கம்பஹா மாவட்டத்தில் இந்து தமிழ் மத்திய கல்லூரிக்கு வைரவிழா.- முருகபூபதி

.
இலங்கை    மேல்மாகாணம்    கம்பஹா   மாவட்டத்தில்  ஒரே      ஒரு   இந்து    தமிழ்   மத்திய        கல்லூரிக்கு     வைரவிழா.
நீர்கொழும்பில்    மூத்த  தமிழ்  அன்பர்கள்   60  ஆண்டுகளுக்கு   முன்னர்   உருவாக்கிய   கல்விக்கலங்கரை  விளக்கம்.
    
                                              
இலங்கையில்   மூவின   மக்களும்   ஐந்து  மதப்பிரிவினரும்  நீண்ட நெடுங்காலமாக   வாழும்  ஒரு  பிரதேசம்   நீர்கொழும்பு.   இந்துமாகடலை  அண்டிய   நெய்தல்  நிலம்.    முதலில்   போர்த்துக்கீசரும்    பின்னர்   ஒல்லாந்தரும்    அதன் பின்னர்  பிரிட்டிஷாரும்  ஆக்கிரமித்தமையினால்   கத்தோலிக்க    மற்றும்  புரட்டஸ்தாந்து   மதப்பிரிவினரும்  தத்தமக்கு தேவாலங்களை   கட்டி  எழுப்பினர்.
பௌத்த   சிங்கள  மக்கள்  செறிந்து  வாழும்  ஹங்குருக்கார  முல்லை  என்ற பகுதியில்  பௌத்த  விஹாரை   தோன்றியது.
முஸ்லிம்கள்   காமச்சோடை,  பெரியமுல்லை,  கம்மல்துறை   முதலான   பிரதேசங்களில்    படிப்படியாக   வாழத்தலைப்பட்டு  அவர்களும்   அவ்விடங்களில்   மசூதிகளை    உருவாக்கினர்.

கத்தோலிக்கர்கள்   முன்னக்கரை,   குட்டித்தீவு ,  குடாப்பாடு, நஞ்சுண்டான்கரை,     ஏத்துக்கால்,  பலகத்துறை,   தோப்பு,  கொச்சிக்கடை, முதலான   பிரதேசங்களில்    செறிந்து  வாழ்ந்தனர்.  இவர்களில்  பெரும்பான்மையானோர்   கடலை  நம்பி  வாழ்ந்த  மக்கள்.  பெரும்பாலான  முஸ்லிம்கள்   வர்த்தகத்திலும்  ஆசிரியப்பணிகளிலும்  ஈடுபட்டனர்.
கத்தோலிக்க   மக்களில்  வர்ணகுலசூரியர்  என்ற  பிரிவினர்  கடலையும்   குருகுலசூரியர்   என்ற  பிரிவினர்  கல்வி   மற்றும்  அரச உத்தியோகங்களையும்   நம்பி  வாழ்ந்தனர்.
சிங்கள  பௌத்தர்கள்   வர்த்தகத்திலும்    கல்வி,    அரசுப்பணி  மற்றும் தனியார்  துறைகளிலிருந்து   தொழில்   வருமானத்தை   தேடினர்.


இந்தப்பின்னணிகளில்    இருந்தே  அங்கு  வாழ்ந்த  இந்து  சமயம்  சார்ந்த தமிழர்களின்   வாழ்வையும்  வளத்தையும்  அவதானிக்க  முடியும்.
மேலே   தெரிவிக்கப்பட்டிருக்கும்  பகுதிகளின்    பெயர்களிலிருந்து  நீண்ட   நெடுங்காலமாக   அங்கே  பூர்வகுடிமக்களாக  தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்   என்பது  தெட்டத்தெளிவானது.
எனினும்  -  அங்கே  1954   ஆம்  ஆண்டிற்கு  முன்னர்  பிறந்த தமிழ்க்குழந்தைகள்   அனைவரும்  தமது  கல்வியை  அரிச்சுவடியிலிருந்து  கற்கத்தொடங்குவதற்கு   கத்தோலிக்க  பாடசாலைகள்தான்  உதவின.
மேற்கிலே    நீர்கொழும்பு  கடற்கரைக்கும்  கிழக்குத்திசையில் டச்சுக்கால் வாய்க்கும்  இடையே    இருக்கும்  கடற்கரை  வீதி  ஒரு காலத்தில்   கன்னாரத்தெரு   என்றே  அழைக்கப்பட்டது.


அந்தவீதியில்  செப்பு -  பித்தளை  பாத்திரங்கள்  செய்யும்  மற்றும்  தங்கநகை தொழிலிலில்    ஈடுபட்டவர்கள்  சுருட்டுத்தொழிலாளர்களின்  இந்து தமிழ்க்குடும்பங்களே   பெருமளவில்  வாழ்ந்தனர்.
இந்திய   வம்சாவளி   மக்களுக்கும்   வடக்கு -   கிழக்கிலிருந்து  தொழில் வர்த்தகம்   நிமித்தம்  குடியேறிய  மக்களுக்கும்   கடற்கரைவீதியில் வணங்குவதற்கு   முத்துமாரியம்மன்,  சித்திவிநாயகர்,   சிங்கமாகாளி  அம்பாள்   ஆலயங்கள்  ஏற்கனவே    எழுந்தருளியிருந்தாலும்  அவர்களின்  குழந்தைகளின்    கல்வித்தேவைக்கு    கத்தோலிக்க  பாடசாலைகளையே நம்பியிருந்தனர்.


1954   ஆம்  ஆண்டு    நவராத்திரி  காலம்  வரும்   புரட்டாசி  மாதம்  வரையில்   அவர்களுக்கென்று  ஒரு  இந்து  தமிழ்ப்பாடசலை இருக்கவில்லை.   ஆனால் -  வடக்கின்  காரைநகரிலிருந்து  தொழில் நிமித்தமும்   வர்த்தகத்தின்    நிமித்தமும்  இடம்பெயர்ந்து  வாழ்ந்த  ஒரு பெரியவரை   இவ்வூர்  தமிழ்   மக்கள்   அந்தப்பகுதியின்   மூன்றாம் வட்டாரத்திலிருந்து    நகரசபைக்கு  தெரிவுசெய்து  அனுப்பினார்கள்.
அவர்தான்   நீர்கொழும்பு  வரலாற்றில்   முதலாவது  தமிழ்  மேயர்  எஸ்.கே. விஜயரத்தினம்.அந்தவீதியில்  அன்று  வாழ்ந்த  இளைஞர்கள்  இந்து வாலிபர்  சங்கத்தையும்  சுருட்டுத்தொழிலாளர்கள்   தங்களுக்கென  ஒரு  சங்கத்தையும்   உருவாக்கினர்.  இவர்கள்  அனைவரையும்  நீண்ட  காலமாக வாட்டிக்கொண்டிருந்த   கவலைக்கு    விஜயதசமி  தினத்தன்று   விடிவுகாலம்   பிறந்தது.
இற்றைக்கு   அறுபது  ஆண்டுகளுக்கு  முன்னர்  சித்திவிநாயகர் ஆலயத்திற்கு   முன்பாக  அரசமரநிழலில்  எழுந்திருந்த  இந்து  வாலிபர்   சங்கத்தில்   குறிப்பிட்ட  விஜயதசமி  காலத்தில் -  விஜயரத்தினம்  அய்யா   தலைமையில்   நடந்த  நிகழ்ச்சியில்  32   குழந்தைகளுக்கு   பனை  ஏட்டில்  பதிந்த  முதல் ஃ  வரையில்  சொல்லிக்கொடுக்கப்பட்டு  தாம்பாளத்தில்  அரிசியில்   எழுதப்பழக்கி  கற்கண்டும்  பழமும்    கொடுத்து  கல்விக்கான  அத்திவாரத்தை   அந்தச்சங்கத்தின்    உறுப்பினர்கள்   அனைவரும்  இணைந்து   அமைத்தார்கள்.
எந்தவொரு   புதிய  ஆக்கபூர்வமான  விடயத்தையும்  தொடக்கும்பொழுது   சாதகமானதும்   பாதகமானதுமான  கருத்துக்களும்  பரவுதல்   சாதாரணமானதே.
இந்தப்பத்தியை  எழுதிக்கொண்டிருக்கும்   முருகபூபதி  ஆகிய  என்னை   அன்று  காலையிலேயே   துயில்  எழுப்பி  புத்தாடை   அணிவித்து    வழியனுப்பிய   எனது  அம்மா -   என்னைத்துக்கிச்செல்ல  வந்திருந்த  எமது உறவினரான   மயில்வாகனன்  மாமாவிடம்  ' தம்பி.... புதுசா  பாடசாலை தொடங்குகிறீர்கள்.    நல்லது.  ஆனால்,   அது  தொடர்ந்து   நடக்குமா?"   என்றுதான்   கேட்டார்களாம்.
" அக்கா  - நல்ல நோக்கத்துடன்  தீர்க்கதரிசனமாக  தொடங்கப்படும் எந்தவொரு   பொதுப்பணியும்  அர்ப்பணிப்பினாலும்  கடின  உழைப்பினாலும்   நிச்சயமாக  வளரும் -   பொறுத்திருந்து  பாருங்கள்"  எனச்சொல்லிவிட்டு  என்னை   அழைத்துச்சென்றதாக  நான்  வளர்ந்த பின்னர்   அம்மா  சொல்லியிருக்கிறார்கள்.


என்னைப்போன்று  மேலும்  31   குழந்தைகளின்  வீடுகளிலும்  அத்தகைய கேள்விகளும்   கேட்கப்பட்டு  பதில்களும்  சொல்லப்பட்டிருக்கும்.
அக்காலப்பகுதியில்   அரசாங்கப்பாடசலைகள்  இல்லை.  முகாமைத்துவ பாடசாலைகள்தான்   அதிகமாக  இயங்கின.  ஏனைய மதவழிபாட்டுத்தலங்களுக்கு   அருகாமையிலேயே     அந்தந்த  மதம்  சார்ந்த குழந்தைகளுக்காக   பாடசாலைகள்  உருவாகின.  பெரும்பாலன  பாடசாலைகள்   ஆங்கில  மொழி மூலம்  கற்பிக்கப்பட்டன.  அவற்றில் கத்தோலிக்க  புரட்டஸ்தாந்து  மெத்தட்டிஷ்ட்  மதப்பிரிவினரே  ஆசிரியர்களாக  பணியாற்றினர்.
நீர்கொழும்பு    கடற்கரைவீதியில்  வாழ்ந்த  தமிழ்க்குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட   இந்தப்பாடசாலைக்கு  விவேகானந்தா  வித்தியாலயம் எனப்பெயர்   சூட்டப்பட்டதற்கு  கொழும்பில்  ஜிந்துப்பிட்டி  பிரதேசத்தில் இயங்கிய   விவேகானந்தா  சங்கமும்  அதன்  பரிபாலனத்தில்    தொடங்கப்பட்ட  விவேகானந்தா  பாடசாலையும்  முக்கியமான  பின்னணி காரணிகள்.
கொழும்பு   விவேகானந்தா  சங்கத்தின்  முகாமைத்துவத்துடன் தொடங்கப்பட்ட   நீர்கொழும்பு  விவேகானந்தா  வித்தியாலயத்திற்கு தலைமை  ஆசிரியராக  அழைத்து  வரப்பட்டார்  பண்டிதர்  க. மயில்வாகனன்.   அவர்  வடக்கில்  சித்தங்கேணியைச்சேர்ந்தவர். அவருக்குத்துணையாக  வருகைதந்தார்  நாமெல்லோரும்  பெரிய  ரீச்சர் அம்மா   என  அழைக்கும்  திருமதி  திருச்செல்வம்.   இவர்கள்   இருவருக்கும் துணையாக   பணியாற்றவந்தார்  மயில்வாகனன்    மாமாவின்  தங்கை திலகமணி   ரீச்சர்.
நாளொரு  வண்ணமும்   பொழுதொரு   மேனியுமாக  வளர்ந்து  அவ்வூர் தமிழ்   மக்களின்  கல்விக்கான  கலங்கரை  விளக்கமாக  ஒளிவீசியது   விவேகானந்தா  வித்தியாலயம்.   1964  ஆம்  ஆண்டின்  பின்னர்  வித்தியாலய   ஸ்தாபகர்   அமரர்  விஜயரத்தினம்  அய்யாவை   நினவு  கூரும் வகையில் அதன்  பெயர்  விஜயரத்தினம்  வித்தியாலயமாகவும்                பின்னர்   தரமுயர்த்தப்பட்டு   மகா  வித்தியாலயமாகவும்  காலப்போக்கில் விஜயரத்தினம்   இந்து  மத்திய  கல்லூரியாக   உயர்ந்தது.
அறுபது  ஆண்டுகளுக்கு  முன்னர்  32   மாணவர்களுடன்   தொடங்கிய இப்பாடசாலை   தற்பொழுது  ஆயிரத்து  ஐநூறுக்கு  மேற்பட்ட மாணவர்களுடன்   நூறுக்கும்  மேற்பட்ட  ஆசிரியர்களுடன்  இயங்குகிறது.
இந்தக்கலங்கரைவிளக்கத்திற்கு   அறுபது  ஆண்டுகளுக்கு  முன்னர் அத்திவாரம்   இட்ட  பல  மூத்த  பிரஜைகள்  இன்றில்லை.
அமரர்   விஜயரத்தினம்  அவர்களுக்குப்பின்னர்   அவரது   துணைவியார் பாடசாலையின்   வளர்ச்சியில்  பெரும்  பங்காற்றினார்.  அத்துடன் இந்து வாலிபர்  சங்கத்தின்  தலைவர்களாக  விளங்கிய  நல்லதம்பி, சண்முகநாதன்,   சுரேந்திரன்,  ஓவஸீயர்  நடராஜா,  ஜெயம்  விஜயரத்தினம்,  மயில்வாகனன்,   டொக்டர்  பாலசுப்பிரமணியம்  ஆகியோரும்   இரா. சுப்பையா,   தில்லைநாதன்,  கந்தையா,  செல்லையா,  தேவராஜா, அழகரத்தினம்,   இராஜரத்தினம்   முதலான  பலரும்  கல்லூரியின்   வளர்ச்சியில்   அளப்பரிய  சேவையாற்றினர்.   இன்னும்   பலரது  பெயர்கள்   உடனடியாக   நினைவுக்கு  வரவில்லை.
இந்தக்கல்லூரி   தலைநிமிர்ந்து  நிற்பதற்கு  மூலகாரணமாக  விளங்கிய   இந்து   வாலிபர்  சங்கம்  காலப்போக்கில்  இந்து  இளைஞர்  மன்றமாகியது   சமீபத்தில்தான்   அதன்  80  வருட  நிறைவு   இடம்பெற்றது.
இதனை   முன்னிட்டு  தபால்  திணைக்களம்    ஞாபகார்த்த  முத்திரையும் அண்மையில்  வெளியிட்டுள்ளது.
விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரிக்கு  60   வருடகால  நீண்ட  வரலாறு   இருக்கிறது.  விரிவஞ்சி  அதுபற்றி  எழுதுவதை   தற்போதைக்கு    தவிர்க்கின்றேன்.
எனினும்   இலங்கையில்  மேற்குப்பிரதேசத்தில்  தமிழர்களின்  பூர்வீகமாக   நீர்கொழும்பும்  இருந்ததென்பதும் -   அதற்கு  அடையாளமாக  ஆழமாக   பதிவாகியிருக்கும்   பிரதேசங்களின்  தமிழ்ப்பெயர்களும் -  ஒரு  காலத்தில் தமிழர்   ஒருவர்  நகரபிதாவாக  பணியாற்றியிருக்கிறார்    என்ற  செய்தியும்    ஈழத்தமிழர்களின்  வரலாற்றில்  மறைக்கப்படமுடியாத  பதிவுகள்  ஆகும்.
நீர்கொழும்பில்   தமிழர்கள்  இருந்தார்களா... ? அங்கும்  தமிழ்  வாழ்ந்ததா...? என்று   இன்றும்  கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு  இந்தக்கட்டுரை   தெளிவுகளை  வழங்கும்.
எமக்கெல்லாம்  கல்விக்கண்    வழங்கிய  விஜயரத்தினம்  இந்து  மத்திய கல்லூரி   மேலும்  மேலும்  சாதனைகள்  புரிந்து  இலங்கைத்தமிழர்களின் வரலாற்றில்  அழியாத  இடத்தைப்பெற்றுக்கொள்ளும்  என்று பல்லாயிரக்கணக்கான   மைல்களுக்கு  அப்பாலிருந்து  வாழ்த்துகின்றேன்.
முக்கியமான  பிற்குறிப்பு:
கல்லூரியின்  வைரவிழாவை   முன்னிட்டு  இலங்கையின்  பல பாகங்களிலும்   உலகெங்கும்  வாழும்  கல்லூரியின்    முன்னாள்  அதிபர்கள்,  ஆசிரியர்கள்,   மாணவர்களின்    படைப்புகளுடன்  இலக்கியத்தொகுப்பு  நூலை  வெளியிடுவதற்கு  ஆவன  செய்துவருகின்றோம்.   இலங்கை, இங்கிலாந்து,   சிங்கப்பூர்,   துபாய்,  கனடா,  பிரான்ஸ்,  ஜேர்மனி   முதலான நாடுகளிலிருந்து   சிலர்  ஆக்கங்களை    ஏற்கனவே   அனுப்பிவைத்துள்ளனர். இது   தொடர்பான  மேலதிக  விபரங்களை    அறிவதற்கு  கல்லூரியுடன்   சம்பந்தப்பட்ட    அனைவரையும்  தொடர்புகொள்ளுமாறு    கேட்டுக்கொள்கின்றோம்.   
தொடர்பு  மின்னஞ்சல்:    letchumananm@gmail.com
Telephone : 00 61 (0) 4166 25 766
   ----00---


            

No comments: