உலகச் செய்திகள்

.
கராச்சி விமான நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 23 பேர் பலி

கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் மோதல்

 இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக றிவ்லின் பாராளுமன்றத்தால் தெரிவு

ஈராக்கிய திக்ரித் நகரை கைப்பற்றிய இஸ்லாமிய போராளிகள் - நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகள் விடுவிப்பு


கராச்சி விமான நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 23 பேர் பலி

09/06/2014    பாகிஸ்தான் கராச்சியில் அமைந்துள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் பயங்கரவாத குழுவைச் சேர்ந்த 10 பேர் உள்ளடங்குவதாக அந்நாட்டு அரச செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


பாதுகாப்புப் படையினர் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு விமான நிலையத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். 
இதனிடையே பாதுகாப்புத் தரப்பினரும் பதிலுக்குத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 6 மணிநேரம் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.


ஈரானிலிருந்து வருகை தந்த யாத்திரிகர்களை குறிவைத்தே இவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் கராச்சி நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்துப்பட்டுள்ளதாகவும் வேறு தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்காக விமானப்படையினரின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் அஸிம் பஜ்வா தெரிவித்துள்ளார்.
பிந்திக் கிடைத்த தகவல்களின் பிரகாரம் தெஹ்ரீக் இ-தலிபான் என்ற அமைப்பு இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. நன்றி வீரகேசரி 
 
கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் மோதல்
10/06/2014  
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே தீவிரவாதிகள் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலைய வளாகத்தில் உள்ள சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை எதிர் தாக்குதல் நடத்தினர்.
தீவிரவாதிகள் விமான நிலையத்தின் சுற்றுப்பகுதியில் உள்ள கட்டிடத்திலிருந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர். அங்கிருந்து சோதனைச் சாவடியின் இரண்டாவது அறையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் நீடித்த மோதலில்  5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், சிலர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
தீவிரவாத தாக்குதலை அடுத்து விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தப்பித்து சென்ற தீவிரவாதிகள், கராச்சி நகரில் மட்டுமே பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதால், பாகிஸ்தான் இராணுவ விமானம், தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.
கராச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கராச்சியில் நடந்துள்ள இந்த 2ஆவது தாக்குதல் சம்பவத்திற்கும் தெஹ்ரீக் - இ - தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
மேலும் இவர்கள் விமானங்களை தகர்க்கும் நோக்கத்தோடு இந்தத் தாக்குதலை அரங்கேற்ற வந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.
 நன்றி வீரகேசரி
 இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக றிவ்லின் பாராளுமன்றத்தால் தெரிவு
 
 12/06/2014   இஸ்­ரேலின் புதிய ஜனா­தி­ப­தி­யாக முன்னாள் பாரா­ளு­மன்ற சபா­நா­ய­கரும் அமைச்­ச­ரு­மான ரெயுவென் றிவ்­லினை அந்­நாட்டு பாரா­ளு­மன்றம் தெரிவு செய்­துள்­ளது.
செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இரண்டாம் சுற்று இர­க­சிய வாக்­கெ­டுப்­பொன்றில் றிவ்லின் நீண்ட காலம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி வகித்த மெயிர் ஷீட்­ரித்தை 53 வாக்­கு­க­ளுக்கு 63 வாக்­கு­களால் தோற்­க­டித்­துள்ளார்.
ஏற்­க­னவே 7 வருட காலம் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த ஷிமொன் பெரெஸின் (90 வயது) பதவிக் காலம் எதிர்­வரும் ஜூலை மாதம் முடி­வ­டை­வ­தை­யொட்­டியே இந்த வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.
இஸ்­ரே­லிய ஜனா­தி­பதி பத­வி­யா­னது பெரு­ம­ளவில் வைப­வ­ரீ­தி­யான ஒன்­றாக உள்­ளது.
பலஸ்­தீ­னர்­க­ளு­ட­னான சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களில் ஜனா­தி­ப­திக்கு முக்­கிய வகி­பாகம் எதுவும் கிடை­யாது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்டான் யாஹுவின் வலது சாரி லிகுட் கட்­சியின் உறுப்­பி­ன­ரான றிவ்லின் இஸ்­ரேலின் 10 ஆவது ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­க­வுள்ளார்.
புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு சொய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து றிவ்லின் உரை­யாற்­று­கையில், ''இந்த தரு­ணத்­தி­லி­ருந்து நான் எந்­த­வொரு கட்­சிக்கும் உடை­மை­யா­னவன் அல்லன்.
நான் அனை­வ­ருக்கும் உடை­மை­யா­னவன். நான் இந்த நாட்­டிற்­கு­ரி­யவன்" என்று கூறினார்.
74 வய­தான றிவ்லின் பலஸ்­தீன தேசத்தின் உரு­வாக்­கத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து வரு­வ­துடன் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீன மேற்கு கரையில் யூத குடி­யி­ருப்­பு­களை ஸ்தாபிப்­ப­தற்கு ஆத­ர­வ­ளித்து வரு­கிறார்.
றிவ்லின் புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவருக்கு பிரதமர் நெட்டான்யாஹு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
றிவ்லின் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
 நன்றி வீரகேசரி

ஈராக்கிய திக்ரித் நகரை கைப்பற்றிய இஸ்லாமிய போராளிகள் - நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகள் விடுவிப்பு


12/06/2014  
ஈராக்கின் திக்ரித் நகரின் கட்டுப்பாட்டை நேற்று புதன்கிழமை மாலை கைப்பற்றிய போராளிகள் அங்கிருந்து நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.
அவர்கள் முதல் நாள் செவ்வாய்க்கிழமை எண்ணெய் வளம் மிக்க மொசுல் நகரை கைப்பற்றியதையடுத்து அந்நகரிலிருந்து சுமார் 500,000 பேர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
சதாம் ஹுசைனின் சொந்த நகரான திக்ரித்தை கைப்பற்றிய போராளிகள் அங்கிருந்த அந்நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடியுள்ளனர்.
இந்நிலையில் ஈராக்கிய தலைநகர் பக்தாத்திலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தை  போராளிகள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் அங்கு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மொசுல் மற்றும் திக்ரித் நகர்களைப் போன்று அந்நாட்டின் வட பகுதியிலுள்ள பல நகர்கள் ஐ.எஸ்.ஐ.எல். போராளி  குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னாள் மதபோதகர் அபு பாகர் அல் - பக்டாடிக் தலைமையிலான போராளிகள் பாரிய பெயஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கைப்பற்றலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 
அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்த 250 பாதுகாப்பு படைவீரர்கள் அந்த நிலையத்தை கைவிட்டு சென்றுள்ளனர்.
மொசுலின் நகரிலுள்ள துருக்கிய பிரதிநிதிகள் அலுவலகத்திலிருந்து அதன் தலைவர் 3 பிள்ளகள் மற்றும் அநேகர் துருக்கிய விசேட படையினர் உட்பட 48 துருக்கியவர்களை போராளிகள் புதன்கிழமை கடத்திச் சென்றுள்ளனர்.
ஏற்கனவே போராளிகளால் 28 துருக்கிய லொறி சாரதிகள் கடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி கடத்தப்பட்ட துருக்கிய பிரஜைகளின் பாதுகாப்பு  தொடர்பில் துருக்கிய அரசாங்கம் கவலையடைந்துள்ளது. 
இது தொடர்பில் துருக்கிய வெளிநாட்டு அமைச்சர் அஹ்மட்டவுடோக்லு விபரிக்கையில் தமது நாட்டு இராஜ தந்திரிகள் மற்றும் பிரஜைகளுக்கு  தீங்கு விளைவிக்கப்படும் பட்சத்தில் கடும் பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எமது பிரஜைகளின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தாம் தற்போது அமைதி காப்பதாகவும் அதனை போராளிகள் தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது எனவும் அவர் கூறினார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் கட்டுப்பாட்டில் திக்ரித் உள்ளதை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகள் மாகாண ஆளுநர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் வடஈராக்கிய நகரான கிர்குக்கை பிராந்திய குர்திஷ் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். 
அந்நகரை விட்டு இராணுவத்தினர் வெளியேறியதையடுத்தே மேற்படி போராளிகள் அந்நகரை கைப்பற்றியுள்ளனர். 
குர்திஷ் போராளிகள் மொசுல் நகரை கைப்பற்றிய இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரிNo comments: