உலகச் செய்திகள்

.

சோவியத் ரஷியாவின் உளவாளியாக செயல்பட்டார் நேருவின் நண்பர்'

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: 20 தாலிபன் பயங்கரவாதிகள் பலி

சர்வதேச எதிர்ப்பையும் மீறி இளம் பெண்ணைத் தூக்கிலிட்டது ஈரான்

உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பேராபத்து'

"சோவியத் ரஷியாவின் உளவாளியாக செயல்பட்டார் நேருவின் நண்பர்'


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலை இயக்கத்தில் தளபதியாகவும், முன்னாள் பிரதமர் ஜவாஹர் லால் நேருவின் நெருங்கிய நண்பராகவும் விளங்கிய ஏ.சி.என். நம்பியார், சோவியத் ரஷியாவுக்கு உளவாளியாகச் செயல்பட்டார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல்களை லண்டனில் உள்ள தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1924ஆம் ஆண்டு பெர்லின் நகருக்குப் பத்திரிகையாளராக சென்ற நம்பியார், அங்குள்ள இந்திய கம்யூனிஸ இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டார். 1929ஆம் ஆண்டில் மாஸ்கோவுக்கு சோவியத் ரஷியாவின் "விருந்தாளி'யாகச் சென்றிருந்தார்.


இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, ஜெர்மனியில் இருந்து வெளியேற்றப்பட்ட நம்பியார், பின்னர், நேதாஜியின் உதவியாளராக மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
நேதாஜியின் இந்திய விடுதலை இயக்கத்தில், அவருக்கு அடுத்த தலைவராக ஏ.சி.என்.நம்பியார் விளங்கினார்.
விடுதலை இயக்கத்தில் ஜப்பானியர்களைச் சேர்ப்பதற்காக தூரக் கிழக்கு நாடுகளுக்கு நேதாஜி சென்றபோது, ஐரோப்பாவில் இருந்து அந்த இயக்கத்தை அவர் வழிநடத்தினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஸ்கான்டினேவியன் நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும், பின்னர் மேற்கு ஜெர்மனிக்கான தூதராகவும், இறுதியில் "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழின் ஐரோப்பிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டார்.
இவர், 1920ஆம் ஆண்டு முதற்கொண்டே சோவியத் ரஷியாவின் உளவாளியாக செயல்பட்டார் என்று 1959ஆம் ஆண்டு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
மேலும், "நேருவைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்த ஒரே நபர், அவருடைய பழைய நண்பரான நம்பியார்' என்று ஒரு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், அவரை இந்தியத் தூதராக நேரு நியமித்தார் என்றும் லண்டன் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: 20 தாலிபன் பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய கைபர் பள்ளத்தாக்குப பகுதிகளில் தாலிபன்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அந்தபகுதியில் அவ்வபோது பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில் இன்ற அந்த பகுதியில் பதுங்கியிருந்த தாலிபன் பயங்கரவாதிகளை குறிவைத்து, மறைவிடங்களில் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில், 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச எதிர்ப்பையும் மீறி இளம் பெண்ணைத் தூக்கிலிட்டது ஈரான்


ஈரானில் உளவுத்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 வயது இளம் பெண், சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார்.
ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது மரண தண்டனையை நிறைவேற்ற உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்பு எழுந்திருந்த நிலையிலும், அதனைப் பொருள்படுத்தாமல் ஈரான் அவரைத் தூக்கிலிட்டது.
ரேஹானே ஜபாரி என்ற அந்தப் பெண், சனிக்கிழமை அதிகாலையில் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் சட்ட அமலாக்க அலுவலகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ. தெரிவித்துள்ளது.
தூக்கிலிருந்து ரேஹானேவைக் காப்பாற்றுவதற்காக இயங்கி வந்த ஃபேஸ்புக் இணையதளப் பக்கத்தில், "அவரது ஆன்மா சாந்தியடையட்டும்' என்ற வாசகங்கள் பதிவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், அவர் தூக்கிலிடப்பட்ட தகவல் உறுதியாகியுள்ளது.
வீடுகளின் உள்ளலங்கார நிபுணரான ரேஹானே, கடந்த 2007-ஆம் மோர்தெஸா அப்துலாலி சர்பண்டி என்ற உளவுத் துறை அதிகாரியை கத்தியால் குத்திக் கொன்றதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், ரேஹானேவை பாலியல் பலாத்காரம் செய்ய அப்துலாலி முயன்றதாகவும், தற்காப்புக்காகத்தான் அவரை ரேஹானே குத்தியதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறி வருகின்றன.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கூறிய மனித உரிமை அமைப்புகள், ரேஹானேவுக்கான மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
ஈரானின் திரைப்பட நடிகர்கள் உள்பட பிரபலங்கள் பலரும் ரேஹானேவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தனர். குத்திக் கொல்லப்பட்ட அப்துலாலியின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கியிருந்தால், ஈரான் நாட்டு இஸ்லாமியச் சட்டப்படி ரேஹானே தூக்கிலிருந்து தப்பியிருப்பார்.
எனினும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் மர்ம நபர் ஒருவர் இருந்ததாகவும், அந்த நபரைப் பற்றிய உண்மைகளை மூடி மறைக்கும்வரை ரேஹானேவுக்கு மன்னிப்பு வழங்க முடியாது எனவும் கூறி, அப்துலாலி குடும்பத்தினர் அதற்கு மறுத்துவிட்டனர்.
இந்தச் சூழலில், ரேஹானேவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டு மட்டும் ஈரானில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பேராபத்து'

எபோலா நோய் பரவலை உடனடியாகத் தடுக்காவிட்டால், வரும் டிசம்பர் மாத மத்தியில் ஆயிரக்கணக்கானோர் அதனால் உயிரிழக்க நேரிடும் பேராபத்து உள்ளது என அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு எச்சரித்திருக்கிறது.
யேல் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரம்-மருந்துத் துறை, லைபீரியா நாட்டின் பொது சுகாதாரம், சமூக நலத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து ஓர் ஆய்வை நடத்தின. அந்த ஆய்வில் தெரிவித்துள்ள விவரம்: தற்போது எபோலா நோய் தடுப்புக்கு மருந்து எதுவுமில்லாத நிலையில், அது வேகமாகப் பரவி வருகிறது. மேலும், கவனக் குறைவு காரணத்தால், நோய் பாதிப்புள்ளவர்களுக்கு மருத்துவ உதவி புரிந்து வருபவர்களையும் இது பாதித்துள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள் எதுவுமில்லாமல், தற்போது எபோலா நோய் பரவி வரும் நிலையிலேயே தொடர்ந்து பரவுமானால், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை கணித அடிப்படையில் அறிய முயற்சி செய்துள்ளோம். இந்த கணிப்பை லைபீரியாவின் மாண்ட்ùஸராடோ மாவட்டத்தின் மக்கள்தொகை எண்ணிக்கையுடன் பொருத்திப் பார்த்தபோது, மிகவும் கவலையளிக்கும் விவரங்கள் கிடைத்துள்ளன. மாண்ட்ùஸராடோ மாவட்டத்தில் சுமார் 13.8 லட்சம் பேர் வசிக்கின்றனர். அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படாவிடில், டிசம்பருக்குள் அந்த மாவட்டத்தில் 1,70,996 பேர் இந்நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் அங்கு 90,122 பேர் உயிரிழக்க நேரிடும்.
நவம்பர் 15-ஆம் தேதிக்குள் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமானால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,957 ஆக இருக்கும்.
இந்த நோயினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை விளக்கவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையை, பிரபல மருத்துவ ஆய்விதழான "லான்ùஸட்' வெளியிட்டுள்ளது.
தற்போது, சுமார் 9,000 பேர் எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கினி, லைபீரியா, சியரா லியோன் ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதன் காரணமாக 4,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

nantri dinamani.com

No comments: