மெல்பனில் ஐந்து அரங்குகளில் கலை - இலக்கியம் 2014 விழா

          
                       
தனிநாயகம்  அடிகள்  நினைவரங்கு -  இலக்கிய  கருத்தரங்கு  - நூல் விமர்சன அரங்கு -  இசையரங்கு -   நடன அரங்கு

      

                                                                                                                           அவுஸ்திரேலியாவில்   கடந்தபல   வருடங்களாக  தமிழ்   எழுத்தாளர்    விழாவையும்   கலை  -  இலக்கிய   சந்திப்புகள்   மற்றும் அனுபவப்பகிர்வு    நிகழ்ச்சிகளையும்   நடத்திவரும்     அவுஸ்திரேலியா   தமிழ்   இலக்கிய   கலைச்சங்கம்   விக்ரோரியா    மாநிலத்தில்   பதிவுசெய்யப்பட்ட   அமைப்பாக    இயங்கிவருகிறது.
இச்சங்கத்தின்   வெளியீடுகளாக   சில  நூல்களும் வெளியாகியுள்ளன.
அறிந்ததை  பகிர்தல்  அறியாததை    அறிந்துகொள்ள   முயலுதல்  என்ற   அடிப்படைச்சிந்தனையுடன்  வருடாந்த    விழாக்களில்   நூல் வெளியீட்டு  விமர்சன   அரங்குகளையும்   இச்சங்கம்   நடத்திவருகிறது.




எதிர்வரும்   ஜூலை   மாதம்   26  ஆம்  திகதி   (26-07-2014)   சனிக்கிழமை  பிற்பகல்   2   மணி  முதல்    இரவு  10    மணிவரையில்     மெல்பனில்      சங்கத்தின்    நடப்பாண்டு   தலைவர்   டொக்டர்  நடேசனின் தலைமையில்    இவ்விழா   St.Bernadettes  Community  Centre    மண்டபத்தில் (1264, Mountain Highway,   The Basin - Vic- 3154)   நடைபெறும்
கலை - இலக்கியம்  2014  விழாவிலும்  இந்நாட்டில் வதியும் படைப்பாளிகள்   ஐவரின்    புதிய  நூல்கள்  விமர்சன  அரங்கில் இடம்பெறுகின்றன.
திரு. சத்தியா  நிரஞ்சன்  தலைமையில்    இடம்பெறும்  நூல்  விமர்சன அரங்கில்    மெல்பனில்   வதியும்   படைப்பாளிகள்    டொக்டர் நடேசனின்    அசோகனின்   வைத்தியசாலை  (நாவல்) , கே.எஸ்.சுதாகரனின்    சென்றிடுவீர்   எட்டுத்திக்கும்   (சிறுகதைத்தொகுதி)    சிறிநந்தகுமாரின்     பிராண சக்தியும் மனிதவளமும்    (இயற்கை வைத்திய நூல்)  திரு. லெ. முருகபூபதியின் சொல்ல மறந்த கதைகள்  ( புனைவிலக்கிய  பதிவுகள்) சிட்னியில் வதியும்   திருமதி  தேவகி  கருணாகரனின்  அன்பின்  ஆழம் (சிறுகதைத்தொகுதி)    ஆகியன   விமர்சிக்கப்படவுள்ளன.


திருவாளர்கள்  'ஜே.கே.' ஜெயக்குமார்  -   இளங்கோ  நவரத்தினம் -  குமாரதாசன்  -  ஜெயராம சர்மா  -   கலாநிதி  நித்தியா தர்மசீலன் ஆகியோர்    விமர்சன   உரை   நிகழ்த்துவர்.
அசோகனின்   வைத்தியசாலை:   அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த   மிருகவைத்தியர்  ஒருவர்   சந்திக்கநேரும் மனிதர்களின்   வாழ்வில்  சமூகம்  -   அரசியல்  -   காதல்   -  கலாசாரம் - உறவுகள்  -   மனப்பிறழ்வுகள்   -   மனச்சிக்கல்கள்   -   முதலானவற்றை சித்திரிக்கும் - தொழில்சார்  அனுபவங்களை  பதிவுசெய்த நாவல் அசோகனின்   வைத்தியசாலை.
' ஒவ்வொன்றாகச்   சொல்லிச் செல்லும்  இந்நாவல்   ஒரு   கட்டத்தில் இரண்டு    எண்ணங்களை    நோக்கிச் செலுத்துகிறது.   ஒன்று - இந்த வாழ்க்கை    மனிதர்களால்    மட்டும்    ஆனது   அல்ல. மிருகங்களும் வாழ்க்கையின்    பிரஜைகளே   என்ற   பார்வை.   இன்னொன்று   இங்கே    மிருகங்கள்   என    சொல்லப்பட்டிருப்பவை  மிருகங்கள்தானா ? என்ற   எண்ணம்.    இவ்விரு   கோணங்களும் இந்நாவலை  இரு வேறு  வாசிப்புச்சாத்தியங்களை நோக்கிச்செலுத்துகின்றன.    அதுவே    இந்நாவலின்    அழகியலின் வெற்றி.
ஜெயமோகன்   -   தமிழ்நாடு
சென்றிடுவீர்  எட்டுத்திக்கும் :    புகலிடவாழ்வில்    மனிதர்கள் சந்திக்கும்    வாழ்வு    அனுபவங்களைப்பேசும்     கதைகள்.    மனித மனங்களின்    உளவியலையும்   வாழ்க்கை    மீதான    நம்பிக்கைகளை ஏமாற்றங்களை     அதிர்வுகளைப்பேசும்     புகலிடச்சூழலை     பதிவுசெய்த  கதைகள்.
புதிய உலகங்களை -   புதிய மனிதர்களை  -   புதிய உறவுகளை - புதிய    வாழ்க்கைச் சிக்கல்களை  -   புதிய தார்மீக    இடற்பாடுகளைப் பற்றி    எழுதுபவர்கள்.    பிறந்த  மண்ணின் -  விட்டு   விட்டு  வந்த மண்ணின்   நினைவுகளும்    மனிதர்களும்    இன்னம்    மறக்கவில்லை. எதையும்    முழுதாக    அழித்துத்  துடைத்துவிட    முடியுமா   என்ன? சுதாகரின்   எழுத்தே   எந்த   அவலத்தையும் - வாழ்க்கையின் எந்த ஏற்ற  இறக்கத்தையும் -  ஆரவாரம்  -  இரைச்சலோ  இல்லாது  கிட்ட  இருந்தும்  எட்டப் பார்வையுடன்   சொல்ல   முடிந்து  விடுகிறது. சுதாகர்   ஈழமண்ணிலிருந்து   1995 -இல் வெளியேறியவர்.    இப்போது வாழ்வது  ஆஸ்திரேலியாவில்.    தான்   எழுதியவற்றிலிருந்து பன்னிரெண்டு   கதைகளை    ஒரு    தொகுப்பிற்காக   முன் வைத்துள்ளார்


வெங்கட்சாமிநாதன் -  தமிழ்நாடு
பிராண  சக்தியும்  மனிதவளமும்:   பிரபஞ்சத்திலுள்ள   யாவற்றையும் இயங்கச்செய்யும்   பிராண  சக்தியானது    மனிதவளத்தை மேம்படுத்தவும்  ஆற்றுப்படுத்தவும்  எவ்வாறு    துணைசெய்கிறது என்பதை     விஞ்ஞானபூர்வமாக    சித்திரிக்கும்   நூல்   பிராண சக்தியும்  மனிதவளமும்.
ஶ்ரீ நந்தகுமார்  அவர்களின்  ஒரு   புதிய   முயற்சியாகத்   தமிழில் வந்துள்ள  படைப்புத்தான்   " பிரானசக்தியும்   மனித  வளமும் " மருத்துவமா?  சமயமா? அல்லது   உயர் தத்துவமா?   எது  என்பதை நாம்தான்    தீர்மானிக்க   வேண்டும்!    அந்த  அளவுக்கு  வெகு ஆழமாகவும்  -   நுண்மையாகவும்   -  அதேவேளை மிகவும் தன்னம்பிக்கையுடனும்   தனது  பணியை   ஶ்ரீ நந்தகுமார்   இந்த முயற்சி    வாயிலாக   வெளிப்படுத்தி   இருப்பதைக் காண முடிகிறது.  வாசிக்க    வாசிக்க   எம்மை    அறியாமலேயே   ஒரு   சக்தி  எமக்குள் ஏற்படுவதை   நம்பிக்கையுடன்   வாசிப்பவர்    கட்டாயம்    உணரத் தலைப்படுவர்.
   எம். ஜெயராமசர்மா   -   மெல்பன்
சொல்லமறந்த  கதைகள்:   ஒரு    ஊடகவியலாளன்   இலக்கியப் படைப்பாளியாகவும்   இருக்கும்    பட்சத்தில்   அவனது சமூகப்பார்வை   மனிதநேயம்   நோக்கி   விரிவுபடுத்தப்படவேண்டும் என்பதை    அழுத்தமாக    உணர்த்தும்   புனைவிலக்கிய   கட்டுரைகளின் தொகுப்பு.   இறந்த   காலத்தையும்   நிகழ்காலத்தையும்   ஒப்பிட முயலும்    ஆக்கங்களின்   தொகுப்பு     சொல்ல மறந்த கதைகள்.
முருகபூபதி      எழுதி   சுய     புனைவுருவாக்கம்     செய்யப்பட்டு   வரப்படுகின்ற   வரலாற்றுப் பதிவுகளில்   முக்கியமான    ஒன்று.   பல வகையிலும்   இது   வேறுபட்டுக்    கவனத்தை     ஈர்க்கின்றது.  ஒரு ஊடகச்    செயற்பாட்டாளர்  -   ஒரு    இலக்கியப் பிரதியாளர்   என்ற  வகையில் பெற்றுக்கொண்ட   அனுபவத்தையும்    சாட்சி    நிலையையும்   முருகபூபதி   செம்மையாகவும்    கவனமாகவும்    செய்கிறார்.


கருணாகரன்   -      இலங்கை
அன்பின்  ஆழம்:     தாயக வாழ்விலும்   புகலிட  வாழ்விலும்  மனிதர்கள்   சந்திக்கும்   சமூக    மாற்றங்களையும்    தலைமுறை இடைவெளியில்    சந்திக்கும்    பாசம்  -    பண்பாட்டுக்கோலங்களையும் சித்திரிக்கும்   கதைகளின்    தொகுப்பு  அன்பின்  ஆழம்.
காடு வெந்த  மணத்தோடு  தடித்த  மழைத்துளிகள்   விழுந்து தெறித்தன -   என்று  வாசமும்   காட்சியுமாக   விரியும்   மொழி இருக்கிறது.   இங்கு   காடு  வெந்த மணம்   என்பது முக்கியம். ‘அன்பின் ஆழம்என்னும்  தலைப்புச்  சிறுகதை   மொழியும்  -   இனமும் -   இடமும்  மறந்து   அன்பெனும்  பெரும்  போதை ஆட்கொண்ட  ஆண் - பெண் பற்றியது.   வெற்றிடம்    எனும்    கதை   சென்னையிலும் நடக்கலாம்.    சர்வதேசப் பெரு  நகரிலும்   நடக்கலாம்.   ‘அதிசயம்' ‘குடிசெய்து  வாழ்வானைச்  சுற்றமாய்  சுற்றும்  உலகுஎன   நிதானமான   கதைகளும்   உண்டு.
நாஞ்சில்  நாடன் -  தமிழ்நாடு.
          தனிநாயகம்  அடிகள்   நினைவுப்பேருரை
கலை  -    இலக்கிய    விழாவில்  இடம்பெறும்  இதர  நிகழ்ச்சிகளில் தமிழ்த்தூது  தனிநாயகம்   அடிகளார்    நூற்றாண்டை  முன்னிட்டு நினைவுப்பேருரையை  திரு. எஸ்.சிவசம்பு  நிகழ்த்துவார்.
தனிநாயகம்  அடிகளாரின்   பணிகளை    விதந்து   போற்றும் இசைப்பாடலும்    இடம்பெறும்.
பேராதனை    பல்கலைக்கழகத்தின்  முன்னாள்  விரிவுரையாளர் கலாநிதி   காசிநாதர்  தலைமையில்    நடைபெறவுள்ள இலக்கியக்கருத்தரங்கில்    மேற்கு    அவுஸ்திரேலியா  மாநில  மேடொக்    பல்கலைக்கழக    பொருளியல்   பீடத்தின்   விரிவுரையாளர்   கலாநிதி  அமீர் அலி  - 
பூகோளமயப்   பொருளாதாரத்தினாற்    பிளவுபடும்   மனித   நெஞ்சங்களை  பிணைக்கும்   புனித    இலக்கியப்போர்.  -   என்னும் தலைப்பிலும்    கலாநிதி    கௌசல்யா       அன்ரனிப்பிள்ளை
   புகலிடப்பெண்கள்     வாழ்வும்      சவால்களும்   என்ற    தலைப்பிலும் உரையாற்றுவர்.     நிகழ்ச்சியில்    கலந்துகொள்ளும்   பேராளர்களின் கருத்துக்கள்    இடம்பெறும்   கலந்துரையாடலும்    இடம்பெறும்.
இரவு     நிகழ்ச்சியில்  கலையரங்கம்
மெல்பன்    நிருத்தியோ   பாசனா   நாட்டியக்குழுவினரின்   நாட்டிய நாடகம்.   மெல்பன்    கலாலயா   மெல்லிசைக்குழுவினரின்    பழைய  புதிய  திரை  இசை கானகீதங்கள்.    இலங்கை - இந்தியா - மலேசியா  கலைஞர்களின்         Fusion Dances & Drum        என்பன  இரவு நிகழ்ச்சியில்  இடம்பெறும்.
          அன்பர்களுக்கு    சுவையான    இரவு    உணவுவகைகள்  
   அனுமதி:      குடும்பம்  $10  வெள்ளி     ---     தனிநபர்:  $5   வெள்ளி.
              அனைவரையும்  அன்புடன்  அழைக்கின்றோம்
  அவுஸ்திரேலியா  தமிழ்   இலக்கிய    கலைச்சங்கம்
                      atlas2001@live.com
                            ----0----


No comments: