திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.

இலங்கை  தேசிய   சுவடிகள்  திணைக்களத்தில் பணியாற்றி    எம்மவரின்   தேவைகளை  பூர்த்தி   செய்த நவசோதி.
இங்கிலாந்தில்    வாகன   விபத்தில்     மறைந்தவர்
                                                                                      
                                                        
                                                                    கொழும்பு    ஜிந்துப்பிட்டியைப் பற்றித்   தெரியுமா?
ஓ----- தெரியுமே----
ஐந்துலாம்புச் சந்தி  -   நகைக்கடைகளுக்குப் பிரசித்தமான    செட்டியார் தெரு, சிவசுப்பிரமணிய   சுவாமி  கோயில்  -   விவேகானந்தா மண்டபம்  -கமலாமோடி   மண்டபம்  -   விவேகானந்தா   மகா   வித்தியாலயம்    இப்படி பிரசித்தமானவைகள்    அமைந்த   பிரதேசம்.
அவ்வளவுதானா?   இந்த   ஜிந்துபிட்டிக்கென  தனியாக   ஒரு   வரலாறு இருப்பது    தெரியுமா?
தெரியாதே?
மகாத்மா காந்தி  -   ஜவஹர்லால்   நேரு  -   தியாகராஜ   பாகவதர்  -  பி.யு.சின்னப்பா  -    கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன்   முதலானோரை முதல்   முதலில்   வரவேற்ற   இடமும்  ஜிந்துப்பிட்டிதான்.   பல கலைஞர்கள் - பேச்சாளர்கள் - எழுத்தாளர்கள் - உருவாகியதும்   இங்குதான்.



அப்படியா?   எமது   தலைமுறைக்கு   இந்த    வரலாறு   தெரியாது ---- தெரிந்த நீங்கள்தான்    எழுதவேண்டும்.
மேற்படி    உரையாடல்    எனக்கும்   நண்பர்   நவசோதிக்கும்   இடையில்   கொழும்பு    முகத்துவாரம்   கடற்கரையோரத்தில்    நிகழ்ந்தது நினைவிருக்கிறது.    அடுக்கு    வசனங்கள்    பொழிந்து    கம்பீரமாகப்   பேச வல்லவர்    நவசோதி.
திராவிட  கழக  பாரம்பரியத்தின்  பாதிப்பில்  கலை -  இலக்கிய ஆராய்ச்சிகளை   மேற்கொண்டு   எழுதியவர் - பேசியவர்.
பேச்சோடு  நின்று விடாமல்  ஜிந்துப்பிட்டியின்  புராதனத்தை   எழுதி வெளியிடுங்கள் -  அப்படியொரு   நூலுக்கு   நல்ல   வரவேற்பு  கிட்டும். – என்றேன்.
முயன்றார்  --  அப்பகுதியில்   வாழ்ந்த  முதியவர்கள் -மூதாட்டிகளையெல்லாம்  சந்தித்து  தகவல்களைத்  திரட்டினார்.
1983  இல்  வன்செயல்  தலை தூக்கியதையடுத்து  மேற்கொண்ட ஆராய்ச்சியை   முடிக்க   வழியற்று   அந்நியம்   புறப்பட்டார்.
மொழி  உணர்வும்  -   அறிவும்   இலக்கியப் பிரக்ஞையும்  மிக்க படைப்பாளி  -  தான்   எங்கு   வாழ  நேரிட்டாலும்   தனது   பணியை இடை நிறுத்தமாட்டான்.   அத்தகைய   மனிதனுக்கு   உள்ளார்ந்த இலக்கிய   ஆற்றல்  வற்றிப் போகாது   என்பதற்கு   நவசோதியும்  ஒரு உதாரணம்.
கதைப்பூங்கா  -  ஓடிப்போனவன்  -  நாட்டுப் பாடலில்   மலையக வரலாறு  -   இலக்கிய   மகளிர்   இதய  வேட்கை  -  பல்லவர்  காலமும் பக்திக் கோலமும்  முதலான   நூல்களின்  ஆசிரியர்.   ஏராளமான ஆராய்ச்சிக்    கட்டுரைகளை    இலங்கை   -   இந்திய பத்திரிகைகளில் எழுதியவர்.    தமிழராய்ச்சி    மாநாடுகளுடன்    சம்பந்தப்பட்டவர்.
கொழும்பில்   தமிழ்    நிகழ்ச்சிகள்   யாவற்றிலும்   இவரைச் சந்திக்கலாம்.    நண்பர்களுடன்   நன்றாகப்    பேசுவார்.   கோபப்படுவார். வாதம்   செய்வார்.  சண்டை  பிடிப்பார்.   எனினும்   நீடித்து   நிலைக்காத   கோபம்   அவருடையது.   Passing  Gluts  போன்று  ஓடி விடும்.    இதனால்   இவரது   கோபத்தை  யாரும்   சீரியஸாக எடுப்பதில்லை.  எங்கட   நவசோதி   என்ற  பண்புடன்   அவரது முன்கோபத்தை   மன்னித்தவர்களையும்  அறிவேன்.
நவசோதி  -   கொழும்பில்   தேசிய   சுவடிகள்   திணைக்களத்தில்  உதவிப் பணிப்பாளராக   பணிபுரிந்தது   பலருக்கும்   உதவியாக   அமைந்தது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்  -   ஆராய்ச்சி  மாணவர்கள், முதலானோருக்கு   தேவைப்படும்  சான்று   ஆதாரங்களுக்காக பழமையான   அரிய   பத்திரிகைக்   குறிப்புகளுக்கு   -    தேடும் படலத்திற்கு   பெரிதும்   உதவியவர்   நவசோதி.
ஒரு   சமயம்   முன்னாள்   ஜனாதிபதியும் - முன்னாள்  பிரதமரும் - வீடமைப்பு    நிர்மாணத்துறை  அமைச்சருமான –   பிரேமதாஸவுக்கும் நவசோதியின்   உதவி    தேவைப்பட்டது.
மகாத்மா  காந்தி   இலங்கைக்கு   வருகை   தந்த   சமயம்   கொழும்பு ஜிந்துப்பிட்டியில்   நிகழ்த்திய   முக்கியமான   சொற்பொழிவு வெளியான    பத்திரிகையை   பிரேமதாஸவுக்கு   தேடி  எடுத்துக் கொடுத்தவர்    நவசோதி.
குடியிருப்புகள்  இன்றி  அவதியுறும்    மக்களுக்கு    வசதி   படைத்தோர் தம்மாலியன்றவாறு   வீடுகள்    அமைத்துக் கொடுக்க வேண்டும் -  என்ற வேண்டுகோளை     விடுத்திருந்த    காந்தியின்    சொற்பொழிவே  - பிரேமதாஸவுக்கு   காலத்தின்    தேவைகருதி   அவசியமாகியது.
காந்தி   ஜெயந்தி   தினம்    ஜிந்துப்பிட்டி   முருகன்   தியேட்டரில்  அனுட்டிக்கப்பட்டது.   பிரேமதாஸ  –  ஜிந்துப்பிட்டியின்   புராதன மகிமையை    எடுத்துக்கூறி   காந்தியடிகளின்   செய்திகளைப்   படித்துக்   காண்பித்து  -   அப்பகுதி    வர்த்தகப்   பிரமுகர்களிடம்    வறிய மக்களுக்காக    உதவிக்கரம்    நீட்டினார்.
இந்த   நிகழ்ச்சியில்  பிரேமதாஸாவின்   உரையையடுத்து  முருகன் தியேட்டரில்   ரிச்சர்ட்   அட்டன்பரோவின்   காந்தி   திரைப்படமும் காண்பிக்கப்பட்டது.   இந்நிகழ்ச்சிக்கு   நவசோதி   மற்றும்   வீரகேசரி அலுவலக   நிருபர்  சனூன்   ஆகியோருடன்  சென்றேன்.
1983   அமளியுடன்    இலங்கையின்   வரலாறு    திசை    திரும்ப, நவசோதியும்    திசைதிரும்பி   அவுஸ்திரேலியா   வந்து   சில   காலத்தில் லண்டன்   சென்று   தமது   பணி தொடர்ந்தார்.
லண்டனில்   கிறின்ஃபார்டில்   தமிழ்ப்பள்ளி   ஆசிரியர் -  அனைத்துலகத் தமிழர்   கல்வி  பண்பாட்டுப் பாரம்பரியப்   பேரவையின்   பணிப்பாளர் - சிந்து  இதழின்  ஆசிரியர்.
இவ்வாறு   பணிகளைத் தொடர்ந்த   நவசோதி    04.01.1990   ஆம்  திகதி   லண்டனில்   வாகன   விபத்தில்  இறந்தார்.
 கொழும்பிலும்  அவர்   முன்பொருசமயம்   விபத்துக்குள்ளாகி கைமுறிந்த   நிலையில்  சிறிதுகாலம்   கட்டுப்போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு    வருவார்.   என்னை  எங்கே   கண்டாலும்  ஓடிவந்து உரையாடும்    இயல்புதான்   என்னை  அவரிடம் நெருங்கிச்செல்லவைத்தது.
இலங்கை   வானொலியில்   பணியாற்றிய    படைப்பாளி   அங்கையன் கைலாசநாதன்    கொழும்பில்   வாகன   விபத்தில்   கொல்லப்பட்டு இரண்டு    நாட்களாக  அவரது  உடல்  அடையாளம்   காண்பதற்காக மருத்துவமனை    சவஅறையில்  இருந்தது.    இதுபற்றிய  செய்தியை வீரகேசரியில்   எழுதியபோதும்    இறந்தவர்   யார் ?  என்பது தெரியாமல்தான்   இருந்தோம்.   வெளியே   சென்ற  அங்கையன் இரண்டு  நாட்களாக   வீடு   திரும்பாததையடுத்து   அவரது மனைவிதான்   மருத்துவமனை  சவ  அறைக்குச்சென்று   கணவரை அடையாளம்    காண்பித்தார்.


அங்கையன்   கைலாசநாதனின்   மறைவின்   பின்னர்  31  ஆம்   நாளன்று பம்பலப்பிட்டி   சரஸ்வதி   மண்டபத்தில்   அவரது   மனைவி இரங்கல்  கூட்டமும்  அங்கையனின்    கவிதை  நூல்   வெளியீட்டையும்    நடத்தினார்.
அன்றையதினம்   நண்பர்  நவசோதி   கையில்    கட்டுப்போட்டுக்கொண்டு   வந்துதான்   இரங்கலுரையாற்றினார்.
தெருவைக்கடக்கும்பொழுது   அவதானம்   தேவை  என்றார்.
லண்டனில்   நவசோதியும்   அந்த    அவதானத்தை   இழந்துவிட்டார். நவசோதியின்   திடீர்   மறைவுச்செய்தியை   மெல்பனில்   வசிக்கும் அவரது   சகோதரர்  கணகேஸ்வரன்  மூலம்   அறிந்தவுடன்  கொழும்புக்கு   சகோதரி   கமலினி   செல்வராசன்   மூலம்   தகவல் அனுப்பினேன்.
நண்பரின்   மறைவை   கொழும்பு   பத்திரிகைகள்  -  வானொலி  மூலம் அறிவிக்க  கமலினி   உதவியதை   இப்பொழுதும்   நன்றியுடன் நினைக்கின்றேன்.
நவசோதியின்   திடீர்  மறைவு   அதிர்ச்சியை   அவருக்கென   அஞ்சலி உரை  நிகழ்த்தி  தணிக்க  முயன்றேன்.
மெல்பன்    3 ZZZ  தமிழோசை  வானொலியில்   நண்பர்   இளங்கோவின்   ஏற்பாட்டில்   அஞ்சலி  உரை  நிகழ்த்தியபொழுது தொண்டை  அடைத்தது.  நல்ல நட்பு   பிரியும் போது  ஏற்படும் இயல்பான   துயரம்.
தமிழ்   உணர்வு  மேலோங்கிய  நவசோதி – அவ்வுணர்வை பறைசாற்றும்   Activist . முற்போக்கு   எழுத்தாளர்களின்  வட்டத்துள் நின்று   தனது   எழுத்துக்கும் -  பேச்சுக்கும்  முற்போக்கு  முலாம்  பூசவில்லை.   மாற்றீடாக  -   தனித்தமிழ்  இயக்கவாதிகளுடன் இணைந்து  திராவிடர்  கழகங்களின்  இலக்கியப்   பார்வையில்  சங்கமித்து   இலக்கியம்   பேசியவர்.
கொழும்பில்  தனது  பணிகளின்  உறைவிடமாக   கலைஞர் கருணாநிதி   பொதுப்பணி   மன்றத்தை  கருதியவர்.  எவர் அழைத்தாலும்   ஓடும்  செல்லப்பிள்ளையாக   செயற்பட்டமையால்   பல  மேடைகளில்   தோன்றியவர்.   தோன்றிய  மேடைகள்  தோறும் தமிழுக்காக   முழங்கியவர்.    எப்பொழுதும்    உணர்ச்சிவசப்படும் நவசோதி   மாற்றுக் கருத்துக்கொண்ட   கைலாசபதியின்  மறைவின் போதும்   அவருக்காக   நடத்தப்பட்ட     அஞ்சலிக்  கூட்டத்திலும் குமுறிக்   குமுறி   அழுததைக் கண்டேன்.
முற்போக்காளர்களின்  போக்குகளில்  உடன்பாடற்றவராக விளங்கியபோதிலும்  தமிழ்  -   கலை  -  இலக்கியம்   என்று வந்துவிட்டால்   முரண்பாடுகளை   மறந்து   மாற்றுக் கருத்துடையோருடன்    ஐக்கியப் பட்டு   சமரசம்   செய்து கொள்ளுவார்.
இதனால்   இவர் -  கொள்கை  உறுதிப்பாடு  மிக்கவர்  அல்லர் -  என்ற கருத்தும்   நிலவியது.
நீர்கொழும்பில்   பாரதி விழா  நடந்த  சமயத்தில்  நண்பர் மு.நித்தியானந்தன்   பாரதியின்   தேசிய உணர்வைப்  போற்றியும் பாரதிதாஸனின்   தமிழ்  இன  உணர்வைச் சுட்டியும்  பேசியதையடுத்து – நவசோதி   வெகுண்டதையும் -  நித்தியானந்தனின்   கருத்துக்களை சாடுமாற்போன்று    பாரதியின்  இன  உணர்வுகளுக்கு  சான்றுகள்  கூறி முழங்கியதும்    நினைவில்   உண்டு.
அப்படி   ஒரு   தமிழ்  தீவிரவாதி  நவசோதி.   அந்நியம்  சென்றபோதும் என்னை   மறக்காமல்   அடிக்கடி   வாழ்த்து   மடல்கள்   அனுப்புவார்.
அவுஸ்திரேலியாவில்  அவரையும்   சந்திக்கலாம்  என்ற நம்பிக்கையுடன்   வந்தேன்.   அவர்  லண்டன்  போய்விட்ட செய்தி இங்கு   வந்த  பின்பே  தெரிந்தது.
நவசோதியைப் போன்றே   அவரது   குடும்பத்தினரும்   தீவிர தமிழ்ப்பற்று   மிக்கவர்கள். 
அவுஸ்திரேலியாவில்  நான்   அங்கம்   வகித்த   அவுஸ்திரேலிய தமிழர்  ஒன்றியம் ( 1990 )  நடத்திய  விழாக்களை  முன்னிட்டு  இங்குள்ள   பிள்ளைகளுக்கிடையே  தமிழில்  நாவன்மைப்  போட்டிகள்  நட ந்தன.
அதில்  ஒரு  பிரிவில்  வெற்றியீட்டும்  பிள்ளைக்கு   நவசோதி ஞாபகார்த்த பரிசி னை     தங்கப் பதக்கமாக   வழங்கினார்    அமரரின் அருமைத்  தாயார்  திருமதி.பரமேஸ்வரி    கணபதிப்பிள்ளை.
தமிழ்   உணர்வலைகளினால்  உந்தப்பட்டு   தன்  மனதுக்கு சரியெனப்பட்டதை  தயக்கமின்றி   எடுத்துரைத்து - அதிதீவிர  தமிழ் உணர்வாளராகவே   வாழ்ந்து    மறைந்தார்  எங்கள்   நவசோதி.
                            ---0---



No comments: