அமெரிக்காவை தாக்கிய புயலில் உயிரிழந்தவர்கள் தொகை 26 ஆக உயர்வு
வங்க கடலில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள்: அவுஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் பரபரப்பு தகவல்
சென்னை ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு
சிரிய தீவிரவாதிகளால் கிளர்ச்சியாளர்கள் இருவருக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை
சிரிய ஹமா மாகாணத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் 11 சிறுவர்கள் உட்பட 18 பேர் பலி
நைஜீரிய தலைநகர் அபுஜாவில் கார் குண்டுத்தாக்குதல் - 19 பேர் பலி 60 பேர் காயம்
தமிழகத்தில் மேலும் தீவிரவாதிகள் ஊடுருவல்; இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
==========================================================
அமெரிக்காவை தாக்கிய புயலில் உயிரிழந்தவர்கள் தொகை 26 ஆக உயர்வு
29/04/2014 அமெரிக்காவை தாக்கிய புயல் மற்றும் சுழல் காற்றுகளில் சிக்கி பலியானவர்கள் தொகை 26 ஆக உயர்ந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
அலபாமா மற்றும் மிஸிஸிப்பியினூடாக வீசிய புயலால் வீடுகளும் வர்த்தகக் கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளதுடன் நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் தலைகீழாக புரட்டப்பட்டுள்ளன. அத்துடன் பிராந்தியத்திலுள்ள தொலைபேசி கம்பங்கள் 45 பாகை கோணத்தில் வளைக்கப்பட்டுள்ளன.
அலபாமா கென்துக்கி மற்றும் மிஸிஸ்ஸிப்பியில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த புயலால் மிஸிஸிப்பியிலுள்ள வின்ஸ்ரன் நகரில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் லூயிஸ்வில்லேயிலுள்ள சிறுவர் பாராமரிப்பு நிலையமொன்றில் உயரிழந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சமயம் அந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்கள் எவரும் இருந்ததாக அறிக்கையிடப்படவில்லை. நன்றி வீரகேசரி
வங்க கடலில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள்: அவுஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் பரபரப்பு தகவல்
29/04/2014 மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ஆம் திகதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
விமானம் மற்றும் அதன் கறுப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்காவின் புளூபின்-21 என்ற நீர்மூழ்கி ரோபோவும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோபோ 14 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்தது. எனினும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விமானத்தை தேடும் பணி நடைபெறும் பகுதியில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தொடங்கப்பட்டது. விமானம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் விமானத்தின் உடைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட்டை தலைமையமாக கொண்டு செயல்படும் கடலாய்வு நிறுவன கூறுகையில், நிறுவனம் கடந்த மார்ச் 10ஆம் திகதியில் விமானத்தை தனியாக தேடிவந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று நம்பக்கூடிய பொருட்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது என்று ஸ்டார் செய்திநிறுவன தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடலாய்வு நிறுவனம் சுமார் 2,000,000 சதுர கிலோ மீட்டர் பகுதியில் தேடியுள்ளது. செயற்கைக்கோள் மற்றும் விமானங்கள் எடுத்த புகைப்படங்களை கொண்டு, விமானம் கடைசியாக பயணித்த இடத்திற்கு வடக்கே 20க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர் என்று கடலாய்வு நிறுனவத்தின் செய்தித் தொடர்பாளர் டேவிட் போபி கூறியுள்ளார்.
அணு ஆயுதங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் தொழில்நுடபங்களை கடலாய்வு நிறுவனம் பயன்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். மாயமான மலேசிய விமானம் மாயமான மூன்று நாட்களுக்கு முன்னர் மார்ச் 5அம் திகதி நிறுவனம் கடல்பரப்பில் எடுத்த படத்தில் எதுவும் காணப்படவில்லை.
விமானம் காணாமல் போனதற்கு முன்னதாக உடைந்த பாகங்கள் எதுவும் இல்லை. இது மாயமான விமானத்தின் உடைந்த பாகம் என்று நாங்கள் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் எந்த கோணத்திலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று டேவிட் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசிய சிவில் விமான போக்குவரத்து அதிகாரி ஜெனரல் அசாருதீன் அப்துல் ரகுமான், நாங்கள் இந்த தகவலை ஆய்வு செய்வோம் என்று கூறியுள்ளார்.
நன்றி வீரகேசரி
சென்னை ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு
01/05/2014 சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இன்று காலை 7.30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 10 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய ரயில் நிலையத்தில், கவுகாத்தி - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், 9ஆவது மேடைக்கு வந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மத்திய ரயில் நிலையம் முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை - மத்திய ரயில் நிலையத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று புதன்கிழமை பாகிஸ்தானிய உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று சென்னையில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
சிரிய தீவிரவாதிகளால் கிளர்ச்சியாளர்கள் இருவருக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை
01/05/2014 வட கிழக்கு சிரியாவிலுள்ள தீவிரவாதிகள் தமது குழு உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் முகமாக இரு கிளர்ச்சியாளர்களுக்கு பகிரங்கமாக சிலுவையில் அறைந்து மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எல். என்ற மேற்படி தீவிரவாத குழு கடந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ரக்கா நகரிலுள்ள இயுபரேடர்ஸ் பள்ளத்தாக்கில் தமது உறுப்பினர்கள் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய 7 பேருக்கு தாம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
10 நாட்களுக்கு முன் நயிம் சுற்றுவட்டத்தின் பாதையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் நடத்திய கைக்குண்டுத்தாக்குதலொன்றில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டதுடன் முஸ்லிம் ஒருவர் கால்களை இழந்துள்ளார் என மேற்படி குழுவால் டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் வட சிரியாவிலுள்ள ரக்கா நகரில் பகிரங்கமாக சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இரு கிளர்ச்சியாளர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அவரது சடலங்களை சுற்றி இந்த நபர் முஸ்லிம்களுக்கு எதிராக போராடியதுடன் இந்த இடத்தில் கைக்குண்டொன்றையும் வீசியுள்ளார் என்ற வாசகம் எழுதப்பட்ட துணி சுற்றப்பட்டிருந்தது.
மேற்படி கிளர்ச்சியாளர்களும் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
நன்றி வீரகேசரிசிரிய ஹமா மாகாணத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் 11 சிறுவர்கள் உட்பட 18 பேர் பலி
02/05/2014 சிரியாவில் ஹமா மாகாணத்தில் இரு வாகனங்களை வெடிக்க வைத்து தற்கொலைகுண்டுதாரிகள் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 11சிறுவர்கள் உட்பட குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளனர்.
சிரிய ஜனாதிபதி பஷார் அல் - அஸாத்தின் அலாவிட் இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட இரு நகர்வுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையத்தின் பணிப்பாளர் ரமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமை அலாவிட் இனத்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஹோம்ஸ் நகரில் நடத்தப்பட்ட இரட்டைக்கார்குண்டுத் தாக்குதலில் குறைந்தது 100 பேர் பலியாகியிருந்தனர். அந்தத் தாக்குதலை தாமே நடத்தியதாக அல்-கொய்தா போராளி குழு உரிமை கோரியுள்ளது.
வட நகரான அலெப்போ நகரில் வியாழக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது 32 பொதுமக்கள் பலியானார்கள்.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரிய ஜனாதிபதி அஸாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானதையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் இதுவரை 15000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
நன்றி வீரகேசரிநைஜீரிய தலைநகர் அபுஜாவில் கார் குண்டுத்தாக்குதல் - 19 பேர் பலி 60 பேர் காயம்
02/05/2014 நைஜீரிய தலைநகர் அபுஜாவில் இடம்பெற்ற கார் குண்டுத்தாக்குதலொன்றில் குறைந்தது 19 பேர் பலியானதுடன் 60 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி தாக்குதலானது கடந்த மாதம் 14 ஆம் திகதி 70 பேருக்கும் அதிகமானோர் பலியாவதற்கு காரணமான குண்டிவெடிப்பு இடம்பெற்ற இடத்திற்கு அண்மையிலுள்ள நயன்யா புறநகரப் பகுதியில் இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
பஸ் நிலையமொன்றுக்கு அண்மையிலுள்ள பொலிஸ் சோதனைச்சாவடியொன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இடம்பெற்ற பிந்திய தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமை கோரவில்லை எனினும் கடந்த மாதம் இடம்பெற்ற தாக்குதலை தாமே நடத்தியிருந்ததாக போகோஹராம் போராளி குழு உரிமை கோரியுள்ளது.
ஆபிரிக்கா தொடர்பான உலக பொருளாதார மன்ற கூட்டம் அபுஜா நகரில் நடைபெறுவதற்கு சில தினங்கள் முன்பாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரிதமிழகத்தில் மேலும் தீவிரவாதிகள் ஊடுருவல்; இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
04/05/2014 தமிழகத்தில் மேலும் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தமிழக அரசுக்கு இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மத்திய ரயில் நிலைய குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தபட்ட வெடிகுண்டுகளும், பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையத்தில் வெடிக்க செய்யப்பட்ட வெடிகுண்டும் ஒரே ரகத்தை சேர்ந்தது என பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து பாட்னா சம்பவத்தில் பிடிப்பட்ட இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்நத தீவிரவாதிகளிடம் மத்திய உளவுப்பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்திய முஜாஹீதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பலர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி இருப்பதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளன. 'சிலிப்பர்செல்ஸ்' வகையைச் சேர்ந்த அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாகவும் சிறையில் உள்ள தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த மத்திய உளவுத்துறை பொலிஸார், இது தொடர்பாக தமிழக அரசுக்கு உடனடியாக தகவல் அனுப்பியுள்ளனர். இதை அடுத்து விழிப்படைந்த மாநில உளவுப் படையினரும், குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரும் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment