நினைவுகள் இனிமை: துயரங்கள் நிறைந்த கணங்களுடன் – 3

.
ஆசிரியர் சுந்தரதாஸ் மூலம் கற்றதும் பெற்றதும் – திருநந்தகுமார்


சென்ற முறை தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளைத் தொட்டுச் சென்றிருந்தேன். நிறைவு நாள் நிகழ்வு வீரசிங்கம் மண்டபத்தினுள்ளே நடைபெறவே ஏற்பாடுகள் செய்திருந்தனர். எனினும் எதிர்பார்த்ததிற்கும் மேலாக பலமடங்கு கூட்டம் அன்று திரண்டமையால் தான் மேடையை வீரசிங்கம் மண்டபத்திற்கு வெளியே அமைத்திருந்தனர்.  தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் பேராசிரியார் நயினார் முகமது அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தான் காவலர் வண்டி கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தது.  அண்மையில் தமிழ் ஆய்வாளரும் அறிஞரும், கடலியல் நிபுணரும் பிரபல பதிப்பாளருமான மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் தமது முகநூலில் பேராசிரியர் நயினார் முகமது அவர்கள் 23/07/14 அன்று தனது எண்பத்தைந்தாவது வயதில் அமெரிக்காவில் காலமானர் என்ற செய்தியை பதிவு செய்திருந்தார். நயினார் முகமது அவர்கள் திருச்சியில் ஈழத்தமிழ் மாணவரைப் பேணியவர் என்றும் தனது தமிழாராய்ச்சிக்கு வழிகாட்டியவர் என்றும் பெரியவர் சச்சிதானந்தம் குறிப்பிட்டிருந்தார். தமிழாராய்ச்சி மாநாட்டின் விருந்தினர் வரவேற்புக் குழுவின் தலைவராகக் கடமைபுரிந்த ஐயா சச்சிதானந்தம் அவர்கள் அரிய இரு படங்களை இணைத்திருந்தார். அப்படங்களை இங்கு இணைத்துள்ளேன். முதலாவது படத்தில் பேராசிரியர் நயினார் முகமது அவர்கள் உரையாற்றுகிறார். மேடையில் உலக தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் அப்போதய தலைவர் பேராசிரியர் வித்தியானந்தன் அமர்ந்திருக்கிறார். இரண்டாவது படத்தில் அப்போதய உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) சந்திரசேகரா அவர்கள் அலங்கார ஊர்திப் பவனியினை தொடக்கி வைப்பதற்கு முன்னதாக கைலாசபிள்ளையார் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் காணப்படுகிறார். அருகில் மாநாட்டுச் செயலாளர் வி.எஸ் துரைராஜா அவர்கள்.




தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு தமிழ் நாட்டிலிருந்து இரா. ஜனார்தனம் அவர்கள் வருகைதரவிருந்தபோதும் இலங்கை அரசி விசா வழங்கவில்லை. நிறைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ள ஜனார்த்தனம் கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்திருக்கிறார் என்ற தகவல் வெளியே பரவியது. அச்செய்தியே ஏ.எஸ்.பி சந்திரசேகராவை தனது குழுவுடன் அவ்விடத்திற்கு வரவழைத்தது என்று ஒரு பேச்சு இருந்தது. பின்னால் வந்த அனர்த்தங்களுக்கு முன்னோட்டமாக தமிழாராய்ச்சி மாநாட்டின் உயிர்ப்பலிகள் இடம்பெற்றன என்றே கூறவேண்டும்.
புதிய குடியரசு அரசியல் யாப்பு, தமிழராய்ச்சி மாநாட்டு உயிர்ப்பலிகள் என்பவற்றைத் தொடர்ந்து 1976இல் வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானங்கள் வரை நடைபெற்ற நிகழ்வுகள் சங்கிலிக் கோர்வையாக நடைபெற்றவை.
நான் யாழ். இந்துக்கல்லூரியில் படித்த வேளையில் சிறீமாவோ அம்மையாரின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.  மாணவர்களுக்கு சாரணர் படையுடன் இராணுவ மாணவர் படை ( ஆமி கடேற்) பெரும்பாலானா பாடசாலைகளில் இருந்தன. எனது கல்லூரியில் கப்டன் பரமேஸ்வரன், கப்டன் சோமசுந்தரம் லெப்டினண்ட் சந்தியாபிள்ளை ஆகியோர் பொறுப்பாசிரியர்களாக இருந்தவர்கள். இதேவேளை 1972ஆம் ஆண்டு விசேட பொலிஸ் பிரிவின் ( Special Police Reserve) ஒரு குழுவினர் மலேசியா சென்று மாணவர் பொலிஸ் படை ( Police Cadet Corp) ஒன்றை இலங்கைப் பாடசாலைகளில் அமைக்க பயிற்சி பெற்று வந்தனர். அப்போது றிசேர்வ் பொலிஸ் பிரிவின் கட்டளை அதிகாரியாக (Commandant) றிசேர்வ் பொலிஸ் படையைச் சேர்த ஒருவரும், துணைக் கட்டளை அதிகாரியாக (Deputy Commandant) அப்போதய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாமதேவன் கடமைபுரிந்தார். அரசாங்கம் இலங்கையில் ஆறு பாடசாலைகளைத் தெரிவு செய்து பொலிஸ் கடேற் படையை ஆரம்பித்தது. கொழும்பில் ஆனந்தாக் கல்லூரி, கண்டியில் கிங்ஸ்வூட் கல்லூரி, காலியில் மகிந்த கல்லூரி, கம்பளையில் சாகிரா கல்லூரி, சிறீமா அம்மையாரின் அத்தனகல்ல தொகுதியில் உள்ள சங்கமித்த வித்தியாலயம் இவற்றோடு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகியனவே அவை. எமது கல்லூரியில் இருந்து எமது ஆசிரியர்கள் சுந்தரதாஸ் மற்றும் மரியதாஸ் ஆகியோர் கொழும்பில் நான்கு வாரகாலம் நடைபெற்ற பயிற்சியில்  கலந்துகொண்டனர். இவர்களுக்குப் பயிற்சியளித்தவர்களில் ஒருவர் பொலிஸ் கடேற் பிவில் கடமை புரிந்தவர் சப் இன்ஸ்பெக்டர் உபாலி சகாபந்து. இவர் பின்னாளில் கிழக்கு மாகாணத்தில் விசேட அதிரடிப்படையி பொறுப்பதிகாரியாகக் கடைமை புரிந்து கொலையுண்டவர் கடேற்படையை விட்டு நீங்கிய பின் வல்வெட்டித்துறையில் பொறுப்பதிகாரியாகக் கடமைபுரிந்தவர். உபாலி மிக கட்டான, பருத்த உடல் கொண்ட ஒருவர். ஜூடோ கலையில் நிபுணர்.


1972 கடைசியில் உபாலி சகாபந்து யாழ்ப்பாணம் வந்து எமது கல்லூரியில் இருநாள் பயிற்சியளித்தார். பொலிஸ் கடேற் படையில் சேருவதற்கு மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டனர். சுமார் அறுபது வரையானோர் தமது பெயர்களைக் கொடுத்திருந்தனர். பெயர்குடுத்தவர்களில் இணுவிலைச் சேர்ந்த ஆனந்தவரதன், ஜெயகாந்தன் மற்றும் நான் மட்டும் தான் சிறியவர்கள். உயரத்தின் படி வரிசையில் நின்றபோது நான் கடைசிக்கு முதல் ஆளாக இருந்தேன். ஜெயகாந்தன் இடையில் அகப்பட்டுக்கொண்டான். எங்கே நாம் தட்டுப்பட்டுவிடுவோமோ என்று பயம் எம்மைக் கவ்விக்கொண்டது. எனது சிறுவயது முதல் கனவுச் சீருடையாக இருந்த பொலிஸ் சீருடை எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலை எனக்கு. அப்போது யாழ். போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி சேனாதிராஜா வந்து உபாலியோடு சேர்ந்து பயிற்சியளித்தார். நிமிர்ந்து நில், இலகுவாக நில், வலம் திரும்பு, இடம்திரும்பு என்ற இலகுவான பயிற்சிகள். கட்டளைகள் சிங்கள மொழியில் இருந்தன. முதல் தடவைகளில் சிங்களத்தில் கேட்டபோது எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. உபாலியும் சிரித்தபடி உரத்த குரலில் கட்டளைகள் பிறப்பித்துக்கொண்டிருந்தார். இரண்டு நாள் பயிற்சியின் பின்னர் உபாலி சென்றுவிட்டார். மீண்டும் வருட இறுதியில் உபாலி சகாபந்து வந்து பயிற்சியளித்தார். இப்போது எண்ணிக்கை நாற்பது வரையில் குறைந்துவிட்டது. மொத்தம் 33 பேர் தான் அணியில் இருப்பார்கள் என்றும் இருவர் றிசேர் ஆக இருப்பார்கள் என்றும் அறிவித்தார்கள். இப்போது தனி வரிசையிலிருந்து இரு வரிசையாகவும் பின் நான்கு வரிசையாகவும் மாறுவதற்கான கட்டளைகளும், நான்குவரிசையில் பின்புறமாக திரும்புதல் மற்றும் அணிநடை, சல்யூட் என்பனவும் பயிற்சிகளாயின. முதல்தடவையாக கடேற்படை தொடங்கியதால் மூத்தவர்கள் என்று யாரும் இல்லை. எனவே கடேற்படைக்கு ஒரு அணித்தலைவரையும், நான்கு உப தலைவர்களையும் தேர்ந்தெடுக்க ஏதுவாக அவர் விருப்பமானவர்கள் வந்து கட்டளைகளை சிங்களத்தில் கூறும்படி வேண்டினார். எப்படியாயினும் அணியில் இடம் கிடைத்தால் போதும் என்று நினைத்திருந்த எனக்கு வேறு எதிலும் கவனம் செல்லவில்லை. சுமார் எட்டுப் பேர் வரையில் தனித்தனியாகச் சென்று சிங்களத்தில் கட்டளைகள் சொல்லச் சொல்ல ஏனையவர்கள் நிமிர்ந்தும் நேராகவும் நின்றும் இடம் வலம் திரும்பியும் செய்தனர். Any one else? என்று உபாலி கேட்கவும் எல்லோரும் அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்தனர். வரிசையின் கடைசிப் பகுதில் நின்ற நானும் திரும்பிப்பார்த்தேன். அப்போது யூ, யூ என்று ஆங்கிலத்தில் கேட்டபடி என்னை நோக்கி கையை நீட்டினார் உபாலி. எனக்கு உள்ளூர இருந்த விருப்பம் அவருக்குத் தெரிந்துவிட்டதோ தெரியவில்லை. கூச்ச சுபாவமும், சிங்களத்தில் பிழைவிட்டால் உபாலியை விட மாணவர்கள் கேலி செய்வார்கள் என்ற பயத்தினால் நான் தயங்கியபடி நிற்க ஆசிரியர் சுந்தரதாஸ் வா என்றால் வா, உதை வேண்டாதே என்று உரக்கச் சொன்னார். உதை வாங்குவதை விட கேலி செய்வது ஒன்றும் பெரிதாக நோகாது என்பதால் நான் வேகமாக கையை வீசியபடி உபாலி நிற்கும் இடம் சென்று விறைப்பாகத் திரும்பி மள மள வென கட்டளைகளை சிங்களைத்தில் விசிறிவிட்டு திரும்பிவிட்டேன். அன்று பயிற்சி முடிந்தபோது ஆசிரியர் சுந்தரதாஸ் என்னை அழைத்து ‘டேய், சேருக்கு உன்னைப் பிடித்துவிட்டது. இணுவில் தோட்டவெளியில் நின்று நன்றாகக் கத்திப் பயிற்சி செய்’ என்று சொல்லி அனுப்பினார்.


அன்றிலிருந்து எனக்கும் ஆசை தொற்றிக்கொண்டது. தோட்டவெளி, கோவில் வீதி உறவினர் வீடுகள் எங்கும் எப்போதும் கைகளை வீசியபடி நடைபயிற்சியும் சிங்களத்தில் கட்டளைகளுமாக என் பொழுது கழிந்தது. அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது. எஸ்.பி. வாமதேவன் எமது கல்லூரிக்கு வந்து அதிபரோடு பேசிவிட்டுச் சென்றார். உபாலி சாகபந்துவும், யாழ். பொலிஸ் அத்தியட்சகர் ஜே,டி,எம் ஆரியசிங்கவும் கல்லூரிக்கு வந்திருந்தனர்.
எனினும் எனது காக்கிக் கனவு கலைந்தது. கடும் நீல நிறத்தில் நீளக் காற்சட்டையும் வெளிர் நீல நிறத்தில் மேற்சட்டையும் எமது சீருடை என்றதும் சப்பென்று ஆகிவிட்டது. எனினும் பொலிஸ் அலுவலர்களுடன் பழகக் கிடைத்தமை அன்றைய அரசியல் சூழலில் ஒரு பாதுகாப்பு உணர்வைத் தந்தது. அது கல்லூரியிலும் ஒரு மிடுக்கைத் தந்தது. அதுவரை யாரென்று அறியப்படாதவர்கள் எல்லோரும் பொலிஸ் கடேற் படையில் இணைந்ததும் மற்றவர்களால் கவனிக்கப்பட்டனர்.


1973இல் பள்ளி தொடங்கியதும் மீண்டும் பயிற்சி நடைபெற்றது. ஐவரைத் தெரிவு செய்து கொழும்பில் விசேட ஒரு நாள் பயிற்சிக்கும், தலைவர் தெரிவுக்குமாக ஆசிரியர் மரியதாசன் அழைத்துச் சென்றார். சாரணர் இயக்கத்தில் புகழ்பெற்றா இரா. செல்வவடிவேல், விளையாட்டு வீரரும், சிரேஸ்ட மாணவர் தலைவருமான இராஜகுலசிங்கம், கண்டி இரவீந்திரன் இவர்களுடன் நானும் ஐவர் அணியில் இடம்பெற்றது எனக்கு இன்னமும் ஒரு கனவாகவே இருந்தது.

கொழும்பில் ஏனைய ஐந்து பாடசாலைகளிலும் இருந்து ஐவர் வீதம் வந்திருந்தனர். எம்மவரில் ஒருவர் வரவில்லை. கொழும்பு-5 லொங்டன் பிளேசில் அமைந்திருந்த றிசேர்வ் பொலிஸ் தலைமையகத்தில் தங்கினோம். அப்பால் ஒரு மிகப்பெரிய மண்டபம் வெள்ளை நிறத்தில் கட்டப்பட்டிருந்தது. சீன அரசின் அன்பளிப்பாக அந்த மண்டபம் அமைவதாகவும் பண்டாரநாயக்கா நினைவாக அது அமையும் என்றும் எமக்கு வகுப்பு நடத்தியவர் குறிப்பிட்டார்.  பொலிஸ் கடேற்பிரிவுக்கு புதிதாக ஒரு சப் இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். திசநாயக்கா என்ற அந்த அலுவலரே காலையில் எமக்குப் பயிற்சி அளித்தவர். மாலையில் ஒவ்வொரு அணியாக அழைத்து கட்டளைகள் பிறப்பிக்கச் சொன்னார்கள். எல்லாம் முடிந்த பின்னர் முடிவை அறிவித்தார்கள். எமது கல்லூரி அணிக்கு செல்வவடிவேல் சார்ஜண்ட் ஆகவும் இராஜகுலசிங்கமும் நானும் கோப்ரல்களாகவும் மற்ற இருவரும் லான்ஸ் கோப்ரல்கள் ஆகவும் தெரிவானோம். நாம் யாழ்ப்பாணம் வந்த சில நாட்களில் பயிற்சியாளர் திசநாயக்க மீண்டும் வந்து பயிற்சியளித்தார்.

அப்போது இராஜகுலசிங்கம் எமது கல்லூரியின் senior Prefect ஆக உயர்தர வகுப்பில் படித்துகொண்டிருந்தவர். நான் பத்தாவது திரும்பப் படித்துக்கொண்டிருந்தேன். செல்வவடிவேலுக்கு அடுத்ததாக இராஜகுலசிங்கமே என எல்லோரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆசிரியர் மரியதாசன் மீண்டும் பயிற்சி தொடங்கியபோது கொழும்பில் நடைபெற்ற போட்டியில் செல்வவடிவேலுக்கு அடுத்ததாக அதிக புள்ளிகள் பெற்றது திருநந்தகுமார் என்றும் அவனே இரண்டாவது பொறுப்பாளர் என்றும் அறிவிக்க எல்லோரும் சற்றுக் குழம்பிப் போயினர். பயிற்சியாளர் திசநாயக்கா பொலிஸ் படையில் கட்டளைகளுக்குக் கீழ்படிவது மட்டுமே உங்கள் வேலை என்றும் மீறுவது தண்டனைக்குரியது என்றும் சிரித்துகொண்டு சொல்ல எல்லாம் அமைதியாகிவிட்டது. அணியில் இடம் கிடைக்குமா என ஏங்கியிருந்த எனக்கு அணியின் இரண்டாவது தலைவர் என்ற மகுடம் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

எமது கல்லூரியைச் சூழ உள்ள வீதிகள் தோறும் அதிகாலை தொடங்கி பயிற்சிகள் செய்தோம். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இருந்து பயிற்சியாளர்கள் வந்து பயிற்சி தந்தனர். களுத்தறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஒரு வார காலம் எமது முதலாவது பாசறை நடைபெற்றது. ராஜசிங்க விடுதியில் எமது அணி தங்கியிருந்தது. அப்போது பயிற்சியிலிருந்த பொலிஸ் பயிலுனர்கள் அனைவரும் விடுமுறையில் சென்றிருந்தனர். பாசறையின் மூன்றாம் நாள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் சார்ஜண்ட் செல்வவடிவேல் தனது கையை உடைத்துக் கொண்டார். அதன் பின் தலைமை என் தலைக்கு வந்தது. செல்வவடிவேல் இரண்டு நாட்கள் களுத்துறை மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அதன் பின் அவர் சீருடை அணிந்தபடி இருக்கவேண்டும் என்றும் பயிற்சிகளுக்கு வரத்தேவையில்லை என்றும் அறிவித்தனர். வயதிலும், படிக்கும் வகுப்பிலும் மூத்தவர்களும், ஏனைய விளையாட்டுத் துறைகளில் என்னை விட பிரசித்தமானவர்களும் எனது அணியில் இருந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது ஆரம்பத்தில் சிரமமாகவே இருந்தது. காலை மதியம் இரவு மூன்று நேரமும் மெஸ் எனப்படும் உணவு விடுதியில் எல்லோரும் கூடவேண்டும். பாசறையில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளையும் புள்ளிகளையும் அறிவிப்பார்கள். எமது அணி எப்போதும் கடைசியாகவே இருந்தது. நிறைவு நாளுக்கு முதல் நாள் மதிய உணவுக்கு கூடியிருந்தபோது அணித்தலைவர்களை பிரதான மேசையில் வந்து அமரும் படி அழைத்தனர். நான் மேசை அருகே சென்றபோது எல்லோரும் அமர்ந்துவிட்டனர். எதிரும் புதிருமாக அமைந்த அந்த மேசையில் பன்னிரண்டு பேரும் ஆறு மாணவர் தலைவர்களும் அடங்குவர். அங்குள்ள பொறுப்பாளர் என்னை ஒரு இருக்கையில் அமரும்படி கூறினார். நான் அமர்ந்ததும் அக்கம் பக்கம் பார்த்தேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. பொலிஸ் பயிற்சிக்கல்லூரியின் இயக்குனர், விசேட பொலிஸ் படை கொமாண்டர் மற்றும் எஸ்.பி.வாமதேவன் அகியோர் அமர்ந்திருந்தனர். எனக்கு நேர் எதிரில் ஒருவர் வெள்ளை நிற நசனலுடன் அமர்ந்திருதார். அவருக்கு அருகில் இருந்தவர் என்னைப் பார்த்து எந்தப் பள்ளிக்கூடம் என்று சிங்களத்தில் கேட்க, நான் யாழ். இந்து என ஆங்கிலத்தில் பதிலளித்தேன். அவர் Jaffna Hindu? என மீண்டும் கேட்க, நான் யெஸ் என்றேன். அவர் அருகில் நசனலுடன் இருந்தவரிடம் ஏதோ சொல்ல, அவர் என்னை பார்த்து யாப்பனே ஹிந்து? என சிங்களத்தில் மீண்டும் கேட்க ஆம் எனத் தலையை ஆட்டினேன். மதிய உணவின் முடிவில் விருந்தினர்களை அறிமுக செய்தபோது எனக்கு முன்னால் இருந்தவர் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் லக்ஸ்மன் ஜெயக்கொடி என அறிந்ததும் அதிர்ந்துபோனேன். கூட்டம் முடிந்து போகையில் ‘ ளமயா, அபி யமு’ ( குழந்தாய், நாம் சென்று வருகிறோம்) என்று சொல்லி எனது தோளில் தட்டிச் சொல்லிக்கொண்டு சென்றுவிட்டார். அன்று இரவு உணவு வேளைக்கு அதிதியாக வந்தவர் அப்போதைய பொலிஸ் மா அதிபர் ஸ்ரான்லி சேனாநாயக்க. எல்லாம் முடிந்தபின்னர் அவர் எனது ஆசிரியருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். எப்படி ஒரு ஐ.ஜி.பி சாதரண இன்ஸ்பெக்டர் தரத்தில் உள்ள றிசேர்வ் படை அலுவலருடன் இவ்வளவு நேரம் பேசுகிறார் என சூழ இருந்த பொலிஸ் அதிகாரிகள் பார்த்துக்கொண்டிருந்தனர். 

1 comment:

Shan Nalliah / GANDHIYIST said...

GOOD TO REMEMBER THE OLD STORIES OF JAFFNA.....IF SINHALESE GOVT INCLUDED TAMILS AS THEIR BROTHERS & SISTERS, SRILANKA COULD HAVE BEEN ANOTHER SINGAPORE! IF THEY INCLUDED LTTE+OTHER MILITANT ORGNS AS A NESL-REGIMENT,IT WOULD HAVE BEEN A WONDER OF ASIA! BUT SINHALA NARROW-MINDNESS NEVER CHANGE! THEY NEVER LISTEN..!!! I REMEMBER YO.NAREN/ YOGI WAS A LEADER AT ARMY CADET! HARICHANDRA/RATHA WAS A PL AT SCOUTS TROOP/JHC! PONNAMAN WAS A SCOUT LEADER!