீனத்துவ வாழ்வு என்று சொல்லலாம். இதன் பல சிக்கல்களுக்கு அறிவியல் சார்ந்த தீர்வுகள் இல்லை. சமய நம்பிக்கைகளிலும் இதற்கு விடை இல்லை. நாம் செய்யத் தலைப்படும் ஒரு விஷயத்தை யார் நம்மிடம் கொண்டுவந்து சேர்த்தது என்பது நமக்கே தெரியாது. மாயக் கண்ணிகளால் ஆன தொடர் நிகழ்வின் ஒரு புள்ளிதான் நாம். நம் செயல்களுக்கு நாம் பொறுப்பும் இல்லை. அதன் விளைவுகள் மீது நமக்கு அதிகாரமும் இல்லை. தீர்வும் நம் கையில் இல்லை. காலத்தின் வலை நம் அனைவரையும் இறுக்கிக்கொண்டே இருக்கிறது. இந்த மாய வலையிலிருந்து விடுபட நம் பிரக்ஞையை மீட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. போலிக் குரல்கள், போலிப் படிமங்கள் ஆகியவற்றை இனம் கண்டு விலக்க வேண்டியிருக்கிறது. இது எந்த அளவுக்குச் சாத்தியமாகிறதோ அந்த அளவுக்குத்தான் நாம் விடுதலை பெற்றவர்களாக உணர முடியும்.
தனக்குப் பிடித்த நடிகையின் முகத்தைத் தன் மனைவிக்குப் பொருத்திப் பார்க்க விழையும் ஆண் மனத்தின் வேட்கையையும் அதைத் தூண்டும் சந்தைச் சூழலையும் இதனால் பெண்ணின் ஆன்மா கொள்ளும் அவமானத்தையும் ப்ரஸன்னா ராமஸ்வாமியின் நாடகம் வலுவாக நம் முன் நிறுத்துகிறது.
பழைய கட்டியக்காரனும் பழைய சொரணைகளும்
வழக்கொழிந்துபோக மறுக்கும் பழைய கட்டியக்காரரும் பழைய சொரணைகளும் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள். முகமூடி அணிந்து தன் துணைக்கு ஆறுதல் தர ஒப்புக்கொள்வதில் உள்ள அவமானத்தை உணரும் பெண்கள் திமிறி எழுகிறார்கள். எப்படிப்பட்ட சூழலிலும் தங்கள் சுயத்தை மீட்டுக் கொள்வதற்கான மன உறுதியை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். வலுவான சந்தைச் சூழலும் ஆண்களின் புலன் தேவைகளும் இறுதியில் வெல்லலாம். ஆனால் இவர்கள் தோற்க மறுத்துப் போராடிக்கொண்டே இருப் பார்கள். தோற்க மறுப்பதே எதிராளியின் வெற்றியை மறுக்கும் செயலாக இந்தப் போராட்டம் அர்த்தம் பெறும்.
முத்துசாமியின் கதையும் ப்ரஸன்னாவின் காட்சிப்படுத்தலும் சேர்ந்து நம்மையும் நம் காலத்தையும் குறித்து ஆழமான கவலைகளையும் சலனங்களையும் ஏற்படுத்துகின்றன. 90 நிமிடங்கள் நடக்கும் இந்த நாடகம் சமகாலத்தின் பல்வேறு பரிமாணங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டிவிடுகிறது.
தவறவிட்ட பரிமாணம்
சமகாலத்தின் மிக முக்கியமான பிரச்சினையைப் பேசும் இத்தகைய நாடகத்தை மேலும் நேரடியான மொழியில் அணுகியிருந்தால் அதன் தாக்கம் எப்படி இருந்திருக்கும் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. நவீன நாடக மேடையில் பழக்கமாகிவிட்ட படிமங்கள் காலப்போக்கில் தேய்படிமங்களாக மாறிவிடும் அபாயங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
அந்தரங்க உறவுகளில் சந்தைச் சூழல் ஏற்றியிருக்கும் போலி பாவனைகளைச் சித்திரிக்கும் இந்த நாடகம் பெண்களை இந்தப் போக்கின் இலக்காகவும் பலிகளாகவும் பார்க்கிறது. பெண்கள் பண்டமாக்கப்பட்டுவரும் காலத்தில் பொருத்தமான சித்திரிப்புதான் இது. எனினும் இதே சூழலில் பெண்களும் நுகர்வோராக இருக்கும் யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க நாடகம் மறுக்கிறது. பாவனைகள் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் தேவைப்படுகின்றன. பெண்கள் பண்டமாக மட்டுமல்லாமல், பாவனைகளின் இலக்காக மட்டுமல்லாமல், அவர்களும் நுகர்வோராக இருக்கும் காலம் இது. இதன் பின்னணியிலும் காட்சி ஊடகம் சார்ந்த சந்தைச் சூழலே இருக்கிறது எனினும் இந்தப் பரிமாணத்தை நாடகம் முற்றாகத் தவிர்த்துவிடுகிறது. பெண்களைச் சந்தை வேட்டையின் இலக்காக மட்டுமே பர்க்கிறது. பன்முக நோக்கும் வெளிப்பாடுகளும் கொண்ட நாடகத்தின் போதாமையாகவே இதைப் பார்க்க முடிகிறது.
| கட்டியக்காரன் - இயக்கம்: ப்ரஸன்ன ராமஸ்வாமி | கதை: ந.முத்துசாமி | மேடை ஒளி: நடேஷ் | மேடையேற்றம்: 30, அலியான்ஸ் ஃபிரான்ஸே, சென்னை |

http://tamil.thehindu.com/

No comments: