அப்பா... எங்கே போனீர்கள்...? (சிறுகதை) -நவீனன் ராசதுரை

.
   
  அன்று  வீட்டில்  அம்மாவுக்கும்  அப்பாவுக்கும்  இடையே   நீண்ட வாக்குவாதம்.   எதைப்பற்றி  என்று    எனக்குத்  தெரியாது.  எனக்கு அப்போது  பத்துவயதுதான்   இருக்கும்.
குசினிக்குள்  நான்  நுழைய  எத்தனிக்க  நீ.... அங்காலே  போ... என்று அம்மா   என்னைத் துரத்திவிட்டார்.
எந்த    வீட்டில்தான்  வாக்குவாதம்  இல்லை? பழக்கப்பட்டுப்போய்விட்டது.   ஆனாலும்  அன்று  ஒரு  பெரிய வித்தியாசம். 
திடீரென்று  வாக்குவாத  சத்தம்  நின்றது.  அம்மா   என்னிடம்  ஓடிவந்து ஓடு....   ஓடு....   போய்க் கூட்டிக்கொண்டு  வா !  கடலில்  குதித்து சாகப்போகிறேன்    என்று  சொல்லிவிட்டுப்  போகிறார்  அப்பா  என்றார் அம்மா.
கட்டிலில்   படுத்திருந்த  நான்    என்ன  என்று  கேட்டவண்ணம்  துள்ளி   எழுந்தேன்.
ஓடு ...ஓடு... என்று    கத்தினார்  அம்மா.  எங்கே    குதிப்பார்...?  என்று பதறியபடி   கேட்டேன்.
ஓடு... ஓடு.... ஸ்டேசனுக்குக் கிட்ட  இருக்கிற  கடலாய்த்தான்  இருக்கும்   என்றார்    அம்மா.
நாங்கள்    அப்போது    கொழும்பு  கொள்ளுப்பிட்டியில்    வாழ்ந்து வந்தோம்.   அங்கே  பாலர்  பள்ளிக்கருகில்  கடல்  இருக்கிறது. அதுவாய்   இருக்கும்  என்று  எண்ணிக்கொண்டு  ஓடினேன்.
ஐயோ... அப்பா...?   என்று    எனக்குள்  அழுதபடி  ஓடினேன்.   அம்மா சொன்ன   விதத்தில்  நான்  சொல்லித்தான்  அப்பாவின்  மனதை மாற்றவேண்டும்  போல  இருந்தது.
ஒரு   பத்து  நிமிடம்  ஓடியிருப்பேன்.
காலி  வீதியைக் கடந்து  பாலர்  பள்ளிக்கருகாமையில்  வந்ததும் என்னை   பயம்  பிடித்துக்கொண்டது.  ஒரே  இருட்டு...!  அத்துடன்  கடல் அலைகளின்   இரைச்சல்...!   பள்ளிக்கூட  விளையாட்டுத்திடல் மயானம்   போல  இருந்தது!   உள்ளே  போக  பயமாக  இருந்தது.



காலி வீதியோரமாக  நின்றபடி  அப்பா... அப்பா.... என்று  கத்தினேன். அங்கிருந்து    கடல்  ஒரு  ஐம்பது  மீற்றர்   இருக்கும்.   அப்பா  அங்கே இருந்தாலும்   அவருக்குக்  கேட்டிருக்குமோ    தெரியாது. 
அப்பா ...அப்பா ....என்று  கத்தி  அழுதேன்.  ஒரு  சத்தமும்  இல்லை.
அதற்குள்   ஒரு  புகையிரதம்  இரைந்தபடி  வந்து  ஸ்டேசனில்  வந்து   நின்றது.  அப்பா  புகையிரதத்துக்கு  முன்  பாய்ந்து  விட்டாரோ?
ஒரு   பத்து  பதினைந்து  நிமிடம்  அப்பா.... அப்பா.... என்று  கத்தினேன். அப்பாவின்   சத்தத்தைக்  காணோம்.  பின்னர்  வீட்டுக்கு  மீண்டும் ஓடினேன்!   அப்பா  இறந்திருப்பாரோ    என்கிற  எண்ணம்    என்னை ஆட்டிப்படைத்தது.   அழுதபடி  வீடு  சேர்ந்தேன்.
அப்பாவைக்  காணவில்லை  என்று  அம்மாவிடம்  சொல்லிவிட்டு மீண்டும்   கட்டிலில்  விழுந்து  தேம்பித்  தேம்பி   அழுதேன்.   ஐயோ அப்பா!
பயம்   ஒரு  பக்கம்   கவலை   வேறு!   நித்திரையாக  அதிக  நேரம் பிடிக்கவில்லை.
மறு   நாள்  காலை    எழுந்ததும்  சுயநினைவுக்கு  வர  சில  நிமிடம் பிடித்தது.     அப்பாவின்  படுக்கையறைக்குள்    எட்டிப்பார்த்தேன்.   அப்பா   படுத்துக்கிடந்தார்!
பள்ளிக்கூடம்  செல்ல  நான்    ஆயத்தமாகிவிட்டு  அப்பாவிடம் சென்றேன்.    அப்பா  என்னைக்கட்டிப்  பிடித்துக்கொண்டார்.
அப்பா.... எங்கே  போனீர்கள்...?  என்று  கேட்டேன்.
சண்முகானந்த  பவானில்  தோசை  சாப்பிடப்போனேன்   என்றார் அப்பா.
எனக்கோ  ஒரே  சந்தோசம்.  அன்று  சந்தோசத்துடன்  பாடசாலை சென்று  திரும்பினேன்.
அம்மாவிடம்  நான்  சொல்லவில்லை.  அப்பா  சொல்லுவார்தானே?
இப்படி   அடிக்கடி  அப்பாவுக்கும்  அம்மாவுக்கும்  வாக்குவாதம் நடக்கும்.   அப்பாவுக்கும்  வேலை   அதிகம்.   போக  நாங்கள்  ஐந்து பிள்ளைகள்.   அத்துடன்  எழுத்தாளர்கள்  அப்பாவைப்பார்க்க வருவார்கள்.   அடிக்கடி  தொலைபேசி    அழைப்புகள் வந்துகொண்டிருக்கும்.
மீண்டும்    வாக்குவாதங்கள்  தொடங்கும்.
அப்பா  எல்லோருக்கும்  சொந்தமானவர்.  எழுத்தாளருக்கு முக்கியமாக.    அக்கம்  பக்கத்தவர்கள்  அடிக்கடி  ஆங்கிலத்தில்   கடிதம்   எழுத  வருவார்கள்.
அதுபோக  அம்மாவின்  உறவினர்கள்  எல்லோருமே  அப்பாவிடம்தான்  தம்  பிள்ளைக்கு  என்ன  பெயர்  வைப்பது  என்று கேட்பார்கள். 
ஆனால்  - அப்பா  இப்போது  உண்மையிலேயே    இறந்துவிட்டார்.
அம்மாவுக்குத்தான்   கவலை    அதிகம்.  அழுதபடியே  இருந்தார். அப்பாவின்   உடம்பைப்  பார்த்தபோது  ஐயோ  அப்பா  நான்  உங்களை நன்றாக   பார்க்கவில்லையே.... என்று  மீண்டும்  மீண்டும்  சொல்லி அழுதார்.   நீ  மாத்திரம்  அழாதே  என்று  எனக்குச்  சொல்லிவிட்டார்.  
அப்பா   ஒழுங்காகக்  கோவிலுக்குப்  போவதில்லை.  அத்துடன்   தன் உடம்பை   தகனம்  செய்ய  வேண்டும்  என்றும்   சொல்லியிருந்தார்.
இதனால்  அம்மா    போகும்  கோவில்காரர்  தாங்கள்  அப்பாவுக்கான இந்த   இறுதி    வழிபாட்டை    நடத்தப்போவதில்லை    என்று சொல்லிவிட்டார்கள்.
நாங்களோ   பெரிதாகக்  கவலைப்படவில்லை.  என்  தங்கையின் கணவனார்   ஒரு  போதகர்.  அவரே  அப்பாவின்  இறுதி  வழிபாட்டை நடத்தச்சொல்லி விட்டோம்.
விமான   விபத்தில்  எரிந்து  மாண்டவர்கள்  என்ன  அடக்கமா பண்ணப்படுகிறார்கள்...?  அவர்கள்  மோட்சத்துக்குப்  போக மாட்டார்களா    என்ன...?   
அம்மாவின்   கவலை    என்னை    மேலும்  கவலையில்  ஆழ்த்தியது. 
அம்மா!  வந்து  என்னோட  இருங்கோ    என்றேன்.
இல்லை ...இல்லை... அப்பாவுக்கு  ஒவ்வொரு  நாளும்  மெழுகுதிரி கொளுத்த   வேண்டும்  என்றார்.
அம்மா... மெல்பனில்  இருந்து  மாமியும்  வந்திருக்கிறா   என்றேன்.
இல்லை ...இல்லை.... அங்கேதான்  இருக்கப்போகிறேன்.   அப்போதுதான்   அப்பாவுடன்  இருப்பது  போல  இருக்கும்  என்றார். அதன்   பின்னர்  நான்   ஒன்றும்  கேட்கவில்லை.  அம்மா   சொல்வதும் உண்மைதானே.   எங்கள்  வீடு  பெரிதானால்  என்ன...?
அப்பாவின்   நினைவால்  அம்மா  இனி  வாழப்போகிறார்  போலத் தெரிந்தது.
இதற்கிடையில்  கொழும்பில்  இருந்து   அண்ணாவின்   தகவல்கள் வந்தன.
நீங்கள்   எல்லோரும்  சேர்ந்து  அவரைக்  கொன்றுவிட்டீர்கள்  என்று. தான்   இந்த  நிலைமையில்  அப்பாவைப்    பார்க்கப்    போவதில்லை என்று  பின்னர்  சொல்லிவிட்டார்.
அப்பா    நல்லவர்.  பிள்ளைகளுக்காக  எல்லாம்  செய்தார்.   நாங்கள் சிறுவர்களாக   இருக்கும்போது  கதைப்புத்தகங்கள்  வாசித்துக் காட்டினார்.    சொற்களுக்கு  அர்த்தம்  சொல்லித்தந்தார்.
ஒரு  முறை    அப்பாவுடன்  கண்டிக்குப்  போயிருந்தேன்.   இரவில் புகையிரதம்   ஸ்டேசன்   ஒன்றில்  நின்றது.  எனக்கு  இளநீர்   வாங்க அப்பா   இரயில்  வண்டியிலிருந்து  இறங்கிவிட்டார்!
அப்பா   வேண்டாம்  வேண்டாம்  என்று  கத்தினேன்.  அப்பா  இரயில் வண்டியிலிருந்து   இறங்கியதும்  இரயில்  வண்டி    புறப்பட்டுவிடுமோ என்கிற   பயம்  எனக்கு.
அப்பா   இறங்கி  இளநீரை   கிழேயிருந்து  எனக்கு  நீட்ட  நான்   எட்டி வாங்க  முயன்றேன்.   அதற்குள்  இளநீர்  கீழே    விழுந்து விட்டது.
எனக்கு   ஒரே  கவலை.  அதற்குள்  விசில்  சத்தம்  கேட்க  அப்பா ஓடிவந்து   புகையிரதத்தில்    ஏறிவிட்டார்.  அப்பாடா   என்று  பெருமூச்சு விட்டேன்.   அப்பா  பக்கத்தில்  இருந்தால்  போதும்.   இளநீரும் வேண்டாம்  ... ஒன்றும்   வேண்டாம்.
ஆனால் - அப்பா  இப்போது  இறந்து விட்டார்.  இனி  மூளையில்  இது பதியப்படவேண்டும்.   அம்மாவும்  அன்று  அப்பாவின்  உடம்பைப் பார்த்தவண்ணம்   சொன்னர்  நானும்  சீக்கிரம்  உங்களிடம்  வருவேன்   என்று.
அப்பா   மோட்சத்துக்குத்தான்  போனார்  என்பது  என்  நம்பிக்கை. இங்கேதான்   இருக்கிறார்  என்று  ஏதாவது  விதத்தில் உறுதிப்படுத்துமாறு   கடவுளிடம்  பிரார்த்தித்துக்கொண்டேன்.
அப்பாவின்   ஞாபகார்த்தமாக  மரம்  ஒன்றை   நடவேண்டும்  என்று எண்ணியிருந்தேன்.    அதைவிட  இப்படி  கதைகள்  எழுதவேண்டும் என்று   மனம்  சொல்லியது.
அப்பா... எங்கே  போனீர்கள்...? என்று   கேட்க  வேண்டும்  போல் இருந்தது.   ஆனால் - அவர்  உண்மையிலேயே   இறந்துவிட்டார்.
(என்  அன்புத்  தந்தை  காவலுர்   ராசதுரைக்கு   சமர்ப்பணம்)


No comments: