தமிழ் வித்தகர் தில்லைச்சிவன் - பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்

.
06.12.2014

"வேலணை வாழ் வித்தகரே'  என உயர்திரு சாலை இலந்திரயன் வேலணை அம்மன் கோவில் பாடசாலையில் இடம்பெற்ற திருமறை மகாநாட்டில் ஒலித்த கவி வரிகள் என் இளமைக் காலத்திலிருந்து இன்றும் ஒலிப்பதுண்டு...  ஓவியர் நாதனின் கைவண்ணத்தில் உருவான மண்டப முகப்பு அலங்காரம் இன்னும் கண்களில் தெரியுது. பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்களுடன் இணைந்து தமிழ் இலக்கியப் பற்றுமிக்க "தில்லைச்சிவன்' இளைஞராக ஓடித்திரிந்து விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். நாம் அவர்பின் திரிந்து உதவி செய்ததும் இன்னும் நினைவுகளில் நிழலாடுகின்றன. 

சரவணையில் பிறந்த அமரர் சிவசாமி மாஸ்ரர் பன்முக ஆளுமை கொண்டவர். வெள்ளை வேட்டி தரித்த ஆசிரியர்களின் இளம் தலைமுறையினராகவும், பலமாற்றுச் சிந்தனைகளுக்கு வித்திட்டவராகவும், அவற்றைச் சமூகத்தில் படர விட்டவராகவும் விளங்கினார். சமூக மேம்பாடு பற்றியே சதா சிந்தித்தவர்.  ஆசிரியராக, தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டவராக, சமூக சமய மேம்பாடுகளுக்காக உழைத்தவராக விளங்கிய இவர் கவிஞராகவும், தமிழ் எழுத்தாளராகவும் எமக்கு அறிமுகமாகியதோடு, தீவுப்பகுதியில் ஒரு எழுத்தாளர் குழாமை உருவாக்கியவர். இலக்கியத்தைச் சுவைத்தல், படிக்க வைத்தல், அவைபற்றி பேசுதல், விமர்சித்தல் போன்றவற்றின் ஊடாக ஒரு எழுத்தாளர் பரம்பரையை வேலணை, சரவணை, புங்குடுதீவு போன்றவற்றில் உருவாக்க உழைத்தார். 




சமூகத்தை நிறுவனமயப்படுத்தியே மேம்பாடு அடையச் செய்யலாம் என்ற மெய்மையின் அடிப்படையில் கிராம மட்டங்களில் பல சனசமூக நிலையங்களை, நூலகங்களை உருவாக்கினார். தீவுப்பகுதி எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி கருத்துக்கள், விமர்சன உரைகள் என்பவற்றை ஒழுங்கமைத்து அக்காலத்தில் எம் போன்றவர்களை இலக்கிய ஆர்வலர்களாக உருவாக்கினார். நான், சட்டநாதன், முகிலன், சரவணையூர் மணிசேகரன், மாறன் போன்றோர் இவர் வழிவந்தவர்கள் எனக் குறித்துரைக்கத்தக்கவர்கள். மறுமலர்ச்சிக் கழகம் எனும் அமைப்பை ஏற்படுத்தி சில சமூகப் பணிகள் ஆற்றியமையும் நினைவுக்கு வருகின்றது. இவ்வமைப்புகளில் இவர் தலைவராக, மற்றையோர் செயலாளர், பொருளாளராக பணியாற்றியிருக்கின்றோம். புங்குடுதீவில் மு.தளையசிங்கம், மு.பொன்னம்பலம், வில்வரத்தினம் போன்றோர்களுடன் இணைந்து இலக்கியப்பணி புரிந்துள்ளார். அவர்களுடன் எம்மையும் அறிமுகப்படுத்தியவர் இவரே. 

கவிஞர் தில்லைச்சிவன் வேலணை வாழ் மக்கள் பலரின் வாழ்க்கைச் சுவடுகளை கவிதையாக்கி வரலாறாக்கியவர். எம் ஊரில் உள்ள அனைத்துக் கோவில்கள் பற்றியும், அத்தெய்வங்களின் புகழ் பற்றியும் கவிதை புனைந்துள்ளார். தமிழ்த் தேசியவாதியாக கடைசிவரை வாழ்ந்த கவிஞர் இடதுசாரிச் சிந்தனை கொண்டோருடனும் நட்புறவைப் பேணியவர். முக்கியமாக டொமினிக் ஜீவா, டானியல் போன்றவர்கள் இவரது நண்பர்கள். ஜீவாவின் வேண்டுகோளுக்கமைய மல்லிகையில் இவர் எழுதியுள்ளார். அக்காலத்தில் "பட்டனத்து மச்சினி' என்ற இவரது கவிதை விமர்சகர் கனக செந்தில் நாதனால் வியந்து பாராட்டப்பட்டது. பல கவிதைகளைப் படைத்தளித்த இவரது கவிதைகளில் சில நூல்களாக வெளிவந்துள்ளன.

"அந்தக் காலத்துக் கதைகள்' எனும் நாட்டில் நிலவிய மரபுவழிக் கதைகளை இலக்கியமாக்கிய இவரது பணி ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு புதுவரவு என்றால் மிகையாகாது. இக்கதைகளில் நாட்டின் வரலாறு, மக்களின் நம்பிக்கைகள், நாட்டின் வளம், மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்திய விதம் என்பன கதைகள் ஊடாகத் தரிசனமாகின்றன. இது நாட்டுப்புற இலக்கியமென தற்போது தமிழ்நாட்டில் புகழ்ந்து பேசப்படும் இலக்கிய வகைக்கு முன்னோடியாக விளங்கியதெனத் துணிந்து கூறமுடியும். இக்கதைகள் ஊடாக எமது ஊரை முழுமையாகத் தரிசிக்க முடிகிறது. வெளிவந்த தில்லைச்சிவன் அவர்களின் நூல்கள் வருமாறு : கனவுக்கன்னி (1961), தாய் (1969), ஐயனார் அருள்வேட்டலும் திருவூஞ்சலும் (1972), தில்லை மேடைத்திருப்பாட்டு (1974), பாப்பாப் பாட்டுக்கள் (1985), நான் (1993), வேலணைத் தீவுப்புலவர்கள் வரலாறு (1996), தாழம்பூ (1996), அந்தக்காலக் கதைகள் (1997), நாவலர் வெண்பா (1997), பூஞ்சிட்டு (பாப்பா பாட்டு) (1998), தில்லைச்சிவன் கவிதைகள (1998), வேலணைப் பெரியார் கா.பொ.இரத்தினம் (2000), ஆசிரியை ஆகினேன் (2000), காவல் வேலி (2003), தந்தை செல்வா காவியம் (2004).

சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்ட இவர் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டதோடு, மக்கள் ஆதரவுபெற்ற அரசியலாளர்களுக்கு ஒத்துழைத்து மக்கள் நலன்பெறப் பாடுபட்டார். வேலணைஅராலியை இணைத்துப் பாலம் அமைக்கவேண்டுமென்ற விருப்பம் கொண்டிருந்தார். அது எமது பிரதேசத்தின் பொருளாதார, சமூக, கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்குமென அவர் நம்பினார். அவர் கனவு ஈடேற காலம் கனியவேண்டும். 

தில்லைச்சிவன் ஆசிரியராக, எழுத்தாளராக, கவிஞராக, சமூக சேவையாளராக, சமயப்பணி புரிந்தவராக, கிராமியக் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்தவராக விளங்கியதோடு சமூகத்தை நிறுவனமயப்படுத்தி சமூக மேம்பாட்டைக் காணவேண்டுமென்ற சிந்தனையையும் எம்மிடம் விட்டுச்சென்றுள்ளார். அவரது கல்வி, இலக்கிய, சமூக, சமயப் பணிகள் ஆவணப்படுத்தப்பட்டு இவ்வகையான உதாரண புருஷர்களைப் பின்பற்றி எதிர்கால சந்ததியினர் உயர்வடைய வழிசமைக்க வேண்டும்.

ஆனந்தகுமாரசாமியின் "சிவநடனம்' நூல் தரும் தத்துவ விளக்கங்கள்"தில்லைச்சிவன்' பெயரை உச்சரிக்கும் போது என் கவிப்புலச் சிந்தனையில் ஒளிவிடுகின்றன. சிவசாமி  தில்லைச்சிவன் ஆகி தமிழ் சமூகத்திற்கு அளித்தவை அழியாச் செல்வங்கள். அவற்றைப் பேணிப் போற்றுவோம். இவரது நினைவு தினம் இன்றாகும் .
.thinakkural.lk

No comments: