பொது பல சேனாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பு: அமெரிக்கா
யாழ். ஊடகவியலாளர்களிடம் மூன்று மணிநேரம் பொலிஸார் விசாரணை
பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் : திகதியை உறுதிசெய்தது வத்திக்கான்
இலங்கை அகதிகளை ஆஸி.க்கு அனுப்பிய இருவர் கைது
இலங்கை அகதிகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டமை சரியானதே
யுத்தத்தின் பின்னர் வடக்குப் பகுதியில் பௌத்த வழிபாட்டுத்தலங்கள் அதிகரிப்பு
==============================================
பொது பல சேனாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பு: அமெரிக்கா
29/07/2014 பொது பல சேனாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பிருப்பதாக இருப்பதாக அமெரிக்காவின் 2013 மத சுதந்திரம் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா தொடர்ந்தும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சரினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ஏனைய பௌத்த தேசியவாத குழுக்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கைகளுக்கு பின்னால் பொது பல சேனாவே இருப்பதாக பல தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் மத சுதந்திரத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத தொடர்புகளை அடிப்படையாக வைத்து சமூக துஸ் பிரயோகங்களும் பாராபட்சங்களும் காணப்படுவதாகவும், மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரியாழ். ஊடகவியலாளர்களிடம் மூன்று மணிநேரம் பொலிஸார் விசாரணை
29/07/2014 யாழ்.குடாநாட்டைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் மூன்று மணி நேரமாக இன்று செவ்வாய்க்கிழமை ஓமந்தை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஓமந்தை சோதனைச் சாவடியில் வழிமறிக்கப்பட்டு பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஏழு ஊடகவிய லாளர்களில் 3 பேரிடமே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்க ளுக்கான பாதுகாப்பாக அறிக்கையிடல் என்ற பயிற்சிப் பட்டறைக்காக யாழ்ப்பாணத்திலிருந்து 16 ஊடகவியலாளர்கள் இரு வாகனங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயணமானார்கள். இதில் ஒரு வாகனத்தில் பயணித்த ஏழு ஊடகவியலாளர்கள் மாங்குளத்தில் இடை மறிக்கப்பட்டு சோத னையிடப்பட்ட பின்னர் மீண்டும் ஓமந்தைச் சோத னைச் சாவடியில் மறிக்கப்பட்டு வாக னம் சோதனையிடப்பட்டது. அப்போது அவர்களின் வாகனத்தில் கஞ்சா இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பொலிஸாரினால் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஊடகப் பயிற்சிக்காகச் செல்லும் தம்மை பொலிஸார் இடைமறித்து பொய்க்குற்றச் சாட்டை சுமத்துவதாகத் தெரிவித்து ஊடகவியலாளர்கள் ஏழு பேரும் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனையடுத்து ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்பட்டதுடன்இ வாகனச் சாரதி மட்டும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். இதன் பின்னர் கொழும்பிலிருந்து நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் திரும்பிய குறித்த ஏழு ஊடகவியலாளர்களில் மூன்று பேருக்கு இன்று ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று பகல் 11 மணிக்கு வருகை தந்த ஊடகவியலாளர்கள் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மதியம் 2 மணிவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரிபாப்பாண்டவரின் இலங்கை விஜயம் : திகதியை உறுதிசெய்தது வத்திக்கான்
29/07/2014 இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை பாப்பாண்டவர் பிரான்சிஸ், எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 திகதி முதல் 19ஆம் திகதி வரையில் மேற்கொளவார் என வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது.
பாப்பாண்டவரின் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது அவர், பிலிப்பைன்ஸில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாப்பாண்டவர் இலங்கையில் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை விஜயத்தில் ஈடுபடுவார் எனவும் அதன் பின்னர் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை மேற்கொள்வார் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரிஇலங்கை அகதிகளை ஆஸி.க்கு அனுப்பிய இருவர் கைது
28/07/2014 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவிற்கு கடத்திய சந்தேகத்தின் பேரில் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி பொலிஸ் சீ.பி.-சீ.ஐ.டி. பிரிவினர் குறித்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். புதுச்சேரியிலிருந்து படகு மூலம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு 157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை படகு மூலம் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருஞ்சிப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜீ மற்றும் வாம்பாகீர் பாளையத்தைச் சேர்ந்த மான்ஜினி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் படகு உரிமையாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி வீரகேசரிஇலங்கை அகதிகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டமை சரியானதே
28/07/2014 இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அகதிகளை கடலில் தடுத்து வைக்கப்பட்டமை சரியானதே என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரை, அந்நாட்டு அதிகாரிகள் கடலிலேயே தடுத்து வைத்திருந்தனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலேயே சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடல் பாதுகாப்பு விதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு படகும் சர்வதேச ஆட்கடத்தல்காரர்களை ஊக்குவிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் எந்தவொரு நபருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரியுத்தத்தின் பின்னர் வடக்குப் பகுதியில் பௌத்த வழிபாட்டுத்தலங்கள் அதிகரிப்பு
30/07/2014 27 வருட கால யுத்தத்தின் பின்னர் வடக்கில் பௌத்த வழிபாட்டு தலங்களை படையினர் தொடர்ச்சியாக அமைத்துவருகின்றனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த மத வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பொதுபலசேனா அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் மிகவும் வலுவான தொடர்புகள் இருப்பதை உள்ளூர் ஊடகங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அவதானித்துள்ளன.
மேலும் இலங்கையில் கடந்த வருடம் ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடும்போக்குவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற வன்முறைகளின் பின்னணியில் பொதுபலசேனாவின் அலைகளே உள்ளன என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட உலக மத சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியினால் உலக மத சுதந்திரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. மேற்படி வருடாந்த அறிக்கையில் 9 பக்கங்களில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ;
நடைமுறையில் தோல்வி
இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின் ஊடாக உத்தியோகபூர்வமாக மத சுதந்திரம் பாதுகாக்கப்பட்டாலும் நடைமுறையில் உள்ளூர் அதிகாரிகள் மத வன்முறைகளை தடுப்பதில் தோல்விகண்டுள்ளனர். குறிப்பாக மத சிறுபான்மையினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் மற்றும் குற்றவாளிகள் சட்டததின் முன் நிறுத்தப்படாமை என்பவற்றை குறிப்பிடலாம்.
அதிகாரிகள் உதவி
தம்புள்ளை இந்து ஆலயம் மீதான தாக்குதல்கள் மற்றும் கிரான்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள் என்பனவற்றை தடுப்பதில் அதிகாரிகள் தோல்விகண்டுள்ளனர். மத சிறுபான்மையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சம்பவங்களில் அரசாங்க அதிகாரிகள் குறைந்த பட்ச உதவிகளை குழுக்களுக்கு வழங்குவதாக அரச சார்பற்ற நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
பள்ளிவாசல்கள் ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன
மத அடையாளம் நம்பிக்கை மற்றும் நடைமுறை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு சமூக துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது. மத சதந்திரம் மீதான மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இலக்கு வைத்து பிரசாரகளை கடும்போக்குவாத அமைப்புக்கள் முன்னெடுத்துள்ளன. இவ்வாறான குழுக்கள் பள்ளிவாசல்களையும் ஆலயங்களையும் தாக்கியுள்ளன.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் மத சுதந்திரம் தொடர்பான கரிசனைகளை வெளியிட்டதுடன் குறிப்பாக ஆலயங்கள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினர். மத குழுக்களின் பிரதிநிதிகளை தூதுவரும் தூதரக அதிகாரிகளும் சந்தித்து மத சுதந்திர கரிசனைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன் யுத்தத்துக்குப் பின்னரான நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர். அமெரிக்க தூதரகம் மத நல்லிணக்க கலந்துரையாடல்களையும் கூட்டு ஈடுபாட்டையும் முன்னெடுத்து நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவ பல திட்டங்களை முன்னெடுத்தது.
அதிகாரிகள் தயக்கம்
இலங்கையின் மொத்த சனத் தொகையில் 70 வீதமானவர்கள் பௌத்தர்களாக உள்ளனர். 15 வீதமானோர் இந்துக்களாக உள்ளனர். அத்துடன் 8 வீத கிறிஸ்தவர்களும் 7 வீத முஸ்லிம்களும் உள்ளனர். வடக்கில் அதிகளவில் இந்துக்கள் உள்ளனர். மேற்கில் அதிகளவில் கிறிஸ்தவர்களும் கிழக்கில் அதிகளவில் முஸ்லிம்களும் உள்ளனர்.அரசியலமைப்பின்படி யாரும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமையுடையவர்கள். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மத சுதந்திரத்தை அங்கீகரித்தாலும் நடைமுறையில் சில துறைகளில் பிரச்சினைகள் உள்ளன. ஆலயங்கள் இந்து கோயில்கள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டிவருவதாக அரச சார்பற்ற நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன.
தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில்
தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ள பிரதேசத்தை பௌத்த புனித பிரதேசமாக அறிவிக்க ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி நகர அபிவிருத்தி அமைச்சு முயற்சித்தது. இதனால் பல தசாப்தங்களாக இந்த கோயிலை சுற்றி இருந்த சுமார் 40 குடும்பங்கள் அகற்றப்பட்டன. மாற்று இடங்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் அதிகாரிகள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மேலும் தம்புள்ளையில் பள்ளிவாசல் ஒன்றும் புனித பிரதேசத்தில் அமைந்துள்ளதாகவும் அதனையும் அகற்றவேண்டும் என்று பௌத்தர்கள் கோரியுள்ளனர்.
வலுவான தொடர்பு
பொதுபலசேனா அமைப்புக்கும் அரசாங்கத்துக்கு இடையில் மிகவும் வலுவான தொடர்புகள் இருப்பதை உள்ளூர் ஊடகங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அவதானித்துள்ளன. குறிப்பாக பாதுகாப்புச் செயலாளருக்கும் இந்த அமைப்புக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் பொதுபல சேனாவின் பொது நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். பொதுபல சேனாவின் அழுத்தம் காரணமாக நகர சபைகள் மாடுகளை அறுப்பதை நிறுத்தும் வகையில் விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கு ஆரம்பித்தன.
வடக்கில் பௌத்த தலங்கள்
மேலும் அதிகமான கிறிஸ்தவ ஆலயங்கள் அவற்றின் சட்டத்தன்மை குறித்து விசாரிக்கப்பட்டதாக கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்துள்ளது. 27 வருட கால யுத்தத்தின் பின்னர் வடக்கில் பௌத்த வழிபாட்டு தலங்களை படையினர் தொடர்ச்சியாக அமைத்துவருகின்றனர். இது அரச அனுசரணையுடனான சிங்கள குடியேற்றங்களை வெளிக்காட்டுவதாக தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த மத வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
கைது செய்ய பொலிஸார் தயக்கம்
பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்கள் மத சிறுபான்மையினத்தவர்களை இலக்குவைத்து மேற்கொள்கின்ற வன்முறைகள் குறித்து மனித உரிமை அமைப்புக்களும் மத சிறுபான்மை குழுவினரும் கரிசனை வெளியிட்டுள்ளனர். மத சிறுபான்மை பகுதிகள் மீதான குற்றச் செயல்களை தூண்டிவிட்டவர்களை கைது செய்வதில் பொலிஸார் தோல்வி கண்டுள்ளனர்.
கிராண்பாஸ் பள்ளிவாசல் விவகாரம்
கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களுடன் தொடர்புடைய பௌத்த பிக்குமார்களை கைது செய்ய அரசாங்கம் தயக்கம் காட்டிவருகின்றது. பிக்குமார்கள் பொதுவாகவே அரசாங்கத்தின் பாதுகாப்புடன் செயற்பட்டுவருகின்றனர். ஆகஸ்ட் 10 ஆம்திகதி 50 க்கும் 60 க்கும் உட்பட்ட பிக்குகள் கிராண்பாஸ் பள்ளிவாசலை தாக்கினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பொலிஸார் அங்கு இருந்தனர். எவரையும் கைது செய்யவில்லை.
கொட்டாவ சம்பவம்
மார்ச் 24 ஆம் திகதி பிக்கு ஒருவரின் தலைமையிலான 100 பேர் கொட்டாவ பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றை தாக்கினர். எவரும் கைது செய்யப்படவில்லை.
கடும்போக்குவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற வன்முறைகளின் பின்னணியில் பொதுபலசேனாவின் அலைகள் உள்ளன. பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஹலால் விவகாரம் போன்றவற்றின் பின்னணியில் கடும்போக்குவாத குழுக்கள் உள்ளன. பொதுபல சேனா ராவணா பலயவுடன் இணைந்து செயற்படுகின்றது. எனினும் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுக்களை பொது பல சேனா நிராகரித்துள்ளது.
60 தாக்குதல்கள்
பல்வேறுபட்ட மத குழுக்களைச் சார்ந்தவர்கள் மற்றவர்களின் மத நம்பிக்கைகள் குறித்து பொறுமையாக இருந்தாலும் நம்பிக்கையின்மையும் அச்சமும் அதிகரித்துள்ளன. குறிப்பாக மத சிறுபான்மையினத்தவர்களில் இந்த நிலைமை உள்ளது. ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.கடந்த வருடம் கிறிஸ்தவர்கள் மற்றும் ஆலயங்களில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரின் 60 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கிறிஸ்தவ குழுக்கள் அறிக்கையிட்டுள்ளன.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment