காவியத் தாயின் இளையமகன்!!

.
படித்தவனும் வியக்கின்றான்! படிப்பே அற்ற

   பாமரனும் வியக்கின்றான்! பணத்திற் காக

நடித்தவனும் வியக்கின்றான்! பணமே இன்றி

   நலிந்தவனும் வியக்கின்றான்! நிமிர்ந்து நில்லாக்

குடித்தவனும் வியக்கின்றான்! குடும்பப் பெண்ணாய்க்

   குனிந்தவளும் வியக்கின்றாள்! தமிழில் பாக்கள்

வடிப்பவனும் வியக்கின்றான்! இவன்எ ழுத்தை

   வளர்உலகைப் படைத்தவனும் வியக்கின் றானோ!!

கல்லுக்குள் தேரைபோன்று கவிதைக் குள்ளே

   கருத்தாழ உயிரைவைத்தான்! காதல் பொங்கும்

இல்லுக்குள் இனிமைபோன்றே உயிருக் குள்ளே

   இன்னிசையாய் உருகவைத்தான்! தமிழில் உள்ள

சொல்லுக்குள் சுவைபோல நினைத்துப் பார்க்கச்

   சொக்குகின்ற நிலைவைத்தான்! நிலைத்தி ருக்கும்

நல்லுலகம் உள்ளவரை அவனின் பாக்கள்

   நாளெல்லாம் புகழ்பெற்று வளர்ந்தே ஓங்கும்!கண்ணனுக்குத் தாசனானான்! கவிதைத் தாயின்

   கனிநெஞ்சில் இளையனானான்! இசையின் மன்னன்

பண்ணுக்குப் பொருளானான்! டி.எம். எஸ்சின்

   பாட்டிற்குக் குரலானான்! வினியோ கர்தம்

எண்ணத்தில் பணமானான்! காதல் செய்யும்

   இளையவர்க்கோ இதயமானான்! கவிகள் நெஞ்சில்

வண்ணமிடும் பாவலனின் புகழைச் சொல்ல

   வார்த்தையினைத் தேடுகிறேன் தமிழில் நானே!

அருணா செல்வம்

1 comment:

Anonymous said...

Nice poem