உண்மைக்குப் பல பக்கங்கள் -எஸ்.கிருஸ்ணமூர்த்தி

.
திறக்கப்படாத புத்தகங்கள்


அவுஸ்த்திரேலியா நூலகங்களில் ஒரு நடைமுறையுண்டு. வாசகர்களின் பாவனையில் இல்லாத புத்தகங்களை நூலகங்களிருந்து வெளியே எடுத்துவிடுவார்கள். புத்தகங்கள் நூலக அலுமாரிகளில் உறங்குவதை அவர்கள் விரும்புவதில்லை. அவை எப்போதும் வாசகர்களில் கைகளில் இருப்பதையே விரும்புவார்கள்.

எனது புத்தக அலுமாரியில் பல புத்தகங்கள் பல ஆண்டுகளாகத் திறக்கப்படமல் இருக்கின்றது. புத்தக வெளியீட்டு விழாவில் வாங்கியவை, நண்பர்களில் முகத்திற்காக வாங்கியவை, நண்பர்களின் நண்பர்களுக்காக வாங்கியவை என பலவகைப்படும். புலம்பெயர் நாடுகளில் வெளியிடப்படும் அல்லது விற்கப்படும் புத்தகங்களிற்கு ஒரு புத்தகத்தை ஒருவர் மட்டும்தான் வாசிப்பர். இலங்கை இந்தியாவில் விற்பனையாகும் புத்தகத்தகங்கள் ஒரு புத்தகம் பல கைகளில் தவழும்.




இப்படியான நிலையில், நோர்வேயில் இருக்கும் எனது நண்பர் ஒருவர் பல மாதங்களாக இந்தியாவில் வெளியிட்ட ஒரு புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தார். புத்தகத்தின் பெயர் மட்டும்  தெரிந்த நண்பருக்கு ஏனைய விபரங்களைப் பெறமுடியவில்லை. நண்பரும் தனக்குத் தெரிந்த பலர் தமிழகம் செல்லும் போதெல்லாம் அந்தப் புத்தகத்தை வாங்கிவரச் சொல்லிவிடுவார். எந்தப் பட்டுச்சேலை எங்கு கிடைக்கும் என்று தெரிந்த பலருக்கு புத்தகங்கள் கிடைக்குமிடம் தெரிவதில்லை. அப்போதுதான் கவிஞர் கருணாகரன் தமிழகத்தில் நிற்பதாக தகவல் கிடைத்து அவசர அவசரமாக என்னிடம் தொடர்பு கொண்ட நண்பர் கருணாகரனிடம் சொல்லி அந்தப் புத்தகமும்  வேறு சில புத்தகமும் வாங்கித்தர முடியுமா என கேட்டார். இப்படி புத்தகத்திற்கு அலைவர்கள் குறைந்துபோன காலத்தில் இப்படி எனது நண்பர் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியோடு நண்பரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டேன். நான் கருணாகரனுடன் தொடர்பு கொண்ட போது சென்னை புத்தகச் சந்தை மூட்டை முடிச்சுக்களை கட்டி வெளிக்கிட்டாச்சு. பிறகு கருணாகரன், கடைகடையாக ஏறி இறங்கி ஒரு மூட்டை புத்தகங்கள் நோர்வேக்கும், இரண்டு மூட்டை புத்தகளை அவுஸ்த்திரேலியாவிற்கும் (எனக்கும்) அனுப்பி வைத்தார்.

 சொக்கிளேற் கடைக்குள் நுழைந்த சிறுவன் எந்த இனிப்பை முதலில் சுவைப்பது என திண்டாடுவது போல, புத்தகப் பொதியைத் திறந்த போது எனக்கு  ஏற்பட்டது. புல புத்தகங்களை அவசரப் பார்வை பார்த்துவிட்டு, புஸ்பராணியின் அகாலம் புத்தகத்தை முதல் பக்கத்தை விரித்தது தான் தெரியும் கடைசி இருநூற்றி ஏழாம் பகத்தை முடிக்கும் போதுதான், திரும்பவும் சுயநினைவு திரும்பியது.  விறுவிறுப்பான நாவல்போல இருந்தது அவரது எழுத்துக்கள். சுவையாக இருந்தது. இல்லை சுமையாக இருந்தது. புஸ்பராணி தனது சுமையை வாசகர்களின் மனதில் இறக்கிவைத்துவிட்டார். ஆனாலும் அவரது மனச்சுமையின் பாரம் குறைந்திருக்காது.

அடுத்த எனது தெரிவாக இருந்தது, யோ.கர்ணனது கொலம்பசின் வரைபடங்கள், யோ.கர்ணனின் படைப்புக்களை இணையத்தில் படித்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நேரிலும் பாத்துள்ளேன். ஆனால் அச்சில் இவரது எழுத்தை இப்போதுதான் காண்கிறேன்.   இவரது எழுத்துக்களின் சோகத்தை  நையாண்டிகளாலும் சுவார்சியங்களாலும் காணமல் செய்துவிடுவார். கொஞ்சம் கலகக்காரர். இது இவரது எழுத்தில் தெரிகிறது.

ஒரு அதிசயமான விடயம் என்னவெனில், எனது முதல் தெரிவான புத்தகம் அகாலம் ஈழவிடுதலைப்போராட்ட ஆரம்பகால அவலங்களை சித்தரிக்கிறது. இரண்டாவது தெரிவோ கொலம்பசின் வரைபடங்கள், விடுதலைப்போரின் இறுதி அவலங்களை சொல்லுகிறது. புஸ்பராணி ஈடுபட்ட  ஈழவிடுதலைப்போராட்ட காலகட்டத்தின் இறுதியின் பின்னர்தான் யோ.கர்ணன் பிறந்திருப்பார். புஸ்பராணியின் காலகட்ட போராட்ட வரலாறு யோ.கர்ணனுக்குத் தெரியாது. யோ.கர்ணனின் போராட்ட காலகட்ட வரலாறு தெரிய புஸ்பராணிக்கு  வாய்ப்பில்லை.

கொலம்பசின் வரைபடங்கள் புத்தம் பயணக்கதையையும் யுத்தக்கதையையும் இணைத்துச் சொல்லுகிறது. யுத்தத்தின் போது புலிகளின் தமிழீழ வரைபடம் சுருங்கி வான்னியாகிப் போனது அது மேலும் சுருங்கிக் கொண்டு போனபோது. அங்கிருந்து தப்பிவேறு இடத்திற்கு போவதற்கு பலர் முயற்சிக்கிறார்கள். சிலர் வெற்றி பெற்று வெளியேறுகிறார்கள். சிலர் தோல்வியுடன் திரும்புகிறார்கள். மூன்றாவதுவகையினர் அங்கலுமில்லாமல் இங்காலுமில்லாமல் இடையிலேயே ஆமியுயாலையோ அல்லது புலிகளாலையோ கொல்லப்படுகிறார்கள். இதில் தோல்வியுற்றவார்கள் சற்றும் மனதளராத விக்கிரமாதித்தன் போல மீணடும் மீண்டும் முயற்சி செய்கிறார்கள். இதை வாசிக்கும் போது கண்ணதாசனது ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவிலே அழகிய கலைமான். என்ற பாடல்தான் ஞாபகம் வருகிறது. இதில் கதை சொல்லி சுருங்கிய தமீழத்திலிருந்து தப்பிக்கும் முயற்சிசெய்தவற்றையும் கூறுகிறார். தனது வலியையும்,சனங்களது துயர்களையும் சொல்லும் போதுகூட சுவார்சியமாகச் சொல்கிறார். புத்தகமும் யுத்த கால வன்னிச் சனங்கள் போல மெலிந்து காணப்படுகிறது. உள்ளுக்குள் ஆழமான சோகத்துடனும் வடுக்களுடனும் கனதியாக இருக்கிறது. புத்தகத்தை வாசித்து எனது ஒரு இரவு நித்திரையைத் தொலைத்தேன். வன்னிச்சனம்  தொலைத்த இரவுநித்திரையையோ கணக்கிடமுடியாது.  


வேகமாக வாசித்த புத்தகங்களுக்குள் N~hபாசத்தியின் எம்ஜிஆர் கொலைவழக்கு,சயந்தனின் ஆறாவடு, பெயரற்றது, அகிலனது மரணத்தின் வாசனை, கருணாகரனது வேட்டைத் தோப்பு, யோ.கர்ணனது சேகுவாரா இருந்த வீடு,  என்பன அடங்கும். இவைக்குள்ள பொதுவான ஒற்றுமை இவற்றை எழுதியவர்கள் எல்லோரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இதைவிட எல்லோரும் ஒருகாலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமாக இருந்தவர்கள் அதைவிட மேலாக இந்தக்கதைகள் எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் யுத்தகாலக்கதைகள்.  இவற்றில் கருணாகரனது வேட்டைத்தோப்பையும், N~பா சத்தியின் எம்ஜீஆர் கொலைவழக்கின் சிலகதைகளை நீக்கி விட்டுப்பார்த்தால் கதைசொல்லும் விதம், கதையின்கருக்கள். கதையின்களங்கள் என்பன ஒரேவிதமாக இருக்கின்றன. இந்தக்கதைகளை ஒரே மூச்சில் படித்ததால் யுத்தத்தின் மீது எனக்கு இருந்த வெறுப்பு மேலும் கூடியது மட்டுமல்ல. யுத்தப் படைப்புகளைப் பற்றிய எனது ஆர்வங்களும் குறைந்துள்ளது.

ஆனாலும், இந்தப் யுத்தப் படைப்புக்கள் ஆவணப்படுத்தப் படவேண்டியது அவசியம், யுத்தக் கொடூரங்கள் வெளிபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்கிறேன். அதேவேளை பல காலமாக யுத்தக் களத்தை விட்டு அகலிய  N~hபா சத்தியால் கூட இன்னுமும் யுத்தக்கதைகளிலிருந்து முழுமையாக விடுபடமுடியவில்லை. கூரிய பார்வை கொண்ட படைப்புகளைத்தரும் யோ.கர்ணனும் ஏனையோரும் புதிய களங்களைத் திறந்து  புதிய பார்வையுள்ள படைப்புக்களை தந்தால் ஈழத்து இலக்கியம் புது வளம் பெறும்.

இந்தப் புத்தகங்களை எனது அலுமாரியில் திறக்கப்படாத புத்தகங்களின் வரிசையில் அடுக்கிவைத்துள்ளேன். திரும்பவும் திறப்பதற்கு.

No comments: