கடலோடி... எபோலா...

கடலோடி... எபோலா...
கோவை நந்தன்
அறிவியல் வளர்ச்சியின் உச்சியில், பிரபஞ்சத்திலுள்ள அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் மனித இனத்தை அப்பப்போ அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒன்று ஆட்டி, அழித்துக் கொண்டுதான் இருக்கிறது. இயற்கையின் சீற்றங்களை விட இன, மத, தேசிய  மனித முரண்பாடுகள் ஏற்படுத்தும் அழிவுகனை விட ,ஏனைய அனைத்து காரணிகளாலும் ஏற்படுத்தப்படும் அழிவுகளை விட காலம் காலமாக அப்பப்போ மனித குலத்தை மிரட்டிக் கொண்டும் அழித்துக் கொண்டும் இருப்பது நோய்க்கிருமிகள் என்ப்படும் அழிவு நாசினிகள் தான்.

இந்த வகையில் இன்று உலகை அச்சுறித்திக் கொண்டிருப்பது எபோலா என்னும் நுண்ணுயிரி. இதன் தாக்கத்தால் இன்றைய திகதி வரை லைபீரியா, சியராலியோன், நைஜீரியா, கினியா உள்பட்ட பல மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 3400 பேர் வரை பலியாகியும் 7,200 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இந்த கொடிய நோய் ஏற்படுத்தும் அழிவுகள் பலமடங்கு அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் பிளேக்,கொலரா,அம்மை போன்ற நோய்களால் பல கிராமங்கள் பூண்டோடு அழிந்த பல சரித்திரங்களை கண்ட நாம், சூரியமண்டல கிரகங்களுக்கே விண்கலன்களை அனுப்பி ஆய்வுகள் மேற்கொண்டு வரும் இந்த வேளையிலும் கூட மீண்டும் அதேபோன்ற அழிவுகளை சந்திக்கிறோம், தடுத்து நிறுத்த முடியாமல் திணறுகிறோம் என்றால் இந்த ஆய்வுகளும் மனித சமூகத்தின் அறிவியல் வழர்ச்சியும் எதைத்தான் சாதிக்கப் போகிறது....?கடந்த டிசம்பர் மாதம் மேற்கு ஆபிரிக்க நாடான கினியில் முதல் முதலாகக் கண்டறியப்பட்டதாகச் சொல்லப்படும்   எபோலா நுண்ணுயிரி நோய், கினியின் அண்டை நாடுகளான லைபீரியா, நைஜீரியா, சியாரிலியோன் ஆகிய நாடுகளுக்கும் பரவி இன்று ஸ்பெயின் நாட்டுக்குள்ளும் புகுந்து முழு ஐரோப்பியர்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளும் எதிரியை எதிர்கொள்ளத் தயராகி வருகின்றன. உலக சுகாதார நிறுவனமும்  இந்த நுண்ணுயிரியின் பரவலை அசாதாரண அவசரநிலையாக பிரகடனப்படுத்தி சர்வதேச நடவடிக்கைகளை முடுக்கிவிடப் பணித்திருக்கிறது.  லைபீரியாவில் அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கபட்டுள்ளது. சியாரிலியோனில் எபோலாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்குத் தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எபோலா நோய் தொற்றுள்ள ஒரு மனிதனின் விந்தணுவில் சுமார் 70 நாட்கள் வரை இந்த வைரஸ் உயிருடன் இருக்க சாத்தியமுள்ளதால் எபோலா நோயில் இருந்து குணமடைந்து வரும் ஒருவர் குறைந்தது 90 நாட்களுக்காவது உடலுறவு மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என  மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உயிராபத்து விளைவிக்கக்கூடிய இந்த நோய்கிருமியையும், இது தொற்றியுள்ள முதலாவது நபரையும் தெரிந்து கொண்டு மாதம் 10 ஆகியும் இதுவரை இந்தத் தொற்று நோய்க்கு எந்தவிதத் தடுப்பு மருந்தோ, மாற்று மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் வேதனை. அதிக சுகாதார வசதிகள் இல்லாத பல ஆபிரிக்க நாடுகளில் இந்த நுண்ணுயிரி தனது வீரியத்தை வெளிப்படுத்தி இருப்பதால், இதனை முறையாக கட்டுப்படுத்துவதோ இதற்கான நிரந்தர தீhவை கண்டுபிடிப்பதோ  கடினம் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.
மனிதனின் உமிழ்நீர், ரத்தம், இருமல், தும்மல், விந்து, மலம், சிறுநீர், போன்றவற்றினூடாக பரவும் தன்மையுடையதென தெரிவிக்கப்பட்ட இந்த நுண்ணுயிரி தாய்ப்பால், மூலமும் பரவும்  என்பதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுளள்தாக சொல்லப் படுகிறது. பல வழிகளில் பரவும், வீரியம் கொண்ட இந்த எபோலா கிருமிகளின் தொற்றுள்ள நோயாளிகள் தனியிடத்தில் பராமரிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டும் கூட, அவர்களுக்கு சிகிச்சையளித்த அறுபதுக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த நோய்தொற்று ஏற்பட்டு  உயிரிழந்திருக்கிறார்கள்.
ஆபிரிக்காவிற்கு வெளியே முதன் முதல் எபோலா நோய் தொற்று  ஏற்பட்டதாகக் கூறப்படும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மருத்துவ தாதி ஒருவர் மெட்ரிட் நகரின் கார்லோஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கும் எபோலா நோய் பரவுவது தவிர்க்க முடியாதது என உலக சுகாதார அமைப்பு எதிர்வு கூறி உள்ளது. இந்த அமைப்பு வெளியிட்ட மதிப்பீடு ஒன்றில்   எபோலா நோய் உலகின் 3 கண்டங்களில் பரவி இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் ஓக்ரோபர் இறுதிக்குள் எபோலா வைரஸ் பிரான்ஸ் நாட்டை அடைய 75 சதவீத வாய்ப்பு உள்ளதாகவும், இங்கிலாந்தை எட்ட 50 சதவீத வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பரிசிலிருந்து ஸ்பெயினின் மெடரிட் விமான நிலையத்தை சென்றடைந்த பயணிகள் விமானம் ஒன்று ஒடு பாதையில் வைத்தே தனிமைப்படுத்தப்பட்டு அதில் இருந்த பயணிகளிற்கு எபோலா பரிசோதனை மேற்கொள்னப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அன்றைய ஐரோப்பிய, பிரித்தானிய கடலோடிகள் ஆபிரிக்காவும் ஆசியாவும் சுறண்டி அழிக்கப்பட காரணிகளாக இருந்தது போல இன்று இப்படியான விச வைரசுக்கள் கண்டம் விட்டு கண்டம் பாய்கின்றனவோ என எண்ணத் தோன்றுகிறது.
20 ஆண்டுகளின் முன்னர் அறியப்பட்ட இன்றும் உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் எயிட்ஸ் நோயின் தொற்றுக் கிருமிகளும் முதன் முதலில் ஆபிரிக்கண்டத்தின் குரங்ககள்  மூலமே உருவாகியது என தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
எது எப்படியோ ஓர் ஊரில் கொள்ளை நோய் இருப்பதாக நீங்கள் செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டால் அந்த ஊரிலிருந்து வெளியேறாதீர்கள் என்கின்ற நபிகள் நாயகம் அவர்களின் கூற்றை பின்பற்றினால் ஓரளவாவது நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்

No comments: