மெல்பனில் தனிநாயகம் அடிகளார் நினைவரங்கு -ரஸஞானி

.
மெல்பனில் தனிநாயகம்  அடிகளார்    நினைவரங்கும்  கலை - இலக்கிய  நிகழ்வுகளும்  சங்கமித்த    பெருவிழா  

  
                                    அவுஸ்திரேலியா    தமிழ்   இலக்கிய   கலைச்சங்கத்தின்  வருடாந்த எழுத்தாளர்   விழா   அண்மையில்    கலை   இலக்கிய   விழாவாக நடைபெற்றது.   சங்கத்தின்   நடப்பாண்டு   தலைவர்   டொக்டர்   நடேசனின் தலைமையில்    மெல்பனில்  St. Bernadettes     மண்டபத்தில்   மதியம்  முதல்   இரவு  வரையில்   நடந்த   இவ்விழா   அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி   மக்களை   நினைவு    கூர்ந்தும்   உலகெங்கும்   போர்களினால் மடிந்த   இன்னுயிர்களுக்கு   மௌன  அஞ்சலி    நிகழ்த்தியும் தொடங்கப்பட்டது.
செல்வி  கீர்த்தனா   ஜெயரூபனின்  வரவேற்புரையுடன்    ஆரம்பித்த நிகழ்வுகளில்    முதலாவதாக   தமிழ்த்தூதுவர்    தனிநாயகம்    அடிகளாரின் நூற்றாண்டை    முன்னிட்டு   நினைவரங்கம்   இடம்பெற்றது.
தனிநாயகம்   அடிகளாரின்    நெருங்கிய   உறவினரும்   மெல்பன்   பாரதி பள்ளியின்    ஆசிரியருமான    திரு. இராமநாதன்    ஜெயராஜா   சிட்னியிலிருந்து    வருகை    தந்திருந்த   டொக்டர்   கருணாகரன்,    மேற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து   வருகைதந்த    கலாநிதி   அமீர் அலி, நினவுப்பேருரை   நிகழ்த்துவதற்கு   வருகைதந்த   மெல்பன்   தமிழ் ஆசிரியரும்   இலக்கிய   ஆர்வலருமான   திரு.சுப்பிரமணியம்   சிவசம்பு, சங்கத்தின்    தலைவர்   டொக்டர்    நடேசன்   ஆகியோர்    தனிநாயகம் அடிகளாரின்   திருவுருவப்படத்திற்கு   விளக்கேற்றினர்.
அதனைத்தொடர்ந்து   நினைவுப்பேருரையை   திரு. சுப்பிரமணியம்   சிவசம்பு   விரிவாக    நிகழ்த்தினார்.     தனிநாயகம்    அடிகளார்    மேற்கொண்ட தமிழாரய்ச்சி    மற்றும்   அதற்காக   அவர்   உலகெங்கும்    பயணித்து   தமிழ்    ஆய்வாளர்களையும்   அறிஞர்களையும்    சந்தித்து   தொடர்ச்சியாக தமது    மறைவுக்காலம்   வரையில்   முன்னெடுத்த    மாநாடுகள்    உட்பட   பல ஆக்கபூர்வமான    பணிகளை   பல்வேறு    சான்றாதாரங்களுடன்    அவர் விளக்கினார்.


தனிநாயகம்   அடிகளாரின்   நூற்றாண்டை    முன்னிட்டு   மெல்பனில்   நடந்த    ஒரே   ஒரு   நிகழ்வாக   இந்த  அரங்கு   இடம்பெற்றது குறிப்பிடத்தகுந்தது.
நினைவுப்பேருரையையடுத்து   தனிநாயகம்   அடிகளாரின்    பணிகளை  விளக்கும்   ஒளிப்படக்காட்சி   திரையில்    காண்பிக்கப்பட்டது.
அவ்வேளையில்    பின்னணியில்   தனிநாயகம்   அடிகளாரின்   சேவைகளை விதந்து    போற்றும்   இசைப்பாடல்   ஒலித்தது.
இப்பாடலை   சிங்கப்பூரில்   வதியும்   கவிஞர்    காவியன்   முத்துதாசன் விக்னேஸ்வரன்    இயற்றியிருந்தார்.    திருமதி  ராஜலட்சுமியின்   குரலில் அந்தப்பாடல்    இசையோடு    சங்கமித்திருந்தது.

பேராதனைப்பல்கலைக்கழக    முன்னாள்    விரிவுரையாளர்   கலாநிதி காசிநாதர்    தலைமையில்   நடந்த   இலக்கிய    கருத்தரங்கில்    மேற்கு அவுஸ்திரேலியா   மெடோக்   பல்கலைக்கழக   பொருளியல்    பீடத்தின் விரிவுரையாளர்    கலாநிதி  அமீர் -   அலி    பூகோள   மயப்பொருளாதாரத்தினாற்    பிளவுபடும்   மனித நெஞ்சங்களைப் பிணைக்கும்   புனித    இலக்கியப்போர்   என்ற  தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவரது   உரையை   தொடர்ந்து    இடம்பெற்ற    கலந்துரையாடலில் நாடகக்கலைஞரும்           மெல்பன்   பாரதி   பள்ளியின்   இயக்குநருமான   திரு. மாவை    நித்தியானந்தன்  -    திரு. ஜெயராம சர்மா   -   திரு. சிவசம்பு   ஆகியோர் தமது   கருத்துக்களை   முன்வைத்தனர்.


நூல்வெளியீட்டு  அரங்கு
இலக்கிய   ஆர்வலர்  திரு. சத்தியா  நிரஞ்சன்    தலைமையில்    நடந்த நூல்வெளியீட்டு   விமர்சன    அரங்கில்   மூன்று   நூல்கள் விமர்சிக்கப்பட்டன.    ஏற்கனவே   தீர்மானிக்கப்ட்டிருந்த   இரண்டு   நூல்கள் உரியவேளையில்   பதிப்பகங்களிடமிருந்து   கிடைக்கத்தவறியமையினால் இவ்வரங்கில்    மூன்று   நூல்கள்   மாத்திரமே   விமர்சனத்திற்குட்பட்டது.
சிட்னியில்   வதியும்   எழுத்தாளர்   திருமதி  தேவகி   கருணாகரனின்   அன்பின்   ஆழம்   சிறுகதைத்தொகுதியை    கலாநிதி   நித்தியா   தர்மசீலனும்   மெல்பனைச்சேர்ந்த    திரு. ஸ்ரீநந்தகுமாரின்   பிராணசக்தியும் மனிதவளமும்    என்னும்   இயற்கைமருத்துவ  ஆன்மீக   நூலை  கவிஞர் திரு. ஜெயராம சர்மாவும்    டொக்டர்   நடேசனின்   அசோகனின் வைத்தியசாலை   நாவலை   இலக்கிய    ஆர்வலர்   திரு. ஜே.கே. ஜெயக்குமாரனும்    விமர்சித்தனர்.


மாலை    தேநீர்    இடைவேளையைத்தொடர்ந்து    இரவு   நிகழ்ச்சிகளில் இசையரங்கம்    மற்றும்   நடன   அரங்கம்   என்பன   இடம்பெற்றன. மெல்பன்    இளம்கலைஞர்கள்   செல்வி    கிருஷ்ணி    சண்முகராஜா, செல்வன்கள்    சந்தீபன்   புஷ்பராஜ்   -   பிரகதீஸ்    சண்முகராஜா ஆகியோரின்    இன்னிசையும்    மெல்பன்    கலாலய   இசைக்குழுவினரின் மெல்லிசை    நிகழ்ச்சிகளும்   நடைபெற்றன.


மெல்பன்    பாடகர்கள்    ஜெயா  -    பாரதிதாசன்  -   கண்ணன்  -   ராஜா  -  ஸ்ரீநந்தகுமார்  -  உஷா  -   பிரியா  -  செந்தூரன்   -   பார்த்திபன்   -  யோகன் ஆகியோர்    குறிப்பிட்ட    மெல்லிசை   திரைகானங்கள்    நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நடன    அரங்கத்தில்   மெல்பன்   நிருத்தியோபாசனா    நடனப்பள்ளி மாணவர்கள்    பங்கேற்ற    தசாவதாரம்   நாட்டிய    நாடகம்   இடம்பெற்றது. செல்விகள்    ஆரதி   ராஜேஸ்  -   நிவேதா  சத்தியராஜன்   ஆகியோருடன் இணைந்து    இவர்களின்    குரு   ஸ்ரீமதி   லலிதா   நாராயணனும்  பங்கேற்றார்.
குவின்ஸ்லாந்து   மாநிலத்தில்    இயங்கும்    தாய்த்தமிழ்ப்பள்ளியின் ஆதரவில்   நடந்த   அவுஸ்திரேலியா    பல   கதைகள்    சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்றவர்களின்    விபரங்களை    குறிப்பிட்ட    சிறுகதைப்போட்டியின் இணைப்பாளர்களில்    ஒருவரான   திரு. சத்தியன்    ரஜேந்திரன்  அறிவித்தார்.
முதல்பரிசு:    திரு. கே.எஸ். சுதாகரன்    (மெல்பன்)
இரண்டாம் பரிசு:    திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தி   (மெல்பன்)
மூன்றாம் பரிசு:    திரு. இரா. சத்தியநாதன்   (சிட்னி)
இளையோருக்கான     சிறப்பு   பரிசு:    செல்வி           ஜெயலக்ஷ்மி சித்திரசேனன் ( குவின்ஸ்லாந்து)

                     --0000--
No comments: