அமிர்தலிங்கத்தின் தங்குமடம்……
தமிழர்
அரசியல் வரலாற்றில் எழுபதாம் ஆண்டுப் பொதுத்தேர்தலும் அதற்குப் பிந்திய காலமும் முக்கியமானவை.
அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்ட தங்குமடச் சித்தாந்தத்தை விளங்கிக்கொள்வதற்கு முன்னால்
மேற்சொன்ன காலத்து அரசியல் சம்பவங்களை மீட்டுப்பார்த்தல் அவசியமாகிறது. அந்தப் பொதுத்தேர்தல்
பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அமிர்தலிங்கமும் இதற்கு விதிவிலக்கல்ல.
தேசிய
அளவில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாசக் கட்சி என்பன
ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. யாழ்ப்பாணத்தில் தமிழரசு,
தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகளும் போட்டியிட்டன.
இணுவிலில்
நடைபெற்ற அத்தனை தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் முன்வரிசையில் இருந்து பார்த்திருக்கிறேன். எனது கிராமம் அடங்கிய உடுவில் தொகுதியில் தமிழரசுக்
கட்சியில் வி. தர்மலிங்கம், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் சிவனேசன், சமசமாசக் கட்சி சார்பில்
செனட்டர் நாகலிங்கம் மற்றும் சுயேட்சையாக கு. வினோதன் ஆகியோர் போட்டியிட்டவர்களில்
முக்கியமானவர்கள். எனது அப்பாவின் நெருங்கிய
உறவினர்கள் அனைவரும் தீவிர தமிழ்க் காங்கிரஸ்காரர்கள். ஜி.ஜி. பொன்னம்பலமும் சைக்கிள் சின்னமும் தவிர வெறு
எதனையும் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். எனது பெரிய தந்தையின் சுருட்டுக்கொட்டிலில்
அரசியல் ஆய்வரங்குகள் தினமும் நடந்தன. எல்லாமே தமிழரசுக்கட்சி மீது கடுமையான விமர்சனத்திலேயே
முடிவடைவதுண்டு. எனது நண்பன் சண்முகப்பிரபுவின்
தந்தை எனக்கு மைத்துனர். அவர் சமசமாசக் கட்சிக்கு கடுமையாக உழைக்கும் செயற்பாட்டாளர்.
சமசமாசக் கட்சிப் பிரசுரங்கள் மற்றும் கொள்கைப் பிரகடனங்கள் என்பவற்றை சண்முகப்பிரபு
எனக்கு இடைவிடாது போதிப்பதுண்டு.
இணுவில்
சந்தை மைதானத்தில் நடந்த தர்மலிங்கத்தின் பிரச்சாரக் கூட்டத்திற்கு எஸ்.ஜே.வி செல்வநாயகம்,
இ.எம்.வி நாகநாதன் ஆகியோரும் வந்திருந்தனர். அங்கு அமிர்தலிங்கம் பேசுவதற்கு முன்னராக
திருமதி அமிர்தலிங்கம் பேசினார். யாழ். மாவட்டத்தில் யாழ்ப்பாணம், உடுப்பிட்டி ஆகிய
தொகுதிகளின் எம்பிக்கள் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர். இந்தத் தேர்தலில் அங்கும் நாம் வெற்றிபெற வேண்டும்
என பெரிய ஆரவாரத்திற்கிடையே திருமதி அமிர்தலிங்கம் பேசினார். அடுத்துப் பேசிய அமிர்தலிங்கம்
அவர்களின் பேச்சு நினைவில் இல்லை. ஆனால் சமஸ்டித் திட்டமே தமிழர்களுக்கு விடிவு தரும்
என்றும் அதற்காக பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் தமது கட்சி பாடுபடுகின்றது என்றும்
பேசியது நினைவில் உண்டு. அப்பேச்சு, அமிரின் ஆற்றொழுக்கான, தெளிவான உச்சரிப்புடன் கூடிய
பேச்சாக அமைந்திருந்தது.
இணுவில் கந்தசுவாமி கோவில் முன்றலில் சிவனேசனுக்காக நடைபெற்ற
காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஜி.ஜி.பொன்னம்பலம் வந்திருந்தார். அங்கு வரவேற்புரை
நிகழ்த்திய இணுவில் பரியாரியார் மணியம் அவர்கள் சுருக்கமான வரவேற்புரை முடிவில் ஒற்றையாட்சியே
தமிழருக்கு தேவையானதும் சிறந்ததும் எனக் கூறி முடித்தார்.
செனட்டர்
நாகலிங்கத்தின் பிரச்சாரக் கூட்டமும் கந்தசாமி கோவிலடியில் நடைபெற்றது. அதற்கு வி.பொன்னம்பலம் தான் நட்சத்திரப் பேச்சாளர்.
அவரின் பேச்சில் முக்கியமான செய்தி ஒன்று தான். இம்முறை எங்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம்
தான் வரவுள்ளது. எங்கள் வேட்பாளரை வெற்றிபெறச்
செய்தால் அவர் கொழும்பில் மற்றவர்களுடன் சரிசமமாக இருந்து பேசுவார். வேறு யாரையாவது நீங்கள் அனுப்பினால் அவர்கள் கைகட்டி
வாய்பொத்தி கூனிக் குறுகி நின்று பேசவேண்டும் என்று வி.பி கூறினார்.
மிக
இளவயதான குமாரசாமி வினோதன் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியிருந்தார். பிரச்சார சுவரொட்டிகளில் அவரின் அழகிய மார்பளவுப் படம் பச்சை வண்ணத்தில்
அச்சாகியிருந்தது. இணுவில் கிராமம் பூராகவும் அவரின் சுவரொட்டிகள் காணப்பட்டன. ஆயினும்
பிரச்சாரக் கூட்டம் வைப்பதற்கு வினோதன் தரப்பு அதிகம் சிரமப்படவேண்டியதாயிற்று. இணுவிலில்
பெரியவர்கள் யாரினதும் ஆதரவு இல்லாதமையினால் கோவிலடியைச் சூழ உள்ள தமிழ்க் காங்கிரஸ்
இளைஞர்கள் கடுமையான நிபந்தனைகளை விதித்து கூட்டம் நடத்த அனுமதித்தனர். நிபந்தனைகளில்
ஒன்று தமிழ்க் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கக்கூடாது என்பது. வினோதனின் கூட்டத்தில்
குறிப்பிடத்தக்க பேச்சாளர்கள் யாரும் இருக்கவில்லை. ஆயினும் ஒருவர் நகைச்சுவையாகப்
பேசினார். வென்றால் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேருவோம் என சிலர் பொய்ப்பிரசாரம்
செய்கின்றனர். எமது கொடியில் உள்ள பச்சை நிறம் அதனைக் குறிக்கவில்லை. அது பசுமையைக்
குறிக்கிறது என்று பேசினார். அவர் வேறு யாருமல்ல. “சோக்கெல்லோ” என அடிக்கடி கூறி தனி
நடிப்புச் செய்யும் சோகெல்லோ சண்முகம் தான் அவர். அவரின் நிகழ்ச்சிகள் ஏற்கனவே இணுவில்
பகுதியில் நடந்ததால் இளைஞர்கள் சற்று இறுக்கம் தளர்ந்திருந்தனர். அதன் பின் தமிழரசு
தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளை ஒரு பிடி பிடித்திருந்தார்.
எழுபது
தேர்தல் முடிவுகள் பலருக்கும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொடுத்த ஒன்று. வட்டுக்கோட்டையில்
அமிர்தலிங்கம், நல்லூரில் நாகநாதன் யாழ்ப்பாணத்தில் பொன்னம்பலம், உடுப்பிட்டியில் சிவசிதம்பரம்
ஆகியோர் தோல்வியடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழரசுக் கட்சி வடகிழக்கில்
19 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களில் கோட்டை விட்டது. தமிழ்க் காங்கிரஸ் 12 இடங்களில்
போட்டியிட்டு ஒன்பது இடங்களில் தோற்றுப்போனது.
பின்னாளில்
இணுவிலில் நடந்த ஒரு கூட்டத்தில் மங்கயற்கரசி அமிர்தலிங்கம் பேசும்போது நாங்கள் மூன்று
ஓட்டைகளை அடைக்க முனைந்தோம், அடைத்துவிட்டோம், ஆனால் எங்கள் கோட்டையைக் கைவிட்டுவிட்டோம்
என்று பேசும்போது கலங்கிவிட்டார். அமிர்தலிங்கம் புன்சிரிப்போடு கேட்டுக்கொண்டிருந்தார்.
உண்மையில் அத்தேர்தலில் அமிர்தலிங்கம் ஏனைய தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
தேசிய
அளவில் சிறீமாவோ அம்மையாரின் ஐக்கிய முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று
ஆட்சிபீடமேறியது. அம்மையாரின் ஆட்சியில் கம்யூனிஸ்
கட்சியின் பீற்றர் கெனமன் வீடமைப்பு அமைச்சராகவும், சமசமாசக் கட்சியின் லெஸ்லி குணவர்த்தனா
போக்குவரத்து அமைச்சராகவும், கொல்வின் ஆர்.டி.சில்வா அரசியலமைப்புச் சட்டவிவகார அமைச்சராகவும்
மேலும், லக்ஸ்மன் ஜெயக்கொடி பிரதிப்பாதுகாப்பு அமைச்சராகவும், கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன்
மொகமட் கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். நீதியமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா
அம்மையாரின் அமைச்சரவையில் சக்திமிக்க ஒருவராக விளங்கினார்.
கொழும்பில்
கட்டிடக் கலைஞராக இருந்த திரு குமாரசூரியர் அவர்களும், யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை
சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தலைவர் சி.எஸ்.சுப்பிரமணியம் அவர்களும் நியமன எம்பிக்களாக
நியமிக்கப்பட்டவர்களில் அடங்குவர். குமாரசூரியர்
தபால் தந்தி தொடர்புகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். சுதந்திரக் கட்சியில் தெரிவான
இளம் எம்பிக்களில் முக்கியமான ஒருவர் பெலியத்த தொகுதியில் வெற்றிபெற்ற திரு மகிந்த
ராசபக்ச.
நல்லூர்
தொகுதியில் அருளம்பலம், வட்டுக்கோட்டையில் தியாகராசா, கிளிநொச்சியில் ஆனந்தசங்கரி ஆகியோர்
தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து நாடாளுமன்றத்திற்குப் தெரிவான புதியவர்கள். உடுப்பிட்டியில்
சிவசிதம்பரத்தைத் தோற்கடித்தவர் கே.ஜெயக்கொடி. யாழ்ப்பாணத்தில் ஜி.ஜியைத் தோற்கடித்தவர்
சி.எக்ஸ். மார்ட்டின். கம்யூனிஸ்ட் கட்சியின் வி.பொன்னம்பலம் காங்கேசன்துறையில் வெற்றிபெறவில்லை.
ஐக்கிய
முன்னணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் வெற்றிபெற்றால் அரசியல் நிர்ணயசபையை உருவாக்கி
புதிய அரசியல் யாப்பை வரைவோம் என உறுதியளித்திருந்தது. அதற்கேற்ப நாடாளுமன்றம் கூடிய
சில வாரங்களிலேயே அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.
அப்போதய பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் பிரகடனம் வெளியிடப்பட்டது.
கொழும்பு நவரங்கஹல மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபை கூடியது.
இதே
வேளயில் தேசிய அளவில் இன்னொரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. கல்வி அமைச்சர் பதியுதீன்
மொகமட் பல்கலைக்கழக அனுமதிக்கு தரப்படுத்தல் எனும் முறையைக் கொண்டுவந்தார். அதன்படி,
பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு அனுமதியில் முன்னுரிமை என்றும், நகர்ப்புற மாணவர்களுடன்
அவர்கள் போட்டிபோட முடியாதமையினால் பல்கலைக்கழக அனுமதிக்கு குறைந்த புள்ளிகளோடு அப்பிரதேச
மாணவர்கள் செல்லலாம் என்றும் ஆயிற்று. தரப்படுத்தலுக்கு
எதிராக தமிழ் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். என் வாழ்க்கையில்
முதன் முதலில் கொடும்பாவியைக் கண்டதும் அப்போது தான். யாழ். இந்துக்கல்லூரி அன்று நடைபெறவில்லை. மாணவர்கள்
அனைவரும் வீதியில் நின்ருந்தனர். நண்பர் சண்முகப்பிரபுவும் நானும் வண்ணார் பண்ணையில்
இருந்து கொக்குவிலுக்கு நடந்து சென்று பின் அங்கிருந்து ஊர்வலத்துடன் நடந்து வந்தோம்.
பயத்தினால் நான் எனது பாடசாலை வந்ததும் அங்கு நுழைந்துவிட்டேன். எனது நண்பன் இறுதிவரை
சென்றிருந்தான். அங்கும் கொடும்பாவி எரித்ததோடு அண்ணன்மார் சிலர் பேசியதாகவும் கேள்விப்பட்டேன்.
அந்த
வருடம் நவம்பர் மாதத்தில் கொண்டுவரப்பட்ட வரவுச் செலவுத் திட்டத்தில் ஐம்பது நூறு ரூபா
நாணயத் தாள்கள் செல்லாது என்று அறிவித்து அதற்குப் பதிலாக புதிய நாணயத் தாள்களை அறிமுகம்
செய்திருந்தனர். அத்தோடு உணவுத் தானியங்கள், பலசரக்கு, கட்டிடம் மற்றும் ஆடம்பரப் பொருட்களின்
இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மக்கள் அன்றாடம் வாழ்க்கையை ஓட்டவே அல்லாடிக்கொண்டிருந்தனர்.
மேலும்
முதன்முறையாக இலங்கையில் ஓர் ஆயுதப் புரட்சி முன்னெடுக்கப்பட்டு அது உடனடியாகவே ஒடுக்கப்பட்டது.
ரோகண விஜேவீராவின் ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி 1971 ஏப்ரல் 5ஆம் திகதி
அரசுக்கு எதிராகத் தொடக்கிய ஆயுதப்புரட்சி யூன்மாதம் முடிவுக்கு வந்தது. இந்திய அரசின்
பாதுகாப்பு உதவியும் பெறப்பட்டிருந்தது. ஏராளமான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டதோடு
ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில்
அமிர்தலிங்கத்தின் இடத்தில் உடுவில் பா.உ. தர்மலிங்கம் அதிகமாக பேசியும் எழுதியும்
வந்தார். அரசியல் நிர்ணய சபையில் தமிழரசுக்
கட்சி சமஸ்டித்தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அது தோல்வியடைந்தது. அப்போதய தமிழ், ஆங்கிலப்
பத்திரிகைகளில் சமஸ்டித் தீர்மானம் தோல்வி என பெரிய எழுத்துக்களில் வந்தபோதும், யாழ்ப்பாணத்தில்
இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் அது ஒரு மூலையில் முக்கியத்துவம் இன்றி பிரசுரமாகியிருந்தமை
என் நினைவில் உண்டு.
ஒரு
காலத்தில் இரண்டு மொழிகள் ஒரு நாடு, ஒரே மொழி இரண்டு நாடுகள் என எச்சரிக்கை செய்த பழுத்த
அரசியல் வாதியும் இடதுசாரி முன்னணித் தலைவர்களில் ஒருவருமான கொல்வின் ஆர்.டி. சில்வா,
தோழர் என்.எம்.பெரேரா, சிங்களவர் அல்லாத இடதுசாரித் தலைவர் பீட்டர் கெனமன் மற்றும்
இடதுசாரிச் சிந்தனைகளில் ஊறிப்போன தலைவர்கள் அடங்கிய ஐக்கிய முன்னணியின் ”மக்கள் அரசாங்கம்”,
அரசியல் நிர்ணய சபையில் அறிமுகம் செய்த புதிய குடியரசு அரசியல் யாப்பு தமிழர்களின்
எதிர்பார்ப்பிற்கு மாறாக எல்லோருக்கும் பேரிடியாக அமைந்தது.
அதுவரை
காலமும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிய சோல்பரி அரசியல் அமைப்பின்
29பி சட்டப்பிரிவுக்கு ஈடான பிரிவு எதுவும் இல்லாதது ஒரு புறம். சிங்களம் மட்டுமே அரச
மொழி என்றும் பெளத்தமே அரச மதம் என்றும் யாப்பின் முதல் பக்கத்தில் பிரகடனம் இன்னொரு
புறம் ஏலவே இருந்த உரிமையையும் பறிக்கும் அரசியல் யாப்பாக அது அமைந்திருந்தது. வடக்கு,
கிழக்கு எங்கும் கறுப்புக் கொடிகளும், கடையடைப்புகளும் தேசியக் கொடி எரிப்புமாக குடியரசு
நாளையும் தொடர்துவந்த நாட்களையும் மக்கள் அனுசரித்தனர்.
அமிர்தலிங்கம்
தம்பதியர் செல்வநாயகம் தலைமையில் சென்னைக்குச் சென்று தமிழ்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்தனர்.
அங்கு மக்கள் மத்தியில் பேசப்பட்டாலும், ஒரு தமிழக சஞ்சிகை செல்வநாயகம் குழுவினர் தமிழ்
நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எழுதியது. பெரியார், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களைச்
சந்தித்ததோடு அவர்கள் திரும்பிவிட்டனர்.
அம்மையார்
அரங்கேற்றிய அரசியல் நகர்வுகள் வடகிழக்கில் தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அக்கொந்தளிப்பினால் தமிழர்களிடமும் தமிழ்க் கட்சிகளிடமும்
ஒற்றுமைக்கான சமிக்கைகள் தோன்றின. தோல்விக்குப் பின் வழக்கறிஞர் தொழில் புரியப் புறப்பட்ட
அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் தீவிர அரசியலில் ஈடுபட அது வழிசமைத்தது.
தமிழ்ச் சமூகப் பெரியவர்கள் மற்றும் தலைவர்கள் முயற்சியால் தமிழ்க் கட்சிகள் தமிழர்களுக்கு
ஏற்படப்போகும் ஆபத்தை உணர்ந்து ஒன்றாக செயற்பட முனைந்தனர். திரு. சிவசிதம்பரம், திரு
அமிர்தலிங்கம் ஆகியோர் நெருங்கிச் செயற்பட்டனர். இதன் பயனாக தமிழர் கூட்டு முன்னணி
என்ற அமைப்பு உருவாகியது. சிவப்பு நிறப்பின்னணியில் பொன்னிற உதய சூரியன் கூட்டு முன்னணியின்
கொடியாக உருப்பெற்றது. கூட்டு முன்னணியில் மலையகத் தலைவர் சொளமியமூர்த்தி தொண்டமான்
அவர்களுடன் செல்வநாயகம், பொன்னம்பலம் ஆகியோர் கூட்டுத் தலைவர்களாகவும், அமிர்தலிங்கம்,
சிவசிதம்பரம் ஆகியோர் இணைச்செயலாளர்களாகவும் தெரிவாகினர். தமிழர் பகுதிகள் எங்கும் எழுச்சிக் கூட்டங்கள் நடைபெற்றன.
யாழ்ப்பாணத்தில் எங்கு பார்க்கினும் உதயசூரியன் சின்னமே காட்சியளித்தது.
இவ்வேளையில்
அரசியல் அரங்கில் சில மாற்றங்கள் ஓசைபடாமல் நடந்தேறின. சிறிமா அம்மையாரின் ஒரே மகனான
அனுர பண்டாரநாயக்க சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வாலிப முன்னணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் நாடு பூராகவும் தொகுதி ரீதியாக கட்சியின் வாலிப முன்னணிக் கிளைகளை அமைக்கத் தொடங்கினார்.
உடுவில்
தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் வினோதன் சுதந்திரக் கட்சியின் உடுவில் தொகுதி அமைப்பாளராகவும்,
யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா யாழ். தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தில் புதிய குடியரசு அரசியல் யாப்பிற்கு
ஆதரவாக யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவு செய்யப்பப்பட்ட தமிழ்க்காங்கிரஸ் எம்பிக்களான
அருளம்பலமும் தியாகராசாவும் வாக்களித்தனர். எனினும் கிளிநொச்சி ஆனந்தசங்கரி எதிராக
வாக்களித்ததோடு தமிழர் கூட்டு முன்னணியிலும் இணைந்து கொண்டார்.
இன்னொரு
புறத்தில் கள் இறக்கும் தொழிலுடன் தொடர்புடையதாக இருந்த மரவரி முறை ஒழிக்கப்பட்டது. தென்னை பனை வள அபிவிருத்திக்கென சங்கங்கள் உருவாக்கப்பட்டன.
கள் இறக்கும் தொழிலும், விற்பனையும் ஒழுங்கு முறைக்குள்ளானது. இடதுசாரிகளின் கொடிகளுடன்
சுதந்திரக் கட்சியின் நீலக்கொடிகளும் யாழ்ப்பாணத்தில் பறக்கத் தொடங்கின.
அல்பிரட்
துரையப்பா, குமாரசாமி வினோதன், முருகையா மாஸ்டர் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தத்தம் பகுதிகளில்
கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகிக்கும் இயக்குனர் சபைகளைத் தெரிவு செய்யும் அதிகாரம்
பெற்றிருந்தனர். கூட்டுறவுச் சங்கங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், அஞ்சல் அலுவலகங்கள்
என அரசு அலுவலகங்கள் அனைத்திலும் அரசசார்பு பிரதிநிதிகளின் சிபார்சு பெற்றவர்களுக்கே
வேலையும் கிடைத்தது.
அரசியல்
கொந்தளிப்பும், சமூக விரக்தியும் ஒன்று சேர யாழ்ப்பாணம் முழுவதும் பொலிஸ் ரோந்தும்
பாதுகாப்பும் அதிகரித்தது. யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக அடையாள உண்ணாவிரதங்கள் பரவலாக
நடைபெற்றன. தமிழர் கூட்டு முன்னணியின் தலைவர்கள் அனைவரும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர்.
தமிழர்
கூட்டு முன்னணியின் எழுச்சிப் பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தொண்டமான்,
செல்வநாயகம் ஆகியோர் அமர்ந்திருக்க இரு புறமும் அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் நின்றபடி
கரம் கூப்பியபடி வர அந்த நீண்ட பேரணி காங்கேசந்துறை வீதியால் இணுவிலைத் தாண்டிச் செல்ல
நீண்ட நேரம் எடுத்தது. அது நடைபெற்ற காலம் நினைவில் இல்லை எனினும் அந்தப் பேரணி இன்னமும்
நினைவில் நிழலாடுகிறது.
நான்காம்
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 தை மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதும் அதன்
நிறைவு நாளில் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் நடைபெற்ற நிறைவுக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான
மக்கள் கலந்துகொண்டிருந்த வேளையில் அவ்வீதியால் வந்த யாழ். பொலிசார் மேல்கொண்டு செல்லமுடியாது
போகவே பொதுமக்களைத் தாக்கியும் தொடர்து நடைபெற்ற மோதலில் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை
வீசியும் தம் ‘கடமையை’ செவ்வனே செய்தனர். பதினொரு அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது அந்நிகழ்வு.
தமிழாராய்ச்சி மாநாட்டின் பின் நடைபெற்ற இம்மரணங்கள் பற்றிய மரணவிசாரணை யாழ். நீதிவான்
நீதிமன்றில் நடைபெற்ற போது அதனை ஒருநாள் சென்று பார்த்தேன். விசாரணையின் ஆரம்ப நாட்களில்
ஒரு நாள் அமிர்தலிங்கம் அவர்கள் விசாரணையிலிருந்து நீதிபதியால் வெளியேற்றப்ட்டிருந்தார்
என பத்திரிகையில் அறிந்துகொண்டேன். தரப்படுத்தல், குடியரசு அரசியல் யாப்பு என்பவற்றிற்குப்
பின்னர் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் கொலைகள் தமிழர்களைப் பெரிதும் துயரத்தில்
ஆழ்த்தின.
ஐக்கிய
முன்னணி அரசின் அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும்போதெல்லாம் கடையடைப்புகள்,
வீதிகளில் கருப்புக் கொடிகள் என யாழ்ப்பாணம் துக்கம் கொண்டாடியது. எனினும் அரச சார்புக்
கட்சிகளின் ஆதரவாளர்கள் அமைச்சர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்திருந்தனர்.
இரண்டு
பிரபல தமிழ்க் கட்சிகளும் ஒற்றையாட்சியென்றும் சமஸ்டி என்றும் முரண்பட்டுக்கொண்டிருந்த
வேளையில் தமிழ்க் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் ஓர் இந்துப் பல்கலைக்கழகம் வேண்டும்
என்றும், தமிழரசுக் கட்சி திருகோணமலையில் ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்டும் என்றும்
கோரிக்கை வைத்திருந்தன. பொதுத்தேர்தலிலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. அப்போது இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் கொழும்பு,
பேராதனை ஆகிய இடங்களில் இயங்கின.
யாழ்ப்பாணத்தில்
ஒரு பல்கலைக்கழக வளாகத்தை ஆரம்பிக்க ஐக்கிய முன்னணி அரசாங்கம் தீர்மானித்தது. அதற்கென
திருநெல்வேலியில் உள்ள பரமேஸ்வராக் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி
ஆகியவற்றை அரசு சுவீகரித்தது. யாழ். வளாகம் 1974ஆம் ஆண்டு பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா
அவர்களால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் ஆரம்ப விழாவில் கலந்துகொள்ள
எனது உறவினருடன் சென்றிருந்தேன். அந்த விழாவின்
பின் யாழ். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கும் பல்கலைக்கழகத்தில்
இருந்து ஊர்வலமாகச் சென்று கலந்துகொண்டேன். ஏராளமான மக்கள் பல்கலைக்கழக யாழ்.வளாகத்தின்
அங்குரார்ப்பண விழாவிலும் யாழ். பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டனர். தமிழர் கூட்டு
முன்னணி யாழ். வளாக விழாவைப் புறக்கணித்தது. தமிழ் உணர்வாளர்கள் குழம்பிப் போயினர்.
வளாகத்தைப் புறக்கணிக்கவும் முடியாமல், தலைவர்களை ஏமாற்றவும் முடியாமல் குழப்பம் நிலவியது.
குழப்பம்
ஒரு புறமும், உணர்ச்சி மறுபுறமுமாக இருந்த தமிழர் சமூகத்தில் இன்னொரு புறத்தில் சில
சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியிருந்தன. அவற்றில் ஒன்று யாழ். கோண்டாவிலில் நடந்த ரயில்
எரிப்புச் சம்பவம். இது போன்ற சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ரோந்தை அதிகப்படுத்தியது.
இதற்கிடையே அரச சார்புத் தமிழ்த் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்களும்
நடைபெறத் தொடங்கின. பொன்னுதுரை சிவகுமாரன் என்ற உரும்பிராய் இளைஞன் 1974 ஜூன் ஐந்தாம்
திகதி பொலிசார் கைதுசெய்ய முயன்றபோது நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார். அவரின் மரணம்
யாழ். சமூகத்தில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தியாகி சிவகுமாரின் மரணச் சடங்கு
உரும்பிராயில் நடைபெற்றபோது ஏராளமான இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர். சிவகுமாரன்
யாழ்.இந்துக்கல்லூரியின் பழைய மாணவன். எமது கல்லூரியிலும் சிவகுமாரனின் மரணம் பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பின்னாட்களில் விடுதலைப் புலிகள் சிவகுமாரன் மரணமனா
தினத்தை மாணவர் எழுச்சி நாளாகக் அனுட்டித்து வந்தனர்.
மாவை
சேனாதிராஜா, காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவதும்
பின்னர் விடுவிக்கப்படுவதுமாக இருந்தனர். அக்காலத்தில் பிரபலமான ஒரு பொலிஸ் அதிகாரியாக
விளங்கியவர் சி.ஐ.டி பஸ்தியாம்பிள்ளை அவர்கள். கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை அவர்
மூர்க்கத்தனமாக தாக்கி விசாரணை செய்வார் என பேசப்பட்டது.
அமிர்தலிங்கம்
நாடாளுமன்றத்தின் வெளியேயும், தர்மலிங்கம் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் அரசைக் கடுமையாகச்
விமர்சித்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் தமிழ் எம்பிக்கள் நாடாளுமன்றப் புறக்கணிப்பில்
ஈடுபட்டிருந்தனர். எனினும் அரசு இம்மியளவும் அசையவில்லை.
இவற்றின்
உச்சமாக 1976ஆம் ஆண்டு தமிழர் கூட்டு முன்னணி தனது முதலாவது மாநில மாநாட்டை வட்டுக்கோட்டை
பண்ணாகத்தில் நடாத்தியது. அந்த மாநாட்டில் தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மான வாசகங்களை வினியோகித்தபோது அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், க.பொ.இரத்தினம்,
வி.என்.நவரத்தினம், கே. துரைரத்தினம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். சிவசிதம்பரம் விடுவிக்கப்பட
ஏனைய நால்வர் மீதும் தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ட்ரயல்-அற்-பார் எனப்படும்
ஜூரிகள் அற்ற நீதிமன்ற விசாரணைக்கு மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களில்
ஒருவர் தமிழர். அரசு தரப்பில் அப்போதய சொலிசிஸ்டர் ஜெனரல் திரு சிவா பசுபதி அவர்களும்
தமிழ்த் தலைவர்கள் சார்பில் எஸ்.ஜே.வி செல்வநாயகம் தலைமையில் ஜி.ஜி.பொன்னம்பலம், நீலன்
திருச்செல்வம் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தோற்றியிருந்தனர்.
கொழும்பு
மேல்நீதிமன்றக் கட்டிடத்தில் இவ்விசாரணைகள் நடைபெற்றன. ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் பூர்வாங்க
ஆட்சேபணை ஒன்றை முன்வைத்து அவசரகாலச் சட்டம் செல்லுபடியாகாது என்றும் எனவே அச்சட்டத்தின்
கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டுமென்றும் வாதாடினார்.
இறுதியில் 1977 முற்பகுதியில் அவசரகாலச் சட்டம் செல்லாது என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களை
நீதிமன்றம் விடுவித்தது.
துயரங்கள்
நிறைந்த கணங்களின் நினைவுகள் தொடரும்………
1 comment:
THANKS FOR REMINDING ME OUR EARLY EXPERIENCES! IT IS ALWAYS GOOD TO SEE OUR TAMIL HISTORY IN SRILANKA! PLEASE CONTINUE! BEST WISHES FROM NORWAY!
Post a Comment