.
தமிழ்ப்பேராசிரியர் தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் வருகைப்பேராசிரியர் முதுநிலை ஆய்வாளர் கரவையூர் தந்த கண்மணி இலக்கியம், விமர்சனம், சமூக வரலாறு, நாடகம், கவின்கலை, அரசியல் அனைத்திலும் கரைகண்ட பேராசான் காலமாகும் வரை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் காப்பாளர் என்றெல்லாம் உலகெங்கும் உள்ள தமிழ்பேசும் மக்களால் போற்றிப்புகழப்பட்ட பல்துறை ஆளுமைப் பேராசான் தமிழியலின் தலைமைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று நம் மத்தியில் இல்லை. அன்னார் மறைந்து மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன.
அன்னார் தமிழை நேசிக்கும் எங்கள் அனைவரிடமிருந்தும் மனைவி ரூபவதி, மகள்மார், மருமக்கள், பேரப்பிள்ளைகள் அனைவரிடமிருந்தும் 06.07.2011 அன்று பிரிந்தார்.
யாழ்ப்பாணம் கரவெட்டியிலே 10.05.1932 அன்று பண்டிதர் கார்த்திகேசு - வள்ளியம்மை தம்பதியருக்குப் புதல்வராகப் பிறந்தார் சிவத்தம்பி. அவர் நடராஜா தம்பியினரது மகள் ரூபவதியைத் திருமணம் செய்து மூன்று பெண் பிள்ளைகளுக்குத் தந்தையாகி மகிழ்ந்தார்.
தமது ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியில் ஆரம்பித்து பின்னர் தமது கல்வியை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தொடர்ந்தார். அக்கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.
இக்கால கட்டத்தில் கலை இலக்கியத் தொடர்புகள் ஆரம்பமாகின. அப்போது வானொலியும் ஒரு முக்கிய சாதனமாக விளங்கியது. அச்சமயத்தில் திருவாளர்கள் கமால்தீன், சண்முகரத்தினம், அஸீஸ், சிவகுருநாதன், சமீம் போன்றவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அமரரது நல்ல நண்பர்களானார்கள். தமது பத்தொன்பதாவது வயதில் 1951ஆம் ஆண்டு கலாசூரி இ. சிவகுருநாதனுடன் இணைந்து தமிழ் ஒளி என்ற சஞ்சிகையை நடத்தினார்.
1956இல் கலை மாமணிப்பட்டப்படிப்பு முடித்து கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆசிரியராகவும் பாராளுமன்ற சமநேர மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார்.
1954இலிருந்து முற்போக்கு இலக்கியத்துடன் இணைந்து தொழிற்படத் தொடங்கினார். அப்படிப்பட்ட முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்கவர் தொ.மு.சி. ரகுநாதன்.
வானொலி நாடக நடிகராகவும் பிரகாசித்தார். வானொலி நாடகங்களில் சானா, சுந்தரலிங்கம், மயில்வாகனம், செந்திமணி ஆகியோருடன் பங்கேற்ற பெருமையுமுண்டு.
பல்கலைக்கழக நாடகங்களின் மூலம் பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், கணபதிப்பிள்ளை ஆகியோருடன் இணைந்தார். பேராசிரியர் கைலாசபதியும் இவரும் சமகால மாணவர்கள். கைலாசபதியும் சிவத்தம்பியும் இலங்கையின் இரட்டையர் என்றார் தமிழகத்து பிரபல எழுத்தாளர் கோமல் சாமிநாதன். இருவருமே அக்காலத்தில் முற்போக்கு அணியினரின் இலக்கியப்பேச்சாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தாம்சனின் பண்டைய தமிழ்ச்சமூகத்தின் நாடகக்கலை ஆய்வினைச் செய்து முனைவர் (P.H.D) பட்டம்பெற்று பின்னர் தஞ்சைப் பல்கலைக்கழகம், உப்பசலா பல்கலைக்கழகம், ஸ்காண்டி நேவியா பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா, விஸ்கான்வியன், பெர்க்கிஸி ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றினார்.
1978ஆம் ஆண்டு தொடக்கம் ஏறத்தாழ 17 ஆண்டுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டு காலமும் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப்பேராசிரியராக ஓராண்டு காலமும் பணிபுரிந்தார். மேலும் இந்தியா, ஜேர்மனி இங்கிலாந்து போன்ற நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் வருகைப்பேராசிரியராகப் பெரும் பணியாற்றி பேரும் புகழும் பெற்றார்.
1956 முதல் இலக்கிய விமர்சனத்துறையில் தளம் பதித்தார். எனினும் 1966முதல் தான் அவரது விமர்சன நூல்கள் வெளியாகத் தொடங்கின.
இவர் எழுத்துலகில் தொடாத துறையில்லை எனலாம். தமிழ், சமயம், மானிடவியல், அரசியல், சமூகவியல், நாடகம், விமர்சனம், வரலாறு, கவின்கலை என அடுக்கிக் கொண்டே போகலாம்.
அன்னாரின் படைப்புக்களில் சிலவற்றை இங்கே குறிப்பிடுவது சாலப்பொருத்தமாகும்.
'தனித்தமிழ் இலக்கியத்தில் அரசியற்பின்னணி' 'பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் நாடகம்' 'இலக்கியமும் கருத்து நிலையும்' 'பண்டைத் தமிழ்ச்சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி...' 'நாவலும் வாழ்க்கையும்' 'தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்' 'யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்துநிலை' 'இலங்கைத் தமிழர் - யார் எவர்?' 'தமிழ்ப்பண்பாட்டில் சினிமா ' என்பன சில.
மேலும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் மாத சஞ்சிகையான ஓலையை அன்னாரது 75ஆவது அகவையை தனது 2007ஆம் ஆண்டு வைகாசி / ஆனி 2007 சிறப்பிதழாக வெளியிட்டு கெளரவித்தது. தனது காப்பாளருக்குச் செய்ய வேண்டிய கடமையை அவரது வாழ்நாளிலேயே செய்து அவரையும் கெளரவித்து தானும் புகழ்கொண்டது.
ஞானம் பதிப்பகம் கார்த்திகை மாதம் 2007ஆம் ஆண்டு பவள விழா மலர் வெளியிட்டு சிறப்பித்தது.
அமரர் சிவத்தம்பியின் முன்னாள் கல்லூரியான கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளை பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விமர்சிப்பின் சில ஊற்றுக்களை அழகாக அருமையாகப் பதிவு செய்யும் வகையில் கரவையூற்று என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டது.
இவையெல்லாம் அந்தப் பெரியவர் வாழும் போதே பெற்றுக்கொண்ட கெளரவங்கள் பெருமைகள்.
தமிழகத்து எழுத்தாளர் கோமல் சாமிநாதன், கார்த்திகேசு சிவத்தம்பியை நேர்காணல் ஒன்றின் போது இலங்கையின் தேசியம் பற்றிக்கேட்டார்.
பேராசிரியர் அழுத்தம் திருத்தமாகச் சொன்ன பதில் இதோ:
துரதிஷ்டவசமாக பெரும்பான்மையினத்தவர்கள் இலங்கை எமது நாடு இது எமக்கு மட்டும் தான் சொந்தம் என்று கூறுகிற இனவாதக் குரல் இந்த நாட்டுடன் நாங்கள் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களைத் தடுத்து விடுகிறது. இது எங்கள் நாடு என்ற நினைப்பை சிங்கள தேசிய வாதம் எங்களுக்குக் கொடுக்கவில்லை. எங்களுக்கு தேசியம் என்பதில் உள்ள பிரச்சினை இதுதான்.
என்ன தீர்க்க தரிசனமான பதில். கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்கு காப்பாளராகிய நீங்கள் உங்களால் இயலாத வேளையிலும் பிறரின் உதவியுடன் முச்சக்கர வண்டியிலும் நடை வண்டியிலும் வருகை தந்து முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு எங்களுக்கு அறிவுரையும் ஆசியுரையும் வழங்கியதை எண்ணிப்பார்க்கிறோம்.
Nantri Verakesari
No comments:
Post a Comment