மானிடத்தின் பேராசை..!
கென்யா நாட்டின்,
கொடும் கோடையிலும்,
பனிக் கவசம் சுமக்கின்ற,
கிளிமாஞ்சரோ மலைக்குன்றின்,
அடிவாரத்தில்………!

பிளெமிங்கோ பறவைகள்,
உழுது கோடு வரைந்த நிலம்,
பாளம் பாளமாய்,
பிளந்து கிடக்கிறது!

பிளந்த நிலத்தின் வடுக்களுக்குள்,
புதைந்து மறைகின்ற,
சிறு தவளைக் குஞ்சுகள் கூட,
கதிரவனின் கொடுங்கரங்களின்,
வெம்மையை உணர்கின்றன!

நாளைய மேகங்களின்,
வருகைக்காக,
நம்பிக்கை சுமந்து,
அவை வாழ்ந்திருக்கின்றன!


இரக்கமில்லாத தரவைகளில்,
கருக்கட்டி வளர்ந்த,
பெரிய யானையின் தந்தங்கள்,
சிறிய மனிதனொருவனின்,
துப்பாக்கியின் வெற்றிக்குச்,
சாட்சியாகிக் கிடக்கின்றன!

தனது தோள்களில் கூடத்,
தூக்கிவைக்க முடியாத,
தந்தங்களின் பிரமாண்டம்,
அந்த யானையின்,
வரலாறு சொல்லி நிற்கின்றது!

வியாபாரிகளின் சந்தைகளும்,
வறுமையில் காய்ந்த வயிறுகளும்,,
நிரம்பாத வரைக்கும்......!

விலங்குகளின் மரணங்களுக்கு,
விலை குறைந்து போகாது!

நாளைய மழைத்துளிகள்,
நனைக்கப் போகின்ற,
ஏரியின் கரைகளில்,
மரங்கள் மட்டுமே வளரும்!

அவற்றை உண்பதற்கு,
அந்த யானைகள் இருக்காது!

அந்த மரங்கள் கூட,
ஒரு நாளில்……..!

மனித மிருகங்களின்,
மாளிகைகளின் சுள்ளிகளாகும்!

Nantri punkayooran.com

No comments: