இலக்கிய ஆர்வலர்களின் மெக்கா என்று அழைக்கப்படும் ஸ்ட்ராட்ஃபோர்ட் அப்பான் ஏவானில் ஷேக்ஸ்பியர் பிறந்த வீடு, திருமணத்திற்கு முன்பு அவரது மனைவி ஆன் ஹாத்வே வாழ்ந்த வீடு, ஷேக்ஸ்பியரின் மகள் சூசான்னா மருத்துவரான அவரது கணவருடன் வாழ்ந்த வீடு, ஷேக்ஸ்பியரின் தாய் மேரி ஆர்டனின் வீடு, ஷேக்ஸ்பியர் புதைக்கப்பட்ட தேவாலயம் என்று இன்றளவும் இலக்கியப் பயணம் மேற்கொள்பவர்களை ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக இருக்கிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட் அப்பான் ஏவான் நகரத்தின் பொருளாதார ஆதாரமாக இருப்பது ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இந்த வீடுகள்தாம்.


ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலிருந்து நீளும் சாலைகளை 16-ம் நூற்றாண்டின் புராதன வீடுகள்தாம் இன்னமும் நிறைத் துக்கொண்டிருக்கின்றன. ஷேக்ஸ்பியரை மையப்படுத்திய ஒவ்வொரு வீட்டையும் பார்த்து முடிக்கும்போது வரலாற்றுக்குள் பயணித்த அனுபவத்தைப் பெற முடிவதற்குக் காரணம் ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலகட்டத்தை அப்படியே பாதுகாத்து வைத்திருப்பதுதான். இன்றைய சூழலில் சாதாரணமாகத் தெரியும் அந்த வீடுகள், ஷேக்ஸ்பியர் காலகட்டத்தில் ஆடம்பரமான வீடுகளாக இருந்திருக்கின்றன என்கிறார்கள் அங்குள்ள வழிகாட்டிகள். பெரும்பாலான வழிகாட்டிகள் ஷேக்ஸ்பியர் காலத்து உடைகளிலேயே வலம் வருகிறார்கள். வழிகாட்டிகளுக்கென்று தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
ஷேக்ஸ்பியர் பிறந்த வீடு, ஸ்ட்ராட்போர்ட் அப்பான் ஏவானில் ஹென்லி தெருவில் இருக்கிறது. ஷேக்ஸ் பியர் பிறந்த வீடு, அவருக்குச் சொந்த மான வீடுதான் என்றாலும் ஒரு காலகட் டத்தில் அது அவருக்குத் தேவைப்படாத நிலையில், வாடகைக்கு விடப்பட்டது. ஷேக்ஸ்பியரின் குடும்பம் மூன்றாம் தலைமுறையோடு முடிந்துவிட்ட நிலையில் பராமரிப்பின்றிக் கிடந்த வீட்டை 18-ம் நூற்றாண்டிலேயே புனரமைத் திருக்கின்றனர்.


இப்போது அங்கு ஒரு அருங்காட்சியகமே இயங்கிக்கொண்டி ருக்கிறது. ஷேக்ஸ்பியரின் தந்தை கையுறைகளைச் செய்து விற்றுக் கொண்டிருந்தவர். அந்தத் தடயங்களை இப்போதும் சுமந்துகொண்டிருக்கிறது அந்த வீடு.
ஷேக்ஸ்பியரின் மூத்த மகள் சூசன்னாவும் அவரது கணவர் மருத்துவர் ஜான் ஹாலும் வாழ்ந்த ஹால்ஸ் கிராப்ட் என்கிற வீட்டில் 16, 17-ம் நூற்றாண் டுகளில் பயன்படுத்தப்பட்ட அறைக்கலன் களும் ஓவியங்களும் பாதுகாக்கப்பட்டி ருக்கின்றன. மருத்துவராக ஜான் ஹால் மேற்கொண்ட சில முயற்சிகளைப் பற்றிய ஓவியங்களும் இருக்கின்றன.


தோட்டத்தில் தாகூர்
தோட்டத்தில் தாகூர்
திருமணத்திற்கு முன்பு ஆன் ஹாத்வே விசாலமான வீட்டிலேயே வாழ்ந்திருக்கிறார். சுமார் 12 அறைகளும் விசாலமான தோட்டமும் கொண்ட அந்த வீட்டிற்குப் பல தலைமுறைகளாக ஹாத்வே குடும்பத்தினர் உரிமையாளர் களாக இருந்தார்கள். 1892-ல் அதை ஷேக்ஸ்பியர் பர்த் பிளேஸ் டிரஸ்ட் வாங்கியது.


ஷேக்ஸ்பியரின் பேத்தி வாழ்ந்த வீடு நேஷ் ஹௌஸ். இதுவும் ஒரு அருங்காட்சியகமாக இருக்கிறது. இதனருகில்தான் ஷேக்ஸ்பியர் கடைசி காலகட்டத்தில் வாழ்ந்த நியூ பிளேஸ் இருக்கிறது. ஷேக்ஸ்பியர் வாழ்ந்த கடைசி வீடு இப்போது இல்லாவிட்டாலும் நியூ பிளேஸின் தோட்டம் அப்படியே இருக்கிறது.
ஷேக்ஸ்பியரின் தாய் மேரி ஆர்டன் வாழ்ந்த பண்ணை வீடுதான் மேரி ஆர்டன் பண்ணை. ஷேக்ஸ்பியர் காலகட்டத்தின் கிராமப்புற வாழ்க்கையின் பிரதிபலிப்பாக நிற்கிறது இந்த வீடு.
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் வழிகாட்டி ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலகட்டத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை, அந்தக் காலத்துப் பழக்கவழக்கங்களைச் சொல்வது நாம் நின்றுகொண்டிருக்கும் இடத்தின் புராதனத்தை உணர்த்துகிறது. ஷேக்ஸ்பியரின் வீட்டில் இருந்த சமையலறையைக் காட்டிய வழிகாட்டி, அந்தக் காலகட்டத்தில் குழந்தைப் பிறப்பிற்குப் பிறகு பெண்கள் அதிக அளவில் இறந்தது சமைக்கும்போது ஏற்படும் விபத்துகளாலேயே என்றார்.


மனைவியரை அடிப்பதற்கு என்று கட்டை விரல் அளவிற்குப் பிரத்யேகமான தடிகளை கணவர்கள் உபயோகப்படுத்திய காலகட்டம் அது. அதிலிருந்தே under someone's thumb என்கிற மரபுத் தொடர் ஆங்கில மொழியில் வழக்கத்திற்கு வந்ததாகச் சொன்னார் அந்த வழிகாட்டி. பகல் பொழுதுகளில் மட்டுமே மனைவியரைக் கணவர்கள் அடிக்க முடியும். இரவில் அடிக்க வேண்டும் என்று விரும்பினால், மனைவியின் வாயைத் துணி வைத்துக் கட்டிய பிறகே அடிக்க முடியும்.

ஷேக்ஸ்பியர் பிறந்த இந்த நகரம் 1700-களிலிருந்தே சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துவருகிறது. 1847-லேயே ஷேக்ஸ்பியர் பர்த் பிளேஸ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் இந்த இடங்கள் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. 1700களிலிருந்து இந்தத் தளத்திற்கு வருகை புரிந்திருக்கும் முக்கியமான பயணிகளில் ஒருவர் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ். 1817-ல் இங்கு வந்திருந்த கீட்ஸ், பார்வையாளர்களுக்கான புத்தகத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். தங்குமிடம் என்கிற இடத்தில் “எல்லா இடங்களும்” என்று இவர் எழுதிய குறிப்பை இன்றளவும் பாதுகாத்துவைத்திருக்கிறது ஷேக்ஸ்பியர் பர்த் பிளேஸ் டிரஸ்ட். கீட்ஸ்போலப் பல இலக்கியவாதிகள் தொடர்ச்சியாக இங்கு வருவதாகச் சொல்கிறார்கள் வழிகாட்டிகள்.


ஷேக்ஸ்பியர் வீட்டின் உட்புறம்

ஷேக்ஸ்பியர் வீட்டின் உட்புறம்

ஷேக்ஸ்பியர் பிறந்த வீட்டின் தோட்டத்தில் அவரது கதாபாத்திரங்கள் பலவற்றின் சிலைகள் இருக்கின்றன. அதைத் தாண்டி நம்மைக் கவர்வது, அங்கு நிறுவப்பட்டிருக்கும் ரவீந்திரநாத் தாகூரின் சிலை. வேறெந்த நாட்டின் இலக்கியவாதிகளின் சிலையையும் அங்கு பார்க்க முடியவில்லை.
ஷேக்ஸ்பியர் நாடகங்கள், அது குறித்த கருத்தரங்கள் என்று எப்போதும் எதாவது ஒன்று இந்த நகரத்தில் நடந்துகொண்டிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் நினைவை இப்படிப் போற்றுவதுதான் சரியாக இருக்கும் என்று நம்புகிறார்கள் அங்குள்ளவர்கள்


மிக அசாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் ஷேக்ஸ்பியர். 18 வயதில் 26 வயது ஆன் ஹாத்வேயைக் கர்ப்பமாக்கிய பிறகு அவசரமாக நடந்த அவர்களது திருமணம் கடும் சர்ச்சைகளைக் கிளப்பியதில் வியப்பேதும் இல்லை. மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு அந்தத் திருமணம் கசந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் முதல் மகள் சூசன்னாவுக்குப் பிறந்தவர் எலிசபத். இரு முறை திருமணம் செய்து கொண்டாலும் எலிசபத்துக்குக் குழந்தைகள் இல்லை.
சுசன்னாவுக்கு அடுத்து பிறந்த ஹாம்னெட் 11 வயதில் இறந்துவிட்டார். மூன்றாவது மகளான ஜூடித் திருமணம் செய்துகொண்டாலும் அவருக்குப் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டார்கள். எலிசபத்தோடு ஷேக்ஸ்பியரின் வம்சம் முடிவுக்கு வருகிறது.
ஒரு மாபெரும் கலைஞனின் தனிவாழ்வு எவ்வளவு ஏற்ற இறக்கம் மிகுந்ததாய் இருந்திருக்கிறது என்பதை அவர் வாழ்ந்த வீடுகள், அதன் காலகட்டம் ஆகியவற்றின் ஊடாக உணரும்போது அவரது படைப்புகளுக்கு வேறொரு நிறம் கிடைக்கிறது.