துயர் பகிர்வு அஞ்சலிக்குறிப்பு குவின்ஸ்லாந்து அன்பர் அமரர் பரமநாதன்

.
                                            

கடந்த  மார்ச்  மாதம்  22  ஆம்  திகதி  குவின்ஸ்லாந்தில்  எமது அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தினரும்  பிரிஸ்பேர்ண் தாய்த்தமிழ்ப்பள்ளியில்   இயங்கும்   இலக்கிய    அன்பர்களும்  இணைந்து கலை -   இலக்கிய   சந்திப்பு    நிகழ்வை  நடத்தினர்.
நிகழ்ச்சி  நடக்கவிருந்த    பிரிஸ்பேர்ண்     Centenary  Community  Hub           மண்டபத்திற்கு     நானும்   மனைவியும்  காலை  10   மணிக்குள்   வந்து சேர்ந்துவிட்டோம்.
மண்டபத்தின்   முன்றலில்    வேறு   எவரையும்    காணவில்லை.    தவறான முகவரிக்கு     வந்துவிட்டோமோ...?   என    யோசித்துக்கொண்டிருக்கையில் எமக்கு   அருகில்   வந்து  நின்ற    காரிலிருந்து    இறங்கிய    ஒரு    தமிழ்   அன்பர் மிகவும்   சிநேகபாவத்துடன்   -    என்ன   யோசிக்கிறீர்கள்...?    ஊருக்கு புதுமுகமாக  காட்சியளிக்கிறீர்கள்.   நிகழ்ச்சிக்கு    வந்திருக்கிறீர்களா...?   எங்கட   ஆட்கள்    இப்படித்தான்   உரிய    நேரத்துக்கு    வரமாட்டார்கள். எனது   பெயர்    பரமநாதன்.    நீங்கள்...    உங்கள்   பெயர்...?   என்று உரிமையுடன்    கேட்டார்.   
அறிமுகமாகிக்கொண்டோம்.
பிரிஸ்பேர்ணில்  வசிக்கும்    ஏற்கனவே    எனக்கு   தெரிந்த   நீண்ட  நாட்கள்   தொடர்பாடல்    விட்டுப்போயிருந்த  சில   அன்பர்களை    அவரிடம் விசாரித்தேன்.    உடனடியாகவே     அவர்களின்    தொலைபேசி   இலக்கங்களை தந்தார்.
தனக்கும்    குவின்ஸ்லாந்து    மாநில   தமிழ்    அமைப்பகள்    மற்றும் கோயில்கள்     தமிழ்ப்பாடசாலைகளுடன்   இருக்கும்    தொடர்புகள்    உறவுகள்     பற்றியெல்லாம்     விரல்    நுனியில்    தகவல்களை வைத்துக்கொண்டு    விபரித்தார்.
அவர்    உரையாடிய  பாங்கும்   தகவல்களை    சுவாரஸ்யமாக வரிசைக்கிரமமாக   தெரிவித்த     இயல்பும்     என்னை     பெரிதும்   கவர்ந்தது. ஊருக்குப்புதியவர்களான   எம்மை   இன்முகத்துடன்    வரவேற்றார்.
யாழ்ப்பாணம்   கொக்குவில்     முன்னாள்   அதிபர்    அமரர்   கந்தசாமியின் புதல்வர்     பொறியியலாளர்    வாகீசன்    எனது   நண்பர்.    அவரை சந்திக்கவிரும்புகின்றேன்    என்று    சொன்னேன்.
அப்படியா...  காரில்   ஏறுங்கள்.    எனச்சொல்லிவிட்டு  அவரே    எமது பொதிகளை   எடுத்து   காரில்   வைத்தார்.    வாகீசன்   எனது  உறவினர். வாருங்கள்   அழைத்துச்செல்கின்றேன்.   எங்கட    ஆட்கள்    வருவதற்குள் அங்கே    சென்று     திரும்பிவிடலாம். -    என   அழைத்துக்கொண்டு   நண்பர் இல்லத்துக்கு   தாமதமின்றி    விரைந்து   அழைத்துச்சென்று   அங்கிருந்தும் நான்   பார்க்கவிரும்பியவர்களுடன்    தொலைபேசியில்    பேசுவதற்கு தொடர்புகளை   இணைத்துத்தந்தார்.
அன்பர்    பரமநாதனின்   பரந்த    மனப்பான்மையுள்ள     அந்த    இயல்புகள் என்னை     பெரிதும்     கவர்ந்ததுடன்     முன்மாதிரியாகவும்     இருந்தது.
மீண்டும்    நிகழ்ச்சி    நடைபெறவிருந்த   மண்டபத்திற்கு    அவரே அழைத்துவந்தார்.     முழுநிகழ்ச்சிகளிலும்   பார்வையாளராகவிருந்து   எம்மை     ஊக்குவித்தார்.     மதியவிருந்துபசாரத்திலும்     இணைந்திருந்தார். நிகழ்ச்சியின்     இறுதியில்   நடந்த    கலந்துரையாடலில்   எதிர்காலத்தில் குவின்ஸ்லாந்து    மாநிலத்தில்   கலை,    இலக்கிய   சந்திப்புகள்   ஒன்று கூடல்கள்  நடைபெறவேண்டும்.    இங்கு   வாழும்  அன்பர்களை    அதில் இணைத்துக்கொள்ளவேண்டும்     தன்னால்    முடிந்த    அனைத்து ஒத்துழைப்புகளையும்    வழங்குவேன்   என்றும்   அவர்   சொன்னார்.
அவரைப்போன்ற   மூத்த   பிரஜைகளின்    ஆதரவு    குவின்ஸ்லாந்தில் வதியும்    கல்வி   மற்றும்   கலை   இலக்கியம்   சார்ந்து    இயங்குபவர்களுக்கு பெரிய    வரப்பிரசாதம்.   அவர்   போன்ற    அனுபவசாலிகளை    நாம்   உரிய முறையில்   பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.     அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளை   நடத்தி   பரமநாதனையும்    உரையாற்ற    அழைக்கவேண்டும் என்று   எனது   உரையில்   குறிப்பிட்டேன்.
நிகழ்ச்சிகள்    யாவும்    நிறைவுபெற்றதும்   மண்டபத்தின்    வாயிலை    விட்டு வெளியே    கார்    தரிப்பிடம்   வந்து    கைபற்றிக்குலுக்கி   மீண்டும் சந்திப்போம்.   என்று    விடைகொடுத்துச்சென்றவர்    அன்பர்   பெரியவர் பரமநாதன்    அவர்கள்.
மீண்டும்    நாம்   சந்திக்க  முடியாத    தொலைவிற்கு   அவர் விடைபெற்றுச்சென்றுவிட்டார்.
உரையாடல்  செயல்பாடுகளில்    அவரிடம்   அன்று   நான்    நேரில்   கண்ட விரைவு   அவரது    மறைவிலும்   இணைந்திருக்கும்   என்று   நம்புவதற்கு இடமில்லை.     ஆனால்    அவரது   நிரந்தர விடைபெறுதலிலும்   ஒரு வகை விரைவுதான்    தெரிகிறது.
அவருக்கும்   எனக்கும்    இடையே     மலர்ந்த     நட்புக்கு   நான்கு  மாதங்கள் கூட   ஆயுள்   இல்லை.    ஆனால் -   அவர்    எம்முடன்     நின்ற  அந்த  ஒரு நாள்    நினைவு   என்றைக்கும்    மரணிக்காத     நீண்ட    ஆயுள்கொண்டது.
தமிழ்ப்பற்றாளன்,    சமூக இயக்கச்செயற்பாட்டாளன், மனிதாபிமானப்பணிகளை   முன்னெடுத்த    மனிதர்   மரியாதைக்குரிய பண்புகளை     கொண்டிருந்தவர்.    குவின்ஸ்லாந்து    தமிழ்   மக்களுடன் அவர்களின்     இன்பத்திலும்    துன்பத்திலும்   இணைந்து    நின்றவர் பரமநாதன்.
அவரது    எதிர்பாராத   விபத்து   மரணம்   எமக்கு   பல    செய்திகளை வழங்குகிறது.
புகலிட    நாட்டில்   வீட்டிலே   தனித்திருப்பவர்கள்    எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன்    இருக்கவேண்டும்.    வீட்டிலே   எரிபொருள் உட்பட    எரிவாயு    மற்றும்   தீபம் -   ஊதுவத்தி -   மெழுகு வர்த்தி  -சாம்பிராணி தூபம்    முதலானவற்றை     கையாளுபவர்கள்    அவற்றின் இயக்கத்தையும்     தமது    கட்டுப்பாட்டிலேயே  வைத்திருத்தல்   வேண்டும்.
அன்பர்    பரமநாதன்   பல   சமூகப்பணிகளில்   பலருக்கும்    முன்மாதிரியாக வாழ்ந்த   பெரியவர்.    தனது    மரணத்திலும்   மற்றவர்களுக்கு    ஒரு எச்சரிக்கை    முன்மாதிரியாகிவிட்டார்    என்பது   காலத்தின்    சோகமா? விதியின்    விளையாட்டா?
காலன்     எப்பொழுதுமே   இரக்கமற்றவன்.    எங்கள்     பரமநாதனையும் தன்னிடம்    அழைத்துக்கொண்டான்.
அன்னாரின்    அன்புத்துணைவியார்    அருமை   மக்கள்    மற்றும் குடும்பத்தினர்   அவரது    நண்பர்கள்     அனைவரினதும்     ஆழ்ந்த    துயரில் நாமும்     கலந்துகொள்கின்றோம்.
      ---00---
படக்குறிப்பு:    பிரிஸ்பேர்ண்   கலை   இலக்கிய   சந்திப்பு   நிகழ்வில்  முதல்   வரிசையில்   இடமிருந்து    வலமாக   இரண்டாவது   ஆசனத்தில்   அமர்ந்திருக்கிறார்    அன்பர்    பரமநாதன்.
 முருகபூபதி

letchumananm@gmail.com

    ---0---


No comments: