24.10.2014 விழுதல் என்பது எழுகையே.. பகுதி 23 எழுதுபவர் திருமதி சிறீறஞ்சனி அவர்கள் கனடா

.
விழுதல் என்பது எழுகையே என்னும் பெயரில் பல உலக தமிழ் எழுத்தாளர்கள் தொடராக எழுதும் நீள் கதையை தமிழ்முரசு தொடற்சியாக பிரசுரிக்க உள்ளது என்பதை மகிழ்வோடு அறியத்தருகிறோம் .


தெல்லிப்பழையைச் சேர்ந்த ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா தற்போது கனடாவில் வாழ்கிறார். இவரது முதலாவது சிறுகதை, ‘மனக்கோலம்’, ஏப்ரல் 1984 ல் ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது.
ஈழநாடு, தினக்குரல், மல்லிகை, ஞானம், நான், ஜீவநதி, உதயன், வைகறை, தூறல், காலம், காலச்சுவடு, யுகமாயினி,வல்லினம், பதிவுகள், மகாஜனன் ஆண்டுமலர்கள், திண்ணை, Tamailauthors.com, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிக் கைநூல், தாய்வீடு, முகங்கள் (புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு) போன்றவற்றில் இவரது சிறுகதைகள், கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு நினைவாக,
தமிழ் படிப்போம், பகுதி 1 & பகுதி 2 எனும் இரு நூல்களை 2009லும்
நான் நிழலானால் – சிறுகதைத் தொகுப்பை (யுகமாயினி சித்தன் கலைக்கூட வெளியீடு)- 2010 லும் இவர் வெளியிட்டுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியான ஸ்ரீரஞ்சனி தற்போது அங்கீகாரம் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் ரொறன்ரோ கல்விச்சபையின் ஒரு தமிழ் ஆசிரியராகவும் தொழில் புரிகின்றார்.
விழுதல் என்பது எழுகையே  பகுதி 23

எழுதியவர் சிறீரஞ்சனி கனடா தொடர்கிறது…

 ‘போன கிழமை கலா சொன்ன செய்தி இன்னும்தான் என்ரை மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்குது. அங்கை ஒரு தாய் தன்ரை இரண்டு பிள்ளையளையும் கொன்று போட்டு தானும் தற்கொலை செய்திட்டாவாம்.”

 ‘ம….ம், அங்கை இருந்து உயிரைப் பிடிச்சுக்கொண்டு இங்கை ஓடி வாறம்… பிறகு இங்கை இப்படிப் போகுது. ஆம்பிளையள் கடன் அடைக்க, உழைக்க எண்டு இரண்டு வேலையிலை ஓடித்திரிய …. வீட்டுக்கை பொம்பிளையள், பிள்ளையளோடை தனிய இருக்கிறது ….. அது ஒரு பெரிய பிரச்சினை. ஊரிலை இருந்த மாதிரி இங்கை ஒத்தாசைக்கு யார் இருக்கினம்? ” எனப் பானு சொன்ன போது அவள் தன்னைப் பற்றியும் சொல்வது மாதிரித் தெரிந்தது சீலனுக்கு.
தன்னுடைய வீட்டுக்கு முன்னால் இருந்த பனியை அள்ளிக்கொண்டிருந்த தவத்தார் சீலனைக் கண்டதும்,  ‘சீலன், வாரும் வாரும். கொஞ்ச நாளா பனி கொடடாமலிருந்து இன்று கொட்டத் தொடங்கி விட்டுது  கொட்டக் கொண்ட  அள்ளினால் கொஞ்சம் சுகம் எண்டு போட்டு இப்பத்தான் வெளியிலை வந்தனான். கவனம் வழுக்கிக் கிழுக்கி விழுந்து போகாதேயும், பிறகு எலும்புநோ வைத்தியத்துக்கு அலையத்தான் காசும் காலமும் சரியாயிருக்கும் ” என்ற படி அவனுக்கு வழிவிட்டார்.’
‘தேவலோகம் மாதிரியிருக்குது, இல்லையே! ” என்றான் மிகுந்த குதூகலத்துடன் சீலன்
‘ஓம், ஓம் இப்ப உமக்கு தேவலோகம் மாதிரித்தானிருக்கும். உமக்கென்று ஒரு வீடெடுத்து பனி வழிக்க வெளிக்கிட்டால் தான் தெரியும், என்ன லோகம் இது என்று.” எனச் சலித்தபடி தானும் வீட்டுக்குள் வந்தார் தவம்.
கம்பெக்கரை எடுத்து தவத்திடம் கொடுத்தான் சீலன்.
 ‘ஒரு பியர் எடுக்கிறீரோ, குளிருக்கு நல்லா இருக்கும்” என்றபடி பியருடன் வந்தமர்ந்த, தவம்.  ‘அம்மா என்னவாம், கதைச்சனீரோ? ” என்றார்.
 ‘ஓம், இப்ப அவ தங்கைச்சியைப் பற்றிக் கவலைப்படுறா, அங்கை இருந்தால் போராட்டத்துக்கு சேர்க்கப்படுவாளோ இல்லை, ஆமியின்ரை ஆக்கினைக்கு உட்படுவாளோ எனப் பயப்பிடுறா. அதாலை நான் வந்த கடன் அடைச்சு … பிறகு அவளுக்குக் கலியாணம் எண்டு காத்திராமல் எங்கையாவது மாத்துச் சம்பந்தம் செய்யலாம் என யோசிக்கிறா”, எனப் பெருமூச்சு விட்டான், சீலன்.
  ‘அப்ப அம்மாவுக்கு உம்மடை கலாவின்ரை கதை தெரியாது  போலை …. சீலன் கவனமாயிரும். இங்கை பொம்பிளையளைக் கூப்பிட்டுப் போட்டு பிடிக்கேல்லை எண்டு கலியாணம் கட்ட மாட்டன் என்கிறவை ஒரு புறம். இன்னும் சிலருக்கு ஏற்கனவே இங்கை பொம்பிளை இருக்கும். தாய்மாருக்கு சொல்லாயினம், பொம்பிளை வந்தாப் போலைதான் எல்லாம் சந்திக்கு வரும்.”
 ‘ஓம், அது தான் எனக்கும் பயமாயிருக்கு, போதாதுக்கு விறுமாண்டியின்ரை கதை போல வந்தால் என்ன செய்யிறது”
 ‘விறுமாண்டியின்ரை குடும்பம் மாதிரி எங்கடை ஆக்களும் ஒரு ஆள் ‘கே’ எண்டால் ஒத்துக் கொள்ளாயினம். அதாலை அவங்களும் சொல்லத் துணிய மாட்டான்கள். பிறகு பொம்பிளை வந்தாப் போலைதான் பிரச்சினை வெடிக்கும்.”
 ‘எங்கடை பிரச்சினைக்கெல்லாம் எந்த முடிவுமில்லை. உயிரைக் காப்பாற்றியிருக்கிறம், பயமில்லாமல் நித்திரை கொள்றம் அவ்வளவுதான். பிரச்சினைகளின் சுமை இப்போதைக்கு குறைகிற மாதிரியில்லை எண்டு ஒரு நேரம் விரக்தியாயிருக்கு. பிறகு பேராசிரியர் குமாரவேல் சொன்னதை நினைச்சால், நம்பிக்கை தானே வாழ்க்கை. வாழும் வரை வாழ்வதை ஒழுங்காக அனுபவித்து வாழ்வோம் எண்டிருக்கு…. ம்… சரி, நான் வரப்போறன், கலா இரவைக்கு கோல் பன்ணுறதாய்ச் சொன்னவ” , என்றபடி சீலன் வெளியேறினான்.
வெளியே பனி பெருங் குவியலாகக் குவிந்திருந்தது. தான் விழுந்து போகாமல் இருப்பதற்காக ஒவ்வொரு அடியாக எடுத்துக் கவனமாக வைத்தான், சீலன்.
(தொடரும் )

டுத்து தொடர் 24 ஐ தொடருபவர் நயினை விஜயன் யேர்மனி


No comments: