இலங்கைச் செய்திகள்


வெவஸ்சை தோட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு நீதிபதி உத்தரவு

மண்மேடு சரிந்து விழுந்ததில் தாயும் மகளும் பலி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 24 முறைப்பாடுகள் : கபே

புலிகளின் எல்பா சிறை கூடங்களின் இரகசியங்களை தேடுகிறது புலனாய்வு பிரிவு

பல்கலை மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

 ''கருணை இருந்தால் சேர்ந்து வாழ்வோம்,இல்லையேல் செத்துமடிவோம்'' அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட லயன்களுக்கு மீண்டும் சென்ற மீரியபெத்த மக்களின் பரிதாபம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்பா சிறைக்கூடம் : இரண்டாம் கட்ட சாட்சி சேகரிப்பு

வெவஸ்சை தோட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு நீதிபதி உத்தரவு

02/12/2014  பதுளை வெவஸ்சை பெருந்தோட்டப்பிரிவில் மண்சரிவு  ஏற்படும் அபாயம் நிலவுவதால் அங்குள்ள பதினெட்டு தொழிலாளர் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி மகேசி பிரியதர்சினி த சில்வா வெவஸ்சை பெருந்தோட்ட முகாமைத்துவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.


பதுளைப் பொலிசார் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த விசேட மனுவொன்றை நேற்று   விசாரிக்கும் போதே நீதிபதி நேற்று மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
வெவஸ்ஸை பெருந்தோட்டப் பிரிவின் தொழிலாளர்கள் மண்சரிவு அபாயம் ஏற்பட்டதினால் தமக்கு மாற்று பாதுகாப்பு இடமொன்றினைப் பெற்றுத்தருமாறு கோரியும் தோட்ட முகாமைத்துவம் அக்கோரிக்கையை செவிமடுக்காமை தொடர்பாகவும் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை பரிசீலனை செய்த நீதிபதி தோட்டத் தொழிலாளர்கள் விடுக்கும் கோரிக்கைகளை தோட்ட முகாமைத்துவம் செவிமடுக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் அச்சத்தினால் தொழிலாளர்கள் தோட்ட முகாமைத்துவத்திற்கு அறிவித்துள்ளார்கள். இவ் அறிவிப்பு புறக்கணிக்கப்பட்டு வரும் பட்சத்தில்  தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
ஆகையினால் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாற்று பாதுகாப்பான இடங்களைத் தெரிவு செய்து அவர்களை குடியமர்த்துமாறு நீதிபதி தோட்ட முகாமைத்துவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி 




மண்மேடு சரிந்து விழுந்ததில் தாயும் மகளும் பலி

02/12/2014  பொகவந்தலாவை - லொய்னோர்ன் தோட்டத்தில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு  குறித்த வீட்டில்  நித்திரையில் இருந்த தாயும் மகளுமே  உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த 45 வயது மதிக்தக்க தாய் (எஸ்.விஜயகுமாரி) மற்றும் 19வயது பெண் (பி.துஷாரா) ஆகிய இருவரின் சடலங்கள்  பிரேத பரிசோதனைக்காக  பொகவந்தலாவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி வீரகேசரி






ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 24 முறைப்பாடுகள் : கபே

01/12/2014 ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில் இதுவரை 24 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் கொழும்பிலேயே அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தற்போதுவரை 24 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு அப்பால் அரச உடைமைகளை தேர்தல் பிரசாரத்திற்கு அதிகளவில் ஆளும் தரப்பினர் ஈடுபடுத்தி வருவதாகவும் அவ்வமைப்பு மேலும் சுட்டிக்காட்டியது.    நன்றி வீரகேசரி











புலிகளின் எல்பா சிறை கூடங்களின் இரகசியங்களை தேடுகிறது புலனாய்வு பிரிவு

03/11/2014 தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்பா - 2 , எல்பா - 5 ஆகிய சிறைக்கூடங்கள் தொடர்பிலான இரகசியங்களை தேடிப் பயங்கரவாத புலனாய்வு பிரிவு நெடுங்கேனி, ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த இரு சிறை கூடங்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரத்ன, இராணுவ அதிகாரி லக்கி உள்ளிட்ட 80 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள 4 பிரதான சந்தேக நபர்களின் வாக்கு மூலங்கள் நேரில் கண்ட சாட்சி ஒருவரின் வாக்குமூலத்திற்கு அமைவாக ஒட்டுசுட்டான் நெடுங்கேனி பிரதான வீதியிலிருந்து 2 கி. மீ.க்கு அப்பால் உள்ள பெரிய இத்திமடு காட்டில் தடையங்களை தேடி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரும் தடையவியல் நிபுணர்களும் அரச இராசயன பகுப்பாய்வாளர்களும் விசேட சட்ட வைத்திய அதிகாரி குழுவும் ரஜரட்ட ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களின் குழுவினரும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். 
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன டி அல்விஸ் கட்டுப்பாட்டில் நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட தடையங்களை தேடிய நடவடிக்கையில் மேலதிக பரிசோதனைகளுக்காக மண் மற்றும் எறிந்த எச்சங்கள் சில இரசாயன பகுப்பாய்வாளர்களால் மேலதிக பகுப்பாய்வு நடவடிக்கைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பான நீதிவான் நீதிமன்ற பரிசோதனைகள் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எம்.ஐ. வகாப்தீனினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரின் உத்தரவிற்கு  அமையவே  அகழ்வு பணிகளை மேற்கொண்ட தடையங்களை சேகரிக்கும் நடவடிக்கையின் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நேற்று ஆரம்பித்தனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு சாட்சியாளர் வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் நேற்று அகழ்வு பணி இடம்பெற்ற பெரிய இத்தி மடு காட்டுப்  பகுதியில் 28 சிவிலியன்களை கண்களை கட்டி சுட்டு கொலை செய்து விட்டு டீசல் சீனியுடன் சேர்த்து எறித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி அகழ்வுகளை மேற்கொண்ட இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் எறிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த  இடத்தில் உள்ள மண்ணில் டீசல் கலந்துள்ளதை உறுதி செய்துள்ளதுடன் நேற்றைய தினம் எறிந்த எச்சங்கள் சில அவர்களால் மேலதிக பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக  பெற்றுக் கொள்ளப்பட்டது.
சுமார் 220 மீற்றர்  சதுர அடி பிரதேசம் நேற்று பெரிய இத்தி மடு காட்டில் பகுப்பாய்வு மற்றும் அகழ்வு பணிகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று மற்றும் நாளைய தினம்  நெடுங்கேனி பிரதேசத்தின் பிரிதொரு காட்டுப் பகுதியிலும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு பகுதியிலும் அகழ்வு பணிகளை மேற்கொண்டு விசாரணைகளை தொடர பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அல்விஸ் சிரேஷ்ட சட்ட வைத்திய நிபுணர் உப்பில ஆட்டிகல, அரச இரசாயன பகுப்பாய்வு நிறுவனத்தின் பிரதி பகுப்பாய்வாளர் மடவல, தொல்பொருள் ஆய்வகத்தின் வவுனியா பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரி பிரியந்த, நில அளவை திணைக்களத்தின் அதிகாரி கல்தேரு உள்ளிட்டவ்கள் விசாரணைகளை நேற்று நடத்தினர்.
இன்றைய தினம் நெடுங்கேனி சமணன் குளம் காட்டுப் பகுதியில் 50 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு எறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும்  நாளைய தினம் பொலிஸ் பரிசோதகர் ஜெயரத்னம் கொலை தொடர்பிலும் விசேட விசாரணைகளையும் தடய சேகரிப்பும் அகழ்வு பணிகளும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி












பல்கலை மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

03/11/2014  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை இன்று முன்னெடுத்தனர்.







நன்றி வீரகேசரி












''கருணை இருந்தால் சேர்ந்து வாழ்வோம்,இல்லையேல் செத்துமடிவோம்'' அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட லயன்களுக்கு மீண்டும் சென்ற மீரியபெத்த மக்களின் பரிதாபம்

04/12/2014 கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதில் கைவிடப்பட்ட நிலையில் கடவுளுக்கு கருணை இருந்தால் சேர்ந்து வாழ்வோம் இல்லையேல் எல்லோரும் செத்துமடிவோம் என்று கூறி மண்சரிவு அபாய எச்சரிக்கை பிரதேசமான தமது லயன் குடியிருப்புக்களுக்கு மீண்டும் சென்று விட்டனர்.



அனர்த்த முகாமைத்துவ பிரிவின் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாத மேற்படி மக்களில் நேற்று புதன்கிழமை சுமார் 200 பேர் வரையிலானோர் மண்சரிவு இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள 14, 15ஆம் இலக்கங்களைக் கொண்ட லயன் குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளனர்.
பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த மேற்படி மக்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அவர்கள் புதிய வீடுகளுக்கு செல்லும்வரையில் பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் கடந்த பல நாட்களாக மேற்சொல்லப்பட்ட தேவைகள் தட்டிக்கழிக்கப்பட்டு வந்துள்ளன.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் விரக்தியடைந்த நிலையிலேயே இம்மக்கள் மேற்கண்டவாறு முடிவெடுத்து தமது சொந்த லயன் குடியிருப்புகளுக்குத் திரும்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான உதவிகளைப் பெற்றுக்கொடுக்குமாறு விடுத்த கோரிக்கைகள் அதிகாரிகளால் கவனத்திற்கொள்ளப்படவில்லை என்றும் மேற்படி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேற்படி பாடசாலையில் தங்கியிருந்தவர்களில் முன்னூறு பேரைக் கொண்ட 57 குடும்பங்கள் மாக்கந்தை பெருந்தோட்டத்தில் மூடப்பட்டிருந்த தேயிலைத் தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகள் மற்றும் உணவு வழங்கல் சீராக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இவர்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படுமென்று சம்பந்தப்பட்டவர்களினால் கூறப்பட்டு  வருகின்றது. எனினும் அதுவும் இடம்பெறவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இம்மக்களுக்கு வழங்கப்படுவதற்கென களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த உலர் உணவுப் பொருட்கள் இரவு வேளைகளில் இரகசியமாக வெளியேற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அடிப்படை வசதிகள் தமக்கு போதுமான வகையில் கிடைக்கவில்லையென்றும் மக்கள் தமது கவலையைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறத்திலும் மண்சரிவு அபாயம் ஏற்படுமென்ற அச்சத்தினால் வெளியேறி தஞ்சம் அடைந்திருப்பவர்கள் மஞ்சள் நிறத்திலும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவ்வகையில் பச்சை நிறத்தில் வகைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் மாக்கந்தை தேயிலைத் தொழிற்சாலையிலும் மஞ்சள் நிறத்தில் வகைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பூனாகலை தியகல தோட்டத்தில் மண்சரிவு அபாயம் ஏற்படுமென்ற அச்சத்தில் 200 பேர் தொடர்ந்தும் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலிருக்கின்றனர். இவர்கள் மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். வித்தியாலயத்தின் ஐந்து கட்டிடங்களில் இவர்கள் தங்கியுள்ளர்.

இவ் வித்தியாலயக் கட்டிடத் தொகுதிகள் தஞ்சம் அடைந்திருப்பவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டி ருப்பதால் கட்டிடங்களுக்கும் தளபாடங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 
மக்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் மாணவர்களின் கற்கை நடவடிக்கைகளுக்காக கட்டிடங்கள் புனரமைக்கப்பட வேண்டிய அவசியமும் உருவாகியுள்ளது. அத்துடன் கடந்த மாதம் பாடசாலைக்கான மின்சார கட்டணமாக 18 ஆயிரம் ரூபாவுக்கான பட்டியல் மின்சார திணைக்களத்தினால் வித்தியாலய அதிபருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இப்பணத்தை செலுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு இல்லையென்றும் சம்பந்தப்பட்ட திணைக்களம் அதிபருக்கு அறிவித்துள்ளது. அதிபரும் செய்வதறியாத நிலையிலுள்ளார். 
 நன்றி வீரகேசரி







தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்பா சிறைக்கூடம் : இரண்டாம் கட்ட சாட்சி சேகரிப்பு
04/12/2014 தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 சிவிலியன்களின் கொலை தொடர்பான இரண்டாம் கட்ட சாட்சி சேகரிப்பு நடவடிக்கைகள் நேற்று ஒட்டிசுட்டான் - நெடுங்கேணி பிரதான வீதியை அண்மித்த சமனன் குளம்காட்டுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன மீ அல்விஸின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின. சமனன்குளம் காட்டில் புலிகளால் 50 வரயிலான சிவிலியன்கள் சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பமாகின. 
எல்பா - 2, எல்பா - 5 சிறைக்கூடங்களிலிலிருந்த சிவிலியன்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை சமனன்குளம் காட்டுப் பகுதிக்கு லொறியில் அழைத்துச் சென்ற சாரதி கைதாகியுள்ள நிலையில் அவரின் அடையாள காண்பிப்புக்கு அமைவாக தடய சேகரிப்பு அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றன.
பெரிய இத்திமடு காட்டில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளுக்கு மேலதிகமாகவே அடையாளம் காணப்பட்ட  இரண்டாவது இடமான சமனன்குளம் பகுதியில் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.  இதன் போது சமனன்குளம் காட்டுப் பகுதியில் கூட்டுப் படுகொலை ஒன்று இடம்பெற்று சடலங்கள் எரிக்கப்பட்டமைக்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் போது சுமார் 64 மீற்றர் சதுர கி.மீ.கள்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ரீ - 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவை ஒன்று மீட்கப்பட்டதுடன் மேலும் 35 இடங்கள் அவ்வாறான இரும்பிலான தடயங்கள் இருக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த குற்றம் இடம்பெற்றதாக கூறப்படும் இடத்தில் மரங்கள் பல வருடங்களுக்கு முன்னர் எரிந்த தடயங்கள் மரங்களில் காணப்பட்ட ஒரு வகையான ஒட்டுண்ணி வகைகள் குறித்த இடத்துக்கும் காட்டின் ஏனைய பகுதிக்கும் இடையிலான வித்தியாசங்கள் இதன் போது தாவரவியல் தடயங்களாக பதிவாகின.
இது தொடர்பான விசாரணைகள் தொடரும் நிலையில் சந்தேக நபர்கள் நால்வரும் சாட்சியாளரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு  வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் இவ்வாறான குற்றமொன்று இடம்பெற்றுள்ளதையும் சாட்சியங்கள் அழிக்கப்பட்டதையும் உறுதி செய்துள்ளனர்.
நேற்றைய விசாரணைகள் தடய சேகரிப்பு மற்றும் ஆய்வுகளில் 20 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் கொலை விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட இரு இடங்களிலும் மண்ணில் டீசல் கலந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னர் எரிக்கப்பட்ட 80 பேர் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.  நன்றி வீரகேசரி









No comments: