கருப்பு ஆடி - ஈழன் இளங்கோ அவுஸ்திரேலியா

.

இயற்கை அழகின் ஆதி அந்தம்   - இலங்கை மண்ணே என்றிடலாம்!
ஈழ மண்ணின் கலை வளமோ      - இமயம் வரை என்றிடலாம்!
என்ன வளம் இல்லை  எங்கள் மண்ணில்?
சுற்றிலும் கடல்  -  உப்பிற்கு பஞ்சமில்லை!
காடுகள்  மலைகள்  -  ஆறுகள்  அருவிகள்!   - நீருக்கும் பஞ்சமில்லை!
திக்கெட்டும் தோட்டம்!   -  உணவிற்குப் பஞ்சமில்லை!
வைரம்    வைதூரியம்   -   முத்து   பவளம்   என்று!
செல்வம்   செழித்துக்   கொழித்த   பூமி   அது!  -  இவை   இருந்து   என்ன   பயன்?
சிறப்பாய்    சிரித்துக்  களித்த   காலங்களோ    - நினைவுகளாய்   மட்டும்  -  நெஞ்சில்    இன்று!

தார்   உருக்கித்    தெரு போடும்   வீதிகளில்
கறுப்பு   வெள்ளைப்   பூக்களாய்  - வெள்ளைச் சீருடையில்  -  எங்கள்  சின்னஞ்சிறார்கள்!
கதைகள்   சில   பேசி    -   பாக்கள்   பல   பாடி  - பூக்கள்   பறித்து   -    சிரித்துக்   களித்து   வரும்    
அந்த    வெள்ளைப்பூக்களில்  - பூத்துக்குலுங்கும்   செம்பருத்திப்    பூச்சாயம்!
அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள்! - வயல்   வரம்பில்   நடக்கையிலே     - வணக்கம்    கூறும்!
கோயில்   மேள   இசை   ஒலியும்  -  கூவித்திரியும்  குயில்  இசையும்  - காதுக்கு   விருந்தளிக்கும்!
தெருவோரங்களில்  தென்னைகள்   -   வீழ்ந்து கிடக்கும் தேங்காய்கள்  - இவர்களுக்கு   கால்ப்   பந்து!


காய்த்துக் குலுங்கும்  மாங்கனிகள்!  -  கொத்துக் கொத்தாய்  புளியம்பழம்!
கனிந்து   விழுந்த   பனம்   பழத்தை   -  சுட்டுப்   புளியிட்டு   புசித்து,
பின்   விதையிட்டு   கிழங்கெடுத்து   -  அவித்து   ரசித்து   உண்ட   சுவை
என்று   வரும்   மீண்டுமென்று    -  ஏங்கிக்   கிடக்கும்   நெஞ்சங்கள்!
படித்துப்   பட்டம்   பெற்று    -  பதவிகளில்   தமிழர்கள்!   
உயர்ந்தது   துறைகள்!  -  வியந்து  நெளிந்தது   புருவம்   - அண்டைய   நாட்டவர்க்கு!
பொறுக்கவில்லை   சிங்களம்!   -  வெடித்தது   மொழித்திணிப்பாய்!
பணி    இழந்து!   -  மனை  இழந்து!   - உறவிழந்து!   -  உரிமை இழந்து!  -  இறுதியில்  நாடிழந்து!

பதறிப்    பதைத்து   தவித்து   ஓடினோம்!   -  ஓடினோம்!  ஓடினோம்!  -  ஓடி   ஒளிந்தோம்!
திரும்பிப்   பார்த்தோரோ     -  வெட்டுண்டு   வீழ்ந்தனர்!
எதிர்த்து    நின்றோரோ      -  விழித்தனர்    புலிகளாய்!
ஒளி   நிறைந்த   நம் வாழ்வில்    -   காரிருளாய்   கறுப்பு  ஆடி!        1983…..
சிதைக்கப்  பட்டது   தமிழினம்!    -  வதைக்கப்  பட்டனர்  தமிழர்கள்!
வெட்டிக்   குவிக்கப்   பட்டனர்!    -  குவித்து   எரிக்கப்   பட்டனர்!
ஈழத்துத்   தெருக்கள்   எல்லாம்    -  சுடலைச்   சுவாலைகள்!
அழிக்கப்பட்டது    அந்த  அழகிய   தேசம்!    -  கதறலாய்   மாறியது    கலை  வடிவம்!
தெருவோரம்   கொதித்த  தார்    -  வீதிகளில்   விழவில்லை,
தமிழ்  பேசும்  பாலர்களை   தோய்த்தெடுத்து   -  கரியாக   சாய்த்தது!
அறுவடை   செய்யப்பட்டது   கதிர்களல்ல  -  தமிழரின்   தலைகள்!
கேட்டது   குயில்   கானம்   அல்ல   -  தெருக்களில்   கற்பிழந்த   தமிழ்  மங்கையரின்  அலறல்  சத்தம்!
மரங்களில்  குலுங்கியது  கனிகள்   அல்ல   -   தமிழரின்   பிணங்கள்!
சிந்திய   இரத்தம்   தெறித்து   செந்நிறமானது   -  சிகப்பு   சாயம்   தரும்  செம்பருத்தி!
இசை   கேட்ட   காதுகளில்   விழுந்ததெல்லாம்,
இடித்து    நொறுக்கப்பட்ட   தமிழரின்    உடைமைகள்   வெடித்து    சிதறும்  ஒலி!
துண்டித்த   கால்களுடன்    தமிழர்   -  நடக்க  வழியின்றி!
சிங்களவர்   உதைத்து  விளையாட   -  தமிழர்   தலைகள்!

குருதி   வெள்ளத்தில்   -  சிவந்த   சீருடையில்   -  மிதந்தன   எமது   மழலைகள்!
தாகம்  கொண்ட  வீரர்களின்  - ஈழ
தேசம்  காண துடித்த கண்கள்  - தோண்டி எடுக்கப்பட்டு
கால்களால் தரையில்  கசக்கப்பட்ட   கோரங்கள்!
கட்டி   வைத்து   கணவன்   முன்   -  மனைவியை   கற்பழித்த   கொடூரங்கள்!
ஒரு  பிள்ளை   உயிரெடுத்து  - மறு  பிள்ளை   கழுத்தினில்   கத்தி  வைத்து
அன்னையின்   மடி   கேட்ட  காடையர்கள்!
அப்பப்பா…  -  எண்ணில்   அடங்கா   வெறி   ஆட்டங்கள்!

மாண்டு!   மாண்டு!   -  மீண்டும்   மீண்டும்   முளைத்தெழுந்து, -  ஆண்டுக்கு   ஆண்டு   அதிகரித்து – பின்
பல நாடு ஒன்று கூடி அழிக்கப்பட்ட  -   2009 ஈழத்து   இன   அழிப்பு!  -  தமிழ் இன அழிப்பு!
இமயம்   வரை   கதறி   அழுதோம்  -  அமையும்  ஒரு  வழி  என்றெண்ணி
அனாதைகளாய்  -  வழியின்றி   அழிக்கப்   பட்டோம்!

ஓடினோம்!  ஓடினோம்!  -  தரை  வழி  ஓடினோம்! - கடல்  வழி  ஓடினோம்!   -  வான்வழி   ஓடினோம்!
ஓடினோம்!   ஓடினோம்!  - ஓடிக்கொண்டே   இருக்கின்றோம்! - நாம்   ஓடிக்கொண்டே   இருக்கின்றோம்!
பிரிந்த   உறவுகளைத்   தேடி    -  நாம்   ஓடிக்கொண்டே   இருக்கின்றோம்!
இழந்த   வாழ்வைத்   தேடி     -   நாம்  ஓடிக்கொண்டே  இருக்கின்றோம்!
சிதறிச் சிதறி  ஓடிக்கொண்டே   இருக்கின்றோம்!
விடி   வெள்ளி  வரும்   நாளை   நோக்கி     -   நாம்   ஓடிக்கொண்டே   இருக்கின்றோம்!
உலகே உனக்கு கண் இல்லையா?
தமிழீழ  மண்  என்ன  மண்  இல்லையா?
                                                                                                          

No comments: