சங்க இலக்கியக் காட்சிகள் 12 - செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காட்சி 12

ஊரார் இகழ்ந்தார், உறவோடு கலந்தாள்!


மாளிகை போன்ற விசாலமான மாடி வீடு. அங்கே பருவவயதிலே அழகிய இளம் பெண் ஒருத்தி இருந்தாள்;. அவளுக்கும் வேற்றூரைச் சேர்ந்த ஒருத்தனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவளின் அந்தத் தலைவன் தினமும் அவளைக் காண வருவான். வரும்போது வாசமுள்ள அழகிய வண்ண மலர்களைக் கொண்டுவந்து அவளின் நீண்ட கருங்கூந்தலிலே கூடிவிடுவான். இருவரும் தழுவி மகிழ்வார்கள். பலநாட்களாக இரகசியமாக யாருக்கும் தெரியாமல் நடைபெற்றுவந்த இந்தக் காதல் உறவுபற்றி ஊரிலுள்ள பெண்களுக்கு எப்படியோ தெரியவந்துவிட்டது. அவர்கள் பலதும் பத்துமாக அப்படி இப்படிப் பேசினார்கள். ஊருக்குள் நடக்கும் இந்தப் பேச்சுக்கள் தலைவியின் தாயின் காதுகளுக்கும் எட்டின. சிலநாட்கள் அவளின் தாய் ஏதும் அறியாதவள்போல இருந்தாள். ஆனால் மகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். மகளின் நடத்தையிலே சில மாற்றங்களை உணர்ந்தாள். வித்தியாசமான நறுமணமொன்றை அவளின் கூந்தலிலே நுகர்ந்தாள். இதுவரை அவள் அறிந்திராத புதியதொரு வாசமாக அது இருந்தது. அந்த ஊரிலே இல்லாத மலரொன்றின் மணமாக அது இருப்பதைத் தெரிந்து  கொண்டாள். காரணத்தையும் புரிந்துகொண்டாள். வரவர ஊரவரின் வதந்திப் பேச்சுக்கள் மிகவும் அதிகமாகின. கண்டகண்ட இடங்களிலெல்லாம் தன் மகளைப்பற்றிக் கதை எழும்புவதாக அவளுக்குத் தெரியவந்தது. அதனால் ஒருநாள் மகளிடம் கேட்டுவிடுகிறாள். “மகளே! என்னஇது? நான்தானே தினமும் உன் கூந்தலுக்கு வாசமூட்டுவேன். இப்போதெல்லாம் உன் கூந்தலில் வித்தியாசமான மணமொன்று வீசுகிறதே. அது நான் முன்னர் அறியாத மணமாக இருக்கிறதே. அது எப்படி?” என்று கேட்டாள்.தலைவி(மகள்) அதிர்ந்துவிட்டாள். தனது கள்ள உறவு பற்றி ஊரார் கதைப்பதெல்லாம் அவளுக்குத் தெரிந்ததுதான். அந்தக்கதைகளெல்லாம் தனது தாய்க்கும் எட்டியிருக்கும் என்பதும் அவளுக்குப் புரிந்ததுதான். ஆனால் தாய் தன்னிடம் இதுவரை அதுபற்றி எதுவும் கேட்காமல் இருந்ததினால் அந்தக்கதைகளைத் தாய் நம்பவில்லை என்று அவள் எண்ணியிருந்தாள். இப்போது இப்படிக்கேட்டதும் தனது தாய்க்குத் தன் காதல் உறவுபற்றித் தெரிந்துவிட்டது என்று நினைத்தாள். இனிமேலும் வீட்டிலேயிருந்தால் கட்டுக்காவல் அதிகமாகும், காதலனைச் சந்திப்பது முடியாது போகும்ää சிலவேளை வேறு யாருக்காவது தன்னை மணம் செய்து கொடுக்க வீட்டார் முயலவும் கூடும், என்றெல்லாம் எண்ணினாள். மிகவும் அஞ்சினாள். அதனால் இனிமேலும் அங்கிருப்பது சரியல்ல என்று முடிவுகட்டினாள். யாருக்கும் தெரியாமல், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறிக் காதலனோடு வாழச்சென்றுவிட்டாள். தன் பெற்றோரையும்ää தான் பிறந்த வீட்டையும், தான் வளர்த்த கிளியையும், தன் உயிரக்குயிராகப் பழகிய தோழிகளையும் பிரிந்து காதலனுடன் சென்று சேர்ந்தாள்.
அவள் காதலனுடன் சென்ற செய்தி தாய்க்கு எட்டுகிறது. ஊர்ப்பெண்கள் சிலர் வந்து சொல்கிறார்கள். அவர்கள் கூறிய வார்த்தை தாய்க்குக் கொடியதாக இருந்தாலும், மனம் கவர்ந்த காதலனுடன் சென்றிருக்கிறாள் என்ற அந்தச் செய்தி அவளுக்கு இனிமையாக இருக்கிறது. எனினும் தனக்குள் வருந்துகிறாள். தன் மகள் தவறேதும் செய்துவிடவில்லை என்று அவளுக்காக இரங்குகிறாள். தன் காதல் உறவு தனக்குத் தெரிந்துவிட்டது என்ற அச்சத்தில்தான் மகள் காதலனுடன் சென்றிருக்கிறாள் என்று உணர்ந்த தாய் அவளின் காதல் பற்றித் தனக்கு எப்பவோ தெரிய வந்திருந்தும் அவள் விரம்பியவனுக்கு அவளைத் திருமணம் செய்துவைக்காமல் வீணே காலத்தைக் கடத்திவிட்டேனேயென்று கவலைப்படுகின்றாள்.
அப்போது தலைவியின் தோழிகள் விளையாடுவதற்காக வளமைபோல அங்கே வருகிறார்கள். அவர்களுக்குத் தலைவி காதலனோடு சென்றுவிட்ட கதை தெரியாது. அவள் வீட்டிலேதான் இருக்கிறாள் என்றெண்ணி எப்போதும்போலப் பெயர்சொல்லி அழைக்கிறார்கள். அதைக்கேட்ட அங்கேயிருந்த தலைவியின் கிளியும் அவளின் பெயர் சொல்லி உரிமையோடு கூப்பிடுகின்றது. தாய் இதையெல்லாம் கவலையோடு பார்த்துக்கொண்டு நிற்கிறாள். தோழிகளோடு தன் மகள் விளையாடும் ஆடுகளத்தில் அவளின் பார்வை படர்கின்றது. அவளின் கண்களிலிருந்த கண்ணீர் வடிகின்றது. அழுகை பீறிட்டு வருகிறது. மகளை நினைத்து, மகளுக்காகவே அழுகிறாள். அதே வேளை, மகளின் காதல் வலிமையை நினைத்துப் பெருமை கொள்கிறாள்.
இந்தக்காட்சியினை நம் நெஞ்சிலே நிழலாடவைக்கும் பாடலொன்று இதோ:
பாடல்:

ஐதேகாமம் யானே ஒய்யெனத்
தருமணல் ஞெமிறிய திருநகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்
நீர்வார் கண்ணேன் கலுழும், என்னினும்
கிள்ளையும் “கிளை” எனக் கூஉம், இளையோள்
வழுவலள் அம்ம தானே குழீஇ
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்
இன்னா இன்னுரை கேட்ட சில்நாள்
அறியேன் போல உயிரேன்
நறிய நாறும்நின் கதுப்பு என்றேனே

(நற்றிணை பாடல் இல: 143. பாலைத்திணை. பாடியவர்: கண்ணகாரன் கொற்றனார்)

இதன் கருத்து:
அழகான பெரிய வீட்டின் முற்றத்திலே வேலையாட்கள் கொண்டுவந்து கொட்டிய மணல் பரப்பப்பட்டிருக்கிறது. அங்கே விளையாடிக் களிப்பதற்காக வந்திருக்கும் என் மகளின் தோளிகளையும் காண்கிறேன். மகளும் தோழிகளும் விளையாடுகின்ற நொச்சி வேலியால் சூழப்பட்ட இடத்தையும் நோக்குவேன். கண்களிலே விரைந்து வரும் கண்ணீரோடு அழவும் தொடங்குவேன். அவள் வளர்த்த கிளியும் அவளை தன் உறவென நினைத்து உரிமையுடன் விரைந்து வருமாறு கூவியழைக்கிறது. எனது இளம்பருவத்து மகள் குற்றமேதும் செய்துவிடவும் இல்லை. ஊரிலுள்ள பெண்கள் கூட்டமாய்நின்று என் மகளைப்பற்றிக் கதைக்கின்ற கொடுமையான, ஆனால் எனக்கு இனிமையான கதைகளைக் கேட்டுள்ளேன். ஆனாலும் எதையும் அறியாதவள்போலச் சிலகாலம் இருந்தேன். பின்னர் பெண்கள் பேசும் வதந்திகள் அதிகமாகவே, “மகளே! உனது கூந்தலுக்கு நான்தான்; மணமூட்டுகிறேன். ஆனால் அந்த மணத்தைவிடப் புதியதான வேறொரு மணம் இப்பொது கமழ்கிறதே! அது எவ்வாறு?” என்று அவளிடம் கேட்டேன். அதனால், தனது காதல் உறவை நான் அறிந்துவிட்டேன் என்று உணர்ந்து காதலனுடனேயே சென்றுவிட்டாள். அவளின் காதல் மிகவும் வியக்கத்தக்கது.
(என்று தன்மகள் தன்னைவிட்டுவிட்டுக் காதலனுடன் சென்றுவிட்டாள் என்று அறிந்த தாயுள்ளம் கவலைப்படுவதோடு, மகளின் காதல்பற்றித் தனக்குத் தெரிந்திருந்தும் அவளைக் காதலனுடன் சேர்த்துவைக்காமல் காலத்தை வீணே கடத்திய தனது மடத்தனத்தை நினைத்து வருந்துவதாகவும் அமைந்த பாடல் இது)


No comments: