நிழல் தந்த மான்.

.

பள்ளிக் காலத்தில் தன் துணையான பெண்மானுக்குத் தன் நிழல்தந்தது ஆண்மான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு இலக்கியநயம் வியந்திருக்கிறேன்..

அந்தச் செய்தியை ங்க இலக்கியத்தில் கலித்தொகைப் பாடலில் கண்டு மகிழ்ந்தேன்.

இன்று குறுந்தொகையில் தன் கன்றுக்கு நிழல் தந்த ஆண்மான் பற்றிய செய்தியைக் கண்டு மகிழ்ந்தேன்.

இதோ அந்தப் பாடல்..

தலைவியை நீங்கிப் பொருள் தேடச் சென்றான் தலைவன். அவன் வழியில் காணும் காட்சிகள் அவனுக்குத் தன்னை நினைவுபடுத்தும் என எண்ணியிருந்த தலைவியிடம் தோழி பேசுவதாக இந்தப் பாடல் அமைகிறது.
நசை நன்கு உடையர் - தோழி - ஞெரேரென
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந்த ததரல்
ஒழியின் உண்டு அழிவு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன்மறிக்கு நிழல் ஆகி
நின்று வெயில் கழிக்கும் என்ப - தம் 
இன்துயில் முனிநர் சென்ற ஆறே.

குறுந்தொகை -213


 உன் தலைவர் உன் மீது மிகுந்த அன்புடையவர்தான் இருந்தாலும் பொருள் வாழ்க்கைக்குத் தேவை என்பதை உணர்ந்து உன்னை நீ்ங்கிப் பொருள் தேடச் சென்றுவிட்டார். அவர் சென்ற பாலை நிலம் பல்வேறு இன்பதுன்பங்களைக் கொண்டது.

நிழல் தரும் மான்.

தலைவர் சென்ற வழியில் அறிவுடைய ஆண்மான் தன் கன்றின் பசியைக் காணஇயலாமல் தன் கவைத்த கொம்புகளால் மரத்தின் அடிப்பகுதியைக் குத்தி, தன்னுடைய கன்றின் பசியைப் போக்கும்.
தன் கன்று உண்டு எஞ்சியதைத் தானும் உண்டு, தன் கன்று வெயிலின் வெம்மையைத் தாங்காது என்பதை உணர்ந்து, கன்றுக்கு நிழல் தருவதற்காக அசையாது அதன் அருகில் நின்று கன்றின் மேல் வெயில் படாமல் பகல் பொழுதைக் கழிக்கும்.

தலைவர் சென்ற வழி இத்தகையது என்கிறாள் தோழி.

ஆண்மான் தான் இருக்கும் இடத்தில் கிடைத்த உணவினைக் கன்றுக்குத் தந்து தானும் எஞ்சியதை உண்ணும் காட்சியைத் தலைவர் காண்பாராயின் பொருள் தேட எண்ணிய எண்ணத்தைக் கைவிட்டு இடையிலேயே திரும்புவாரோ என நினைத்தாள் தலைவி.

அவள் எண்ணத்தை இவ்வாறு மாற்றுகிறாள் தோழி.

உன் மீது தலைவனுக்கு இருக்கும் விருப்பத்தைவிட பொருளின் மீது அவன் கொண்ட விருப்பம் பெரிது என்று கூறித் தலைவியைத் தோழி ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைகிறது. இயற்கையோடு தம் வாழ்வியலை இயைபுபடுத்திப்பார்த்த சங்கத்தமிழரின் மாண்பு எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது.

nantri gunathamizh.com

No comments: