சிட்னிக் கம்பன் விழா 2014


இறையருளால் சிறப்பாக அரங்கேறியிருந்தது சிட்னிக் கம்பன் விழா 2014. தமிழ் ஆர்வலர் பலரும் பாராட்டியும் வாழ்த்தியும் இளைஞர்களை ஊக்குவித்திருந்தனர். தரமான-அறிவார்ந்த இயல் நிகழ்வுகளை இவ்வருடமும் களம் ஏற்றியதில் மட்டற்ற மகிழ்ச்சி. சிட்னி வாழ் தமிழ் அன்பர்களது ஆதரவால் சாத்தியமான நிகழ்வு இக் கம்பன் விழா. உங்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகள். அனைத்து அனுசரணையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் கழக நலன் விரும்பிகள் அனைவருக்கும் எம் நன்றிகள். கம்ப வாரமாக மெல்பேர்ண் கம்பன் விழாவோடு (12.10) ஆரம்பித்த எம் நிகழ்வுகள், சிட்னியில் ஆகுதியான 'ஞான வேள்வி' (14, 15, 16/10) மற்றும் இரு நாள் சிட்னிக் கம்பன் விழாவோடு (18, 19/10) நிறைவு பெற்றிருந்தது. சிட்னிக் கம்பன் விழா பற்றிய கருத்துக்களைப் பேராசிரியர் ஞானா குலேந்திரன் அம்மையார் பின்வருமாறு பகிர்ந்துகொண்டார்.

"சென்ற ஆண்டு 'கம்பவாரிதி' என்ற இயல்புயல் சிட்னியில் மையம் கொண்டது எம்மெல்லோருக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து அவருடைய புலமை சார்ந்த கருத்துக்களைச் சிட்னியில் கேட்க முடியுமா என இலக்கிய இரசிகர்களான நாம் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில், மீண்டும் அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் தம் பெருந்தலைவரை அழைத்துச் சிறப்பான 'ஞான வேள்வி' மற்றும் கம்பன் விழா என அரங்கேற்றியமை மிக அருமை. ஜெயராஜ் அவர்கள் நடாத்திய மூன்று நாள் தொடர் சொற்பொழிவான 'ஞான வேள்வி' என்ற நிகழ்வில்,  'ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்' என்ற தலைப்பில் சிலப்பதிகார சாரத்தையும், இரண்டாம் நாள் 'தமிழ்க் கிழவி' என்ற பெயரில் ஓளவையாரின் பெருமைகளையும் நல்லவகையில் சொல்லியிருந்தார். மூன்றாம் நாள் 'மெய் உணர்தல்' என்ற தலைப்பில் ஆழமான சைவ சித்தாந்தக் கருத்துக்களை மக்கள் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் அவர் கூறியதில் நான் உண்மையில் மெய் சிலிர்த்துப் போனேன். அன்று வந்திருந்த பலரும் 'மெய் உணர்தல்' என்ற பேச்சை வெகுவாகப் பாராட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 



பின் அரங்கேறிய கம்பன் விழாவில் ( ஒக் 18ம் 19ம் நாட்கள்) இரு நாட்களும் கலந்து கொண்டேன். மிகவும் அருமையானதொரு விழா. இலக்கிய விழாவொன்றிற்கு மக்கள் பெருந்திரளாக வருகை தந்ததையிட்டுப் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். சிட்னியில் பல விழாக்களில் நான் கலந்து கொண்ட அனுபவம் உண்டு, ஆனால் கம்பன் விழாவில் நான் கண்டுகொண்ட முதலாவது பெருமை நேரத்திற்கு அவர்கள் மிகமிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். ஐந்து மணியென்றால் ஐந்து மணிக்கு ஆரம்பிக்கின்றார்கள். நிகழ்ச்சி நிறைவுறும் வேளைக்குச் சரியாக நிறைவு செய்கின்றார்கள். நடைபெறும் நிகழ்ச்சிகளில் எதுவித தொய்வும் இல்லாமல் சீராக நடாத்தியமையும் குறிப்பிடத்தக்கது. இது மிகவும் பாராட்டத்தக்கதும் ஏனைய விழா அமைப்பாளர்கள் பின்பற்ற வேண்டியதொன்றுமாகும் என் நான் கருதுகின்றேன். கழகத்தாரின் நிகழ்ச்சிகளின் தரம், மேடையலங்காரங்கள், சான்றோர் பெருமக்களை அவர்கள் கௌரவித்த விதம், மக்களை வரவேற்ற முறை எனப் பல விடயங்களை என்னால் மெச்சக் கூடியதாகவிருந்தது. குறிப்பாக அவர்கள் வழங்கிய உயர் 'மாருதி' விருது, மிக மிகத் தகுந்த சான்றோர் மகேசன் ஐயாவைச் சென்றடைந்ததில் எமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்வைத்தந்தது. நிகழ்ச்சியமைப்பைப் பார்க்கும்போது உண்மையாகக் கூறினால் ஒரு திரையரங்கில் எப்படி நாம் நல்லதொரு சினிமாவைத் தொடர்ச்சியாகப் பார்போமோ அதேபோல தங்கு தடையின்றி மக்களனைவரும் கூட்டம் கலையாமல் பேசப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி இரசித்தும் பாராட்டியும் மகிழ்ந்த வண்ணம் இருந்ததைக் கண்ணுற்று மகிழ்தேன். இதற்குக் காரணம் கழக இளைஞர்களது சிறப்பான திட்டமிடுதலே என்று உணர்கின்றேன்.  

கொழும்பிலே நான் இருந்தபோது அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் தாய்க் கழகமான அகில இலங்கைக் கம்பன் கழகம்,  எனக்குச் சான்றோர் விருது வழங்கிக் கௌரவித்தபோது (2007) இதேபோல் ஒர் உயர்தர விழாவினை அவர்கள் அங்கு அரங்கேற்றியிருந்தார்கள், பல ஆண்டுகளாக சிறப்பாக நடாத்தியும் வருகின்றார்கள். இதனை முன்னர் ஒருமுறை இலங்கை வீரகேசரிப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலும் நான் குறிப்பிட்டிருந்தேன். அதே அச்சொட்டை, அங்கு ஜெயராஜ் அவர்கள் செய்ததை இங்கு ஜெயராம் அவர்கள் தம் இளைஞர்கள்கள் மற்றும் தோழர்களுடன் கம்பன் குடும்பமாக ஆற்றியதைப் பார்க்க மிக மகிழ்வதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்து இலக்கிய அரங்குகளுக்கு இவ்விளையவர்களின் பணி நல்ல வழிகாட்டியாகவும் தெரிகின்றது. சிட்னி மாநகரிலே கம்பன் கழகத்தினர் ஆற்றிவரும் பணி மகத்தானது அவர்கள் பணி இறையருளோடு பல்லாண்டு காலம் தொடர வேண்டும் என வாழ்த்தி விடை கொள்கின்றேன்."

-பேராசிரியர் திருமதி. ஞானா குலேந்திரன்-

'கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்'

-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-













No comments: