மகளிர் தினம் – 24. 4. 14 - தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் (நிசவே) - வீ.எம். தேவராஜன்

.
தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் (நிசவே)
மகளிர் தினம் – 24. 4. 14


தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் தாம் வாரந்தம் கூடும் ஹோம்புஷ்  பேற்ஸ் வீதியில் அமைந்துள்ள சன சமூக நிலைய மண்டபத்தில், இவ்வாண்டும் மகளிர் தினத்தை அதி சிறப்பாக கொண்டாடியது.  இவ்வாண்டு “சிட்னி விஜயம்”, “ஜொலி ஜீனியர்ஸ்” என இரு நகைச்சுவை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. சிட்னி விஜயம் நாடகத்தில் பருத்தித்துறை தணிகாசலம், மனைவி முத்து, பத்மராசா என்று மூன்று பாத்திரங்களை வைத்து அபாரமான ஒரு நகைச்சுவை விருந்தை தாயக மண்ணின் வாசனை கம கமக்க படைத்தார்கள். வாசுகி மகாதேவா தணிகாசலம் ஆகவும், மனைவி முத்துவாக சீதா இராமநாதனும், பத்மராசா வேடமேந்தி பிறிம்றோஸ் ஞானசுந்தரமும், பண்டிதநாயகி திசைராசாவும் மண்டபத்தை கரஒலியாலும் சிரிப்பொலியாலும் அதிர வைத்தார்கள். யாரும் பிறநாடு போனால் தங்கள் சொந்தங்களுக்கு பிரயாணம் செய்பவனின் கஷ்டத்தைப் பற்றி சிந்திக்காமல் தூளும் மாவும் கொடுத்துவிடும் ஊர்ப்பழக்கத்தை நகைச்சுவையாக சிட்னி போறவரிடம் டாவினில் இருக்கும் பிள்ளைக்கு ஐந்து கிலோ கருவாடு கொடுத்துவிட முனையும் தணிகாசலம் தம்பதிகள், ஆறு வருடமாக அழைக்காத பத்மராசா தம்பதிகளை பிள்ளை பிறந்தவுடன் அவுஸ்திரேலியாவுக்கு பிள்ளையைப் பார்த்துக்கொள்ள அழைக்கும் அவரின் மகனின் அவசரத்தை குத்தலாக வெளிப்படுத்தி நகைச்சுவையுடன் சிந்திக்க வைத்த காட்சிகள் என இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.  எல்லாவற்றிற்கும் மேலாக தணிகாசலம் தம்பதிகளின் வேஷப்பொருத்தமும் நடிப்பும் - அசத்திட்டாங்க போங்க !





‘ஜொலி ஜுனியர்ஸ்’ ஒரு கதம்ப நிகழ்சியாக பரிணமித்தது. சீதா இராமநாதன் பெரிய மீசையுடன் கழுத்தில் சிவத்த சால்வை போட்டு ராஜபக்சே யாகவும், கண்டிப் பெண்ணின் உடை உடுத்தி ஷிராந்தி ராஜபக்சேயாக இந்திராதேவி பத்மநாதனும் அரங்குக்கு வந்ததுமே கர ஒலியால் நிறைந்தது மண்டபம்.  தொடர்ந்து கொச்சை தமிழில் ராஜபக்சவின் உச்சரிப்புடன் அவர் சிற்றுரையாற்றியபோது சிரித்து சிரித்து எமக்கு கண்ணீரையே வர வைத்துவிட்டார் சீதா இராமநாதன்.  ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திக்க வருவது போன்று ஒவ்வொருவராக வந்து நடித்தது எமக்கு விநோத உடைப் போட்டியை நினைவு படுத்தியது.  சீன பெண்மணியாக திருமதி நிரஞ்சலா நகுலேஸ்வரன், ஆபிரிக்க பெண்ணாக வாசுகி மகாதேவா, ஜப்பானிய பெண்ணாக நிர்மலா செல்வநாதன், பாகிஸ்தானியராக உரு மாறிய மகேஸ் சேகரம், யாழ்ப்பாண தம்பதியாக சரோஜினி நலந்துவன், மநோன்மணி கிருஷ்ணசாமி, ஆகியோரும் அந்தந்த நாட்டு கலாச்சாரங்களுக்கேற்ப நடை உடை பாவனைகளை வெளிப்படுத்தி எம்மை வியக்க வைத்து சிரிக்க வைத்தார்கள். ஒளவையாராக வேடமிட்டு வந்த பத்மாவதி அருமைநாயகம் அவர்கள் ஒளவையார் படத்திலிருந்து சுந்தராம்பாளின் பாடலில் சிலவரிகளையும் பாடி அசத்தினார்.




குறத்தியாக ஈஸ்வரி பாலசுப்பிரமணியம் வேடத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் அசல் குறத்தியாகவே வெளுத்து வாங்கினார். டாக்டர் குணபூபதி பொன்னம்பலம் தடுமாற்றம் நிறைந்த டாக்டராக வந்து பெண் நோயாளியிடமே ‘புறொஸ்ரேற்’ பிரச்சினை பற்றி பேசியும் அசகு பிசாகவே கேள்விகள் கேட்டும் சிரிப்பு மூட்டினார். சுருங்கச் சொன்னால் பல மேடைகள் ஏறிய நாடகக் கலைஞர்கள் போல் திறமையான ஒப்பனையையும் ,நடிப்பையும் இணைத்து நல்லதொரு நகைச்சுவை விருந்தை சிரித்து வயிறு நோக உண்டோம்.
இந் நிகழ்வுக்கு அணிகலனாக சத்தியவதி நடராஜா அவர்களின் வயலின் இசையும் இந்திராணி சற்குணானந்தா அவர்களின் ‘மவுத் ஓகன்’ இசையும் கனகாம்பிகை ஜகநாதன் அவர்களின் பாடல்களும் அமைந்திருந்தன.
வீ.எம். தேவராஜன்













3 comments:

Anonymous said...

Well done! Tamil Seniors

Unknown said...
This comment has been removed by the author.
Anonymous said...

A beautiful performance. Congratulations to the Grandmas